|
|
சமீபத்தில் எனது நண்பருடன் இலக்கியம் பற்றி
தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது,
"தற்போதுள்ள ஈழத்து எழுத்தாளர்களில் எஸ்.பொவும் அ.முத்துலிங்கமும்தான்
சிறந்த எழுத்தாளர்கள் எனக் குறிப்பிடுவேன்" என்று சொன்னார். அவர் ஒரு
ஊடகவியலாளர். நான் இடை மறித்து, "ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்? செங்கை
ஆழியான், முல்லைமணி, சேரன், ஷோபாசக்தி...." என்று நீண்டதொரு பட்டியலை
அடிக்கிக் கொண்டே போனேன். பட்டியலைப் பூரணப்படுத்த அவர் விடவில்லை.
சிரித்துவிட்டு, "அவர்கள் குறிப்பிடத்தகுந்த சில நல்ல படைப்புகளைத்
தந்திருக்கின்றார்கள். அவ்வளவும் தான்" என்றார்.
என் மனம் ஸ்தம்பித்தது.
அ. முத்துலிங்கம் பல தரமான சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்களைத்
தந்திருக்கின்றார்தான். ஆனால் அவரது நாவலை (உண்மை கலந்த நாட்குறிப்புகள்)
வாசித்த போது 'சப்' என்றாகிவிட்டது. ஒரு நாவலில் பல கதைகள் இருக்கலாம்.
ஆனால் பல கதைகள் சேர்ந்ததெல்லாம் நாவல் ஆகுமா? ஏமாற்றம் தான் மிஞ்சியது.
ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் ஏன் சர்வதேச தரத்திற்கு
நகர்த்தப்படவில்லை? தேறியவர்கள் இருவர் மட்டும்தானா? கேள்வி எழுகின்றது.
தொண்ணூறு வயது இளைஞனின் சுறுசுறுப்பான
இலக்கியப் பயணம்
ஆடி, ஆவணி மாதங்களில் மெல்பேர்ண்ணில் கடும் குளிராக இருக்கும். இரண்டு
வாரங்களுக்கு முன்பிருக்கும். மாலை நேரம் 6 மணி. வெளியே கடும்குளிர்,
காற்று. படுக்கையில் 'சும்மா' சரிந்தவாறே குளிர் போர்வையைப் போர்த்திவிட்டு
கைத்தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன். இணைப்புக் கிடைத்தது. அவரது
குரலில் சற்றே களைப்புத் தென்பட்டது.
"என்ன கதைப்பதற்கு கஸ்டப்படுகின்றீர்கள் போல கிடக்கு? ஏதாவது சுகம்
இல்லையா" என்று கேட்டேன்.
"இல்லைத் தம்பி... உதிலை நடை ஒண்டு போட்டு வாறன். கிட்டத்திலைதான். தெரிஞ்ச
ஆக்கள் வீடு. அதுதான் களைக்குது. ஒரு மரத்துக்குக் கீழை நிக்கிறன்."
"அப்ப நான் ரெலிபோனைக் 'கட்' பண்ணிப் போட்டு பிறகு கொஞ்சத்தாலை எடுக்கிறன்"
"இல்லை... இல்லை. கதைக்கலாம்"
அதன் பிறகு என்னுடன் கதைத்து முடித்து விட்டுத்தான் அவர் தனது வீட்டிற்குச்
சென்றார். அதுவே அவரது இளமையின் இரகசியம்.
அவர்தான் கலைவளன் திரு. சிசு நாகேந்திரன். இந்த 'சிசு'வில் ஒரு விஷேசம்
இருக்கின்றது. தாய் பெயர் சின்னம்மாள்; தந்தை பெயர் சுந்தரம்பிள்ளை.
இருவரினதும் முதலெழுத்துக்கள்தான் சிசு. இவர் எம்மத்தியில் வாழ்ந்து
கொண்டிருக்கின்ற கலை, இலக்கிய 'முதுசொம்'. தற்போதைய அவுஸ்திரேலிய தமிழ்
இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர். ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? உடல்
நலத்தை ஒரு மூட்டையில் கட்டி வைத்து விட்டு சோர்வின்றி எல்லா
நிகழ்ச்சிகளிலும் தற்போதும் பங்கு கொள்ளுகின்றார்.
இவர் ஆரம்பத்தில் ஒரு நாடகக் கலைஞர். கொழும்பில் 'ராஜ் நகைச்சுவை நாடக
மன்றம்' நடத்திய பல நாடகங்களில் பங்கேற்றவர். யாழ்ப்பாணத்தில்
அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து
பிரபலமான 'சக்கடத்தார்' நாடகத்தில் (ஆயிரம் தடவை மேடையேறியது) ஒரு
பாத்திரமானார். தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் போன்றோருடன் நாடக அரங்கக்
கல்லூரி தயாரித்த பல நாடகங்களில் இணைந்து பணியாற்றியிருக்கின்றார்.
ஆச்சிக்குச் சொல்லாதே, வா கோட்டடிக்கு, கவலைப்படாதே, மின்னுவதெல்லாம்
பொன்னல்ல, அவமானம், ஊர் சிரிக்குது, அது அப்ப - இது இப்ப போன்றவை இவர்
நடித்த நகைச்சுவை நாடகங்களில் சில. தவிர திருநாவுக்கரசுவின் 'இனி என்ன
கலியாணம்', கவிஞர் அம்பியின் 'வேதாளம் சொன்ன கதை' கவிதை நாடகம், பிரபலமான
வானொலி நாடகங்களான 'சிறாப்பர் குடும்பம்', 'லண்டன் கந்தையா' போன்றவற்றிலும்
நடித்துள்ளார்.
ரகுநாதன் தயாரித்த 'நிர்மலா', பிரபல கட்டிடக்கலை நிபுணரான
வீ.எஸ்.துரைராஜாவினால் தயாரிக்கப்பட்ட 'குத்துவிளக்கு' போன்ற படங்களில்
நடித்துள்ளார். குத்துவிளக்கு 1972 இல் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில்
வரும் 'ஈழத் திருநாடே' என்ற பாடல் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை
வானொலியில் தடை செய்யப்பட்டிருந்தது.
இவர் லண்டனில் தங்கியிருந்த காலங்களில், மீண்டும் தாசீசியஸின் 'களரி' நாடக
மன்றத்தில் இணைந்து 'புதியதொரு வீடு', 'அபசுரம்', 'எந்தையும் தாயும்' என்ற
நாடகங்களில் நடித்திருந்தார். பின்பு அங்கிருந்து பிரியாவிடை பெறும்போது
'கலைவளன்' என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
அவுஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னர் எழுத்தாளரானார்.
அவுஸ்திரேலியாவில் வெளிவரும் 'கலப்பை' என்னும் சஞ்சிகையில் தொடராக
வெளிவந்து பின்னர் நூலுருவானது 'அந்தக்காலத்து யாழ்ப்பாணம்' (2005).
யாழ்ப்பாணத்தின் ஒரு காலகட்ட சமூக வரலாற்றினைப் பதிவு செய்யும் இந்நூல்
புலம் பெயர்ந்த நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்பு 'பிறந்த
மண்ணும் புகலிடமும்" (2008) என்னும் நூலை எழுதினார்.
அண்மையில் மெல்பேர்ணில் நடந்த தென்மோடி நாட்டுக்கூத்திலும் இவர் பங்கு
பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறந்த
மொழிபெயர்ப்பாளர்.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், இலங்கை மாணவர்
கல்வி நிதியம் போன்ற அமைப்புகளிலும் பங்கேற்று வருகின்றார். நவீன தொழில்
நுட்பத்தின் பல கூறுகளைத் தெரிந்து வைத்திருக்கும் அவர் தானே கணனியில்
எழுத்துக்களைப் பதிவு செய்து சுறுசுறுப்பான இளைஞனாக இலக்கியப் பயணம்
செய்கின்றார்.
நீர் சேமிப்பு
மனிதர் வாழும் கண்டங்களில் மிகவும் வரண்டது அவுஸ்திரேலியா. பெரும்பாலான
பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது. அதனால் நீர்க்கட்டுப்பாடும்
அமுலில் உள்ளது.
ஒருமுறை வீட்டிலிருந்த ஒவ்வொரு தண்ணீர்ப் பைப்பிற்குக் கீழும் ஒவ்வொரு
பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாடசாலையில் மகனுக்கு ஒரு புரயெக்ற்
(project) கொடுத்திருந்தார்கள். வீணாகப் போகும் தண்ணீரின் அளவை மில்லி
லீற்றரில் அளவிடும் முறை அது.
மறுநாள் காலை...
- ஒரு சொட்டுத் தண்ணீரும் எங்கடை பைப்பிலை இருந்து வீணாகவில்லை என்று
பெருமை பேசினான் மகன்.
- புது வீடு என்றால் அப்பிடித்தான் இருக்கும். ஆறேழு வருஷங்களுக்கு எல்லாம்
நன்றாக இருக்கும் என்று நான் சொன்னேன்.
மாலை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மகனின் முகம் வாட்டமடைந்திருந்தது.
- தண்ணீர் கொண்டு வராவிடில் புரயெற்றுக்கு மார்க்ஸ் இல்லையாம். சேர்
சொன்னவர்.
- நீ சொல்லலாம்தானே வீட்டிலை பைப் லீக் இல்லையென்று.
- சொன்னனான் தான். அதை அவர் ஏற்றுக் கொள்கின்றார் இல்லை.
அடுத்த நாள் பள்ளிக்கூடம் போகும்போது, ஒரு போத்தலினுள் கொஞ்சம் நீர் கொண்டு
சென்றான் மகன். அவன் பாடசாலை போன பிறபாடு எல்லா நீர்க்குழாயையும்
பரிசோதித்தேன். எல்லாமே கச்சிதமாக இருந்தன. மகன் புத்திசாலிதான் என்று
நினைத்தேன்.
அன்று பாடசாலை முடிந்து திரும்பும் போது 'புரயெற் சக்சஸ்' என்றான் மகன்.
- உண்மை சொல்ல வேணும். எங்கேயிருந்து நீர் எடுத்தாய்?
- அடிக்க மாட்டியள் தானே!
- அடிக்கமாட்டன்.
- தோட்டத்திலை இருக்கிற பைப்பை நாற்பது ஐம்பது தரம் கரடுமுரடாகத்
திருகினேன். தண்ணீர் ஒழுகத் தொடங்கிவிட்டது.
தோட்டத்துக்குச் சென்று பைப்பைப் பார்த்தேன். ஒழுகிய நீர் ஒரு ஓடை போலாகி,
வாழைமரப் பாத்தியை நிறைத்திருந்தது. சாதாரணமாக ஒரு பைப்பிலிருந்து வருஷம்
365 நாள் தண்ணி ஒழுகி இருந்தாலும், அந்தத் தண்ணியாலை அந்தளவிற்குச் செலவு
வந்திருக்காது. பைப் திருத்த ஆகும் செலவை எண்ணிக் கவலை கொண்டேன். வாழ்க
பாடசாலை.
மூன்று சகோதரிகள் (Three Sisters)
மூன்று சகோதரிகள் என்ற குன்று அவுஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ்
மாநிலத்தில் நீல மலைகள் (Blue Mountains) என்ற பகுதியில் காணப்படுகின்றது.
இது கட்டும்பா என்ற நகரத்திற்கு அண்மையாக உள்ளது.
Jamison Valley ஐச் சூழ்ந்துள்ள மலைச்சிகரங்கள் காலங்காலமாக நடந்து வரும்
காற்று, மழை, நீர்ப்பெருக்கு என்பவற்றால் அரிக்கப்பட்டு (erosion) இந்தக்
குன்றுகள் வந்ததாகச் சொல்லுவார்கள். இந்தக் குன்றுகள் மூன்றும் முறையே 922,
918, 906 மீட்டர் உயரம் கொண்டவை. கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில்
இவை உள்ளன.
இவை பற்றிய பழைய கதை ஒன்றும் இருக்கின்றது. மீக்னி (Meehni), விம்லா (Wimlah),
குனிடூ (Gunnedoo) என்ற மூன்று அழகான பெண்கள் கட்டும்பா பழங்குடியினரைச்
சேர்ந்தவர்கள். இவர்கள் தமது அயல்கிராமத்திலுள்ள நேப்பியன் (Nepean)
பழங்குடி இனத்தைச் சார்ந்த மூன்று சகோதரர்கள் மீது காதல்
வயப்பட்டிருந்தார்கள். அவர்களின் பழங்குடிச் சட்டப்படி வெவ்வேறு
இனங்களுக்கிடையே திருமணம் செய்து கொள்ள முடியாது. அதனால் அந்த மூன்று
ஆண்களும் சட்டத்தை மதிக்காமல் அந்தப்பெண்களைக் கவர்ந்துவர திட்டம்
போட்டார்கள். இதனால் இரு இனங்களிடையேயும் சண்டை ஆரம்பமானது.
அவர்களிடமிருந்து அந்தப்பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு மந்திரவாதி
அவர்களைக் கல்லாகச் சபித்து விட்டார். அந்தச் சண்டையில் மந்திரவாதி
கொல்லப்பட, வேறொருவராலும் அந்தப்பெண்கள் உயிர்ப்பிக்க முடியாதபடியால்
அப்படியே கல்லாக உறைந்து விட்டார்கள் என்பதே அந்த ஐதீகக்கதை.
|
|