முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 36
டிசம்பர் 2011

  ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு ...1
கே. பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

'தமிழின் நவீன கவிதையைவிட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது' றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 3
ம. நவீன் - கே. பாலமுருகன்


"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை"
நிலாந்தன்



கட்டுரை:

கோ. முனியாண்டி கொட்டிய குப்பை
ம. நவீன்

குரு தட்சணை
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் : சொற்கள் தொகுக்கும் சித்திரங்கள்
லதா

தக்க வைத்தல்

ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 4
வி. ஜீவகுமாரன்



சிறுகதை:

குளியல்
கே. பாலமுருகன்



அறிவிப்பு:

நேர்காணல் இதழ்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...26

வ.ஐ.ச.ஜெயபாலன்

ந. பெரியசாமி

ராஜா

எம். கே. குமார்

யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்

பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல அமைப்புகளும் நாடுகளும் இணைந்து தமிழ் இனத்தை அழிப்பதில் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக்திகளாக உருவாகின. இவர்கள் கூட்டாகச் சேர்ந்து தமிழீழப் போருக்கு எதிராக உருவாகிய அனைத்தும் வன்மையானவை. சர்வதேச அளவில் பேசித் தீர்மானிக்கப்பட்ட பயங்கரவாதம். இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவியைச் செய்ததோடு மட்டுமல்லாமல் பக்கப்பலமாகவும் இருந்து புலிகளைத் துடைத்தெறிய பங்காற்றியதில் இந்தியாவும் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசுக்கு எதிராக இயங்குவதுதான் பயங்கரவாதம் எனச் சொல்லப்படுகையில், அரசே பயங்கரவாத இயக்கமாகச் செயல்படுவதை எப்படி அழைக்கலாம்? உள்ளுக்குள் சகல பாதுகாப்புடனும் வளர்க்கப்படும் மிருகம்தான் அரசால் கையாளப்படும் பாசிசம்.

ஓர் அரசின் பாசிசத்தைப் பற்றி சொல்லும்போது அது தனக்குக் கீழாக இருக்கக்கூடிய சிறுபான்மை சமூகத்தை அடக்கியது முதல் அவர்களுக்கான வாழ்வாதார உரிமைகளைக் கொடுப்பதில் பெரும் தடைகளை ஏற்படுத்தியதுவரை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தும் எப்படி ஒரு போராளி உருவாகி தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறான்? அது வெறுமனே புகழ்ச்சியை நோக்கிய செயலோ அல்லது தன்னை ஓர் எதிர்வினையாகக் கட்டமைத்து அதன் மூலம் தன் பிம்பத்தை வியாபாரப்படுத்தும் செயலோ அல்ல என்பது உறுதி. அரசின் அணுகுமுறையின் மீதான வெறுப்புணர்வு ஆழ்மனத்தில் தீ மூட்டுகிறது. ஒவ்வொரு கணமும் அவனை இம்சிக்கிறது. இலங்கை தமிழர்களின் ஆழ்மனம் இப்படிப்பட்ட வெறுப்புணர்வால் ஒரு எதிர்வினையை வெளிப்படுத்துகிறது. பிறகந்த எதிர்வினை ஓர் அமைப்பாக/இயக்கமாக மாறி வளர்கிறது. பிரபாகரன் இன்னும் அக்காலக்கட்டத்தில் உருவான இளைஞர்கள் கூட்டம் என அனைத்துமே ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உருவான மனநிலையிருந்து வளர்க்கப்பட்டு களமிறங்கியவர்களே.

யோ.கர்ணன் போரில் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டு பல இழப்புகளைச் சந்தித்தவர். ஒரு போராளியின் இழப்பை தமிழில் எப்படி உணர்ச்சிவசப்படாமல் விவரிப்பது என்ற தயக்கம் இருக்கிறது. அழித்தொழிக்கபட்ட ஒரு நிலப்பரப்பின் ஆழ்மனக் குரல் யோ.கர்ணன் என அவரின் கதைகளின் வழி புரிந்துகொள்ள முடிகிறது. ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ எனும் அவருடைய சிறுகதை தொகுப்பில் மொத்தம் 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் பேசும் விசயத்திலிருந்து தனித்துவமான கதைச்சொல்லல் முறைமையைக் கடைப்பிடித்திருக்கின்றது. இந்தச் சிறுகதை விமர்சனத்தை எழுதுவதற்கு முன்பே யோ.கர்ணனுடன் அவரது சிறுகதைகள் குறித்து ஓர் உரையாடலை நிகழ்த்திவிட்டிருப்பதால் தொடர்ந்து விமர்சனம் சார்ந்து அவருடைய பிரதிகளை அணுகுவதில் விசாலமான ஒரு பார்வை கிடைத்திருக்கிறது. நாம் எப்படி ஒரு கதையைப் புரிந்துகொண்டோம், நம்முடைய புரிதலிலிருந்து பிறர் எப்படி ஒரு பிரதி சார்ந்து மாற்றுப் பார்வை கொள்கிறார்கள் எனக் கவனிப்பது ஒரு விமர்சகனுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதனையே அவன் முதன்மைப்படுத்தி தன் விமர்சனத்தைச் செம்மைப்படுத்தி உருவாக்குவது செயற்கையான ஒன்றாகிவிடும்.

யோ.கர்ணன் எனும் போராளி

தமிழீழம் என்ற ஒரு போராட்டம் நடந்தது என்பதையே ஒரு புனைவு வரலாறாக மாற்ற எல்லா அழித்தொழிப்பு வேலைகளையும் அடையாள மறைத்தல்களையும் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக தன் கதைகளின் வழி தமிழீழப் போரையும் அதனைச் சார்ந்த உணர்வுகளையும் மறுகட்டமைப்பு செய்து போரின் அவலக் குரலை மீள்பதிவு செய்கிறார். இதுதான் யோ.கர்ணன் எனும் கதைச்சொல்லியின் உன்னத செயல்பாடு. தன் கதைகளின் வழி அவரை அவரே இன்னமும் சோர்ந்துபோகாத ஒரு போராளியாக மறுகண்டுபிடிப்பு செய்து கொள்கிறார்.

அவருடைய குறிப்பிட்ட சில கதைகளின் வழி யோ.கர்ணன் நம்பும் அரசியல், அவருடைய போர்ச்சூழல், இயக்கம் சார்ந்த அவருடைய மன உணர்வுகள், போர்ச்சூழல் குறித்த மறு விசாரணை, போருக்குப் பிந்தைய சமூக மாற்றம் எனப் பலவற்றை தொட்டுச் செல்கிறார். அவர் கதைகளின் வழி நாம் அடையக்கூடிய அனுபவம் மிகவும் ஆபத்தானதும் கூட. மிகவும் கவனமாக அவருடைய கதைவெளிக்குள் பிரவேசிக்க வேண்டியிருக்கிறது. நிலமெங்கும் கன்னி வெடிகளும் குண்டுகளும் புதைக்கப்பட்டிருப்பதைப் போல அவருடைய கதைப்பாத்திரங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் முதல் கதை இது. இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் சிங்கள இராணுவத்தினரைக் காட்டுக்குள் முன்னேறவிடாமல் அவர்களைத் தடுத்து விரட்டியடிப்பது அல்லது போர்ச்செய்து கொல்வது எனும் இயக்கத்தின் நடவடிக்கையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இலங்கை போர் குறித்து வெறும் செய்திதாளைப் புரட்டி விவரம் அறிந்துகொள்ளும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய அனைத்து வல்லமையும் பொருந்திய கதை இது.

இக்கதையின் மூலம் இயக்கத்தில் அடிக்கடி உபயோகிக்கப்படும் சில இராணுவ/போர்ச் சொற்களையும் ஆயுதத் தளவாடப் பொருள்களின் பெயரையும் அறிவதோடு கதையாசிரியர் அதற்குக் குறிப்பும் விளக்கமும் ஆங்காங்கே கொடுத்துள்ளார். இராணுவத்தின் ஆயுதத் திட்டங்கள், முறியடிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை முதலிலேயே தெரிந்துகொள்வதன் மூலமே அங்கு நிலவி வரும் பல்லாண்டுகாலப் போரைப் பற்றி ஓர் அறிமுகம் கிடைக்கும் என நினைக்கிறேன். அந்த வகையில் ஆதிரை இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு இயக்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காகக் காட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறாள்.

ஆதிரை என்பவள் யார்? அவள் அனுப்பிவைக்கப்பட்ட அந்த இயக்கத்தின் நடவடிக்கை என்ன? போர் ஆதிரைக்கு என்ன கொடுத்தது? இதுதான் கதையின் முக்கியமான பகுதிகள். ஆதிரை எனும் ஒரு இளம் போராளியின் உணர்வலைகள் இப்பகுதிகளில் காட்சிகளை நிரப்பி ஆக்கிரமிப்பு செய்கின்றன. ஆரம்பக்காலத்தில் முல்லிவாய்க்காலில் இருக்கும்போது இயக்கத்தினர் போட்ட தெருக்கூத்தைப் பார்த்து அதன் மூலம் கவரப்பட்டவள்தான் ஆதிரை. கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்து தெருக்கூத்தைத் தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கருதி அதில் ஆழ்ந்து உண்மையாகி போகிறாள். தனக்கும் தன் சமூகத்திற்கும் நிகழ்ந்த கொடூரங்களின் மீது அவளுக்கொரு புரட்சி மனப்பான்மை எழுகிறது. அதன் பிறகே அவள் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று போராளியாகிறாள்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவெனில் இயக்கம் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்துக் கொண்டு போய் பயிற்சி கொடுத்திருக்கிறது என்ற ஒரு குற்றச்சாற்றை நான் ஒரு சிலரின் கட்டுரையில் வாசித்திருக்கிறேன். தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டும் கிராமத்தில் குடும்பங்களில் வசித்த ஆண்களைக் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் இணைக்கும் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு புனிதமான செயலாகவும் கருதப்பட்டது. ஆனால் யோ.கர்ணன் தன் கதையில் வரும் ஆதிரையை அவளாகவே போராட்டம் குணமுடையவளாக மாறி இயக்கத்தில் சேர்வதாகக் காட்டியிருக்கிறார். போராளி வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டதில்லை என்பதே உண்மை. ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் ஒரு பக்கம் நிகழ்ந்திருந்தாலும், ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து ஒரு போராளி தன்னை அர்ப்பணித்து போராட்டத்தில் ஈடுபட முன்வருவது மிகவும் சாத்தியமான நியாயமான ஒரு விசயமாகவே கருத முடிகிறது. வரலாறும் இதைத்தான் கற்பிக்கிறது.

யோ.கர்ணன் ஒரு ஆயுதப் போராளி

யோ.கர்ணன் ஒரு ஆயுதப் போராளியாவார். போரில் ஈடுபட்டு தன் ஒரு காலையும் இன்னும் பல இழப்புகளையும் சந்தித்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உருவான ஒரு போராளி என்றே முதலில் அவரை நாம் அணுக வேண்டியுள்ளது. ஒரு போராளி உலகச் சமூகத்துடன் பேசும் வார்த்தைகள்தான் அவரால் படைக்கப்பட்ட கதைகள் என நான் நம்புகிறேன். இயக்கத்தில் ஈடுபட்டு போர் செய்து தமிழீழத்தை மீட்கும் பணியில் கர்ணனுக்கு அமைந்த அனுபவங்கள் எண்ணிலடங்காதவை. அதைப் பற்றி அவரே உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு விடுதலை இயக்கத்திலிருந்து வெளியேறியவர் யோ.கர்ணன். அது குறித்து அவரிடம் கேட்டிருந்தேன். அவருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான முரண்கள் என்ன என்பதாக என் கேள்வி அமைந்திருந்தது. புலிகளிற்குள் நிலவிய ஜனநாயகமற்ற தன்மை காரணமாக அவரால் அங்குத் தொடர்ந்து தங்கியிருக்க முடியவில்லை எனக் கூறினார். அமைப்பு ரீதியாக சேர்ந்தியங்க முடியாவிட்டாலும், அதன் மீது விமர்சனங்களுடன் கூடிய ஆதரவாளனாகவே அவர் இருந்து வந்திருக்கிறார். ஏனெனில் அவர்களுக்கு அதனிலும் முக்கிய தேவையிருந்தது. அவர்கள் எல்லோரது பொது எதிரியை வெற்றி கொள்ள வேண்டியிருந்தது. புலிகள் அமைப்பக்களிற்குள் நிலவியதை விட ஆயிரம் மடங்கு மோசமான சூழலையே அரசு தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தி வைத்திருந்தது எனக் கூறிய கர்ணன், ஆயிரம் விமர்சனங்களிருந்த போதும் அது எங்கள் இயக்கம் என்ற மனோநிலையுடனேயேயிருந்தேன் எனவும் குறிப்பிடுகிறார். அவருடைய நண்பர்களில் பெரும்பாலனவர்கள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள்தான். தொடர்ச்சியான விமர்சன செயற்பாட்டின் மூலம் அமைப்புக்கள் நிலவிய குறைபாடுகளை சீர் செய்யலாம் என நம்பியிருந்திருக்கிறார். ஓரு கட்டத்தில் அவருக்கு நன்றாக புரிந்த விட்டது தமது முயற்சிகள் பலனற்று போகின்றன என. சதாம் உசைன் மீதான மரணதண்டனை தீர்ப்பளித்த நாளிலேயே “அமைப்பு இதே விதமான செயற்பாட்டையே தொடர்ந்தால். அது போன்றதொரு –சொந்த மக்களே அஞ்சலி செலுத்த முடியாத ஒரு சாவு வரலாமென்று” என அவர்ப் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.

இலங்கையில் சமாதான சூழல் நிலவிய காலக்கட்டத்தையும் அதன் தீவிரமான பாதிப்புகளையும் பற்றியும்கூட யோ.கர்ணன் தன் கதைகளின் வழி முன்னெடுக்கிறார். போர், போருக்குப் பிந்தைய வாழ்வு, போர் குறித்துத் தீர்மானிக்கப்பட்ட சமாதானப் பேச்சு, சமாதானத்தின் மூலம் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என அனைத்தையுமே தன் கதைகளின் மூலம் கவனப்படுத்துகிறார். சமாதானப் பேச்சுத் தொடங்கப்பட்டு சில காலம் அது தொடர்ச்சியான ஒரு சூழலை உருவாக்கியப்போது, அடையாளம் தெரியாத நபர்களால் பல கொலைகள் அங்கு நடக்கத்துவங்கியதை, ‘மன்னிக்கப்பட்டவனின் கைத்தொலைப்பேசி எனும் கதையின் மூலம் கர்ணன் குறிப்பிடுகிறார். இனம் தெரியாத சிலரால் தொடர்ந்து பல இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது புலிகளால் செய்யப்பட்ட கொலையா அல்லது அரசினால் செய்யப்பட்ட கொலைகளா எனும் சந்தேகம் எழுவதைக் கர்ணன் மறுக்கிறார். அதைப் புரிந்துகொள்வ்தற்கு அக்காலக்கட்டத்திய அரசியலை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் சொல்கிறார். யோ.கர்ணன் கூற்றுப்படி அன்றைய சூழலைப் புரிந்துகொண்டவர்களால் இது அரசினால் செய்யப்படும் கொலைகள் என ஊகித்திருக்க முடியும் என்கிறார்.

மேலும் இயக்கத்திலிருந்து வெளியேறிய இளைஞர்களை இயக்கம்தான் கொலை செய்திருக்கக்கூடும் என நினைப்பது ஓர் ஆழமான புரிதல் கிடையாது என்கிறார். போராட்ட இயக்கங்களில் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இளவயதானவர்கள். அவர்கள் படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள். இயக்கங்களில் இருந்து வெளியேறியவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அதிகமும் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. யாருக்கும் அது பற்றிய அக்கறையுமிருக்கவில்லை. வெளியேறியவர்களில் வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளிற்குச் சென்று விட்டனர். எஞ்சியவர்கள் அடிமாடுகளாயினர். மக்களிற்கும் அது பற்றிய அக்கறை அல்லது விழிப்பு இருக்கவில்லை. அதையும் மீறி இது பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் சுலபமாகத் தப்பித்து கொள்ள ‘துரோகி’ எனும் வசனத்தைக் கைவசம் வைத்திருந்தனர். இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாதவர்கள் பலர் அரசுடன் ஒட்டிக் கொண்டனர். அரசின் அரசியல் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக, உளவாளிகளாக அவர்கள் பாத்திரமிருந்தது. இந்தப் பிரச்சனை முகத்திலறைந்தாற் போல் கிளம்பியது, புலிகளின் தோல்விக்கு பின். உண்மையில் வெட்கப்பட வேண்டியது, எந்த மக்களிற்காக அவர்கள் போராட புறப்பட்டார்களோ அந்த மக்களினாலேயே அவர்கள் கைவிடப்பட்டனர். தாம் கொண்டாடிய அமைப்பிலிருந்து தோல்வியின் பின் வீடு திரும்பும் ஆண்களை பிச்சைக்காரர்களாகவும் பெண்களை விபச்சாரிகளாகவுமே அந்தச் சமூகம் வைத்திருக்கிறது எனத் தீர்க்கமாகக் கூறுகிறார் யோ.கர்ணன் எனும் படைப்பாளி.

ஆதிரையும் போர் நடவடிக்கைகளும்

யோ.கர்ணன் தன் கதையில் காட்டும் ஆதிரையும் இராணுவ நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் காட்டுக்குள் குழுவோடு குழுவாக அனுப்பி வைக்கப்படுகிறாள். ஒன்றரை வருடம் நீடித்த ஜெயசிக்குறூ எனச் சொல்லப்படும் வன்னியை இரண்டாகப் பிளப்பதற்காக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இயக்கத்தால் முறியடிக்கப்பட்டப்போது, இராணுவம் அடுத்தத்தாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைத்தான் ‘றிவிபல ஓப்பெரேசன்’ என்பதாகும். இந்த இராணுவ நடவடிக்கையை உடைப்பதற்காக இயக்கத்தைச் சேர்ந்த பல குழுக்கள் அம்பகாமம் காட்டுக்குள் செல்கிறார்கள். அந்த ஒரு குழுவில் ஆதிரையும் உடன் அனுப்பப்படுகிறாள்.

18 நாட்கள் காட்டில் முகாமிட்டு காத்திருக்கிறார்கள். பதினெட்டாம் நாள் மேலிடத்திலிருந்து இராணுவம் காட்டுக்குள் முன்னேறத் தொடங்கியுள்ளனர் எனும் தகவல் வந்து சேர்கிறது. எல்லாம் குழுக்களும் வெவ்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அமர்த்தப்படுகின்றனர். ஒரு குழுவைக் கொன்று இராணுவம் முன்னேறினாலும் அவர்களைத் தடுக்க அடுத்தக் குழு போரிடத் தயாராக இருக்கும் என்பதே அவர்களின் ஒப்பரேசன். அதன்படி ஆதிரை தனக்கு வழங்கப்பட்ட முகாமில் கையில் 120 ரவுண்ஸ் வகை துப்பாக்கி ரவையுடன் காத்திருக்கிறாள். ஆமிக்காரர்களின் துப்பாக்கி வெடி மெல்ல கேட்கத் துவங்குகிறது. உடனே ஆள் இருக்கும் இடம் தெரியாமல் சுடுவது ஆயுதத் தந்திரம் கிடையாது. குறைந்தபட்சம் அவர்கள் முன்னேறி வரும் திசையைச் சரியாகக் கணிக்க முடிந்தாலும் துப்பாக்கியைத் தயார்ப்படுத்தலாம். ஆகையால் ஆதிரை துப்பாக்கி வெடியை நோக்கி காதுகளைக் கூர்மையாக்குகிறாள். இந்தக் காட்சிகளும் கணங்களும் சராசரி ஒரு வாசகனின் மனதைப் பெரும் பதற்றத்திற்குள்ளாக்குகிறது. வாசகனான நம்மை நோக்கி இராணுவப் படை வருவது போன்ற ஓர் உணர்வை வழங்குவதில் கதையாசிரியர் மிகவும் துல்லியமாக கதைக்கான காட்சிகளைப் படைத்திருக்கிறார்.

பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆமிக்காரர்கள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வந்துகொண்டிருப்பதை உணர்கிறாள். ஆதிரை இருக்கும் இடத்தை இராணுவத்தினர் பொக்ஸ் அடித்ததும் சூழல் மேலும் பரப்பரப்புக்குள்ளாகின்றது. பொக்ஸ் என்றால் நாலா பக்கமும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலை. ஆமிக்காரனிடம் உயிருடன் பிடிப்படுவது புலிகளின் கொள்கையல்ல. ஆமிக்காரன் பெண்களைப் பிடித்துச் சென்றானென்றால் அவர்களைச் சீர்குலைத்துவிடுவான். ஆகையால் நாலாப்பக்கமும் சுற்றி வளைக்கப்பட்ட ஆதிரையுடன் பிற மூவரும் அங்கேயே போராடிப் பார்க்கலாம் இல்லையென்றால் இறந்துவிடலாம் என முடிவெடுத்தனர். எல்லா குண்டுகளும் தீர்ந்து கடைசியில் ஒரு குண்டு மட்டும் எஞ்சியிருக்க இராணுவம் மேலும் அவர்களை நெருங்கி வந்துவிட்டிருந்தது. வேறு வழியில்லாமல் அந்த ஒரு குண்டின் மூலம் நால்வரும் வீர மரணத்தை எய்துவதாக முடிவெடுக்கின்றனர்.

ஆதிரை குண்டைக் கையிலெடுத்து அதன் கிளிப்பைக் கழற்ற தயாராக இருக்கிறாள். அவர்களின் தலைவி வாக்கிடோக்கியில் தாங்கள் தற்கொலை செய்யவிருப்பதாகத் தகவல் சொல்லிவிட கிளிப் கழற்றி நால்வருக்கும் மத்தியில் போடப்படுகிறது. ஒரு கணம் வாசகனின் மனம் பீதியடைகிறது. கதைக்குள் அந்த நால்வருடன் சேர்ந்து நாமும் குண்டு வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறப்போவதைப் போன்ற ஒரு படப்படப்பு உருவாகுவதைத் தடுக்க முடியவில்லை. மறுமுனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி அணி நெருங்கிவிட்டதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அவர்களைக் காப்பாற்றப்போவதாகும் அறிவிப்பு வருகிறது. அதனைக் கேட்ட நால்வரும் குண்டு வெடிப்பதற்கு எத்தனையோ விநாடிகள் மட்டுமே இருக்கும் இடைவெளியில் அதிர்ச்சியில் உறைகின்றனர். சட்டென தாமதிக்காமல் ஆதிரைக் குண்டின் மீது பாய்ந்து உடல் சிதறி வெடித்து மடிகிறாள். மற்ற மூவரும் காப்பற்றப்படுகின்றனர்.

யோ.கர்ணனின் இக்கதையின் முடிவு எந்தக் கவித்துவமான சாயலையும் கொண்டிருக்கவில்லை. அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஒரு முடிவை ஆதிரை எடுப்பதாகச் சொல்லி நிறைவடைகிறது. இது ஒருவகையில் திருப்பத்தைக் கொடுப்பதாக நினைக்கப்பட்டாலும் பல்லாண்டுகால மரணமும் வீரமும் நாம் விதிக்கும் புனைவு விதிகளுக்குக் கட்டுப்படாத ஒரு மீறலையே நிகழ்த்திக் காட்டுகின்றன. இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆதிரைப் போல ஆயிரம் கணக்கில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படியொரு மரணத்தின் முன் நம்மைக் கொண்டு போய் நிறுத்துகிறார் கதையாசிரியர். அந்த வீரத்தைக் கண்டு மிரள்வதா அல்லது பீதியடைவதா அல்லது கவலைப்படுவதா என உலகிலுள்ள மாறுப்பட்ட பல வாசகர்கள் தடுமாறக்கூடும். பேராசிரியர் தமிழவன் குறிப்பிடுவது போல எல்லா சூழலிலும் தமிழர்களின் மூலப்படிம உணர்வென்பது செயல்படக்கூடியதே. அது எப்படி ஒரு குவிமயமாக மாறும் என்பதைக் கவனிக்க முடியாவிட்டாலும் வரலாறுதோறும் அப்படியொரு மையப்படுத்தப்பட்ட உணர்வு ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் மூலப்படிமமாக உருவகித்திருக்கும். இக்கதையை வாசித்து முடிக்கும் எந்தத் தமிழனுக்கும் தன்னுடைய இனம் இப்படித்தான் கொன்றொழிக்கப்படுகிறது என்றும் போராளிகள் இப்படித்தான் வீர மரணத்தை அடைகிறார்கள் என்ற கொந்தளிப்பும் உருவாகவே செய்யும்.

இக்கதையில் வரும் ஆதிரையை உணரும்போது எனக்கு சந்தோஷ் சிவன் இயக்கிய “தீவிரவாதி” எனும் படத்தின் ஞாபகம் வருகிறது. மனித வெடிக்குண்டாகப் பயிற்சி எடுத்து அதற்குத் தேர்வாகும் ஒரு பெண், புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு நாள் உரையாடி, உணவருந்திச் செல்ல அனுமதிக்கப்படுகிறாள். அதன் பிறகு அவர்களின் திட்டப்படி ஒரு வயதான பிராமணனின் வீட்டிற்கு வாடகை விருந்தாளியாக அனுப்பப்படுகிறாள். இன்னும் சில நாட்களில் மனிதக் குண்டாக மாறி மரணிக்கப்போகும் அந்தப் பெண் அங்குத் தங்கியிருக்கும் காலக்கட்டத்தில் உயிர் வாழ்தலுக்கான நியாயங்களையும் வாழ்வின் இரசிக்கத்தக்க பகுதிகளையும் கண்டுணர்ந்து அவளுடைய நோக்கத்தின் பால் பலவீனமடைகிறாள். தான் பயிற்சியளிகப்பட்ட மனித வெடிகுண்டு மட்டுமல்ல தனக்குள் ஒரு பெண் இருக்கிறாள் என்ற உணர்வை அடைகிறாள். ஒரு போராளியாகச் சாவதற்கும் அல்லது ஒரு பெண்ணாக வாழ்வதற்கும் மத்தியில் அவள் பெரும் தர்க்கம் செய்து உணர்வு போராட்டத்திற்கு ஆளாகுவதை மிகத்திறமையாகக் காட்சிப்படுத்தியிருப்பார் சந்தோஷ் சிவன்.

யோ.கர்ணம் காட்டும் இடம் போர்க்களம். இரண்டு மூன்று விநாடியில் ஆதிரையால் ஒரு வீரமிக்க முடிவை எடுக்க முடிகிறது என்றால் அவள் வீரத்தை வெறும் கிளர்ச்சிக்காக உருவாக்கியவள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்றும் ஒவ்வொரு இலங்கை தமிழருக்குள்ளும் விதைக்கப்பட்டிருப்பது இந்த வீரம் மட்டுமே. இது வரலாறு அவர்களுக்கு அளித்த வழி. இதனை எப்படிக் கேள்வியெழுப்பது? அல்லது கேள்வி எழுப்ப முடியும்? ஆதிரையின் அந்த மரணத்திற்கு விலையே இல்லை. யோ.கர்ணன் இப்படிப் பல கதைகளின் வழி அழித்தொழிக்கப்பட்ட இலங்கை போர் பூமியை மீட்டெடுக்கவே செய்கிறார்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768