|
|
மறைந்த கிராமம் ...2
முந்தய நாளில் நானும் க்ரேஸியும் போட்ட ‘ஜோகேட்’ ஆட்டம் எங்களை மறுநாள்
காலை 10.00 மணி வரை தூங்க வைத்திருந்தது. கண் விழித்து பார்க்கையில் சுற்று
சூழல் நடு மதியம் 12.00 போல் இருந்தது. வெளியிடத்துக்கு போனால் ரொம்ப நேரம்
தூங்ககூடாது. மற்றவர்கள் நம்மை சோம்பேறி என எண்ணும் அளவுக்கு நாம்
வைக்கக்கூடாது என்று அம்மா எப்போதும் சொல்லுவார். ஆனால் எங்கே! அம்மா
சொல்லிய அறிவுரை ஞாபகத்தில் இருந்ததால்தான் 10.00 மணிக்கு எழுந்தேன்.
இல்லயென்றால் போட்ட ஆட்டதுக்கு பிற்பகல் 1.00 மணி வரைக்கும்
நீட்டியடித்திருப்பேன்.
எழுந்ததும் வழக்கம் போல காலை கடன்களை முடிக்க கழிவறைக்குள் சென்றேன். அங்கே
போதுமான அளவு நீர் இருந்தது. மற்றப்படி மழை நீரை பெரிய சிமெண்ட்
தொட்டிக்குள் வீட்டுக்கு வெளியே சேமித்து வைத்திருந்தார்கள். அங்கேதான்
ஆற்றில் குளிக்க சோம்பேறிப்படும் ஆண்கள் குளிப்பார்கள். வெறும் ஜட்டியோடு.
இங்கே நிர்வாணத்துக்கு மரியாதையோ மதிப்போ கிடையாது. இதையெல்லாம் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருந்த என் மனக்கூட்டில் என் ஆரம்ப பள்ளி கணக்கு
வாத்தியார் இராமநாயுடு ஐயா சொன்ன அவர் கால அனுபவங்கள் நிழலாடின. வகுப்பில்
பொதுவாக சொல்லுவார். 'டேய் அந்த காலத்துலே 16, 17 வயசு பொம்பள பசங்களும்
ஆம்பள பசங்களும் ஒன்னா அம்மணமா குளிப்போம்டா. அந்த காலத்துலே மனசு
கட்டுபாடு அதிகம்டா. இப்போ மாதிரியா... காலம் கெட்டு போச்சிடா...' என்று
சொல்லி ரொம்பவும் அலுத்து கொள்வார். அவர் சொன்ன அதே காலக்கட்டதுக்குள் நான்
நுழைந்து பாதி வழியில் சென்று கொண்டிருந்தேன்.
நம்ம கதைக்கு வருவோம். வழக்கம் போல குளிக்க குறுக்கு பாதையில் ஆற்றுக்கு
போய் திரும்பவும் மணி 1.30 ஆகவும் சரியாக இருந்தது. இப்போது கவனம்
முழுவதும் சமையற்கட்டில்தான் இருந்தது. சமைத்து வைத்திருந்தார்கள். எனக்கு
அந்தச் சமையலுக்கு பேர் தெரியவில்லை. ரொம்பவும் எளிமை. நெத்திலியை ஊசி
மிளகாயோடு சேர்த்து சிறிது உப்பு போட்டு ஒன்றாக இடிக்கல்லில்
இடித்திருந்தார்கள். அவ்வுணவுக்கு அவர்களுக்கே பேர் தெரியவில்லை. அதில்
தொட்டு சாப்பிட ‘ஜெரிங்’ என்னும் ஒரு காய். இருப்பதை வைத்து சமைக்கும்
பாணி.
அடுத்து ஒரு வகை கீரையை சூப் போல செய்திருந்தார்கள். கொஞ்சம் பொரித்த
கட்டக்கருவாடு. இதுதான் அவர்களின் அன்றைய உணவு. இதையே கூச்சிங் பட்டணத்தில்
பார்த்தோமானால் பல வகையான உணவு வகைகள். அப்படியே புரட்டிப்போட்ட உலகம்.
சாப்பிட்டு கொண்டே க்ரேஸியின் அத்தையிடம் நிறைய பேச வாய்ப்பு கிடைத்தது.
நான் தங்கிய வீடு க்ரேஸியின் பாட்டியின் கொள்ளுப்பாட்டியின் தாத்தாவின்
வீடாம். பாரம்பரிய பரம்பரை வீடு. கொஞ்சம் நிலவரதிற்கேற்ப
மாற்றியமைக்கப்பட்டிருந்தது. இந்த கிராமம் மனித குடியிருப்புக்கு முன்
வெறும் காடுதானாம். ஆறு அருகாமையில் இருப்பதால் குடியிருப்பு
ஏற்படுத்தப்பட்டதாம். அதோடு குறிப்பிட்ட பருவக்காலங்களில் வெள்ளமும்
வருமாம். ஆனால் அது அங்குள்ளவர்களுக்கு பழகிபோன ஒன்று. அதோடு அங்கே உள்ள
ஒவ்வொரு குடும்பதுக்கும் துப்பாக்கி அவசியமான ஒன்றாம். காட்டுப்பன்றிகளை
வேட்டையாடவும், காட்டு விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் ரொம்ப
ரொம்ப முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது துப்பாக்கி. துப்பாக்கியை போலவே
வெட்டுக்கத்தியும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லார் வீட்டிலேயும்
பார்க்கலாம்.
சொந்தமாகவே மலை நெல்லை (Padi Huma) பயிரிட்டு கொள்வார்களாம். இவர்கள்
மட்டுமல்ல, மொத்த சரவாக் பூர்வ குடியினர் உழைப்பாளிகள் என்பதை அவர்களின்
உறுதியான தசை மற்றும் உருவத்திலிருந்தே உணர முடியும். ஆணும் சரி பெண்ணும்
சரி வேலைக்கு அஞ்சாதவர்கள். இவர்களை நினைக்கும் போது எனக்குப் பெருமையாக
இருந்தது. பிறரை ஏமாற்றி வாழும் இவ்வுலகில் இன்னும் உழைப்பை நம்பி வாழும்
மக்கள் இருக்கவே செய்கிறார்கள். இதில் என்ன பெருமையென்றால் இங்கே மனித
நேயம் இன்னும் வாழ்கிறது. ஒருவரை ஒருவர் மதிப்பதும், கைமாறு
எதிர்ப்பார்க்காமல் உதவுவதை என்னால் கண்கூடாக பார்க்கமுடிந்தது. நான்
தங்கியிருந்த வீட்டின் சமையலறையின் ஒரு பக்கம் முழுவதும் அரிசி, பால் மாவு,
சீனி என மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்படிருந்தது. ஏன் என
கேட்கையில்தான் காரணம் புரிந்தது. அண்மையில் க்ரேஸியின் 121 வயது பாட்டி
முதுமை காரணமாக இறந்திருந்தார். அதனால் அந்த கிராம மக்கள் அனைவரும்
தங்களால் இயன்ற அடிப்படை உணவுகளை அளித்தார்களாம். இதுதான் அங்கே வழக்கமாம்.
அதே போல இறப்பு நடந்த வீட்டில் 40 நாட்களுக்கு தொடர்ந்து ஜெபம் நடக்குமாம்.
எனவே அதற்கு வேண்டிய உணவுகளை கிராம மக்களே சமைத்து கொண்டு
வந்துவிடுவார்களாம். கேட்க கொஞ்சம் பரவசமாக இருந்தது.
அப்படியே அந்த வீட்டையும் அதன் பின்பகுதியையும் நோட்டம் விட்டேன்.
உண்மையில் அங்குள்ள சூழ்நிலை குனோங் பொங்சு மலாய் மக்களின் குடியிருப்பை
ஞாபகப்படுத்தியது. அதே மரவள்ளி கிழங்கு செடி, கொஞ்சம் கீரை வகைகள், வாழை
தோப்பு, தள்ளி போனால் கோழிக்கூண்டு, கம்பத்து கோழிகளின் கெக்களிப்பு,
இளைப்பார மூங்கில் தரை கொட்டகை என இயற்கை அங்கே பரிபாலனை செய்து
கொண்டிருந்தது. சாப்பிட்ட பின்னர் சாப்பாடு செரிமானம் ஆக நடக்கையில்
இவையெல்லாம் கண்களை குளிர்ச்சி படுத்தின. அதன் பின்னர் க்ரேஸி அவளின்
பூட்டியை சந்திக்க கூட்டி போனாள்.
எனக்கு பாட்டியின் அருகாமையில் இருந்த நேரங்கள் மிகவும் குறைவுதான்.
சொல்லபோனால் 1% கூட இல்லை. அம்மா வழி தாத்தா பாட்டியிடம்தான் விபரம்
தெரியாத காலத்தில் இருந்திருக்கிறேன். அப்பா வழி தாத்தாவோ பாட்டியோ
கண்ணாடியின் மறுப்புறம் நிழல்படமாகதான் தெரியும். ஆனால் க்ரேஸிக்கோ
பாட்டியோடு பூட்டியும் பூட்டியின் உடன்பிறப்புகளும் இன்னும் ஆரோக்கியமான
உடல்வாகுடன்தான் இருந்தார்கள். அதுவும் வயது 100 தாண்டிய நிலையில்.
நினைக்கவே பிரமிப்பாக இருந்தது. முக்கியமான காரணம் ஆரோக்கியமான
உணவுவகைகளும் அதற்கேற்ற உழைப்பும்தான். எதையும் அளவறிந்து செய்தால்தானே
அதன் பலனை பார்க்க முடியும். அப்படிதான் இதுவும் போலும்.
நாங்கள் பூட்டியின் வீட்டை நோக்கி சென்றோம். அதை வீடு என சொல்ல முடியாது.
மூங்கில் கொட்டகை. தரையும் சுவர்களும் மூங்கிலால் ஆனவை. வீடுக்கு கீழே ஆறு.
மின் வசதியில்லை. உண்மையில் நான் பூட்டி என சொன்னது க்ரேஸியின் நிஜமான
பூட்டியின் அக்கா. முறைக்கு பூட்டி தானே வர வேண்டும். சரி பூட்டி என்றே
வைத்து கொள்வோமே. அப்படிதான் க்ரேஸியும் அறிமுகம் செய்தாள். அவருக்குத்
திருமணமாகததால் அவர் தனியாகவே அந்த கொட்டாகயில் இருந்துவிட்டராம். அவர்
என்னிடம் பேச்சு கொடுத்தார். நானும் பேசினேன். ஆனால் அவர் பேசியது எனக்கு
புரியவில்லை. நான் பேசியது அவருக்கு புரியவில்லை. இருவருக்கும் நடுவில்
க்ரேஸி மொழிப்பெயர்ப்பாளராய் மாறிப்போயிருந்தாள். பூட்டியுடனான சந்திப்பு
எனக்கு சில முக்கிய கலாச்சார குறிப்புக்களையும் அதன் காரணங்களையும்
தெளிவுப்படுத்திருத்தது.
|
|