|
|
முனிஸ்வரனின் 'ஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்'
‘பயணத்திலும் அன்று இரவு உறக்கத்துக்கிடையிலும் பலமுறை அவள் வார்த்தைகள்
காதில் ஒலித்தபடியே இருந்தன. ஒருவேளை சோத்துக்கு என்ற சொற்கள் ஆழத்தில்
தைத்தன. எல்லாருமே ஏதோ ஒரு வகையில் உணவுத் தேவையை சமாளிக்க
உழைக்கிறவர்கள்தான். ஆனால் அந்த வார்த்தையை எல்லாரும் பயன்படுத்துவதில்லை.
ஒருசிலர் மட்டுமே அதை அடிநெஞ்சிலிருந்து வெளிப்படுத்துகிறார்கள். அதற்கான
காரணம் எதுவாக இருக்கும் என்று யோசனையில் உழன்றபடி இருந்தபோதே, விடையைக்
கண்டடைந்தது மனம்.
உழைப்பின் வழியாகக் கிடைக்கிற வருமானம்தான் அதைத் தீர்மானிக்கிற சக்தி.
சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தாண்டி, இன்னும் பல தேவைகளையும் தீர்த்து
வைக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள்
உரையாடலில் உணவைப் பற்றிய பேச்சே இடம் பெறுவதில்லை. வீடு, வாசல், வாகனம்,
சொத்து என பல திசைகளில் உணவைத் தாண்டிய தேவைகளை நோக்கி விரிந்து போகிறது.
சிலர் வருமானம் உணவுத்தேவையைத் தீர்த்துக் கொள்ளவே முடியாதபடி
பற்றாக்குறையாக இருக்கிறது. அவர்கள் மனஆழத்தில் உள்ளூர உணவைப் பற்றிய
அச்சம் எப்போதும் நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தபடியே இருக்கிறது. அதன்
வெப்பமே அவர்களை அறியாமல் சொற்களாக வெடித்து விழுகிறது. வள்ளுவரின்
இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுகஇவ்வுலகியற்றியான் என்னும்
சுடுவரிகளே உடனடியாக நினைவில் வந்தன.’
பாவண்ணனின் ‘ஒரு வேளை உணவு’ எனும் கதையில் வரும் மேற்கண்ட வரிகள் கதையைப்
படித்த பின்னர் நம் ஆழ் மனம் எழுந்து தலைக்காட்டி கொண்டே இருக்கும். வீட்டு
வேலை செய்யும் சாவித்திரி ஒரு வேளை உணவுக்காக தன் வேலையின் கஷ்டங்களைச்
சகித்துக் கொள்கின்றாள். அவளுடைய உழைப்பின் நோக்கமெல்லாம் ஒரு வேளை உணவு
மட்டுமே. அந்த நோக்கம் ஒன்று மட்டுமே அதிகாரத்தின் பிடியிலிருக்கும் அவளைச்
சகித்துக் கொள்ள வைக்கின்றது. அதிகாரத்தின் பிடியில் மௌனம் காப்பவளை அடிமை,
கோழை என வசை பாட முடியவில்லை. பிற ஆடம்பர சுகங்களைத் தூர எறிந்துவிட்டு ஒரு
வேளை உணவை மட்டும் தன் வாழ்க்கையின் தேவையென கருதுபவளைப் பாராட்டவே மனம்
எண்ணுகின்றது. சாவித்திரி போன்ற இன்னும் பலர் தங்களின் தேவைகளைப் பூர்த்தி
செய்து கொள்ள வேலை சிக்கல்களைத் தினம் கடக்க சோர்ந்து போவதில்லை. அதுவே
அவர்கள் உழைக்க உந்து சக்தியாகவும் அமைந்து விடுகின்றது.
முனிஸ்வரனின் ‘ஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்’ என்ற கதையின்
கதைசொல்லியும் தன் வேலையின் இக்கட்டான சூழல்களைத் தாண்டியே வருகின்றான்.
பிஸ்ஸாக்களைச் சுமந்துகொண்டு உரிய நேரத்தில் வாங்கியவரிடம் சேர்ப்பதுதான்
கதைசொல்லியின் வேலை. உரிய நேரம் என்பதைவிட அது கதைசொல்லியைப் போன்ற
வேலையில் இருப்போருக்கு அரிய நேரம் எனலாம். வாகனங்கள் நிரம்பி வழியும் சாலை
நெளிவுகளில் தாங்களும் நெளிந்து விரைந்து சென்று சேர்க்கும் கரங்களில்
தங்களின் உயிரையும் உடன் வைத்திருக்கின்றனர். அவர்களின் துரித நகர்வுகளைச்
சாலைகளூடே கண்ணுற்றவர்களுக்கு இதை உணர முடியும். வானிலை மாற்றங்கள் தடைகளை
அவ்வப்போது வேலைக்கு உட்படுத்தினாலும் அதிலிருந்து மீள்வதே கதைசொல்லிக்குப்
பெரிய கடமையாக உள்ளது. கதைசொல்லியின் நிலை கதையின் வழி நம்மையும் புரிய
வைக்கின்றது. சாலையின் சமிக்ஞை விளக்குகளும் தன் வேலையின் மற்றொரு தடையென
கதைசொல்லி கருதுகின்றான். சாலையின் சமிக்ஞை விளக்கைக் கடக்க எத்தனிப்பவனின்
நிலை கதையின் முடிவில் நம்மை வருந்த செய்தாலும் அவனது பொறுமையற்ற
கடமையுணர்ச்சியும் எட்டி பார்க்கின்றது.
இரு கதைகளுமே அவர்களின் வாழ்க்கையை ஆழ்ந்து பார்க்க வழி காட்டுகின்றன.
சாதாரண வாழ்க்கை அடிப்படைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவர்களின் திடமான
உழைப்பு பெருமை தருகின்றது. உழைப்பை மறந்து குறுக்கு வழியில் உயர்ந்திட
நினைக்கும் உயிர்களை விடவும் இவர்கள் பாராட்டுகுரியவர்கள். இயல்பு வாழ்க்கை
நிலைகளை ஏற்று கொள்ள வலிமையற்று தற்கொலையை முடிவாக்கிக் கொள்பவர்களும்
வேலையிடத்து குறைகளை மட்டும் அதிருப்தியாய் வெளிப்படுத்துபவர்களும் இவர்கள்
முன் கேள்விக்குறியாகி நிற்கின்றனர்.
உழைப்பின் வருமானம் அடிப்படை தேவைகளுக்கென்பது மெல்ல தொய்வடைந்து
ஆடம்பரத்தின் சேர்க்கையாக உருமாறி வரும் காலக்கட்டத்தில் பயணித்திருக்கும்
வேளையில் அத்தியாவசியத்தை மட்டும் தேடி ஓடும் உயிர்களும் இருப்பதை மறுக்க
முடியாது. அத்தியாவசியம் மட்டுமே தன் வாழ்வென உணர்ந்து திருப்தியும்
பேரின்பமும் அடைபவர்கள் இவர்கள்; அதிர்ஷ்டசாலிகள்.
|
|