|
|
புலம் பெயர்வாழ்வும் சாதியமும்
புலம் பெயர்ந்த நாடுகளின் இன்றைய கலாச்சார சூழ்நிலை,
வாழ்க்கை முறை, பொருளாதார அமைப்பு என்பன தென்கிழக்காசிய நாடுகளுடன்
ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது 180 பாகையூடாக மாறியதாகவே இந்த நாட்டினுள்
வந்தவுடன் அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.
ஆனால் ஆயிரமாயிம் ஆண்டுகள் தமது கலாச்சாரத்தை தம் உயிர், மூச்சு, நாடி
எனவாழ்ந்த ஒரு இனத்திற்கு அதிலிருந்து விடுபட்டு இந்த நாட்டுக்
கலாச்சாரங்களுக்குள் இணைத்துக்கொள்வது மிகச்சுலபமான ஒருசெயலும் இல்லை.
காலப்போக்கில் வெள்ளிக்கிழமைகளில் வேலையிடங்களில் நடைபெறும் விருந்துகளில்
மாமிசம்உண்ணல், பெண்கள் விஸ்கி பியர் என்னும் அளவில் குடிக்காவிட்டாலும்
வைனை அருந்துதல் என சில சில விடயங்களில் விட்டுக்கொடுத்து பாம்புக்கு
தலையையும் எலிக்கு வாலையும் காட்டில் வாழும் வாழ்க்கை முறைக்குள்
இணைவாக்கம் என்ற பெயரை பாவித்து தம்மை வளைத்துக் கொண்டார்கள்.
ஆனால் எதிலும் மாறாமல் மாற விரும்பாமல் இன்றுவரை நீடிப்பது சாதியம் என்பது
மட்டும்தான். ஒருகாலத்தில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்தளவு தீண்டாமை
என்னும் தீவைப்பு நிகழ்வுகள் இன்று இல்லையாயினும் சாதியம் பார்ப்பது
இம்மியளவும் குறையாமல் அதேவேளை அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் வாழ்வதே
புலம்பெயர் தமிழர்களின் பலமும் பலவீனமாயும் இருக்கின்றது.
மேலெந்த வாரியாக பார்க்கும்பொழுது அமைதியான ஓடிக்கொண்டிருக்கும் அருவிபோன்ற
ஒருசமுதாயமாக இருக்கும்போல் இருக்கும். ஆனால் கொஞ்சம் முழுகிப்பார்த்தால்
பயங்கரச்சுழிகள் இருப்பதைக் கண்டுகொள்ளலாம்.
பிறந்தநாள், சாமத்தியவீடு, திருமணவீடுகள் என பொதுமண்டபங்களில் எல்லோரும்
கலந்துகொள்வார்கள். ஆனால் ஒருவர் வீட்டுக்கு மற்றவர்கள் செல்லுவதற்குமுன்
அவரவரின் பரம்பரை பாரம்பரியம் என்பதை நாசூக்காக அறிந்துகொள்வார்கள்.
"நீங்கள் எந்த ஊர்?", "ஊரில் எந்த வட்டாரம்?", "ஊரில் எந்த தெரு?" என்ற
இந்த மூன்று கேள்விகளினூடாக ஒவ்வொருவரின் முப்பாட்டன் சந்ததியின்
ஆணிவேர்களை அறிந்துகொள்வார்கள். அதுமட்டுமில்லாது அந்தமுப்பாட்டன்
சந்ததியின் செம்புகளில் வேறுயாராவது வாய்கள் பட்டிருக்கின்றளவா என தமது
முந்தானைச் சேலைகளால் துடைத்துதுலக்கி அறிந்துகொள்ளும் திறமைபுலம்
பெயர்ந்தநாட்டில் எள்ளதமிழருக்கு நன்கு இருந்தது. இருக்கின்றது. உடனே அதே
நாடுகளில் அறியாவிட்டாலும் இலங்கைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு
அறிந்துகொள்வார்கள்.
அவ்வாறு அறிந்தபின்பு அவர்களை எவ்வளவுதூரம் இணைப்பது அல்லது விலத்துவது என
அவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். இதுபற்றி எனது இரண்டு சிறுகதைகளில்
எழுதியவிடயம் ஒருசில தாக்கங்களை அல்லது கவனிப்பை ஏற்படுத்தியது என்பதில்
எனக்கு மகிழ்ச்சியே.
அதில்ஒருகதைதுடக்குகழிப்பு. டென்மார்க்கில் வாழும் ஒரு மேட்டுக்குடியைச்
சார்ந்த ஒரு குழந்தையின் துடக்கு கழிவுக்குதாழ்ந்த சாதியைச்சேர்ந்த
ஆசிரியர் ஒருவர் வருகின்றார். அங்கு மற்றவர்களுக்கு வெள்ளிரம்ளரிலும்
இவருக்கு கிளாசிலும் தேனீர் தரப்படுகின்றது. அதனைக்கவனித்த ஆசிரியர்
குழந்தைக்குதான் அளித்தபரிசுப் பொதியின்மேலே "குழந்தையில் துடக்கு இல்லை"
என எழுதிவைத்து விட்டு மனவேதனையுடன் செல்லுகின்றார். பின் அதே வீட்டுக்கு
யாரோகல்லால் எறிந்து அவர்கள் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்தபொழுது
"இப்பொழுதுதான் துடக்கு கழிந்திருக்கிறது"எனமனம் ஆனந்திக்கின்றார்.
இன்னோர் கதை கழிப்பு. ஒரு சாமாத்திய வீட்டுக்கு அந்த நகரத்தில் இருந்த
அனைவரும் அழைக்கப்பட்டிருந்தார்கள் - ஒரு தாழ்ந்த சாதிப்பெண் உட்பட.
அனைவரும் வரிசையாகவரியாக அழைக்கப்பட்டு மேடையில் இருந்த பெண்ணுக்கு ஆலாத்தி
எடுக்கும்பொழுது இந்தப்பெண்ணை வேண்டுமென்றே தவிர்த்துவிடுகிறார்கள். அவள்
மனதுள் இதை எண்ணிக்கலங்கும் பொழுது சாமத்தியப்பெண்ணைச் சுற்றி
கழிப்புக்கழித்து எறிந்த ஒரு பலகாரத்துண்டு மட்டும் அவள் மடியில் வந்து
விழுகிறது எனக்கதை முடிகிறது.
இந்த இரண்டு கதையை பார்க்கும் பொழுது தீண்டாமை என்பது அறவே இல்லை. ஆனால்
சாதி பார்க்கப்படுகின்றது. அந்த இனத்தை தமது விழாக்கு அழைப்பதில் தம்பெரும்
தன்மையையும் அவர்களை புறக்கணிப்பதில் அவர்களின் சிறுமையும்
காட்டப்படுகிறது. அதுதான் இன்றைய உண்மைநிலை.
இதன் அடுத்தகட்டமாக இங்கு இரு இனங்களுக்கு இடையே இளம்தலைமுறையினர் இடையே
ஏற்படும் காதல்தான் பல பெற்றோருக்கு வயிற்றில் புளியை வார்க்கின்றது.
பொதுவாக தாழ்ந்த வர்க்கம் இந்தத் திருமணங்களை ஆதரிக்கும் நிலையையும்
உயர்ந்த வர்க்கம் எதிர்க்கும் நிலையையும் காட்டி நிற்கின்றது. இந்த
நாட்டின் சட்டதிட்டங்களின்படி 18 வயதிற்குமேல் பெற்றோரினால் எதுவும்
செய்யமுடியாது - பாசத்தைகாட்டுவதையும் அதனை துர்ப்பிரயோகம் செய்வதையும்
தவிர.
சில திருமணங்கள் பெற்றோர் பிள்ளைகள் இடையில் ஆயுட்கால பிரிவாகவும், சில
திருமணங்கள் ஒரு பிள்ளை பிறந்த பின் மீண்டும் சேர்ந்து கொள்ளும் உறவாகவும்,
பிள்ளைகளை எதிர்த்தால் பிரிந்துபோய் விடுவார்கள் என்றபயத்தினால் வாயளவில்
தனது சம்மத்தை தெரிவித்து விட்டு திருமணக்காலத்தை இழுத்தடித்து
பெண்ணுக்கும் மணப்பெண்ணுக்கும் மனமுறிவை
ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாகட்டும் எனக்காத்திருக்கும் பெற்றோர்கள்
என இங்கு பலவகையறாக்கள் உண்டு.
இந்திய எழுத்தாளரான விந்தனின் "குறமகள்சிரித்தாள்"என்ற சிறுகதையில்
சொல்லப்பட்டது போல கோயில் ஊர்வலத்தில் பெற்றோல் மார்க்ஸ் ஏந்திவருவனின்
மேனிதன்னில் இடிபட்டதை அருவருப்புடன் பொறுத்துக்கொண்டு தெய்வானைக்கும்
முருகனுக்கும் வள்ளிக்கும் கற்பூர ஆலாத்திகாட்டும் அர்ச்சகரைப் பார்த்து
வள்ளிகிலுக்கென்று சிரித்தாள் என எழுதிய மாதிரி நிறபேதமும் நிறத்து வேசமும்
காட்டும் இந்தச் சமுதாயத்தில் எமது சாதியம் என்னும் 1008 கண்கள் விளக்கு
அணைய விடாமல் அனைத்துபுலம் பெயர்ந்த தமிழரும் காலை, மதியம், மாலை என எண்ணை
ஊற்றிக் கொண்டே இருக்கின்றோம்.
|
|