|
|
கோ. முனியாண்டி மிக அண்மையில்
வெளியீடு செய்த 'ராமனின் நிறங்கள்' எனும் நாவல் குறித்த (வாசகர்கள்
புரிந்துகொள்வதற்காக நாவல் என இங்கே சுட்டுகிறேன்) எனது பார்வையை
எழுதுகிறேன் எனச்சொல்லி மூன்று மாதங்கள் ஆன நிலையில் இப்போதுதான் அது
குறித்து எழுதும் மனம் வாய்த்துள்ளது. 'ராமனின் நிறங்கள்' குறித்த கோ.
முனியாண்டியுடனான விவாதத்தில் அவர் எவ்வகையிலும் அறிவுத்தளத்தில் நின்று
உரையாடாமல் ஏதேதோ உளறி கொட்டியிருந்தார். ஆனால் அந்த உளறலில் ஒரே ஒரு
நியாயத்திற்கு மட்டும் நான் மரியாதை கொடுத்தேயாக வேண்டும்.
அதாவது, 'நூலாக வரும் முன்பே, நான் இராமனின் நிறங்களை வாசித்திருந்தாலும்,
நூலுருவில் வந்தபின் வாசிக்கவில்லை' என்பதே அது. நியாயமான கேள்விதான். எனவே
மீண்டும் அந்த நூலைத் தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கினேன். வாசித்து
முடித்தபோது யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல் இருந்ததால் சிவாவை
அழைத்தேன். மனிதர் எனக்கு முன்பே அந்நாவலைப் படித்துக் கதறிக்
கொண்டிருந்தார். மீண்டும் கோ. முனியாண்டி எனது வலைத் தளத்தில் செய்த
எதிர்வினையை வாசித்தபோது அவர் மேலான ஒரு பரிதாபமே மிஞ்சியது.
50 ஆண்டுகளாக எழுதிவரும் ஓர் எழுத்தாளரின் அறியாமை எவ்வகை அழுத்தமான
நம்பிக்கையை அவர் எழுத்தின் மீது ஏற்றி வைத்துள்ளது என்பதை அவரின் பதற்றமான
எதிர்வினையில் இருந்து உணர முடிந்தது. இந்த நம்பிக்கையை மலேசியாவில் உள்ள
பல எழுத்தாளர்களிடம் நான் கவனித்ததுண்டு. அவர்கள் தங்கள் படைப்பின் மீது
மிகையான நம்பிக்கை வைத்துள்ளவர்களாக இருக்க சில காரணங்கள் எப்போதும்
இருக்கும்.
முதலாவது, அவர்கள் இலக்கியம் என்ற பரப்பில் இயங்கிகொண்டிருக்கும் கால
அளவின் மீது உள்ள பெருமிதம். எல்லா விவாதத்திலும் கூட்டங்களிலும் இந்தக்
கால அளவை அவர்கள் பிரகடனப்படுத்தியப்படி இருப்பர்.
இரண்டாவது, அவர்களின் வளமான கல்வித் தகுதி ஒரு நல்ல படைப்பை வழங்க ஆற்றல்
உள்ளவர்களாக அவர்களை நம்ப வைத்திருக்கும்.
மூன்றாவது, இலக்கியம் சார்ந்த இயக்கங்களில் அவர்களின் பங்கெடுப்பு ஒரு நல்ல
படைப்பை வழங்குவதற்கான ஆற்றலை வழங்கியிருக்கும் என்ற உறுதியில்
இருப்பார்கள். அதன் பொருட்டு அவர்கள் அதுவரை ஏற்பாடு செய்த இலக்கிய
நிகழ்வுகள், இலக்கியப் போட்டியில் நடுவராக இருந்த பட்டியல்கள், எந்த
நிகழ்விலும் அவர்களால் கூட்டம் சேர்க்க முடிகிற சாமர்த்தியங்கள் என ஒரு
பட்டியல் வைத்திருப்பார்கள்.
நான்காவது, அதுவரை அவர்கள் பெற்ற பரிசு மற்றும் விருதுகள் குறித்த
பட்டியல். இந்தப் பட்டியல் கொடுக்கும் நம்பிக்கை அபாரமானது. அதுவும்
குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏதாவது விருது பெற்றுவிட்டால் முடிந்தது கதை.
ஒரு மாற்றுக் கருத்தை அவர்கள் மேல் வைக்கமுடியாத எல்லைக்குச் சென்று
விடுவார்கள்.
ஐந்தாவது, அவர்கள் வாசித்த புத்தகங்களின் பட்டியல். எப்போதும் அதுகுறித்த
பெருமிதம் அவர்களிடம் இருக்கும்.
ஆறாவது, மிக முக்கியமானது. படைப்பின் எண்ணிக்கை. எப்போதுமே இந்தப் பட்டியல்
அவர்கள் சட்டைப் பையில் ஒரு மாய அடையாள அட்டையாகத் தொங்கும். எந்த
மேடையிலும் சட்டென இந்த எண்ணிக்கைத் துல்லியமாக வந்து விழும்.
இதில் பல அம்சங்களை நான் கோ. முனியாண்டியிடம் பார்த்துள்ளேன். எனது
வலைத்தளத்தில் நடந்த விவாதத்தில் அவர் தமது பிம்பத்தை அவ்வாறுதான்
கட்டியமைக்க மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார். தாம் 50 ஆண்டுகாலம்
எழுதுவதாகவும் அதில் 30 ஆண்டுகளாக பல எழுத்தாளர்களின் 46 நூல்களை அவர்
வட்டாரத்தில் வெளியீடு செய்துள்ளதாகவும் விடுதலை புலிகளுக்கு
உதவியுள்ளதாகவும், சித்தியவானில் நவீன இலக்கியச் சிந்தனை எனும் ஒரு
வட்டத்தை வைத்துள்ளதாகவும் கூறி தமது நாவலை விமர்சிக்க எனக்கு என்ன தகுதி
உண்டு என வினவுகிறார். இப்படி அவர் கேட்ட பிறகாவது நான் கொஞ்சமாவது சூடு
சுரணையுடன் விமர்சிப்பதை நிறுத்துவேன் என அவர் நினைத்திருப்பார். எனக்கு
அதெல்லாம் இல்லாத நிலையில் 'ராமனின் நிறங்கள்' குறித்து இங்கு விரிவாகப்
பேச சில காரணங்கள் எனக்கு இருக்கின்றன.
அதில் மிக முக்கியமானது ஓர் இலக்கியப் படைப்பே ஆக முடியாத வாக்கியங்களின்
தொகுப்பு எவ்வாறு மலேசியாவில் இலக்கிய அந்தஸ்தைப் பெற்று அதன் தொடர்ச்சியாக
விருதுகளும் பெற்று தனது பலவீனங்கள் அத்தனையையும் மூடிமறைத்து இறுதியில்
மலேசியாவில் குறிப்பிடப்படும்படியான ஒரு பிரதியாக என்றென்றைக்கும் இருந்து
விடுகிறது என்ற ரகசியம் குறித்தது. ஒருவகையில் கோ. முனியாண்டியின் 'ராமனின்
நிறங்களில்' இதற்கு அண்மைய உதாரணம் என்பதால் அதன் துணையுடனே இந்நிலை
குறித்து முதலில் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
மலேசிய இலக்கியத்தின் சாபம்
முதலில் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் விமர்சன மரபு என்று ஒன்று இல்லை.
மலேசிய நாவல்கள் குறித்து எழுதும் கல்விமான்கள் பலரும் நாவல் என்ற பெயரில்
தொகுக்கப்படும் அத்தனை தொடர்கதைகளையும் அதன் வரலாற்றில் இணைத்துக்
கொள்கிறார்கள். வரலாற்றில் அனைவருக்குமே வாழ்வுண்டு. ஆனால் கோட்பாட்டு
ரீதியாகவோ ரசனை ரீதியாகவோ ஒரு படைப்பிலக்கியத்தின் முக்கியத்துவம் இங்கு
பேசப்படுவது குறைவு. மா. சண்முகசிவா ஓரளவு ஆங்காங்கு பேசியுள்ளார். ரெ.
கார்த்திகேசு 'விமர்சன முகம்' என்ற நூலின் வழி தனது விமர்சன பார்வையை
வெளியிட்டுள்ளார். ஆனால் கறாரான ஒரு வாசிப்பு வெளிப்பாட்டில் ஒரு
படைப்பிலக்கியம் எதன் பொருட்டு அவசியமானதாக உள்ளது என இத்திணை
வாழ்வுக்குரிய தீவிரமான வாசகர்களின் வாசிப்பின் வழி கண்டடையப்பட்டு
மேலெடுத்து வரப்படுவதில்லை.
சில படைப்பிலக்கியங்கள் வேறொரு திணைப் பரப்பில் உள்ளவர்களால்
புரிந்துகொள்ளப்படாமல் மிக எளிதாகப் புறக்கணிக்கப்படுவதுண்டு. சட்டென
நினைவுக்கு வருவது சீ. முத்துசாமியின் 'மண் புழுக்கள்'. அனேகமாக நான்
சந்தித்த பெரும்பாலான தமிழக எழுத்தாளர்கள் அதை ஒரு பொருட்படுத்தும்படியான
நாவலாகக் கருதவில்லை. ஆனால் இம்மண்ணில் வாழ்பவனாக 'மண் புழுக்கள்' மீண்டும்
மீண்டும் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு அதன் தனித்துவத்துவத்தையும்
இம்மண்ணுக்கான ஒரு வாழ்வையும் காலத்தில் கரைந்து விட்டிருக்கும் அந்த
மனிதர்களையும் பேசத்தொடங்க வேண்டுமென கருதுகிறேன்.
அதைவிட முக்கியமாக அரசியல்வாதிகள், பத்திரிகைகள் துணையுடன் சில
எழுத்தாளர்களால் தங்கள் பிரதிகள் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்படும்
பிம்பத்தையும் விமர்சனங்களின் மூலம் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம்
எழுத்தாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் உண்டு.
கோ. முனியாண்டி போன்ற பத்திரிகை நிருபர்களுக்கு இந்த உத்தி மிக
இலகுவாகிறது. (தமது பலவீனமான படைப்பின் மேல் அவர் அலாதி நம்பிக்கை
வைத்துள்ளது பரிதாபத்தைக் கொடுத்தாலும்; இந்த மலிவான வியாபார உத்தி
எரிச்சலடைய வைக்கிறது) முதலில் கோ. முனியாண்டி போன்றவர்கள்
அரசியல்வாதிகளிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். எவ்வகையிலும்
அவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்காமல் சிறுகதை எழுதுவதை மட்டுமே தங்கள்
இலக்கியப் போக்காகக் கொண்டிருப்பர். இதற்கிடையில் பத்திரிகை
ஆசிரியர்களிடமும் தங்கள் நட்புறவை வலுப்படுத்திக் கொள்வர். அதேபோல
இலக்கியத்தை வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அமைப்புகளிடமும் நெருக்கம்
வைத்திருப்பர். ஆனால் இவை எல்லாவற்றையும் மறைத்தபடி அவ்வப்போது
அறச்சீற்றத்துடன் வேறு தார்மீகம் பேசுவர். சரியான நேரம் வரும்போது தாம்
பேசிய அத்தனை அறச்சீற்றத்தையும் மறந்து சுரண்டல் செய்தவர்களிடம்
கைகோர்த்துக்கொண்டு புத்தகம் வெளியீடு செய்து பணம் பண்ணுவார்கள்.
முக்கிய அரசியல்வாதிகள் கலந்துகொள்வதால் அவர்கள் புத்தக வெளியீடு எளிதாக
ஊடகங்களை சென்றடைந்திருக்கும். அதேபோல எவ்வகையான இலக்கிய அறிமுகமும் இல்லாத
அரசியல்வாதிகளின் புகழ்மாலையோடு மறுநாளே பத்திரிகையில் அப்பிரதி தொடர்பான
பாராட்டு மொழிகள் வெளிவரும். அந்தப் பாராட்டு மொழிகளே அவ்வெழுத்தாளர்கள்
விரும்பும் விமர்சனம்; அதுதான் அவர்கள் விருது வாங்க வைத்திருக்கும் தாரக
மந்திரம். அது மட்டுமே அவர்கள் வாழ்நாள் முழுக்கக் காத்திருந்த அங்கீகாரம்.
இதுபோல எவ்வகையான வாசிப்பும் விமர்சனமும் இல்லாமல் மலேசிய இலக்கிய
வரிசையில் அமர்ந்துகொண்ட படைப்புகள் ஏராளம். கோ. முனியாண்டி இதில் பலே
கில்லாடி. ஜனரஞ்சக ஏடு என அவர் கிண்டல் செய்யும் 'தென்றல்' ஆதரவோடும் பல
சமயம் அவரே விமர்சித்த எழுத்தாளர் சங்கத்தோடும் கைகோர்த்துக்கொண்டு
சாமிவேலு, பழனிவேலு என நல்ல வாசூல் செய்துவிட்டார். (இதே வேலையை வேறொரு
எழுத்தாளர் செய்தபோது அது குறித்து வல்லினத்தில் எழுதிய சீ. முத்துசாமியின்
'வசூழ்' கட்டுரை அவருக்கும் மிக லாவகாமகப் பொருந்திவிடுவதால் அதுகுறித்து
மேலும் நான் பேச அவசியம் இல்லை.
http://www.vallinam.com.my/issue9/column5.html)
இனி இராமனின் நிறங்கள்
முதலில் இராமனின் நிறங்கள் எனும் நூல் செறிவாக்கப்பட (edit) வேண்டிய ஒன்று.
அது அவ்வாறு வல்லினம் சார்பாக சு. யுவராஜனால் செறிவு செய்யவும் பட்டது.
ஆனால் 'எடிட்டிங்' என்பது இந்நாட்டு இலக்கியவாதிகளுக்கு கௌரவக் குறைச்சல்
என்பதால் அதை பொருட்படுத்தாமலேயே நூலை வெளியிட்டார் கோ.மு. ஓரளவு நன்றாகத்
தமிழ் படிக்கத் தெரிந்த ஆறாம் ஆண்டு மாணவன் செய்யாத பிழைகளைக்கூட கோ.
முனியாண்டி இந்த நூலில் ஆங்காங்கு செய்துள்ளார்.
உதாரணமாகச் சில:
• அதற்கு ரகுநாதன், "தவமணியின் சொந்த வாழ்க்கையில் அப்படி ஒரு
தீர்மானத்திற்குரிய சம்பவங்கள் நடந்து அதனால் அவள்
பாதிக்கப்பட்டிருக்கலாம்," அதுவுமல்லாது அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்
யாரேனும், இதே மாதிரியான துன்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்!
நெருக்கமானவர்களும் மிகவும் பிரியமானவர்களும் பிரச்சினைகளில்
சிக்கிக்கொள்ளும் நிலையைக்காண நேரும் பெண்களில் பலர் எளிதில்
உணர்ச்சிவயப்பட்டு விடுவார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஏமாளிகளாக
இருப்பது குற்றமல்ல! ஆனால் ஏமாளிகளே அதைத் தேடிப்போய் வாங்கிக் கொள்வது
நான் சொல்வது, வம்பை விலைகொடுத்து வாங்குவது என்று வழக்கில் சொல்வார்களே!
அதைப் போன்ற குண நலன்களை உடையவர்களாக இருப்பவர்களுக்காக, வருத்தம் வரலாம்!
அதற்காக வாழ்க்கை பூராவும் அதே கருத்தைப் பிடிவாதமாக கொண்டிருப்பது, எனக்கு
உடன்பாடில்லாத விஷயம்" என்று முடித்தான். (பக்கம் 44)
• அடுத்து இங்கிலாந்துவரை நிர்வாகத் திறனுக்காகப் பெயர் வாங்கிப்
பிரபலமடைந்திருந்தவரும் மிகக் கண்டிப்பான மேலதிகாரி என்ற
பெயரெடுத்திருந்தவருமான சிரஞ்சீவியிடமிருந்து அடுக்கடுக்கடுக்காக தனக்கு
சூட்டப்பட்ட புகழ்மாலைகள். ஹரியின் வீட்டுக்குள்ளே நுழையும் போதே அவர்கள்
இருவரையும் வரவேற்ற மேன்மைக்குறிய செல்வந்தர் சிரஞ்சீவியின் மனைவியும் தன்
ஆருயிர் நண்பன் ஹரியின் தாயாருமாகிய மேன்மைமிகு தேவகியம்மாளை
பார்க்கும்போதே ஒரு மஹாலட்சுமியை போல தோற்றமளிக்க, ரகுநாதன் அவரை வணங்கிவிட
வேண்டும் என்று நினைத்து கைக்கூப்பி வணங்கினான். உண்மைதான் (சிரஞ்சீவி
என்கிற பெரிய மனிதர் பலதடவை யோசித்தும் திட்டங்களைத் தீட்டியும் 'பளீர்'
வெள்ளை நிறத்தில் இந்தப் பளிங்கு மண்டபத்தை எழுப்பி மாளிகையாக இதை மதிப்பிட
வைத்தாரோ; என்னவோ!) (பக்கம் 100)
• தன்னுடைய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு அத்தனையும் என் உயிருக்குயிரான நண்பன்
ஹரியிடமே சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் என் ஆராய்ச்சி வெற்றிபெறுமானால்
அதன் மூலம் ஊரே வியக்கும் வண்ணம் பெரும் செல்வந்தராகத் தலைமை நிர்வாகி
சிரஞ்சீவி உயரவேண்டும் என்றும், அவர்களுக்காக ரகுநாதன்
பாடுபட்டுக்கொண்டிருந்தான். (பக்கம் 202)
• "மிஸ்டர் ரகுநாத், உங்களை முதலிலேயே எச்சரிக்காதது என் தவறுதான். என்னை
மன்னித்து விடுங்கள். 'கும்பா' செம்பனை தோட்டம் கிட்டத்தட்ட நாற்பது கிலோ
மீட்டர் சுற்றளவைக் கொண்டது என்பதையும் எங்களுடைய 'கும்பா'வைச் சுற்றிலும்
ஆயுதம் வைத்துக்கொண்டு போராடிவரும் மிதவாதக் கொள்கையுடைய குழுவினர்கள்
நடமாடி வருகின்றனர் என்பதையும், அவர்களில் தென்கெமரூனில் தேசிய கௌன்சிலான
'அயம்பா ஈட்டே ஓட்டுன்' மற்றும் மனித உரிமைகள் என்ற பெயரில் 'ஆல்பர்ட்
முக்கோங்' என்பவரின் தலைமையில் இயங்கும் குழுவும் ஆயுதங்கள் ஏந்திப் போராடி
வருகின்றன. (பக்கம் 270)
• செம்பனைப் பயிர், இந்த உலகத்தின் எந்த முலையில் முளைத்து வளர்ந்தாலும்,
அது கெமரூன் மண்ணின் மகத்தான புகழைச் சொல்லக்கூடியதுதான். (பக்கம் 316)
மேலே உள்ளவை சில உதாரணங்கள்தான். எவ்வித திட்டமில்லாமலும் வாசிக்கும் போது
மிக இயல்பாகக் கண்ணில்பட்ட வாக்கிய பிழைகள். கோ. முனியாண்டிக்கு குறிகள்
மீது மிக பிரியம் போல. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்ட இடங்களில்
குறியைத் திணித்து விடுகிறார். அதேபோல பல இடங்களில் தன்மையில் தொடங்கி
படர்க்கையில் முடிக்கிறார். இறுதி வாக்கியத்தைக் கெமரூன் மக்கள் வாசித்தால்
என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க இந்தப் புத்தகத்தை
வாசிப்பவர்கள் அனுபவிக்கும் மற்றுமொரு கொடுமை அதன் வர்ணனை.
• தேவகியம்மாள் மஹாலட்சுமி என்றால் அனுசுயா! சந்தேகம் இல்லாமல் அந்த
சரஸ்வதியே; தாயும் மகளும் இப்படி இருக்கவேதான். வெள்ளை நிறத்துப் பளிங்கு
மாளிகையில், ஆலயம் அமைத்து மஹாலட்சுமியையும் சரஸ்வதியையும் இதில்
கொண்டுவந்து சிரஞ்சீவி குடிவைத்திருக்கிறாரோ என்று நினைத்தான் ரகுநாதன்.
(பக்கம் 101)
• இந்தக் கேள்வி ஹரியின் மனதிலும் தேவகியம்மாளின் இதயத்திலும் பெரும்
கேள்வியாக எழுந்து நின்றது. ஆனால், ஹரியின் அக்காளும் சிரஞ்சீவியின் அதிஷ்ட
தேவதையும் தேவகியம்மாளின் அருந்தவ புதல்வியும் ரகுநாதனால் பேரழகி என்று
போற்றப்படுகிறவளும் அன்பும் அறிவும் அருங்குணமும் நிரம்பியவள் என்று
மதிக்கப்படுகிறவளுமான அனுசுயாவின் உள்ளத்தில் வேறொரு சிந்தனை
உருவெடுத்துக்கொண்டிருந்தது. (பக்கம் 172)
• தன்னுடைய உயிர் நண்பன் ஹரியின் அம்மா என்பதினாலும் எப்போதுமே தன்
தெய்வீகக் களையுடனான முகத்தோற்றத்துடன் காட்சியளிக்கும் தேவகியம்மாளின்
அன்பு மகள் என்பதினாலும் தன் உயர் அதிகாரியின் மகளாக இருப்பதாலும்,
அனுசுயாவிடம் எப்போதுமே ஒரு மரியாதையுடனேயே பேசிவந்துள்ள ரகுநாதன்
இன்றுதான் நேரடியாக பேசுவதற்கு முனைந்து காயத்திரியை வளர்ப்பது குறித்து
தனக்கான பொறுப்பை முன்வைத்தான். (பக்கம் 180)
• தெய்வத்திற்கு நிகரான குணங்களோடும் தேவதைக்கு நிகரான அழகிலும் உயர்ந்த
பண்புகளினாலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனுசுயா மனைவி என்ற உறுதியோடுதான்
நின்றுகொண்டிருக்கிறாள். இனி எந்தச் சக்தியினாலும் அவளிடமிருந்து உன்னை
பிரிக்க முடியாது. (பக்கம் 266)
வர்ணனைகள் இவ்வாறு இருக்க, ஒரே தன்மையை மீண்டும் மீண்டும் விளக்கி
சலிப்படைய வைக்கிறார் கோ. முனியாண்டி. அதற்கு ஒரே உதாரணம் கரும்பு தோட்ட
நிர்வாகியின் அறிமுகம். கோ. முனியாண்டியிடம் சிக்கி அவர் படும் பாடு
பெரும்பாடு.
• அவன் விவசாயத்துறை பட்டதாரி என்பது மட்டுமல்ல. இந்தக்
கரும்புத்தோட்டத்தைக் கட்டியாளும் தலைமை நிர்வாகி மதிப்புமிகு
சிரஞ்சீவியின் ஒரே மகன் ஹரி எனும் ஹரிபிரசாத்தின் ஆருயிர் நண்பனுமாவான் ...
(பக்கம் 118)
• இந்தக் கருத்து மதிப்பிற்குறிய தலைமை நிர்வாகியும் என் அப்பாவுமான
சிரஞ்சீவி அவர்களுக்கு எத்தனை பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது...
(பக்கம் 204)
• அனுபவம் வாய்ந்த மேலதிகாரியும், பெரும் பணக்காரருமான தனது தந்தை
சிரஞ்சீவி தான் வகுக்கும் திட்டத்திற்கு ரகுநாதனை பணயம் வைக்க முயல்கிறாரோ
என்ற சந்தேகம் அனுசுயாவுக்கு வந்தது. (பக்கம் 146)
இதே போல அனுசுயாவைக் குறிக்கும் போதெல்லாம் தேவதை போன்றவள் என்றும்
ரகுநாதனைக் குறிக்கும் போதெல்லாம் ஹரியின் ஆருயிர் நண்பன் என்றும் கூறி
படிப்பவரின் உயிரை வாங்குகிறார். சரி இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு
வாசித்தால் சினிமா காட்சிகள் வேறு ஆங்காங்கு தலை காட்டுகின்றன.
• என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு தவமணி தன்னை மகிழ்ச்சியின்
உச்சத்திற்குக் கொண்டு செல்கிறாள் என்றெண்ணி அவனது மனதிலும் உற்சாகம்
பீரிட்டுக் கிளம்பியது.
தவமணி தாய்மை அடைந்திருந்தாள். (ஒரே பாடலில் எல்லாம் நடப்பது போல ஒரே
காட்சியில் காமத்தால் இணைந்தவள் கர்ப்பமாகிறாள்) - பக்கம் 82.
அதைவிடக் கொடுமை இதில் கதாநாயகி தன் காதலை வெளிப்படுத்த பாட்டெல்லாம்
பாடுகிறாள். பாடல் வரியை வேறு கோ.முனியாண்டி அவர் நாவலாக நம்பும்
புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
எனக்கும் உனக்கும்
இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ... என அப்பாடல் நீள்கிறது (பக்கம் 190) அந்தப் பாடலைப்
பாடிக்கொண்டே அனுசுயா இப்படி நினைக்கிறாளாம்... 'ரகுநாதனைத் தன் கைகளில்
பிணைத்தபடி மேலே வானத்தில் மிதக்கத் தொடங்கிவிட்டாள் அனுசுயா'.
இவ்வாறு மொழியால், கதை சொல்லும் முறையால், மிகவும் பின்தங்கிய கோ.
முனியாண்டியின் நூலில் சொல்லும்படியாக ஏதாவது இருக்கிறதா என கவனித்தால்
இருக்கவே செய்கிறது. இதுவரை மலேசிய நாவல்களில் ரப்பர் தோட்டங்கள் மட்டுமே
பேசப்பட்ட சூழலில் கோ.மு. செம்பனை குறித்து கூற முற்படுகிறார்.
ரகுநாதன் எனும் மிக நல்லவனுக்கு ஹரி எனும் மிக நல்லவன் தோழனாக இருக்கிறான்.
நல்லவனான ரகுநாதனை நல்லவளான தவமணி காதலிக்கிறாள். இல்லை இல்லை கோ.மு.
வர்ணனைபடி அவனை நினைத்து தவம் செய்கிறாள். திருமணத்துக்குப் பின் குழந்தை
பெற்ற தவமணி இறக்க தேவதையின் அழகுக்கு நிகரான (கோ.மு. வர்ணனை படி) ஹரியின்
அக்கா அனுசுயா ரகுநாதனை காதலிக்கிறாள். ஹரியின் குடும்பத்தில் உள்ளவர்கள்
அனைவரும் நல்லவர்கள் என்பதால் அவர்கள் ரகுநாதனின் குழந்தையை
வளர்க்கின்றனர். அதோடு ஹரியின் தகப்பனாரான இங்கிலாந்து வரை நிர்வாகத்
திறனுக்காகப் பெயர் வாங்கிப் பிரபலமடைந்திருந்தவரும் மிகக் கண்டிப்பான
மேலதிகாரி என்ற பெயரெடுத்திருந்தவருமான சிரஞ்சீவி (கோ.மு வர்ணனை படி)
ரகுநாதனுக்கு கரும்பு தோட்டத்தில் நல்ல வேலை வாய்ப்பினை வழங்குகிறார். அவர்
குடும்பத்தில் ஒருவனாகவும் பார்த்துக்கொள்கிறார். நிலமை இப்படி இருக்க
அனுசுயா பாடல் பாடி தன் காதலைத் தெரிவித்துவிட அதற்கு ஒரு முற்றுப்புள்ளி
வைக்கும் வண்ணம், ரகுநாதனை புதிதாக அவர் உருவாக்கிய செம்பனை தோட்டத்திற்கு
அதிக உற்பத்தி பலன் கிடைக்க, அதன் பூர்வீக தேசமான கெமரூனுக்கு ஆய்வு செய்ய
அனுப்புகிறார். இந்த பகுதி மட்டும் 227 பக்கங்களை நிரப்பியுள்ளன.
ரகுநாதன் கெமரூன் செல்வதிலிருந்துதான் நாவலே தொடங்குகிறது எனலாம். அது
ஏறக்குறைய 100 பக்கங்கள். கெமரூன் நாடு, அங்கு நடந்த ஆய்வு, அரசியல் சூழல்
என்றெல்லாம் கோ.முனியாண்டி தகவல்கள் திரட்டி விவரிக்கிறார். அவரது நோக்கம்
செம்பனை அதிகம் உற்பத்தியாக உதவும் ஒருவகை பூச்சி இனத்தை ரகுநாதன்
கண்டடைந்ததைச் சொல்வதே.
அதன் பின்னர் மலேசியா திரும்பும் ரகுநாதன் எவ்வாறு அனுசுயாவை மணக்கிறான்,
அவனுக்கு எந்த நல்லவர்களெல்லாம் உதவுகிறார்கள் என சொல்லி சுதந்திர
தினத்துடன் முடிகிறது. அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் படத்திலெல்லாம்
கடைசியாக எல்லாரும் ஒன்று கூடி சிரித்தபடி இருக்கும் போது வணக்கம் வருமே
அதுபோல குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ 'ராமனின் நிறங்கள்' இனிதே முடிகிறது.
நாவல்
தமிழக நாவல்களோடு ஒப்பிட்டோ அல்லது நவீனத் தன்மையுடன் ஒரு நாவல் ஒலிக்க
வேண்டும் என்ற பிடிவாதமான பார்வை கொண்டோ நான் இந்நாவல் குறித்த
அபிப்பிராயங்களைக் கூறவில்லை. மலேசியாவில் எழுதப்பட்டுள்ள நாவல்களை
வாசிப்பதை ஒரு பயிற்சியாகவே நான் செய்து வருகிறேன். இந்நாட்டு இலக்கியப்
பரப்பில் இயங்கும் நான் ஒட்டுமொத்தமான ஒரு மலேசிய படைப்பிலக்கியம்
குறித்தான பார்வையை உள்வாங்கிக்கொள்ள விரும்புகிறேன். அவ்வகையில் நவீன
எழுத்து நடையோ தற்கால இலக்கியப் பார்வையோ இல்லாத அ.ரெங்கசாமி அவர்களின்
நாவலில் உள்ள மிகத்துல்லியமான வரலாற்றுச் சித்திரங்கள்கூட 'நவீன இலக்கியச்
சிந்தனை' உள்ளவராக தம்மைக் கூறிக்கொள்ளும் கோ.மு. வின் நூலில் காண
முடியவில்லை. ரெங்கசாமியின் நாவல்களில் வரும் மனித வதைகள் தொடர்பான
சித்தரிப்புகளில்கூட அதிகம் மேலெழும்பித் ததும்பாத மொழி நடையைக்
கையாண்டிருப்பார். அவ்வாறான பகுதிகளில் அதுவே ஒரு வாசகனை சற்று நிறுத்திக்
கலங்கச் செய்கிறது.
கோ.மு. தன் நாவல்கள் முழுதும் கதறித் துடிக்கிறார்; நெகிழ்ந்து வழிகிறார்;
நல்லவர்களைப் பார்த்து ஆனந்தக்கண்ணீர் சொரிகிறார். ஆனால் அது வாசகனைத்
தீண்டவே இல்லை. அவை வெறும் சொற்களாகக் கடக்கின்றன. கோ.மு. சொல்ல வந்தது
வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கிய பகுதி என்றால் அதை ஒரு கட்டுரையாகவே
எழுதியிருக்கலாம். சொல்ல வருவதுதான் நோக்கம் என்றால் கடிதம் கூட போதுமானது.
ஒரு கலைப்படைப்பு சொல்ல வருவதில் இல்லை உணர்த்தவே முயல்கிறது அல்லவா.
ஆக, கோ.மு.வின் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பின் தன்மையுடன் இல்லை; வடிவ
ரீதியிலும் குழப்பங்களுடன் வாசகனின் வாசிப்புக்குத் தடையாக உள்ளது;
அடிப்படையான இலக்கண வாக்கிய பிழைகள் மலிந்து காணப்படுகின்றன; ஒரு தகவலை
சொல்ல மெனக்கெட்டு இழுத்து விரிக்கப்பட்டுள்ளது. சரி, ஏதோ வரலாறு சொல்ல
முயல்கிறார் என நாவலின் கடைசி பகுதிக்குச் சென்றால் தூக்கிவாரிப் போட்டது.
• 2008 ஆம் ஆண்டு மலேசியாவின் 50ஆம் ஆண்டு சுதந்திர தினப் பொன்விழா (பக்கம்
447)
என கோ.மு. எழுதியுள்ளார். மலேசியா 1957ல் சுதந்திரம் அடைந்தது.
அப்படியென்றால் 2007ல் தான் 50 ஆண்டு சுதந்திரதினம். அவ்வாறு இருக்க 2008
என அவர் வரலாற்று நாவலில் எழுதியுள்ளார் கோ.மு. இந்த பிழை ஒன்றே அவர்
கெமரூன் குறித்து சொன்ன சூழல்கள் அத்தனையையும் சந்தேகிக்க வைக்கிறது.
ஒருவேளை அது சரியாக இருந்தால்கூட நாவலாக இல்லாமல் ஒரு நீண்ட கட்டுரையாக
ஏற்றுக்கொள்ளலாம்.
|
|