|
|
கடவுளின் முகம்
அணிவதற்கு சுகமானது
பிடறி நரம்புக்கு மிக நெருக்கமாக
ஒலிகளால் பின்னப்பட்ட ஒன்று நெளிந்தவண்ணமிருக்கிறது.
நேர்த்தியாகச் சிரைக்கப்பட்ட இறுதி முகத்தைக் கழற்றி விட்டு
உன்னை அணிந்து கொள்ளலாமா என்றும் யோசிக்கிறது
முகமற்றிருத்தலின் அவமானம்.
திரும்பவும் என்னையே காட்டுவதில் தோற்றுக்கொண்டிருந்த
கண்ணாடிகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறேன்.
என் போன வருசத்து முகமொன்று
மீண்டு வரத் திசை தெரியாத காட்டுக்குள்ளிருந்துகொண்டு
தத்தளிப்பது போல பாவனையுடன் நானாகக் தெரிகிறது.
அது உடைந்த துண்டொன்றுதான்.
கண்ணாடிகள் சடலங்களை மட்டுமே காட்டும்
கண்ணாடிகள் சடலங்களை மட்டுமே காட்டும்
கண்ணாடிகள்…. சடலங்கள்….
நெளிந்து கொண்டிருந்த நீ காதோரமாக
என்னைக் கொஞ்சுவது போல சொற்களாகிறாய்..
சரித்திரங்களுக்கு கடவுளாக நீ மட்டுமே இருக்க முடியுமானதாக
நம்பி ஏற்றுக் கொள்கிறேன்.
|
|