|
|
இடைநிலைப்பள்ளியில் ஆட்டம் காணும் தமிழ்!
நாடளாவிய நிலையில் தமிழ்த் துறையிலிருந்து வெளிவந்த ஆசிரியர்களை அடையாளம்
காண வேண்டியது கல்வி இலாகாக்களின் தமிழ் மொழி இயக்குநர்களுக்குரிய
பொறுப்பாயிருக்கிறது. என்ன இது? தொடக்க வரியே கட்டளை வாக்கியமாகவோ
வேண்டுகோளாகவோ இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? பார்க்கப் போனால் இஃதொரு
நெடுங்காலப் பிரச்சனையாக மூடுமந்திரம் போல் நிலவி வருகிறது. ஒரு பக்கம்
இடைநிலைப்பள்ளி மாணவர்களை இலக்கியப் பாடம் பயில்வதற்குரிய முயற்சி
குறிப்பிட்ட சாராரால் அர்ப்பணிப்புணர்வுடன் முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற
வேளையில், இன்னொரு பக்கம் மாணவர்களே உணராத வண்ணம் பேராபத்தான வெளியில்
சஞ்சரித்துக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இடைநிலைப்பள்ளியைப் பொறுத்தவரையில் மொழித் துரோகிகள் பெருத்துவிட்டார்கள்.
சம்பத்தப்பட்டவர்கள் மட்டும் இந்தச் செய்தியைத் திறந்த மனத்தோடு
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மொழிநலனிலும் தமிழ்க்கல்வியிலும் அக்கறை
கொண்டவர்களின் குரலாக இதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அரசு அறிவித்திருக்கும்
வரவு செலவு கணக்கறிக்கையை ‘ஒணைக்கையாகச்’ செவிமடுத்துக்கொண்டு தமிழுக்கு
‘ஆப்பு’ வைப்பது தமிழுக்குத் துரோகமல்லவா? தமிழாசிரியர்களின்
படுமோசமான தமிழ் வாசிப்பு வேறு அடிவயிற்றைக் கலக்குகிறது. உண்மையில்
பெரும்பான்மையான பள்ளிகளில் தமிழ் மொழியின் இருப்புத்தான் என்ன?
ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறும் தமிழாசிரியர்களில்
தமிழைவிட பிற மொழிகளில் அதிகம் ‘ ஆர்வம்’ செலுத்துகின்றனர் என்பதைப்
பெரும்பாலோர் ஒப்புக்கொள்வார்களா? தமிழ் என்ற சொல்லின் பொருளை அவர்கள்
எங்ஙனம் உணர்ந்துவைத்துள்ளனர் என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அதற்குத்
தமிழ் இலக்கியம் சார்ந்த மரபும் நவீனமும் கலந்த பரிட்சயம் வேண்டும்.பாடப்
புத்தகமும் அதிலுள்ள இலக்கண,இலக்கியக் கூறுகளும் மட்டுந்தான் ‘தமிழ்’
என்பது அவர்களின் கணிப்பு. அதையே மகத்தான தமிழ்ப்பணியென
எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ? அதைவிட்டு அவர்கள் தாண்டி வருவார்களேயானால்,
அது பஞ்சமாபாதகமாகிவிடும் போல! தமிழ்ப் பள்ளிச் சூழலில் எங்கும் தமிழ்
எதிலும் தமிழ் என்பதால் அவர்களால் அந்தச் சூழலுக்குள்ளிருந்து வாலாட்ட
முடிவதில்லை. அங்கு அவர்கள் கற்ற தமிழைக் கற்பிக்க வேண்டும். ஆனால்,
இடைநிலைப்பள்ளியின் சூழலே வேறு. அதைக் கொஞ்சம் பிட்டு வைப்பதே
இக்கட்டுரையின் சாரம்.
பல்கலைக்கழகத்தில் தமிழோடு சரித்திரம், பூகோளம், உடற்கல்வி போன்ற
துணைப்பாடங்களைக் கற்று வருகிறவர்கள் பள்ளியில் சேர்ந்ததும் தமிழைவிட்டு
ஒதுங்கவே பார்க்கின்றனர். பிற பாடங்களைக் கற்பிப்பதில்
தவறொன்றுமில்லையெனினும், அச்செயல் தமிழுக்குக் குந்தகத்தை ஏற்படுத்துகிறதே
என்பதுதான் நமது கவலை. மருந்துக்குத் தமிழைக் கற்றுக்கொடுக்கின்ற நிலையும்
இருக்கத்தான் செய்கிறது. வெறும் இலக்கண, இலக்கியக் கூறுகளை வருடம் முழுக்க
‘உழப்பிக்கொண்டும்’ கூடுதலாகக் கட்டுரையையும் கொடுத்துவிடுகிறார்கள். இதில்
வேடிக்கை யாதென்றால் தமிழாசிரியர்களுக்கே கட்டுரை எழுதத் தெரியவில்லை
என்பதுதான். மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடைபெறுகின்ற வேளையில்
மட்டும் தக்காரிடம் மோதிப் பெறுவதே அவர்களது வேலையாகிவிட்டது. தங்களுக்கு
எழுத்து வேலையெல்லாம் வராது என்பதை ஏதோ பெருந்தன்மையாய்
சொல்லிவிடுகிறார்கள். இந்தச் சாக்குப் போக்கை எந்தக் கூளத்தில் கொட்ட?
மாறிவரும் கல்விச் சூழலில் தமிழின் மதிப்பீட்டு முறையும் மாறவுள்ளது.
பள்ளியில் தமிழாசிரியர்கள் அல்லது தமிழை விட்டுத் தூரப் போனவர்கள்
இருப்பார்களேயானால், தமிழ்க் கல்வியின் அழிவுக்கு இவர்களே
காரணகர்த்தாவாகிவிடுவார்கள். மாணவர்களின் தர நிர்ணயம் என்பது தேர்வுமுறையை
மாத்திரம் கொள்ளாமல், மாணவர்களை உடனிருந்து கண்காணித்துப் புள்ளி வழங்கும்
முறை வெகுவிரைவில் அறிமுகமாகவுள்ளது. ஆசிரியர்கள் இருந்தும் இல்லாத
சூழல்கள் இருக்குமேயானால், நம் தெய்வத் தமிழ் திண்டாடப் போவது உண்மை! அதே
வேளையில் பள்ளி முதல்வருக்கும் முழு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. தமிழ்
ஆசிரியர் இல்லாத நிலையில் மதிப்பீட்டு முறை உசிதமற்றது எனக் காரணம் கூறி
அம்முதல்வர்கள் பின்வாங்கக்கூடும். தமிழ் மொழிக் கல்வி சரிந்துவிடக்கூடாதே
எனும் உறுதிப்பாட்டில் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிற ஆசிரியர்கள் சத்தியப்
பிரமாணத்திற்கெதிராக இயங்குகின்றனர். இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.
பி.ஓ.எல் வகுப்பு நடத்த தமிழாசிரியர்கள் தேவைப்படுகிறது என்றால்
விழுந்தடித்துக்கொண்டு கல்வி இலாகாவை முற்றுகையிடுகின்றனர். இன்றைய
நிலையில் வாரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு நூற்று இருபது ரிங்கிட்
வழங்கப்படுகிறது. மாதத்தில் நானூறு ரிங்கிட்டுக்குமேல் அந்த வகுப்பில்
மட்டும் சம்பாதிக்கிறார்கள். இப்படியும் பணம் கிடைக்கிறதா எனச் சில
ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் ஒருவர் என்னிடம் வந்தார். விவரத்தைச்
சொல்லிக்கொண்டிருந்தபோது உடனடியாக, “ நானும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்
ந.வீ.ஜெயராமனிடம் தமிழைத்தான் முதன்மைப் பாடமாகக் கற்றேன். ஆனால், சரவாக்
மாநிலத்திற்குப் பணி நிமித்தம் அனுப்பப்பட்ட பிறகு, தமிழையே
மறந்துவிட்டேன். சொல்லித் தர பயமாய் இருக்கிறது. ஆனாலும், மீண்டும்
கற்றுத்தர ஆர்வமாக இருக்கிறேன்,” என்று கதையளந்தார். மறந்துபோன தமிழ்
எப்படி மீண்டும் பறந்து வந்தது என ஒரு கேள்வி மனத்துக்குள் துளைக்கத்
தொடங்கியது. அதன் பிறகு, புகுமுக வகுப்பிலிருந்து போதனையை ஆரம்பித்தார்.
அடுத்த ஆண்டிலேயே பி.ஓ.எல் வகுப்பை நடத்த வாய்ப்பும் கிட்டியது.சில
நேரங்களில் வெங்காயம்,பூண்டு வாங்குவதற்கு இந்தக் கூடுதல் வருமான
வகுப்புத்தான் உதவி செய்கிறது என்று இப்பொழுது வாய் கூசாமல் பேசிக்
கொண்டிருக்கிறார். இன்னோர் ஆசிரியர், தமது வீட்டில் மருந்துக்கும் தமிழே
பேசாதவர். பி.ஓ.எல் வகுப்புக்காகப் பள்ளி முதல்வரிடம் தாம் தமிழ்த்
துறையில் கற்றவன் எனச் சான்றிதழ்களையும் நீட்டியிருக்கிறார். ஆனால்,
பள்ளியில் கற்பிப்பதோ வேற்று மொழிப் பாடம்! அதன்படி வகுப்பும் கிடைத்தது.
ஆனால், அவரது வீட்டில் ஒருவருக்கும் தமிழ் எழுதத் தெரியாது. இன்னோர்
ஆசிரியர் பள்ளியில் முழுக்க முழுக்க மலாய் மொழியே வேதமென்று கூறிக்கொண்டு
வீட்டில் மலாய் மொழிப் பிரத்தியேக வகுப்பை நடத்திக்கொண்டு, பி.எல்
வகுப்புக் கிடைக்காததால் தமது கணவரின் துணைகொண்டு மாநிலக் கல்வி
இலாகாவுக்கு மொட்டைக் கடிதமெல்லாம் எழுதியிருக்கிறார்.
எனக்குத் தெரிந்த கணவன் மனைவியான ஆசிரியர்கள் கல்லூரியில் தமிழ்த் துறையில்
டிப்ளோமா பெற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் தேசிய மொழியையும் வேறொரு
பாடத்தையும் படித்துவிட்டு வீட்டுக்கருகிலுள்ள பள்ளியில் பணி செய்ய மனு
செய்திருக்கிறார்கள். அப்பொழுது அப்பள்ளிக்கு உடனே தமிழாசிரியர்
தேவைப்படுவதாக ஒரு செய்தி அவர்களின் காதில் எட்ட, கல்வி இலாகா வரை ஓட்டமாய்
ஓடி, சாதுர்யமாகப் பள்ளியில் சேர்ந்தும்விட்டார்கள். பி.ஓ.எல் வகுப்பு
இருக்கின்ற வரையில் தமிழைக் கற்பித்து, அதன்பின் அவ்வகுப்பு நீங்கிய பிறகு
பள்ளியில் தமிழைக் கற்பிப்பதையும் நிறுத்தினார்கள். அப்பள்ளியில் ஒரே
ஆசிரியர் மட்டும் அனைத்து வகுப்புகளையும் கவனிக்க வேண்டிய நிலை. இவர்களோ
தமிழைத் தூர நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய
சொல்லலாம். இப்படிப்பட்டவர்களையும் தமிழன்னை
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறாளே என நினைக்கும்போது உடம்பெல்லாம்
புல்லரித்து அதல பெருமையே மேலிடுகிறது! இதுபோன்ற சம்பவங்கள் நாடளாவிய
நிலையில் உள்ள இடைநிலைப்பள்ளிகளில் கமுக்கமாய் நடந்துகொண்டிருக்கின்றன.
இக்கட்டுரையை மாநிலக் கல்வியின் தமிழ் மொழி இயக்குநர்கள்
படிப்பார்களேயானால், ஆண்டிறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த வேளையில்
அடுத்த ஆண்டை எதிர்கொள்ள உருப்படியாயிருக்கும்; உதவியாகவும் இருக்கும்!
ஏற்கெனவே சொல்லிவிட்டோமே என்ற பதில் மட்டும் வேண்டாம் என்பது
இக்கட்டுரையின் உட்குரல்!
|
|