முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 36
டிசம்பர் 2011

  மனிதம் மிஞ்சும் உலகம் ...6
நித்தியா வீரராகு
 
 
       
நேர்காணல்:

'தமிழின் நவீன கவிதையைவிட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது' றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 3
ம. நவீன் - கே. பாலமுருகன்


"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை"
நிலாந்தன்



கட்டுரை:

கோ. முனியாண்டி கொட்டிய குப்பை
ம. நவீன்

குரு தட்சணை
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் : சொற்கள் தொகுக்கும் சித்திரங்கள்
லதா

தக்க வைத்தல்

ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 4
வி. ஜீவகுமாரன்



சிறுகதை:

குளியல்
கே. பாலமுருகன்



அறிவிப்பு:

நேர்காணல் இதழ்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...26

வ.ஐ.ச.ஜெயபாலன்

ந. பெரியசாமி

ராஜா

எம். கே. குமார்

கார்ஸ் (Cars): வெற்றியின் அர்த்தங்கள்

ஆதியில் மனிதன் நில வழி பயணம் செய்ய தனது கால்களைப் பயன்படுத்தினான். பிறகு தனக்கு உதவக்கூடிய விலங்குகளின் மீதேறி சவாரி செய்ய ஆரம்பித்தான். எரிவாயு பயன்படுத்தும் வாகனங்கள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன் தன்னையும் தன் பொருள்களையும் ஏற்றி செல்ல குதிரை மாடு போன்ற விலங்குகள் இழுத்துச் செல்லும் சில்லுகள் பூட்டிய வண்டிகளைப் பயன்படுத்தினான். பல்லாண்டுகளுக்கு முன்னால் இது போன்று வண்டிகளின் ஓட்டப்போட்டிகள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஏன் மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகளுக்கான ஓட்டப் போட்டிகள் இன்றும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெட்ரோலினால் இயங்கும் தானுந்துகள் (Automobile) கண்டுபிடிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வந்தபின் அவற்றுக்கான பந்தயங்களும் தொடங்கிவிட்டன. 1887ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாளன்று உலகின் முதல் தானுந்து பந்தயம் போன்ற ஒன்று நிகழ்ந்தது. பாரிஸ் வெளியீடான லெ வெலோசிப்பீட் என்பதன் சார்பில் அதன் முதன்மை ஆசிரியர் மொன்சியர் போசியர் (Chief Editor of Paris Publication Le Vélocipède, Monsieur Fossier) என்பவர் இந்தப் பந்தயத்தை ஒழுங்கு செய்தார். இது 2 கி.மீ தூரம் மட்டுமே நிகழ்ந்தது. இந்த மிக குறுகிய தானுந்து பந்தயத்தில் மற்றொரு வேடிக்கையான விடயம் இதில் ஒருவர் மட்டுமே பங்கு கொண்டார் என்பதுதான். ஜார்ஜ் பூட்டன் என்பவர், ஆல்பர்ட் என்பவருடன் சேர்ந்து தானே உருவாக்கிய தானுந்துடன் இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆகையால் இதை ஒரு பந்தயம் என்று கொள்வது அவ்வளவாகப் பொருந்தாது.

மற்றொரு பந்தயம் 1894 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் நாளன்று லெ பர்டிட் ஜெர்னல் (Le Petit Journal) என்னும் இன்னொரு பாரிஸ் சஞ்சிகையால் ஒழுங்கு செய்யப்பட்டது. 102 போட்டியாளர்கள் ஒருவருக்குத் தலா 10 பிரங்க் (10 Franc) கட்டணம் செலுத்தி கலந்து கொண்ட இப்போட்டி மிக பாதுகாப்பான, இலகுவான மற்றும் மலிவான பந்தயமாக அமைந்தது. ஆகவே ஒரு பந்தயம் என்று சொல்லத்தக்க இதுவும் ஒரு நம்பகத்தன்மை போட்டியா, ஒரு பொது நிகழ்வா அல்லது உண்மையில் இது தானுந்துக்களுக்கான பந்தயமா என்ற தெளிந்த வேறுபாட்டுப் பண்பின்றி நடந்தேறியது. இருப்பினும் Peugeot, மற்றும் Panhard போன்ற மிக முக்கிய நிறுவனங்களின் தானுந்துகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டது தானுந்து வரலாற்றின் முக்கிய குறிப்பாகும்.

இதனைத் தொடர்ந்து உண்மையில் உலகின் முதல் தானுந்து பந்தயம் என்று சொல்லத்தக்க பந்தயம் ஓராண்டுக்குப் பின் பிரான்சில் கோலாகலமாய் நடைப்பெற்றது. அதன் பிறகு அதே ஆண்டில் அமெரிக்காவின் முதல் தானுந்து பந்தயமும் நடைப்பெற்றது. இப்படி தானுந்து பந்தயங்கள் மிக குறுகிய காலத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துப் பிரசித்தி பெற்றன. இன்று உலகத்தில் மிக அதிகமாக தொலைக்காட்சிகளில் பார்க்கப்படும் விளையாட்டுகளுள் தானுந்து பந்தயங்களும் ஒன்றாகும். இவற்றில் விரைவு தானுந்துகளுக்கான பந்தயங்கள், ஒற்றை இருக்கையுடைய தானுந்துகளுக்கான பார்முலா பந்தயங்கள், தொலைதூர நெடுஞ்சாலைப் போட்டிகள் என பலவகை தானுந்து பந்தயங்களும் அடங்கும்.

2006 ஆம் Pixar நிறுவனத்தினால் தயாரித்து வெளியீடு செய்யப்பட்டு உலகெங்கும் திரையீடு கண்ட ஒரு முழுநீள சிறப்புப் பண்பியலுடைய இயக்கவூட்டத் திரைப்படமான கார்ஸ் (Cars), இது போன்ற தானுந்துகளுக்கிடையிலான போட்டி விளையாட்டை மையமாக வைத்தே இயக்கப்பட்டு இருக்கின்றது. இதன் இயக்குனர் John Lasseter என்பவர் ஆவார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய இணை இயக்குனர் Joe Ranft என்பவர் இந்தத் திரைப்படம் திரையீடு காணும் முன்பே ஒரு சாலை விபத்தில் பலியானார். இந்தத் திரைப்படம் அவரின் இறுதி நினைவாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் Disney நிறுவனத்தால் வாங்கப் படுவதற்கு முன் Pixar ஒரு தனி நிறுவனமாக இருந்து தயாரித்த இறுதி திரைப்படமாகும். மேலும் ‘A Bugs Life’ என்ற திரைப்படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க மாந்தரினம் சேரா கதைப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் Pixar-இன் இரண்டாவது பணித்திட்டம் இதுவே. அவ்வாண்டின் சிறந்த இயக்கவூட்டத் திரைப்படத்திற்கான கோல்டன் குலொப் விருது இத்திரைப்படத்திற்கே வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்ஸ் 2 என்ற தலைப்பைக் கொண்ட இதன் தொடர்ப்படம் அண்மையில் வெளியீடு கண்டு வசூலில் சாதனைப் புரிந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ஸ் என்னும் இத்திரைப்படத்தில் முழுக்க முழுக்க கணினியில் வடிவமைக்கப்பட்ட பல்வகை மாந்தவுருவக வாகனங்கள் நடித்து இருக்கின்றன. இந்த வாகனங்களை கணினியில் வடிவமைப்பதற்காக Lasseter பிரபல தானுந்து நிறுவனமான ஃபோர்டு (Ford) நிறுவனத்திடம் கலந்தாலோசித்து , உண்மையில் உந்து வண்டிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கணினி இயங்கு தளத்தைக் காட்டிலும் அதிகம் வேறுபடாத ஒரு இயங்கு தளத்தையே பயன்படுத்தினார். Pixar-இன் பிற படங்களான ‘The incridibles’- இல் பயன்படுத்தியதை விட நான்கு மடங்கு அதிகமாகவும் ‘Toy story’-இல் பயன்படுத்தியதை விட ஆயிரம் மடங்கு அதிகமான வேகத்தில் செயல்படக்கூடிய கணினிகளை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் கார்டூன்களில் வரும் உந்துவண்டிகளில் அவற்றின் கண்கள் முன்விளக்குகளில் இருப்பதைப் போலவே வரையப்பட்டிருக்கும். கார்ஸ் திரைப்படத்தில் சற்றே வித்தியாசமாக வாகனங்களின் முன்புறக் கண்ணாடிகளில் அவற்றின் கண்கள் இருப்பதாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

இத்திரைப்படம் பிஸ்டன் கிண்ணத்தை (Piston Cup) வெல்லுவதற்கான போட்டிக்காக ஒரு விரைவோட்ட தானுந்துகள் போட்டியிடும் மைதானத்தில் தொடங்குகிறது. அரங்கம் முழுக்க பல்வகை வாகனங்கள் புடை சூழ கதையின் நாயகன் ஒரு விரைவோட்டத் தானுந்தான லைட்டிங் மெக்குவின் ( Ligthing McQueen ) தன்னால் மிக வேகமாக தன்னைச் செலுத்திவிட முடியும் என்ற சுயக்கட்டளையை மனதுக்குள் சொல்லியபடி போட்டியில் களம் இறங்குகிறான். திரைக்கதையின் ஆரம்பத்தில் அனுபவம் குறைந்த புதிய தானுந்தாக இருந்தபோதும் தன் மீது மிகைநம்பிக்கையுடன் இருக்கும் மெக்குவின் தனக்கு ஏற்ப ஆதரவு வழங்கும் சற்றே பிரபலமற்ற Rust-Eze நிறுவனத்திடமிருந்து விலகி புகழ்ப்பெற்ற Dinoco நிறுவனத்தின் அதிக ஆதாயம் தரக்கூடிய ஏற்பாதரவைப் பெற்று விடுவதற்காக பிஸ்டன் கிண்ணத்தை வென்றே ஆக வேண்டுமென உறுதியுடன் இருக்கிறான். பிற தானுந்துங்களான Dinoco நிறுவனத்தின் ஏற்பாதரவு பெற்ற அனுபவமிக்க வெதர்ஸ் (Strip "The King" Weathers) மற்றும் Hostile Takeover Bank நிறுவனத்தின் ஆதரவு பெற்று தனது வெற்றிக்காக பிற தானுந்துகளுக்கு ஊறு விளைவிக்கவும் தயங்காத சிக் ஹிக்ஸ் (Chick Hicks) என்ற இரு தானுந்துகளும் மெக்குவினுக்கு கடும் போட்டியாக அமைகின்றன. இறுதியில் மூவரும் முதல் இடத்தைப் பிடிகின்றனர். இதனால் யார் பிஸ்டன் கிண்ணத்தை வெல்லப் போவது என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி ஒன்று ஒரு வாரத்திற்கு பிறகு கலிபோர்னியாவில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

மெக்குவின் சிறிதும் காலம் தாழ்த்தாமல் தனது பயிற்சியைத் தொடங்கி விட தனது இழுவை வண்டியான மெக்-இடம் (Mack) தன்னை உடனே கலிபோர்னியாவிற்கு அழைத்துச் செல்ல பணிக்கிறான். மெக்கும் சம்மதிக்கிறான். அன்றிரவே இருவரும் புறப்படுகின்றனர். இரவு முழுக்க கண்விழித்து நெடுஞ்சாலையில் தன்னை செலுத்திக் கொண்டே இருக்கிறான் மெக். மெக்குவினோ களைத்துப் போய் உறங்கி விடுகிறான். அந்தத் தருணம் சாலையில் மற்றொரு சாலை விரைவோட்டத் தானுந்து கூட்டம் மெக்கிற்கு இடையூறு செய்கின்றனர். இதன் விளைவாக மெக்குவின் இருக்கும் இணைப்புப் பெட்டி திறந்துகொள்ள தன் இழுவை வண்டியிலிருந்து துண்டிக்கப்பட்டுச் சாலையின் நடுவே விட்டுச் செல்லப் படுகிறான்.

அதன் பின்னர் வாகன நெரிசலுக்கிடையே ஹார்ன் சத்தங்களைக் கேட்டு திடுக்கிட்டுக் கண் விழிக்கிறான் மெக்குவின். மெக்கை எப்படியும் பிடித்துவிட எண்ணி விரைகிறான்; ஆனால் வழித் தவறி வெளி ஆட்கள் யாரும் அவ்வளவாய் வந்து போகாத ஒரு சிறு புனைவு நகரமான Radiator Springs- இல் மாட்டிக் கொள்கிறான். அங்கே மெக்குவின் தான் சந்தித்த சில இடர்பாடுகளால் அந்த நகரத்தின் முக்கிய சாலையை உருக்குலைக்கிறான். இதனால் ஒரு காவல் வண்டியான அம்மாவட்டக் காவலர், செரிவ்(Sheriff) மேக்குவினைக் கைது செய்கிறார். அந்நகரின் மருத்துவரும் நீதிபதியுமான ஹட்ஸன் ஹார்னட் (Hudson Hornet) வகை மகிழுந்து, டாக் ஹட்ஸன் ( Doc Hudson ) என்பவர் மெக்குவினை உடனே நகரை விட்டு வெளியேறக் கட்டளை பிறப்பிக்கிறார். அவரை இடை மறிக்கும் ஒரு பெண் மகிழுந்தும் அந்நகர வழக்கறிஞருமான ஸாலி (Sally) மெக்குவின் சாலையில் அவன் ஏற்படுத்திய சேதங்களை அவனே சரிசெய்வதே அவனுக்கு ஏற்ற தண்டனை என வாதிடுகிறாள். நீதிபதி டாக்கும் அவளின் வாதத்திற்கு ஏற்ப தீர்ப்பளிக்கிறார். இந்த எதிர்பாராத தொந்தரவினால் கலிபோர்னியாவில் பயிற்சிக்காகவும் பின் இறுதி போட்டியிலும் கலந்து கொள்ளவேண்டிய மெக்குவின் Radiator Springs நகரில் எக்கச்சக்கமாக மாட்டி கொள்கிறான். சாலையைச் சரிசெய்யும் வேலைகளை ஒரே நாளில் செய்து முடிக்க நினைத்தும் அவனால் இயலாமல் போகிறது. கலிபோர்னியாவுக்குத் தப்பித்துப் போகும் அவன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே இன்னும் அடுத்தடுத்த தினங்களில் Radiator Springs- இல் இருந்தே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறான் மெக்குவின்.

ஆரம்பத்தில் ஒரு கட்டாயத்தின் பேரில் Radiator Springs இல் இருக்க நேரிட்டப் போதும் மெக்குவின் விரைவிலேயே தோவ்(Tow meter) உட்பட அந்த நகரவாசிகள் பலரின் நண்பனாகிறான். ஸாலிக்கும் மெக்குவினுக்கும் இடையே சொல்லிக் கொள்ளாத மெல்லிய காதலும்கூட மலர ஆரம்பிக்கிறது. இதற்கிடையில் Radiator Springs இல் பல ஆண்டுகளாய் புதைந்து கிடக்கும் இரகசியங்களை மெக்குவின் அறிந்து கொள்ள நேரிடுகிறது.

U.S Route 66 என்னும் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள Radiator Springs நகரம் ஒரு காலத்தில் மக்கள் கூட்டம் வந்து குவியும் ஆரவார நகரமாகதான் இருந்திருக்கிறது. இடையில் புதிய நெடுஞ்சாலையான Interstate 40 குறுக்கே அமைந்துவிட மக்கள் Radiator Springs நகரைக் கடக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் காலப்போக்கில் Radiator Springs என்ற நகரம் இருப்பதே மறக்கப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரைப்படத்திலிருந்தும் நீக்கப்படுகிறது. இந்த விபரங்களை ஒரு நாள் ஸாலியுடன் தனியே செல்லுகையில் மெக்குவின் அறிந்து கொள்கிறான். இதனைத் தொடர்ந்து ஒரு நாள் டாக்கின் அறைக்குத் தனியே செல்லும் ஒரு வாய்ப்பில் மற்றுமோர் உண்மையை அறிந்த மெக்குவின் திடுக்கிடுகிறான். டாக் தன் இளவயதில் ஒரு தானுந்து விளையாட்டு வீரராக இருந்தார் என்பதையும் அவர் பிஸ்டன் கிண்ணத்தை மூன்று முறை வென்றவர் என்பதையும் அறிகிறான். டாக் தனது இறுதி போட்டியில் ஒரு விபத்துக்குள்ளாகி போட்டியின் தூரத்தைக் கடக்க முடியாமல் போட்டியிலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறார். அதன்பின் டாக் தானுந்து விளையாட்டு உலகத்தால் மறக்கப்படுகிறார். டாக்கும் தான் ஒரு விளையாட்டு வீரன் என்ற அடையாளத்தைத் துறந்து விடுகிறார். இந்த உண்மைகளை அறிந்த பின் மெக்குவின் Radiator Springs நகரத்தையும் அங்கு வாழும் தன் புதிய நண்பர்களையும் தனக்கு மிக நெருக்கமாக உணர ஆரம்பிக்கிறான். இதற்கிடையில் சேதமடைந்த சாலையைச் செப்பணிடும் பணியையும் முடித்து விடுகிறான் மெக்குவின். தனது பிஸ்டன் கிண்ணப் பந்தயத்தைச் சில பொழுதுகள் மறந்து தன் புதிய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அந்தத் தருணத்தில் சற்றும் எதிர்பாராமல் பெரும் பரபரப்புடன் மெக்குவினின் இழுவை வண்டியான மெக், உலங்கு வானூர்திகளுடனும் மகிழுந்து நிருபர்களுடனும் Radiator Springs நகரத்தை வளைத்துக் கொள்கிறான். தன் நண்பர்களுடன் ஒரு வார்த்தைக் கூட பேச அவகாசம் வழங்கப்படாமல் மெக்குவின் இழுவை வண்டியில் ஏற்றப்பட்டு கலிபோர்னியாவுக்கு அனுப்பப் படுகிறான். டாக்தான் மெக்குவினைப் பற்றிய செய்தியை விளையாட்டு ஏற்பாட்டாளருக்கு அறிவித்து இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட ஸாலி கோபம் கொள்கிறாள். மெக்குவினின் மற்ற நண்பர்கள் அவன் சென்ற வழியைப் பார்த்தபடி செய்வதறியாது நிலைக் குத்தி நிற்கின்றனர்.

திரைப்படத்தின் அடுத்தக் காட்சி கலிபோர்னியாவில் தானுந்து விளையாட்டுப்போட்டிக்கான மைதானத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அங்கே வழமையாக செய்வது போல் மெக்குவின் தன் மனதை ஒருமுகப்படுத்த ஆழ்மனக்கட்டளைகளைத் தனக்குச் சொல்லி கொள்கிறான். இறுதியாக பிஸ்டன் கிண்ணத்தை வெல்பவர் மூவரில் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி விளையாட்டும் ஆரம்பமாகிறது. மெக்குவின் பந்தயப் பாதையில் தன்னைச் செலுத்துகிறான். இருப்பினும் அவனின் மனம் முழுக்க Radiator Springs- இன் ஞாபகங்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. ஸாலி ஒரு அழகிய நீர் ஊற்றின் முன் வந்து நிற்பதை போல் காட்சி அவன் கண்களில் தோன்றி மறைகின்றது. விளையாட்டில் அவனால் கவனம் செலுத்த இயலவில்லை. இதுவரை அவனின் ஒரே இலட்சியமாக இருந்த பிஸ்டன் கிண்ணம் அந்தத் தருணத்தில் அவனுக்கு அர்த்தமற்று போகிறது.

இதற்கிடையில் அவன் நண்பர்களான தோவ்-உம் டாக்கும் மெக்குவினைத் தேடி விளையாட்டு மைதானத்துக்கு வந்து விடுகின்றனர். அவர்களைப் பார்த்ததும் மெக்குவின் மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் தன்னைச் செலுத்துகிறான். பந்தயப் பாதையின் எல்லையை நோக்கி விரைகிறான். அவ்வேளையில் கதையின் எதிர்மறை பாத்திரமான, சிக் ஹிக்ஸ் , மூத்த விளையாட்டாளரான வெதர்ஸை இடித்து விபத்துக்குள்ளாக்குகிறான். இன்னும் சிறிது தூரத்தில் எல்லையைக் கடக்கப் போகும் நிலையில் மெக்குவின் வெதர்ஸின் நிலமை குறித்துப் பரிதாபப்படுகிறான். போட்டியிலிருந்து ஓய்வு பெறும் வயதில் இருக்கும் வெதர்ஸுக்கும் டாக்கின் நிலை ஏற்பட்டுவிடுமோ என அச்சப்படுகிறான். இந்த சூழலில் மெக்குவின் என்ன செய்தான்? பிஸ்டன் கிண்ணத்தை யார் வென்றார்? என்ற கேள்விகளுக்கு விடையாக திரைப்படத்தின் இறுதி காட்சிகள் அமைகின்றன.

நான் எனக்கென்று ஒரு மகிழுந்து வாங்கும் வரை அதன் பாகங்களைப் பற்றிக்கூட அறிந்து வைத்திருக்கவில்லை. சாலையில் என்னைக் கடந்து செல்லும் மகிழுந்துகளின் வண்ணங்களையோ வடிவங்களையோ இரசித்தது இல்லை. சில நேரம் தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றி கொண்டு இருக்கும்போது ஏதும் பார்முலா தானுந்து பந்தயங்களைப் பார்க்க நேர்ந்தால் உடனே அடுத்த அலைவரிசைக்குப் பாய்ந்து விடுவேன். ஆனால் தானுந்து பந்தயத்தை மையப்படுத்தும் 'கார்ஸ்' திரைப்படம் உந்து வண்டிகளால் எப்போதுமே கவரப்பட முடியாத என்னையும்கூட ஈர்த்துக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் இத்திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமானத் திரைக்கதையும் உயிரோட்டமான கதைப்பாத்திரங்களும் தான். இந்தத் திரைப்படத்தில் வரும் எந்தவொரு கதைப்பாத்திரமும் கதைக்குப் பொருந்தாமலோ அவசியம் இல்லாமலோ இருக்கவில்லை.

பிஸ்டன் கிண்ணத்தை வென்றுவிடத் துடிக்கும் மெக்குவின் Radiator Springs நகரத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தை படும் காட்சிகள் மிக சுவாரிஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் அமைந்து இருந்தன. ஸாலி மெக்குவினால் ஈர்க்கப்பட்டுத் தன் காதலை வெளிப்படுத்த முடியாமல் பரிதவிக்கும் காட்சியும், இருவரும் ஓர் அழகிய நீரூற்றைக் கடந்து ஆள் அரவமற்ற Wheel Well விடுதிக்குச் செல்லும் காட்சிகள் அழகு. மேலும் வாழ்வின் வெற்றி ஒருவரை முந்தி சென்று தோற்கடிப்பதில் மட்டும் கிடைத்து விடுவதில்லை என்ற பண்பினை உணர்த்தும் இறுதி காட்சி மனதைப் பிசைகிறது.

பொதுவாக மனிதர்கள், பேசும் பறவைகள் அல்லது விலங்குகள், இயந்திர மனிதர்கள், வேற்றுக் கிரகவாசிகள் போன்ற கதைப்பாத்திரங்களை வைத்து இயக்கப்படும் இயக்கவூட்டத்திரைப்படங்களை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். ஆனால் முதன்முறையாக எந்த மனிதப் பாத்திரமோ விலங்குகளோ இல்லாமல் முழுக்க முழுக்க வாகனங்கள் மட்டுமே வாழும் உலகை நம் கண்முன்னே விரித்து வைத்த Pixar நிறுவனத்தினர் பாராட்டுக்குரியவர்கள். தன்னைத் தானே இயக்கிக் கொள்ளும் தானுந்துகள், தாங்களாகவே பெட்ரோல் நிரப்பிக் கொள்வதும், சக்கரத்தின் உருளிப்பட்டைகளை மாற்றி கொள்வதும், நிருபர்களாக பேட்டி எடுப்பதும், கோபம் கொள்வதும், காதல் கொள்வதும், நட்பில் களிப்பதும், கரைவதுமாக இப்படி அத்தனையையும் செய்யும் தானியங்கி வாகனங்களைத் திரையில் சாத்தியப்படுத்திய CGI தொழிற்நுட்பம் மிக வித்தியாசமான அனுபவத்தை நமக்கு அளிக்கிறது.

இவற்றைத் தவிர்த்து இத்திரைப்படத்தின் குரல் நடிகர்கள் கதைப்பாத்திரங்களுக்கு ஏற்றவகையில் குரல் கொடுத்துத் திரைப்படத்திற்கு வழு சேர்த்துள்ளனர். பிரபல நடிகர் Owen Wilson லைட்னிங் மெக்குவினுக்கு குரல் கொடுத்துள்ளார். Bonnie Hunt என்னும் நடிகைதான் ஸாலிக்குக் குரல் கொடுத்தவர். 1986 –ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்ற Paul Newman டாக் ஹட்ஸனுக்குக் குரல் கொடுத்துள்ளார். இதுவே இவர் 2007 –இல் பதவி ஓய்வுப் பெற்று 2008-ஆம் ஆண்டு இயற்கை எய்தியதற்கு முன்னால் பணிப்புரிந்த இவரின் ஆவணப் படமல்லாத இறுதி திரைப்படமாக்கும். குரல் நடிகர்களைத் தவிர்த்து இசை இயக்குனர் Randy Newman தனது இசையால் இத்திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளார். இவர் இப்படத்தில் தனது ‘Our Town’ பாடலுக்கு ‘Grammy’ விருதை வென்றும் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஏணையப் பாடல்களும் பின்னனி இசையும்கூட காட்சிகளுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தி இருக்கின்றன.

இந்தப் படத்தின் ஒரே பலவீனமாக நான் கருதுவது இதன் கால அளவே. முழுப்படமும் 116 நிமிட நேரம் வரை நீளுகின்றது. அதனால் சில காட்சிகள் தேவைக்கு அதிகமாகவே நீட்டிக்கப்பட்டு இருப்பதைப் போல தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. இதனைத் தவிர்த்திருந்தால் படத்தின் விருவிருப்பு இன்னும்கூட அதிகரித்து இருக்கும். மற்றபடி நம் கற்பனைக்கு எட்டா வாகனங்களின் மாயாஜால உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் முதல் திரைப்படமான கார்ஸ், இயக்கவூட்டத் திரைப்பட வரலாற்றில் மற்றுமொரு முக்கியத் திரைப்படமாகும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768