|
|
நபீலின் “எதுவும் பேசாத மழைநாள்”...
இலங்கைப் படைப்பாளிகளைப் பற்றிப் பேசும் மூன்றாவது
தொடர் இது... நபீலின் “எதுவும் பேசாத மழைநாள்” என்ற கவிதைத் தொகுப்போடு
சுவடுகளின் பயணம் தொடர்கின்றது.
றிஸ்வியூ முகமது நபீல் என்ற இயற்பெயர் கொண்ட நபீல் இலங்கை ஒலிபரப்பு
கூட்டுத்தாபனத்தின் பகுதிநேர அறிவிப்பாளர் ஆவார். கொழும்பு
பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பட்டயப் பட்டம் பெற்றவர். கவிதைக்காகச்
சுதந்திர இலக்கிய விழா, விபவி படைப்பிலக்கியம், உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடு என்பனவற்றில் விருதுகள் பெற்றுள்ளார். இவரின் முதலாவது கவிதைத்
தொகுப்பு “காலமில்லாக் காலம்” எனும் தலைப்பிலானது ஆகும்.
வழக்கமான கவிஞர்களை விட அழகியல் உணர்வுகள் அதிகம் உடையவர் நபீல் என்பது
அவரது கவிதைகளைப் வாசித்தப் பின்பு என்னால் உணர முடிந்தது. சில வேளைகளில்
குரூரங்களைக் கூட அழகியலோடு அவரால் அவருடைய வார்த்தைகளில் கொண்டு வர
முடிகிறது.
இழந்துவிட்ட ஒரு காதலின் வலியை மிகுந்த மனச்சுமையோடு அவர் இறக்கி வைக்கும்
பாங்கு என்னைக் கவர்ந்திருக்கிறது.
மற்றெல்லாவற்றையும் மன்னிக்கலாம்
முடியுமானவரை மறக்கலாம்
கவிதையை வளர்த்து
என் நித்திரையை நீ
பிடுங்குவதைத் தவிர
கண்விழித்தெழுந்த என் கவிதைகள்
அழுக்குத்தீரக் குளித்துக் கொண்டிருக்கின்றன.
மெல்ல விரல் பிடித்து, பின் கைபிடித்து பிற உணர்வுத் தளங்களால்
சிறைப்பிடிக்கப்பட்டு உடன் வரும் ஓர் உறவு திடீரென்று அறுத்துக் கொண்டு
போவதென்பது; அந்த காதல் உணர்வென்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உயிரை
அரிவது போன்றதான வலியினைத் தரலாம். முடியுமானவரை மறந்துவிடக் கூடிய
நிலையிலும் பெரும்பாலும் காதல் உணர்வென்பது இருப்பதில்லை. தொண்டைக்குள்
சிக்கிவிட்ட முள்ளாக உறுத்திக் கொண்டே இருப்பதுதான் காதலின் வலி. இங்கு
இந்த கவிஞனின் காதலில் வலியை அவனது கவிதைகளும் சேர்த்தே அனுபவிக்கின்றன.
குறைந்தபட்ச
நாகரிகம் கூட உனக்கில்லை
இயன்றளவு
இந்த உலகமும் உன்போல்தான்
நாம் எதை நாகரிகம் என்கிறோம் என்று இதுவரை எந்த வரையறையும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை. உலகமும் மனிதக் கூட்டமும் நாகரிகம் அடைந்ததற்கு
மொழி, வாழ்விடம், சமயம், எழுத்து, பேச்சு என எண்ணற்ற காரணிகள் இருக்கின்ற
பொழுது தனிமனித நாகரிகமாக எதை நாம் கருதிக் கொள்கிறோம்? நாகரிகம் என்பது
ஒவ்வொரு மனிதச் சிந்தனைக்கும் இடையே மாறுபடுகிறது. ஒருவன் நாகரிகமாகக்
கருதுவதை இன்னொருவன் அநாகரிகமாக கருதுகிறான். ஆக வாழ்வியல் ஓட்டத்தில்
நாகரிகம் என்பது புதுப்புது அர்த்தங்களை உள்வாங்கியப்படி பயணிக்கத் தொடங்கி
நீண்ட நாள்களாவிட்டது.
இருட்டு மூலையில்
முன்னொரு முறையும்
திறந்திராத ஜன்னல்
இன்று அடைப்பாரில்லை
தோழமை அழகானதுதான்
போருக்கு முன்...
இலங்கை படைப்பாளிகளிடமிருந்து பிரித்தெடுக்க முடியாத போரின் வலி நபீலின்
கவிதையிலும் காணக் கிடைக்கின்றது. போரினால் தொலைந்து போன நட்பையும்
நண்பர்களையும் மீட்டுப் பார்க்கும் வலியினை இந்தக் கவிதை கண்முன் கொண்டு
வருகின்றது. சிறுவயது முதற்கொண்டே தன்னோடு படித்து, விளையாடி, ஊர்க்கதைகள்
பேசி சுற்றித் திரிந்து உறவுகள் போரில் சிதைந்து சின்னாபின்னமாகி நிற்கும்
அவலம் கொடுமையானதுதான். செல் அடித்து, குண்டுகள் துளைத்து உருக்குலைந்து
நிற்கும் கட்டடங்களைப் போல் தொலைந்து போன நட்புக்கு சாட்சிகள்
இல்லையென்றாலும் அந்த நட்பு குறித்த நினைவுகளுக்குத் தடைபோட முடியாது.
பிரியத்துக்குறியவர்களைத் தேடி தேடி களைத்து நிற்கும் உறவுகளின் ஏக்கத்தை
வார்த்தைகளில சொல்லிவிட முடியாதததுதான.
அழுவதற்கும் அழுவிக்கப்படுவதற்குமிடையில்
ஒளிந்திருப்பதுதான்
படுக்கையறையென்றால்
சாமத்தில் குளிர் மாதிரி முறுகி
ஜன்னல் ஓரங்களில்
படிந்திருக்கலாம் கண்ணீர்.
இரவின் நிசப்தம் பல இரகசியங்களைக் கொண்டுள்ளது. தனிமையில் வாழ்பவர்களுக்கு
அந்த இரகசியங்கள்தான் துணையாகின்றன. இரவில் படுத்தலும் உறங்குதலும் இந்த
இரகசியங்களுக்குத்தான். காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை சுற்றி
இருக்கும் மனிதர்களுக்காக வாழவும் நடிக்கவும் பழகிவிட்ட நாம்
படுக்கையறையில்தான் சுயம் பெறுகிறோம். அன்று நடந்ததை மீட்டுப் பார்த்தல்
தொடங்கி, துணையிருந்தால் துணையுடன் உறவாடத் தொடங்கி இல்லையென்றால்
உணர்வுடன் உறவாடத் தொடங்கும் அற்புதத் தருணங்கள் எல்லாம்
படுக்கையறையில்தான் நிகழ்கின்றன. மீண்டும் குழந்தையாகும் தருணங்களும்,
கரையின்றி கண்ணீர் ஓடும் நிகழ்வுகளும், பல குற்றங்களுக்கு மன்னிப்புகளும்
படுக்கையறையில்தான் கிடைக்கின்றது.
சில கனவுகளைப் போர்த்தியவாறு
எழுந்தன பிள்ளைகள்
அவரவர் வார்த்தைகளைப் பறித்து
எறிந்து விளையாடினர்
மெளனத்தைப் பிரித்து அங்குமிங்கும்
அலைய விட்டனர்
பாதிப் பைத்தியங்களாய் அலைந்த மனிதரை
முடிவடையா இன்பத்துக் கழைத்தனர்
தொலைந்தவர்கள் தொலைந்தனர்
தேடுபவர்கள் கூடினர்
குழந்தைகளின் வாழ்வைக் கவிதைக்குள் கொண்டு வருதல் என்பது அலாதியானது.
குழந்தைகளைப் போலவே சிறுகுழந்தைத் தன்மையுடன் அந்த கவிதை இருக்க வேண்டும்.
வார்த்தைகளுக்குள் பிடிபடாத ஒரு உலகத்தில்தான் குழந்தைகள் வாழ்கின்றன.
குழந்தைகளின் கண்களில் எப்போதும் பட்டாம்பூச்சிகள் பறந்தபடியே இருக்கின்றன.
பட்டாம்பூச்சியை பிய்த்தெறியும் குரூரம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. காலை
எழுந்தது மீண்டும் தூங்கிப் போகும் வரை முடியாமல் நீள்கின்றது அவர்களது
உலகு. எந்தவொரு புள்ளியிலும் குழந்தையின் உலகம் அடங்கிவிடுவதில்லை. ஒரு
புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என விரிந்து விரிந்து வியக்க வைக்கின்றது
அவர்களது உலகம்.
முற்றிலும் அது பிடிவாதமாக
எதையும் அழிக்கவியலாத
கோடானுகோடி நிறங்களுடன்
உருவாகிறதென்று பார்த்திருக்க
நிறங்களும் வண்ணங்களும்
ஓடுகின்றன
ஓர் ஓவியம் உருவாகும் காட்சிகளை மிகுந்த அழகியலோடு நபீல் இந்தக் கவிதையில்
காட்சிப் படுத்தி இருக்கிறார். வண்ணங்களால் முன்பிருந்ததைவிட ஒருபடி மேலான
வாழ்வைப் பெறுகிறது ஓர் ஓவியம். வண்ணங்களால் குழைத்து குழைத்து பூசப்பட்டு
பேசவைக்கப்படுகிறது ஓவியம். ஒரு ஓவியனால் மட்டுமே வண்ணங்களையும் பேச வைக்க
முடியும் என்பதற்குப் பல புகழ்ப்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் இன்றுவரை
சாட்சிகளாக இருக்கின்றன.
நபீலின் கவிதைகளை நல்ல வாசித்தலுக்குறிய கவிதைகளாக உணரலாம். மொழி ஆளுமை
நிறைந்தவையாக அவரது கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
|
|