|
|
பூட்டியின் காதல்
க்ரேஸியின் பூட்டி...முந்தைய தலைமுறையில் பிறந்து
வளர்ந்து குறைந்தது இரண்டு தலைமுறையையாவது கண்கூடாக பார்த்திருப்பார்.
பார்க்க சாதாரண மலாய் முதாட்டியை போலதான் காட்சியளித்தார். நான்
பார்க்கையில் சாம்பல் வர்ணத்தில் முழு கை சட்டையும் அதே வர்ணத்தில் முழு
கால் சிலுவாரும் அணிந்திருந்தார். ஒரு வித சுறுசுறுப்பு அவர் முகம்
முழுவதும் பரவியிருந்தது. அவர் ஒரு வார்த்தை பேச க்ரேஸி அதை எனக்கு
மொழிப்பெயர்க்க என்னவோ நான் அவரை பேட்டியெடுப்பது போல இருந்தது. எப்போதும்
போலவே குசலம் விசாரிக்க, நானும் பதிலளித்தேன். அவர் பேசியதை விட அவரின்
உடைகளும் குடியிருந்த வீடும், உடல் மொழிகளும் தான் அதிகம் பேசின. சந்தித்த
சில நிமிடங்களிலேயே பார்வைகளாலே பேச ஆரம்பித்துவிட்டார். அவர் பார்த்த
முதல் குறுகுறு பார்வை முதலில் அசெளகரியத்தை ஏற்படுத்தினாலும் பின் அதுதான்
அவரின் பார்வை என்று க்ரேஸி சொன்ன போது சாதாரணமாக எடுத்துகொண்டேன்.
பிடாயு மொழியில் நான் யார் எங்கிருந்து வருகிறேன், என்ன செய்கிறேன்
என்றெல்லாம் கேட்டார். அவருக்கு பதில் சொன்ன அதே வேளையில் என் கண்கள் அவர்
வீட்டை முழுவதுமாக அலசின. இன்றைய மலிவு விலை வீட்டின் ஓர் அறையின் பாதியளவு
பரப்பளவு தான் அந்த மூதாட்டியின் வீடு...இல்லையில்லை கொட்டகை. அப்படிதான்
சொல்ல வேண்டும். ஒரு மூலையில் சுத்தமாய் துடைத்து திரியேற்றிய மண்ணெண்ணை
விளக்கு, கூட்டி பெருக்கிய மூங்கில் தரை. ஒற்றையடுப்பு, ஓரமாய் கவிழ்த்து
வைத்த ஒரே ஒரு மங்கு, ஒரு குவளை, ஒரு குச்சி விளக்குமாறு, படுக்க
சுருட்டிவைக்கப்பட்ட பாய், அதனருகே தலையணையும் போர்வையும் என அந்த சின்ன
கூட்டுக்குள் சுத்தபத்தமாய் இருந்தார் அந்த பூட்டி. அந்த சந்திப்புக்கு
பின்னர் மீண்டும் கிரேஸின் அத்தை வீட்டுக்கு நடையை கட்டினோம். போகும் வழி
நெடுக்க என் மண்டைக்குள் பூட்டியின் முகமும் அவர் இருந்த வீடும் தான்
காணொளியாய் அவதானித்து கொண்டிருந்தது. அவரின் சந்ததியினர் நல்ல
நிலையிலிருந்தும் மழை பெய்தால் கண்டிப்பாய் ஒழுகும் நிலையிலிருந்த அந்த
வீட்டில் ஏன் அவர் இருக்கிறார் என க்ரேஸியிடம் பேச்சுவாக்கில் கேட்டேன்.
அப்போது தான் ஒரு முக்கிய விசயத்தை க்ரேஸி சொன்னாள்.
பூட்டி தன் இளமை வயதில் காதல் வயப்பட்டு பின் அது எதோ ஒரு காரணத்தினால்
திருமணம் தடைப்பட்டு போக, அதன் பின் அவர் வேறு யாரையும் திருமணம்
செய்யாமலேயே காலத்தை ஓட்டிவிட்டாராம். இந்த மூங்கில் கொட்டகைக்கு வருவதற்கு
முன் தன் அக்கா அதாவது க்ரேஸியின் ஒரிஜினல் பூட்டியோடுதான்
தங்கியிருந்தாராம். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாய் தனியாக
வந்துவிட்டாராம். இங்கே எனக்கு ஏதொ மூளைக்குள் பொறி தட்டியது. பூட்டி
சாதாரணமானவர் அல்ல. பயங்கர வைராக்கியசாலி. தன் காதலை கடைசிவரைக்கும் எந்த
ஆணுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்ல. மெல்லிய மனதுடையவரும் கூட.
பாசக்கார அக்காவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடினால் வாழ்ந்தாலும் தனியாய்
வாழ்ந்து காட்டுவேன் என தனியாகவே இருந்திருக்கிறாரே. எனக்கு புல்லரித்து
விட்டது. மண் மாறுப்பட்டாலும் மனசு என்னவோ எல்லாருக்கும் ஏறக்குறைய ஒரே
மாதிரிதான் இருக்கிறது. மனிதர் என்ற காரணத்தினாலோ என்னவோ.
அப்படியென்றால் அவசர ஆபத்துக்கு யார் உதவுவார் என பொறுக்காமல் கேட்டேன்.
அதாவது குடும்பத்தில் யாராவது ஒருவர் திருமணமாகாமல் இருப்பின் ஆணாய்
இருந்தாலும் சரி பெண்ணாய் இருந்தாலும் சரி, குடும்ப வழக்கப்படி அதே
குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அந்த திருமணமாகாதவருக்கு சொந்த
பிள்ளையாய் தாரை வார்த்து கொடுத்து விடுவார்களாம். இதை தத்து என கூட சொல்ல
முடியாது. இது அநக் குடும்பத்துக்குள் மட்டுமே நடக்குமாம். அப்படி தரப்பட்ட
குழந்தை சொந்த வீட்டிலும் வளரும்; தாரை வார்க்கப்ப்ட்ட வீட்டிலும் வளரும்.
அப்படி இருந்தும் இந்த திருமணமாகாதவரை அம்மா எனவோ அல்லது அப்பா எனவோ
கண்டிப்பாக அழைக்க வேண்டும். என்ன நடந்தாலும் அவருக்கு அந்த குழந்தைதான்
பாதுகாப்பு அரவணைப்பு எல்லாமே. இதை எழுதாத சட்டமாய் பிடாயு வம்சத்தினர்
கடைப்பிடித்து வருகிறார்கள். இதற்கு சில சாம்பிரதாயங்களும் உண்டு.
குடும்பத்தில் ஆக பெரியவரால் இது முடிவு செய்ய படுமாம். இப்படிப்பட்ட
வழக்கத்தை நான் இங்கு தான் முதன்முறையாய் கேள்வி படுகிறேன். தத்து
கொடுத்தல் பற்றி தெரியும். அது பரவலாய் நடப்பது தான். ஆனால் இதில் என்ன
வித்தியாசம் என்றால் திருமணமாகாமல் இருந்தாலும் எப்படியோ போகட்டும் என
விடாமல் அவரையும் அந்த குடும்ப உறவு அறுபடாமலும் பாதுகாக்க இப்படி ஒரு வழி
வைத்திருக்கிறார்கள் இவர்கள். அந்த வழியில் அந்த பூட்டிக்கு ஒரு மகன்
இருக்கிறாராம். அப்படி இருந்தாலும் பூட்டி மூங்கில் வீட்டை விட்டு
வெளியேறிய பாடில்லை. அந்த வீட்டோடு அப்படி ஒரு பாசம்.
அந்த நினைவோடு சாகோ கம்பத்தை விட்டு அந்த நீண்ட வளைந்த நெளிந்த பாதையில்
மீண்டும் கூச்சிஙை நோக்கி பயணித்தோம் பூட்டியுடன் அது தான் இறுதி சந்திப்பு
என அறியாமல்.
|
|