|
|
நமது இலக்கிய செயல்பாடுகள் - சீரியசாக
யோசிக்கும்போது!
முந்தையப் பதிவில் நமது நாட்டில் புத்தக வெளியீட்டுக்
கலை பற்றி எழுதியிருந்தேன். அதன் நீட்சியாகச் சொல்லக் கொஞ்சம் சங்கதி
இன்னும் உள்ளது. கோ.புண்ணியவானின் `எதிர்வினைகள்' பற்றி கே.பாலமுருகன்
எழுதியிருந்த பதிவை ஒட்டியும், கொஞ்சம் அதைத் தாண்டியும்.
புத்தக விமர்சனம்/திறனாய்வு என்பது புத்தக அறிமுகத்திலிருந்து மாறுபட்டது
என்பது என் கருத்து.
படைப்பை வாசித்தபின், ரசனை அடிப்படையிலோ, கோட்பாடு ரீதியாகவோ கடுமையான,
வெளிப்படையான, தரவுகளின் வலு சேர்த்து நம் விமர்சனத்தை முன் வைக்கலாம்.
எழுத்தாளர் அதை எப்படி எதிர்கொள்வார், அவர் மனம் வருத்தம் கொண்டு விடுமோ
என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிடலாம்; இலக்கிய வளர்ச்சி, நேர்மையான
இலக்கிய செயல்பாடுதான் முக்கியம். பிரதியை விமர்சிக்கப் போகையில்,
படைப்பாளனின் இலக்கிய நேர்மையையும், அவனது இலக்கியச் செயல்பாட்டையும்,
சொல்லிய கருத்துகளையும், (குறிப்பாக மற்ற எழுத்தாளர்களின் புத்தக வெளியீடு
பற்றி அவர்கள் சொன்ன `கறாரான` / காட்டமான குற்றச்சாட்டுகள்) சேர்த்துதான்
பார்க்கணுமா என்பது விமர்சகனின் அணுகுமுறை சார்ந்த விஷயம். முற்பகல்
செய்யின்..........! மற்றவர்களின் எழுத்தை/இலக்கிய செயல்பாட்டை கடுமையான
விமர்சனத்திற்கு உட்படுத்தும்போது இருக்கும் நேர்மை/துணிவு தங்களது
படைப்பின் மீது விழும் விமர்சனங்களை எதிர்கொள்வதிலும் எழுத்தாளர்களுக்கு
இருக்க வேண்டும்.
சிலர், படைப்பாளனை பொருட்படுத்துவதில்லை. பிரதி முழுமைப் பெற்றதும்
எழுத்தாளனின் பணி முடிந்தது (படைப்பாளனின் இறப்பு?) என்ற சித்தாந்தம்
அவர்களது. பிரதியின் தரம், இலக்கியப் போக்கில் அதன் பங்களிப்பு என்பது
பற்றிதான் அவர்கள் முக்கியம் தருகிறார்கள். இதுவும் ஒரு விமர்சன
தேர்வுதான்.
`என் படைப்பை இந்த விமர்சனப் போக்கில்தான்` அணுகவேண்டும் என்று விமர்சகனை
யாரும் கட்டுப்படுத்த முடியாது. தன் விமர்சனத்தில் நேர்மையாக
இருக்கவேண்டியது விமர்சகனின் இயங்கு தளம் சார்ந்தது. ரசனை அடிப்படையில்
விமர்சித்தாலும் அதற்கான காரணங்களை/விவாதங்களை கட்டாயம் முன்வைக்கவேண்டும்.
கல்லெறிந்துவிட்டு கையை மறைத்துக் கொள்ளும் போக்கால் எந்த பயனும் ஏற்படாது.
நமது நாட்டில் நடக்கும் புத்தக வெளியீடுகளில் புத்தக விமர்சனத்தை
எதிர்ப்பார்த்துச் செல்வது சரியான காரியமல்ல. புத்தகம் வெளியீடு
காணவேண்டும்; வாசிக்கப்படவேண்டும்; விவாதத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும்.
அதன் பிறகுதான் விமர்சனம் முழுமையாக உள்வாங்கப்படும் சாத்தியம் உருவாகும்.
அத்தகைய சாத்தியங்களை உருவாக்கவேண்டியது இலக்கிய கடப்பாடு கொண்ட அனைவரது
கடமையுமாகும். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், மாநில எழுத்தாளர்
சங்கங்களும் இக்காரியத்தைச் சரியாக செய்கின்றனவா? எத்தனை இலக்கிய
உரையாடல்களை / வாசிப்பு அரங்குகளை ஏற்பாடு செய்துள்ளனர்? தேசிய அளவில்
பரிசு பெற்ற பல நாவல்கள் இன்னும் பொது வாசிப்பிற்கே வரவில்லையே?
இதனை ஒரு குறைகூறலாகச் சுருக்கிக் கொள்ளாமல், சாத்தியமாக்க முயற்சித்தால்
இலக்கியத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்யலாம். தீவுகளாக இயங்கிக்
கொண்டிருக்கும் சங்கங்கள் ஒருங்கிணைந்து பல காரியங்களைச் செய்யலாம். கெடா
மாநில எழுத்தாளர் சங்கம் அத்தகைய அரங்கு ஒன்றை டிசம்பரில் ஏற்பாடு
செய்துள்ளது. பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு பற்றி. வாழ்த்துகள்.
உயர் கல்விப் புலத்தில் இயங்கும் கல்விமான்களின் செயல்பாடு போதிய அளவு
உள்ளதா? நாளிதழ்களிலோ, வார மாத இதழ்களிலோ இலக்கிய கட்டுரையாவது
எழுதுகிறார்களா? மலாயாப் பல்கலைகழகத்தைத் தவிர்த்து (முனைவர் சபாபதி,
கிருஷ்ணன் மணியம் கொஞ்சமாவது எழுதுயிருக்கிறார்கள். மற்றவர்கள்
எழுதுகிறார்களா?) ஆசியர் பயிற்சிக் கல்லூரிகளின் செயல்பாடுகள் பற்றி சரியான
தகவல்கள் தெரியவில்லை. தங்களின் மாணவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதோடு
கடமை முடிந்ததா? பொது இலக்கிய வாசகர்களை எப்படி அணுகுகிறார்கள்? தங்களின்
இலக்கிய ஆற்றலை/அறிவை/தகவல்களை வளாகத்துக்கு வெளியே பரவச் செய்வதில்
எவ்விதமான ஆத்மார்த்த ஈடுபாடு காட்டுகிறார்கள்? எனக்குத் தெரியவில்லை.
பகிர்ந்துகொள்ளலாமே!
சரி, விஷயத்துக்கு வருவோம். விமர்சனம் போலவே புத்தக அறிமுகத்தையும் அணுக
வேண்டுமா? அவசியமில்லை என்பதே என் கருத்து.
புத்தக அறிமுகத்தில் கூறப்படும் புகழ்ச்சி வார்த்தைகள் (சில சமயங்களில்
மிகைப் புகழ்ச்சிகள்), ஒப்பீடுகள், உணர்வுப்பூர்வமான அல்லது உணர்ச்சிகரமான
சொற்பிரயோகங்களையெல்லாம் கட்டுடைத்து விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டுமா?
ஜெயகாந்தன் கூட ஜெயமோகனை தன் குரு என்று கூறினார். அதனாலென்ன? இந்த நடைமுறை
பாலமுருகனுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். தனது நூல் வெளியீட்டின் போது அதைத்
தவிர்க்கலாம். அது அவர் விருப்பம். தமிழ்மாறனின் அறிமுக உரையை விமர்சிக்க
அவசியமில்லை; தவிர்த்திருக்கலாம் என்பதே என் கருத்து. தமிழ்மாறனின் அன்றைய
உரையின் சாரம் இருபது வருடங்களாக கோ.புண்ணியவானின் எழுத்துகளோடு அவருக்கு
உள்ள ஈடுபாடு சார்ந்ததாகும். அதனை மலினப்படுத்துவது சரியல்ல. அதுமட்டுமல்ல,
கோ.புண்ணியவானின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்பட்ட 'standing ovation'
போதுகூட சிலர் எழுந்து நிற்கவில்லை. ஏன்? நமக்கு இன்னும் கொஞ்சம்
பரந்த/திறந்த மனப்பான்மை வேண்டும் என நினைக்கிறேன். அவருக்கு அந்தத் தகுதி
இருக்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். மாற்று கருத்து இருக்கலாம். ஆனால்
மிக நீண்ட காலமாக இலக்கிய பங்களிப்பு செய்து வரும் சக, மூத்த
எழுத்தாளருக்கு இந்த மரியாதையைக் கொடுப்பது நமது கடமையல்லவா? இன்னொரு
வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் கூட போகலாம். எல்லா நேரங்களிலும் கையில்
கத்தியோடு இருக்காமல், கொஞ்சம் பூக்களோடும் இருக்கலாமே..!
மற்றபடி, தொகுப்பில் உள்ள கதைகள் சார்ந்து பாலா எழுதியிருந்த விமர்சனம் /
ரசனை அவரது அணுகுமுறை. எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ அது பிடித்திருக்க
வேண்டும் என்பது முக்கியமல்ல. அவரது விமர்சனத்தில் குறை இருப்பதாகக்
கருதினால், எவரும் எதிர்வினையாற்றலாம். அப்படியாவது இலக்கியப் பகிர்வு
நடக்கட்டுமே!
பாலாவின் இலக்கியப் பங்களிப்பை அணுக்கமாகத் தொடரும் எனக்கு பாலாவிடம் வைக்க
விரும்பும் வேண்டுகோள் ஒன்று உண்டு...
'உங்கள் சொல் தேர்வு பல சமயங்களில் உங்களை கைவிட்டு விடுகிறது, பாலா.
உங்கள் பலமும், பலவீனமும் அதுதான்.'
(பாலமுருகனிடம் என் கருத்துகளை இன்னும் அழுத்தமாகவே சொல்லிவிட்டேன்.
ஆயினும், வல்லினத்தில் அவரது கருத்துக்கு எதிர்வினையாக இதனை பதிவு செய்வது
அவசியம் என்று நினைத்ததால் இந்த இடுகை.)
|
|