|
|
கருணாகரனின் "எதுமல்ல எதுவும்..."
இலங்கைப் படைப்பாளிகளைப் பற்றிப் பேசும் இரண்டாவது தொடர் இது...
கருணாகரனின் 'எதுமல்ல எதுவும்' என்ற கவிதைத் தொகுப்போடு சுவடுகளின் பயணம்
தொடர்கின்றது.
கருணாகரன் இலங்கையின் வடக்கே உள்ள இயக்கச்சி என்ற இடத்தில் பிறந்தவர்.
இலங்கைப் போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு
இடம்பெயர்ந்து அகதியாகவே அலைந்ததாக அவரது கவிதைத் தொகுப்பிலுள்ள
குறிப்பொன்றில் இருக்கின்றது. இதுவரையில் 'ஒரு பொழுதுக்குக்
காத்திருத்தல்', 'ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்', 'பலியாடு' என
மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
எதுமற்ற ஒரு எல்லையில் நின்று கொண்டுதான் மனிதன் சுவாசிக்கிறான். எல்லாம்
இருப்பதாக அவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் தோற்றப்பாடுகளும், அந்த
தோற்றப்பாடுகளுக்காக உறங்கி எழுந்து போராட்டங்களோடு அவன் வாழும் வாழ்வு
எதுமில்லாத ஓர் புள்ளியில் ஒரு நாள் மரித்து போகின்றது. இறப்பு நிகழும்
அந்த ஒரு நொடியில் மட்டும் எதுவுமற்றதை உணரும் மனிதன் மீண்டும்
எல்லாவற்றையும் சுமந்தபடி வாழ்வைத் தொடர்கின்றான்.
எவ்வளவுதான் ஊரிலும்
நகரத்திலும் இருந்தாலும்
குரங்குகளைக் காட்டுப் பிராணியென்றே சொல்கிறார்கள்.
நகரத்துப் பழக்கங்களில்
குரங்குகளுக்கு ஈடுபாடிருந்தாலும்
அவை காட்டின் வாசனையோடேயே இருக்கின்றன.
இயல்புநிலை வாழ்வின் வாசம் இதுதான். எங்கு தோன்றியதோ அந்த இடத்தின்
இயல்புநிலையை தன்னோடு சுமந்து வரும் வாழ்வியல் இயற்கை. தோட்டத்திலிருந்து
இடம்பெயர்ந்து நகர்களில் நகர்களில் குடியமர்ந்தாலும் தோட்டத்தின் வாசனை
மாறாத வாழ்தலின் பொருள். அகதியாய் அலைந்து, சிலவேளை புலம்பெயர்ந்த நாட்டில்
சுகவாழ்வு வாழ்ந்தாலும் தாய்மண் என்றவுடன் எங்கிருந்தோ தோன்றும்
வார்த்தைகளற்ற உணர்வு. பட்டணக்காரனாய் பகட்டாய் திரிந்தாலும் மிக முக்கிய
தருணங்களில் எட்டிப்பார்க்கும் பழமை உணர்வு. இப்படி எண்ணற்ற உணர்வுகளில்
இயல்புநிலை வாழ்வின் வாசத்தைக் காட்டிவிடலாம்.
இந்தப் பறவை எங்கு இறங்கக் கூடும்
தீர்மானங்களேதுமிருக்குமா அதற்கு
எந்தக் கணத்தில்
இங்கிருந்து
இனி
செல்லக்கூடும்
அது
பறத்தலில் சுவாரஸ்யம்
பறக்கவைத்திருக்குமா
இல்லை மிகுந்திருக்குமா
பறந்தே தீரவேணுமென்ற சலிப்பு
இந்த வாழ்வு எந்தப் புள்ளியில் முடியக் கூடும்? முடிகிற தருணத்தை நாம் உணர
முடியுமா? என்று எந்த கணத்தில் நமது உடலிலிருந்து உயிர் பிரிந்து போகக்
கூடும்? எப்படி எண்ணற்ற விடைகாண முடியா கேள்விகள் நம்மைச் சுற்றி
மிதந்தபடியே இருக்கின்றன. பறக்கத் தொடங்கும் ஒரு பறவைக்குச் சென்று சேர
வேண்டிய இடம் குறித்த தீர்மானம் பெரிதாய் இருக்கமுடியாது. அதன் தேடல்
என்பது உணவாகவும் சிலவேளை துணை தேடுதலாகவும் இருக்கும் பட்சத்தில் அதன்
தேடல் பரந்துபட்டதாக இருக்கும். இந்த இடத்தில் உணவு கிடைக்கலாம் என பறவை
எண்ணும் இடத்தில் அது கீழிறங்கலாம். மனித வாழ்வும் இதற்கொப்பவே இருப்பதாக
நாம் உணரலாம். ஒரு புள்ளியில் வாழ்வைத் தொடங்கும் நாம் நடக்கத்
தொடங்குகிறோம். வழியில் ஏதும் வாய்ப்புகள் கிடைத்தால் அதைப் பற்றிக்
கொள்கிறோம். அந்த வாய்ப்போடு பயணிக்கிறோம். வழியில் பல காரணங்களுக்காக
பாதைகள் மாறிப் போகின்றன. தீர்மானங்களோடு வாழ்பவர்கள் மீண்டும் தங்களைச்
சரிப்படுத்திக் கொண்டு பயணிக்கின்றனர். அப்படி இல்லாதவர்கள் காலம் வழியில்
மறுப்பேதுமின்றி பயணித்தபடியே இருக்கின்றனர்.
வாசலில் தொங்கும் பூட்டு உறுத்துகிறது
யார் மீது நம்பிக்கை கொள்வதென
எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்
அதன் அடையாளத்தை மீறி
செல்ல முடியவில்லை
எந்த வீட்டிலும்
தாராளமாக.
காடுகளில் திரிந்து இதுதான் தன் நிலம் என்ற அடையாளம் ஏதுமின்றி
சுதந்திரமாய் வாழ்ந்தவன் மனிதன். குகைகளின் கதவுகளில் பூட்டுகள் தொங்கியதாக
நான் எங்கும் படித்ததில்லை. நாகரிக வளர்ச்சி மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக
எல்லாவற்றிற்கும் அச்சப்படும் ஒரு நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது என்பது
மட்டும் நிதர்சனம். நடந்து செல்லும் போது பக்கத்தில் யாராவது நடந்து
வந்தால் கூட திருடனாய் இருக்குமோ என்ற எண்ணமே முதலில் தலைதூக்கி
பார்க்கின்றது. சில வேளை அந்த தொடர்பில் தொலைந்துபோன நமது உறவுகளாக கூட
இருக்கலாம். ஆனால், இதற்காக யாரையும் குறைகூற முடியாது. நிகழ்கால வாழ்வின்
உண்மை நிலை இப்படிதான் கசந்து கொண்டிருக்கிறது. பூட்டுகளின் மீது வைக்கும்
நம்பிக்கையை நம்மால் எப்போதுமே சக மனிதனொருவனின் மீது வைக்க முடிவதில்லை.
போரின் விதி
தன் வலிமையை ஊன்றிய போதில்
துண்டிக்கப்பட்ட விரலுக்காக
இறுதி மரியாதையை எங்ஙனம் செய்தல் கூடும்?
இலங்கை எழுத்தாளர்களிடமிருந்து பிரித்தெடுக்க முடியாத அவர்கள் கடந்து வந்த
போரின் வலி. அவர்களின் படைப்புகளில் தவறாமல் பதிவு செய்யப்பட்டுவிடும் இந்த
காயத்தை நாம் எப்படி உணர்கிறோம்? போரின் கொடுமை உயிர்களைப் பலி
எடுத்துவிடுகின்றது. சொந்த உறவுகள் கண்ணெதிரில் செத்து விழும்போது அந்த
கொடுமை பிரித்தெடுக்க முடியாத ஒன்றாக நினைவேட்டின் பதிவுகள் இடம்பிடித்து
விடுகின்றது. அந்த பதிவினை யாராலும் அழித்துவிட முடியாது. பல்வேறு
வடிவங்களில் அந்த பதிவு இடம்பெற்றபடியே இருக்கும்.
இரவு
ஆழ்ந்து உறங்கிய குழந்தைகளைச் சுற்றி
கனவு முட்டைகள் மிதந்து கொண்டிருந்தன.
காலையில்
எழுந்த குழந்தை
பள்ளிப் பையில் அடைந்து கொண்டிருந்தான்
புத்தங்களுக்கிடையிலும் குறிப்பேடுகளிலும்
திணறிக்கொண்டிருக்கும்
பதற்றத்தையும் நெருக்கடியையும்.
கனவு முட்டைகள் நொறுங்கிக் கிடந்தன வெளியே.
குழந்தைத் தனம் மறுக்கப்பட்ட குழந்தைகள் குறித்த கவிதை இது. மிக
அதிகாலையின் எழுப்பபட்டு புத்தகப்பையைச் சுமந்து கொண்டு பள்ளிக்குச்
செல்லும் மூன்று வயது குழந்தைக்கு என்ன கற்பனைகள் தோன்றக்கூடும்? சிறு
குழந்தைகளுக்கு வீடு சார்ந்த கல்வியே உகந்தது. மழலை மொழி மாறாமல் பேசும்
அவர்களின் குரல் வீட்டுச் சுவர்களில் எதிரொலிக்க வேண்டும். ஆனால்,
அவர்களின் குரல்வளை நசுக்கப்பட்டு, ஒரு அந்நிய தேசத்தில் கண்களில்
மருட்சியோடு இன்றைய குழந்தைகளின் வாழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. யாரிடமும்
கேட்பதற்கும் சொல்வதற்கும் தைரியமின்றி குழந்தைகளுக்குள்ளாகவே அவர்களின்
கற்பனைகளும் கனவுகளும் புதைக்கப்பட்டு விட்டன. வேலைக்குச் செல்லும்
அவசரத்தில் உறக்கம் கலையாத குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச் செல்லும்
நிகழ்வுகள் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. குழந்தைகளின் கதைகளையும்
கேள்விகளையும் கேட்பதற்கும் பதில் சொல்வதற்கும் நமக்கு பொறுமையும்
சகிப்புத் தன்மையும் இருப்பதில்லை. பேசாமல் இருக்கும்படி சொல்லிச் சொல்லியே
குழந்தைகளை நாமே காயடித்துவிடுகிறோம்.
அவனுடைய பயணம்
அன்று
நிகழமறுத்து
எங்கோ தங்கிவிட்டது.
எல்லாரும் சொல்வதுதான். நாமும் சொல்கிறோம். எல்லோரும் செய்வதுதான். நாமும்
செய்கிறோம். நிகழமறுக்கும் எல்லா நிகழ்வுகளையும் மறுக்க முடியாமல் அதனை
மீண்டும் நிகழ வைக்க முயற்சித்தபடியே இருக்கிறோம்.
கருணாகரனின் கவிதைகள் ஒரு மெல்லிய சிலிர்ப்பை என்னுள் நிகழ்த்தி
இருக்கின்றது. சொற்களின் கோர்வை, அழகு, அலங்காரம் என்பதைத் தாண்டியது ஒரு
வீரியத்தோடு அவரின் கவிதைகள் வெளிப்படுகின்றது. புதிதாய் கவிதை
எழுதத்தொடங்கும் படைப்பாளர்கள் அவரின் கவிதைப் பக்கங்களைச் சந்தேகமின்றி
புரட்டிப் பார்க்கலாம்.
|
|