முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 35
நவம்பர் 2011

  விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள் ...1
ந. பச்சைபாலன்
 
 
       
நேர்காணல்:

“தமிழ் இங்குப் பெயரளவில் தேசிய மொழிதான்” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 2
ம. நவீன் - கே. பாலமுருகன்



கட்டுரை:

அப்சரா
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”
கே. பாலமுருகன்

சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி

ஓர் இலக்கியச் சர்ச்சை

ஷம்மிக்கா

விவேகமான காயம்
செல்மா பிரியதர்ஷன்

யாதும் இசையே யாவரும் கேளிர்
அகிலன்



பத்தி:

புலம்பெயர் முகங்கள் ...3
வி. ஜீவகுமாரன்



புத்தகப்பார்வை:

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்
கருணாகரன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

தர்மினி பக்கம்
தர்மினி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...25

அசரீரி

ந. பெரியசாமி

ம. நவீன்

மூன்று மொட்டைக் கடிதங்கள்

நீங்கள் மொட்டைக் கடிதங்கள் எழுதியதுண்டா?

மொட்டைக் கடிதம் என்றாலே உங்களில் பலர் முகம் சுளிப்பீர்கள்! ‘இதெல்லாம் ஒரு பிழைப்பா? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?’ என வசைமாரி பொழிவீர்கள். நீங்கள் இதுவரை மொட்டைக்கடிதங்கள் எழுதாதவராக இருந்தால்...

மூடிமறைக்காமல் சொல்லிவிடுகிறேன். நான் எழுதியிருக்கிறேன்.

கவிச்சுடர் காரைக்கிழார் எழுதிய ‘பெட்டிஷன் ரைட்டர் பெரியசாமி’ சிறுகதை நினைவுக்கு வருகிறது. புகார்க் கடிதமானாலும் மொட்டைக் கடிதமானாலும் யார் பெரியசாமியை நாடி வந்தாலும் உடனே அவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பார். அதுதான் அவருக்குத் தொழில். அதனால், அதுவே அடைமொழியாகி அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டது. பெரியசாமி தன் ஒரே மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தும் திருமணம் கடைசி நேரத்தில் நின்றுபோகிறது. யாரோ ஒருவன் அவர் மகளைப் பற்றி மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டைக் கடிதம் எழுதிவிடுகிறான். “நல்ல பசு உள்ளூரிலே விலைபோகும் மாப்ளே” பாணியிலான கடிதம். யார் யாரோ வாழ்க்கைக்கு உலை வைத்தவருக்கு அதுவே வினையாகிப் போனதை இந்தக் கதை விளக்குகிறது.

என் பதின்ம வயதில் படித்த இந்தச் சிறுகதை என் நினைவு அடுக்குகளில் நீக்கமற நிறைந்த படைப்பானது. ஆயினும், நானும் மொட்டைக்கடிதங்கள் எழுதினேன். சூழ்நிலைதானே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது.

வாழ்க்கை நவீனமாகிப்போனதில் அடையாளம் இழந்துகொண்டிருக்கும் கலைகளில் கடிதக்கலையும் ஒன்று. கடிதம் எழுதுவதற்கான தேவைகள் குறைந்துபோய் விட்டன. உடனடித் தகவல் பரிமாறலுக்குக் குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ போதும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், மொட்டைக் கடிதம் என்றும் செல்வாக்கை இழக்காது என்று தோன்றுகிறது. தனிமனித வாழ்விலும் அரசியலிலும் அவதூறு பரப்பவும் அடுத்துக் கெடுக்கவும் வாய்ப்பினைப் பறிக்கவும் மொட்டைக் கடிதம்தான் பெருந்துணை செய்கிறது.

மாணவர் மத்தியில் கடிதங்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. 26 ஆண்டு ஆசிரியர் அனுபவத்தில் எத்தனையோ கடிதங்களைப் படித்துவிட்டேன். பெரும்பாலும் காதல் கடிதங்கள். ஐந்தாம் வகுப்பு மாணவன் விஜயநாதன் எழுதிய கடிதம்தான் என் கைக்கு வந்த முதல் கடிதமாக இருக்கவேண்டும். அந்தக் கடிதத்தின் வரிகள் இன்னும் அழிந்துபோகாமல் மனத்தின் அறையில் தேங்கியிருக்கின்றன. “அன்புள்ள பத்மபிரியாவுக்கு, விஜயநாதன் எழுதும் கடிதம். நீ பாயில் உட்காரும்பொழுது என் பக்கத்தில்தான் உட்கார வேண்டும். உனக்கு எது வேண்டும் என்றாலும் என்னைத்தான் கேட்கவேண்டும். தமிழ்ச்செல்வத்திடம் கேட்கக்கூடாது. மாலை வகுப்புக்கு வரும்பொழுது இந்தக் கடிதத்தைக் கொண்டு வா. இருவரும் சேர்ந்து படிப்போம்.” இன்னும் எழுதியிருந்தான். கற்பித்தலுக்கு வசதியாக வகுப்பின் முன்னே பாயில் மாணவர்களை நான் நெருக்கமாக அமர வைத்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். காதல் உணர்வுகள் பூக்கத் தொடங்கிய உள்ளத்தில் அரும்பிய வரிகள். அவன் கையெழுத்தே அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

என் பதின்மூன்றாவது வயதில் நாளிதழ்களுக்கு வாசகர் கடிதம் எழுதத் தொடங்கினேன். அதுவே நான் மொட்டைக் கடிதங்கள் எழுவதற்கு வழியமைத்தது. நான் எழுதிய கடிதங்கள் மற்றவருக்கு குறிபறிக்கவோ தீங்கு இழைக்கவோ அல்ல. நான் வாழ்ந்த தோட்டத்தில் மக்கள் எதிர்நோக்கிய சிக்கல்களைத் தீர்க்கவேண்டும் என்ற தீராத வேட்கைதான் காரணம். நான் வாழ்ந்த ரவாங் சுங்கைசோ தோட்டத்தின் கலைமகள் படிப்பகத்தில் திரு.எல்லப்பன் தலைவராக இருந்தார். நான் செயலாளர். அவர்தான் எழுதும்படி வற்புறுத்தினார். எழுதினேன்.

அந்தக் கடிதங்களின் நகலை 31 ஆண்டுகளாக காலக் கரையானுக்குத் தந்துவிடாமல் இன்றும் வைத்திருக்கிறேன்.

முதல் கடிதம்

‘மலக்கூடங்களின் நிலை’ எனும் தலைப்பிலான கடிதம். 1980ஆம் ஆண்டு வானம்பாடியில் வெளிவந்தது. தலைப்பிலேயே உங்களுக்குச்சிக்கல் புரிந்திருக்குமே. தோட்டத்தில் மலக்கூடங்களைச் குத்தகை அடிப்படையில் சுத்தம்செய்வோர் இலாபத்திலேயே குறியாக இருந்து சுகாதார நிலையைக் கவனிப்பதில் கோட்டைவிடும் அவல நிலை நிலவியது. “நாத்தம் தாங்க முடியல சாமி. சீக்கிரம் பேப்பருக்காவது எழுதிபோடுப்பா. யாரும் கண்டுக்க மாட்டேன்றாங்க.” எல்லப்பன் சொன்ன தகவலைத் திரட்டி எழுதினேன்.

‘500 தொழிலாளர்களும் அவர்களின் குடும்பமுமாக 2000 பேர் வசிக்கக்கூடிய தோட்டத்தில் ஏழு மலக்கூடங்கள் மட்டும் என்ற நிலை ஏமாற்றத்தை அளிக்கிறது. குறைந்த பட்சம் பத்து மலக்கூடங்களாவது இருக்கவேண்டாமா?

இந்த மலக்கூடங்களுக்குத் தினசரி நல்ல தண்ணீர் ஓட்டம் இல்லாமையும் முறையாகச் சுத்தம் செய்யாமையும் பெருங்குறையாக உள்ளது. இதனால் வண்டுஈ எனப்படும் பச்சை வர்ணத்தில் ஐந்து அளவிலான ஈக்களின் ஆதிக்கம் இந்த மலக்கூடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது எந்த நேரத்தில் எம்மாதிரியான பாதிப்பை உண்டுபண்ணும் என்பது வரையறுத்துக் கூறமுடியாத ஒன்று.

முறையே தாப்பாள் இல்லாத, பழுதடைந்த கதவுகள் கொண்ட மலக்கூடங்கள், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு பிரச்சினையாகப் பயமுறுத்தி வருகிறது. பழுதடைந்த மின்சார விளக்குகளை மாற்றுவதும் அரிதாகிவிட்டது.’

தோட்ட நிர்வாகத்தின் கண்டும் காணாத போக்கையும் சுட்டிக்காட்டி இரண்டு பக்கங்களுக்கு எழுதி, இப்படிக்கு பாட்டாளிகளில் ஒருவன் என்று முடித்திருந்தேன். அப்போது, யுனைடெட் ஏசியன் வங்கியில் என்னோடு பணியாற்றிய சுப.நாராயணசாமி “இங்கே பாருங்கையா, இவங்க தோட்டத்துல இதுக்குக்கூட வழியில்லையாம்” எனக் கிண்டலும் கேலியுமாக இந்தக் கடிதத்தை வங்கியில் பலருக்கும் படித்துக்காட்டி நகைச்சுவை விருந்தாக்கினார்.

வார இறுதியில் தோட்டத்துக்குத் திரும்பிய எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இந்தக் கடிதத்தால் தோட்டத்தில் ஒரு பரபரப்பே பரவி, குத்தகை எடுத்து சுத்தம் செய்பவர் தோட்ட நிர்வாகத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு, மலக்கூடங்கள் தண்ணீர் அபிசேகத்தால் புதுப்பொலிவு பெற்றதைக் கண்டேன். யாரும் தீர்க்கமுடியாத சிக்கலை ஒரு கடிதம் தீர்த்துவிட்டதே. எழுத்தின் ஆற்றலை நான் உணரத் தொடங்கிய தருணங்கள் அவை. “இந்த லைப்ரரிகாரங்கதான் எழுதிபோட்டிருப்பானுங்க” எனப் பலர் பேசிக்கொண்டதாக எல்லப்பன் கூறினார்.

இரண்டாவது கடிதம்

முதல் கடிதத்தின் வெற்றி எனக்கு உற்சாகத்தைத் தந்தது. இன்னும் எதையாவது எழுது என தினவெடுத்த எழுதுகோல் உந்தித்தள்ளியது. எல்லப்பன் இரண்டாவது சிக்கலோடு வந்தார். விடுவேனா? அதையும் எழுதினேன். தமிழ் ஓசையில் அது ‘சிறார்ப்பள்ளியின் நிலை’ என்ற தலைப்பில் வெளிவந்தது.

தோட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த சிறார்ப்பள்ளியின் அவலநிலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தேன். ‘பிள்ளைகள் பயன்படுத்திய பெரும்பாலான மேசை, நாற்காலிகள் சேதமடைந்துவிட்டன. வசதியாய் அமர்ந்து படித்த பிள்ளைகள் இப்போது தரையில் முழங்காலிட்டும் படுத்தும் படிக்கும் பரிதாப நிலை உருவாகிவிட்டது. ஆரம்ப காலத்தில் கொடுத்துவந்த உணவு வகைகள் படிப்படியாய்க் குறைந்து இப்போது அறவே கொடுப்பது இல்லை என்றாகிவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் இது மூடுவிழா கண்டாலும் ஆச்சரியமில்லை. பெருநாள் காலங்களில் பிள்ளைகளுக்குத் தின்பண்டங்கள், நோட்டு, பென்சில் கொடுத்து பேர்போடும் தலைவர்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாய்ச் சிந்திக்க வேண்டும். தோட்ட நிர்வாகம் இக்குறையினைக் கண்டும் காணாமல் இருப்பது ஏனோ? பெற்றோர்களில் ஒருவன்’ என்று கடிதத்தை முடித்திருந்தேன்.

இதன் விளைவு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு தோட்டத்திற்கு வந்தேன். “பேப்பருல வந்தது நல்லா வேல செஞ்சது. ஆபிசுல ஏதோ மீட்டிங் போட்டங்கலாம். உடனே மூனு நாளுல அத்தனையும் பழுதுபார்த்து வேலய முடிச்சிட்டாங்க.” எல்லப்பன் கொடுத்த தகவல் எனக்கு மனநிறைவைத் தந்தது. இப்படியென்றால் எத்தனை மொட்டைக் கடிதங்களும் எழுத நான் தயார்.

மூன்றாவது கடிதம்

மூன்றாவது கடிதம், தோட்டத்தில் புதிதாய்ப் பரவிய சமூக நோய் பற்றியது. ‘சீட்டுக்கட்டு இராஜாகளைக் களையெடுப்போம்’ என்ற தலைப்பில் தமிழ் ஓசை ஞாயிறு மலரில் கேள்வி-பதில் பக்கத்தில் வெளிவந்தது.

‘வேலை விட்டு வந்து பால்வெட்டு உடையைக்கூட மாற்றாது காப்பிக்கடை, தோட்ட முச்சந்தி, கோயில் மண்டபம், படக்கொட்டகை என பல இடங்களில் பல குழுக்களாக அமர்ந்து பெரியவர்கள் சீட்டு ஆட்டத் தொடங்குகிறார்கள். நாளுக்கு நாள் இந்தக் குழுக்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. கடுமையான உடல் உழைப்புக்குப் பின் ஓய்வு எடுப்பதையும் கூடுதல் வருமானத்திற்கு பகுதிநேர வேலையில் ஈடுபடுவதையும்விட இந்தச் சீட்டாட்டம் முக்கியம் வாய்ந்ததா?

தோட்ட நிர்வாகமும் காவல்துறையும் இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையைத் தருகிறது. பெரியவர்களைப் பார்த்து இளைஞர்களும் இப்போது இதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். இளம் தலைமுறைக்கு வழிகாட்டவேண்டிய தலைவர்களே இதில் தீவிரத்தோடு ஈடுபடுவது கவலையைத் தருகிறது. இவர்கள் நல்லதைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை. இளைஞர்களைக் கெடுக்கும் பணியில் இத்தனைத் தீவிரம் தேவையா? இளம்தலைமுறையைச் சேர்ந்தவன்’ என்று கடிதத்தை முடித்திருந்தேன்.

இதுவும் இரண்டு பக்கக் கடிதம். காவல்துறை என்று பயமுறுத்தியதால் கடிதம் நன்றாக வேலை செய்தது. தோட்டப் பிரச்சினையை நாட்டு மக்களுக்கே தெரியப்படுத்தியதால் பலருக்கும் கோபமாம். ஒருமுறை படக்கொட்டகைக்கு நான் போனபோது, என்னைக்கண்டதும் சீட்டாடிய ஐந்தாறு இளைஞர்கள் சீட்டுகளை அவசர அவசரமாக மூட்டைக் கட்டியது இன்னும் ஞாபகத்தில் உள்ளது. “வேற யாருயா எழுதுவாங்க? எல்லாம் இந்த லைப்ரரிகாரங்கதான் வேலதான்” என இம்முறையும் தோட்டத்தில் பேச்சு நிலவியதாக எல்லப்பன் கூறினார்.

இன்றுவரை, இந்தக் கடிதங்களை நான்தான் எழுதினேன் என்பது தோட்டத்தில் பலருக்கும் தெரியாது. இந்த மூன்று கடிதங்களுக்குப் பிறகு, எழுதுவதற்குத் தோட்டத்தில் வேறு உடனடிச் சிக்கல்கள் இல்லை என்பதால் நானும் எழுதவில்லை. அதற்குப் பிறகு, சமூகம் குறித்த ஆதங்கங்களை, வேதனையைக் கவிதையாக எழுத முனைந்தேன். இன்றுவரை மொட்டைக் கடிதம் எழுதும் சூழல் அமையவில்லை. பல புகார்க் கடிதங்களில் முறையீட்டுக் கடிதங்களில் என் பெயரைக் குறிப்பிட்டே எழுதியிருக்கிறேன். மொட்டைக் கடிதங்களுக்குப் பேர்போன சமுதாயத்தில் நானும் என் பங்குக்கு எழுதி அவலத்தை அதிகமாக்கவேண்டுமா?

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768