|
|
நான் சிறுவனாயிருந்த போது எனக்கு அம்மா இருந்தாள். குடிசை வீட்டின்
பின்புறமிருந்த வெட்ட வெளியில் பஞ்சாரங்களில் அடைத்து நிறைய கோழிகள்
வளர்த்தாள். வான்கோழி முட்டைகளை நாட்டுப் பெட்டைக்கோழிகளின் சிறகுகளுக்குக்
கீழ் வைத்துப் பொரிக்க வைப்பாள். கார்காலங்களில் வீட்டைச் சுற்றி
வான்கோழிகள் தோகைகள் விரித்து செழித்து வளர்ந்தன. விருந்தினர்கள் வரும்
விழாக்களின் போது கோழி அறுத்து விருந்து சமைப்பது பால்யத்தின் தீராத
ஞாபகமிச்சம். அதுபோலத்தான் ஒருமுறை உறவினர்கள் பெருகியிருந்த ஒரு பண்டிகை
நாளில் வான்கோழி அறுத்துக் குழம்பு சமைத்திருந்தாள். கொதித்த குழம்பை அவள்
பரிமாறுகையில் உப்போ காரமோ கூடிப்போய் ஒருவராலும் உண்ணத்ததகுதியற்று
சட்டியில் தேங்கிவிட்டது. சமையற்கட்டும் வரவேற்பறையும் உண்ணும் அறையும்
உறங்குமிடமாகவும் விளங்கிய அவ்வீட்டின் சமையற்கட்டிலிருந்து யாரும் உண்ணாத
வான்கோழிக் குழம்பிற்காக கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தாள். அன்றிலிருந்து
அம்மாவின் சமையற்கட்டில் சமைக்கப் பழகத் தொடங்கினேன்.
பழைய நைந்து போன சேலைகளைக் கிழித்துத் திரித்து தொங்கல் உறி ஒன்றினை அவள்
தயார் செய்ததை ஒருநாள் பார்த்தேன். இலவம் பஞ்சுகளையும் உலக்கையில்
இடித்துத் திரித்த நெல் உமியையும் அதனுள் சேர்த்துக் கட்டி அவள் உருவாக்கிய
தொங்கல் உறியின் பயன்பாடு எதெற்கென்று தெரியாமல் குழப்பமடைந்தேன். பெண்கள்
மலங்கழிக்க ஒதுங்கும் ஓடையின் கரை ஓரங்களில் இது போன்ற தொங்கல் உறிகள்
உறைந்த கருஞ் சிவப்பு நிறத்தில் உலர்ந்து கிடந்ததைக் கண்டபோது காரணம்
தெரியாது அழுதேன்.பின்புதான் எல்லாம் மெதுவாய் தெரிய ஆரம்பித்தது.
அம்மாவின் உடம்பைப் பிய்த்துக் கொண்டு ரத்தம் ஒரு ஓடைபோல் ஓடி வந்து என்னை
மூழ்கடிப்பதாக வரும் துர்க் கனவுகளில் அலறி எழுவேன். அவளது கணவனிடமிருந்து
அவளைப் பாதுகாக்க வேண்டி இரவெல்லாம் விழித்திருந்து தோற்று விழுவேன். வலி
தேங்கிய அவளது முகத்தையும் அவளது சேலையின் பின்புறத்தின் ரத்தக் கறையையும்
என் நினைவிலிருந்து கழுவி அகற்ற முடியவில்லை.அக்காவிற்கும் ஒரு நாள் இது
நேர்ந்தது.வலி தாளாது அவள் தன் முழங்கால்களை அமுக்கிவிடும்படிப் பணித்தாள்.
ரத்த வாடையோடு பிறந்திருக்கும் ஒரு குழந்தையை பால் பிசுக்கோடு அருகில்
கிடக்கும் சித்தியோடு சேர்த்துப் பார்த்த நான் ரத்தம் வலி குழந்தை
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்த்தேன். அப்போதுதான் என்னிடம் அந்த
மாற்றங்களும் வந்தது.
காதுகளில் தோடணிந்து கொள்வது கால்களில் கொலுசணிந்து அக்காவின் தாவணி
ஜாக்கெட்டுகளைப் போட்டு பெண்வேடம் தரித்துத் திருமணச் சடங்கில் ஆரத்தி
எடுப்பதும் சமைப்பதும் வீடு பெருக்குவதும் துணிகளைத் துவைப்பதுமாய் நான்
வளர்ந்து வந்திருந்தேன். என் மேல் நான் நிகழ்த்திக் கொண்ட பாலியல்
ஒப்பணைகள் நீண்ட காலம் நிலைக்கவில்லை. திருமணமாகி மனைவியோடு வாழும் என்
வீட்டின் சமையலறையில் நான் ஆவி பறக்கும் குழம்பு சட்டிக்கு முன் நிற்கையில்
தான் சமைத்து யாராலும் திண்ண முடியாத வான்கோழிக் குழம்பிற்கு முன் கண்ணீர்
சொரிந்து நின்ற தாயின் பிம்பம் வீடெங்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாமல் துருத்தி நிற்கும் என் ஆண் உடல்மேல் நான்
கொண்டிருந்த வெறுப்பு கர்ப்பப் பையில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு
வயிரறுத்து குழந்தையை வெளியெடுத்துத் திணறிக் கொண்டிருந்த நிலையிலும் என்
மனைவியின் மேல் இனம் புரியாத பொறாமை உணர்ச்சியாக வளர்ந்தது. பால் அருந்தும்
நேரம் தவிர்த்து மீந்த அணைத்துத் தேவைகளையும் குழந்தைக்குச் செய்து அவள்
பெற்றெடுத்த குழந்தையை அவளிடமிருந்துப் பறித்து என்னை நோக்கித்
திருப்பினேன். குழந்தை அழும்போது கூட அப்பா என்று சொல்லி அழுவது கேட்டு
குரூரமாய் மகிழ்ந்தேன்.அதுவும் கொஞ்ச காலம்தான். நிலைக்கவில்லை. தட்டையான
பால் சுரக்காத என் மார்பு நுணியை கிள்ளிப் பார்த்து வளர்ந்த குழந்தைகள்
அம்மாவின் மார்புக்கூட்டுக்குள் அடைக்கலமாகிவிட்டன. துளிர்ப்பும்
படைப்பூக்கமுமற்ற இந்த உடலின்மீது அபிமானமின்மையும் சலிப்பும்
தோன்றிவிட்டது. ஆண் உடல் கொண்ட ஒருவன் இந்த உலகின் கடவுளாய் இருக்க
முடியாது. கடவுளின்மீது ஏற்பட்ட நம்பகமின்மைகூட அரசியல் காரணங்கள் அல்லாமல்
ஆரம்பத்தில் எனக்கு இப்படித்தான் ஏற்பட்டிருந்தது. ஆண் கடவுள் உறுதியாக
இவ்வுலகில் சிறு புல்லைக் கூட படைத்திருக்க முடியாது. இந்த முழு உலகமே ஒரு
பெண்ணின் யோனியிலிருந்துதான் தோன்றியிருக்க முடியும். வரலாற்றின்
போலித்தனத்திலிருந்தும் கயமையிலிருந்தும் விடுபட்டால் வரலாற்றுக்கு முந்திய
மனித இனத் தோற்றத்தின் ஆரம்ப கட்டத்தில் பெண்தான் தொடக்கப் பாலினம், உயிர்
அடிப்படையின் மூலப்படிமம், முதல் உயிரணுத் தொகுதி, பெண்தான் உலகின் முதல்
மனித உயிரி என்பதை நாம் திடமாக நம்பலாம்.
”பாட்டுக்களின் தாய், நமது விதை முழுவதின் தாய், ஆரம்பத்தில் நம்மைப்
பெற்றெடுத்தாள். அவள் எல்லா இன மனிதர்களின் எல்லாக் குலங்களின் தாய். அவள்
இடியின், நதிகளின், மரங்களின், தானியத்தின் தாய். அவள் மட்டுமே நமக்குத்
தாய். அவள் மட்டுமே எல்லாவற்றின் தாய், அவள் மட்டுமே”
(கொலம்பியாவின் கயாபா இந்தியர்களின் பாடல்.)
பெண் முதல் உயிரியாக, அனைத்திற்கும் தாயாக, முதல் மனிதக் கடவுளாக, இன்றுவரை
உலகில் மனித இனத்தின் தொடர்ச்சி அறுபடாமல் நிலைத்திருப்பதற்கும் காரணம்
பெண்களின் ”உதிரப் போக்கு”தான்.பெண்களின் உதிரப் போக்கு பல வழிகளிலும் மனித
வரலாற்றின் மூல கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையான ஊற்றாக இருந்தது. நமது
நவீன மதமும் அறிவியலும் நம்புவதைப்போல உதிரப் போக்கு ஒரு மாதாந்திர வெறும்
கழிவு நீக்கச் செயல்பாடல்ல. மனித உடலின் உயிரியல் செயல்பாடுகள் அனைத்தும்
அப்படியே முன்கூட்டித் தீர்மானிக்கப் பட்டவையும் அல்ல. உடலோடு தோன்றிய
ஆதிப்பெண் தனது இன்ப வேட்கையைத்தான் உதிரப் போக்காக மாற்றியமைத்தாள்.
உதிரப் போக்கு என்பது தன் உடல்மேல் நிகழ்த்திய பெண்ணின் கற்றல் செயல்பாடு.
வேட்கை வெளிப்பாடு. பின்புதான் அது மாதாந்திர உடல் சுழற்சியாக பெண்ணின்
உயிர்பண்பாக நிலைபெற்றிருக்க முடியும். அதன் வழியாகவே பெண் தான் கண்டடைந்த
உடலின் இன்ப வேட்கையை ஆணுக்குக் கற்றுத் தந்தவளுமாகிறாள்.
உதிரப் போக்குதான் மனிதப் பிசு. மூலப்பசை. உயிர் பிசுக்கு. மானிடப்
பெருக்கு அறுந்து போகாமல் காக்கும் மனிதஉறை. புதிய உயிரினம் ஒன்றைத் தன்
உடல் வழியே பெற்றெடுத்ததன் மூலம் பெண் உலகின் படைப்புச் செயலைத் துவங்கி
வைக்கிறாள். அதே குருதியைப் பாலாக்கி குழந்தையை வளர்த்தெடுப்பவளுமாகிறாள்.
குழந்தையைப் பராமரிக்கும் உந்தத்திலிருந்துதான் உணவு சேகரிப்பு, உணவுப்
பாதுகாப்பு, உணவு உற்பத்தி என்பதை பெண் தன் உயிர் கடமையாக்கிக் கொண்டாள்.
விதைகளை சேமித்தாள். தாவரங்களை வளர்த்தாள். இலை சாறு பிழிந்து காயத்தை
ஆற்றினாள். நிலத்தினை தன் உடல் போல மாற்றி விவசாயத்தை கண்டுபிடித்தாள்.
தொடைகளில் வழிந்த ரத்தப் பெருக்கைப் போல் நீர்ப் பாசன முறைகளை
கண்டறிந்தாள்.உணவு சமைக்க மண்ணைப் பிசைந்து பானைகள் செய்தாள். பெண் ரத்தப்
போக்கை ஈர்த்து நிறுத்தும் முயற்ச்சியில்தான் துணிகளை நெய்யவும்
பிராணிகளின் தோலைப் பதப்படுத்தி பயன்படுத்தவும் கற்றுக் கொண்டாள். ஆடை
நெய்யவும் அணியவும் கற்றுத் தந்தாள். ரத்தப் போக்கிற்கான தொங்கல் உறிகளின்
வடிவத்தையொத்தே குழந்தைகளுக்கான தொட்டில்களையும் வடிவமைத்தாள்.
வரலாற்றுக்கு முந்திய பனிப் பிரதேச மானின் எலும்பொன்றில் 31 கீறல்களைக்
கண்ட அகழ்வாய்வாளர்களும் தொல்லியலாளர்களும் அக்கீறல்களைசந்திரச்
சுழற்சிக்கான பதிவென்று வாதிட்டார்கள். ஜாக்கப் புரோனோஸ்கியின் சந்திரப்
புனைவு வாதத்தினை மறுத்த பேராசிரியை வோண்டா மக்கிண்டயர் உதிரப் போக்கின்
உடல் சுழற்சிக்கான ஒரு பெண்ணின் பதிவே அக் கீறல்கள் என மறுத்துரைத்தார்.
சந்திர சுழற்சியும் பெண்ணின் உடல் சுழற்ச்சியும் ஒத்திருப்பது
தற்செயலானதல்ல. நிலவு நாட்களை அனுசரித்துத் தன் உடலின் வேட்கையை பெண்
ஒழுங்கு செய்தாள். பெண் தன் உடலின் வேட்கையைத் தான் உதிரப் போக்காக
மாற்றியமைத்தாள் என்பதை மறுபடியும் இங்கே நினைவு கொள்ள வேண்டும்.பெண் உடலே
உலகின் முதல் நாள்காட்டி. தன் சொந்த உடல் சுழற்சியை மையமாக வைத்தே எண்ணுவது
வகுப்பது நாள்தொகுப்பை ஒழுங்கமைப்பது ஆகிய கணித முறைமைகளை உலகிற்கு
வழங்கினாள். ரத்தப் போக்கு மர்மங்கள் நிறைந்த ஒரு அதிசயச் செயல். அது
பெண்களிடம் அரூபமான உணர்வுகளைத் தோற்றுவித்தது. உருவக ரீதியான சிந்தனையை
வளர்த்தது. சிந்தனை இணைப்புகளை உருவாக்கியது. மொழியின் மீதான
படைப்பூக்கத்திற்கும் காரணமாகியது.
விதைகளில் கலந்தும் நிலத்தில் தெளித்தும் வரப் பெற்ற புனித ரத்தம்
வரலாற்றில் சாபத் தீட்டானது, மாத விடாயானது வராற்றுக் கால கட்ட்த்தில்தான்.
உலகத்தை மறுபடியும் ஒரு ஆண்கடவுள் படைத்தார். பெண்ணின் உதிரப் போக்கை
”விலக்கப்பட்ட கனி”யாக அறிவித்தார். உலகின் வரலாறு தொடங்குகிறது. அவளது
ரத்தம் அவளைக் குடும்பத்திலிருந்து வாழ்விடத்திலிருந்து தூரமாக்குகிறது.
அவள் தனது சொந்த ரத்தத்திற்காக அவமானமடைகிறாள். குற்றமடைகிறாள். சமூக
ஒதுக்கம் கொள்கிறாள். அவளது ரத்ததிற்கு கோயில்களின் கதவுகள் சாத்தப்
படுகின்றன. அவள் ரத்தங்கண்டு துளசி மாடங்கள் கருகுகின்றன.அதை நக்கிய
நாய்கள் பைத்தியமடைந்து ஊளையிடுகின்றன. உதிரப் போக்கு ஒரு தீவினையாகிறது.
கழிவாகிறது. நஞ்சாகிறது. அவள் தன் வீட்டிற்குத் தூரமானாள். தன்
கடவுளுக்குத் தூரமானாள்.வரலாற்றுக்குத் தூரமானாள்.
ஆதியில் உணவுக்கு பெண்ணை நம்பியிருந்தபோது அவள் வலிந்து பலாத்காரம் செய்து
விலங்குகளைக் கொல்லவில்லை.தானியங்களையும் காய்கறிகளையும், காயமுற்ற ,
பிரசவத்தின்போது இறந்த, முதுமையுற்ற, நத்தை போன்று மெதுவாக ஊர்கிற
உயிரினங்களைத்தான் உணவுக்காக் சேகரித்தாள். வேட்டைச் சமூகத்தில்தான் ஆண்
வேட்டையாடி விலங்குகளைக் கொல்கிறான். பலாத்காரத்தையும் அழிவையும்
புரிகிறான். பாதுகாப்புக்காக கொல்வது, உணவுக்காக பொறிவைத்துக்
கொல்வதிலிருந்து விலகி எதிர் கொண்டு தாக்கி உயிர்களை அழிக்கிறான். அவனது
கையில் கொல்லும் ஆயுதங்கள் உருவாகின்றன. தன் ஆயுதங்கள் மூலம் விலங்குகளின்
மீது ரத்தத்தைக் காண்கிறான்.பெண் தன் ரத்தப் போக்கின் மூலம் உயிரை
உருவாக்குவதற்கும் எதிர் நிலையில் ரத்தத்தையும் கொலையையும் புரிகிறான்.
இங்ஙனம் ஆண் போர்த் தொழிலை பழகியது கூட பெண்ணின் உடல் மீதான ரகசிய
வன்மத்திலிருந்துதான்.
வேட்டைச் சமூகத்தின் வீர மரபிலிருந்துதான் ஆண் குழந்தைகளையும் பெண்களையும்
அச்சமூட்டித் தனக்குக் கீழாக்கினான். வேட்டைச் சமூகத்திலிருந்து உருவான
தந்தை வழி ஆட்சி முறையும் மதத்தின் சித்தாந்த வேர்களில் இருந்தே உருவாகி
நிலைபெற்றது. ஆணை கடவுளாக கொண்ட மதத்தின் சிந்தாந்தங்களோ பெண்ணை தூரமாக்கி
வெளியே தூரமாக நிறுத்துபவைகள். நவீன அரசுகள் இதோடு அறிவியலையும் இணைத்துக்
கொண்டவைகள். அறிவியல் என்பது பெண்களிடமிருந்த பூர்வ உண்மைகளை அபகரித்த
ஆண்களின் துறைதான்.இன்று நொடி ஒன்றுக்கு உலகம் முழுவதும் பெண்கள்
கோடிக்கணக்கில் தூரமாகிறார்கள். அத் தூமையை ரத்தக் குண்டாக்கி கோயில்
கதவுகள் மேல் பாராளுமன்ற நாற்காலிகள் மேல் இன்னும் தாங்கள் விருப்பப்படும்
எதன் மேலும் எறியலாம்.
இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து BLOOD MAGIC என்ற கட்டுரைத் தொகுப்பின்
தமிழாக்கம் வல்லினத்தில் இடம் பெறும். இந் நூலின் ஆசிரியர்கள் Thomas
Buckley மற்றும் Alma Gottliep.
|
|