|
|
கொஞ்சம் எழுந்து நில்லுங்கள்
“எழுந்து நில்”
வகுப்பில் கற்றல் கற்பித்தலுக்கு இடையூறாகவோ பாடத்தில் கவனம் செலுத்தாமலோ
இருக்கும் மாணவனைத் தண்டிக்க வேண்டுமானால் உடனடி நடவடிக்கை இதுவாகத்தான்
இருக்கும். தீவிர விசாரணையும் தண்டனையும் அதற்குப் பிறகுதான். அப்பொழுது
சம்பந்தப்பட்ட மாணவனின் முகத்தைப் பார்க்கவேண்டுமே! ஏதோ ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்ட கைதிபோல் முகத்தைச் சுளித்தவாறு தர்மசங்கடத்தோடு எழுந்து
நிற்பான்.
எல்லாரும் அமர்ந்திருக்கும்பொழுது தான் ஒருவன் மட்டும் எழுந்து நிற்பதை
அவமானத்துக்குரியதாக மாணவன் நினைக்கிறான். அதிலும் பெண்கள் உள்ள வகுப்பில்
நிற்பது தன்மானத்தையே அசைத்துப்பார்ப்பதாக இருக்கிறது. இதனால்தான்
கடுமையாகத் திட்டுவதைவிட எழுந்து நிற்கச் சொல்லும் தண்டனையே பலவேளைகளில்
போதுமானதாக இருக்கிறது.
எழுந்து நிற்பது ஒரு தண்டனையா? பெரும்பாலும் ஆசிரியர்கள் நின்றுகொண்டுதான்
பாடம் நடத்துகிறார்கள். வகுப்பில் இரண்டு பாடவேளையில் ஒரு மணிநேரம் நின்று
பாடம் நடத்துகிறேன். மாணவருக்கான இலக்கியப்பாட கருத்தரங்குகளில் நான்கு மணி
நேரம் போவதுகூட தெரிவதில்லை. அப்பொழுதெல்லாம் நீண்டநேரம் நிற்பதைப்பற்றி
எண்ணிப் பார்ப்பதில்லை.
நின்றுகொண்டிருப்பதே வாழ்க்கையில் பலருக்கு வருமானத்தைத் தருவதாக
அமைந்துவிடுவதும் உண்டு. காஜாங் நகரில் உள்ள வங்கிக்குப் போகும் போதெல்லாம்
அங்குப் பாதுகாவலர் மதியழகன் வெள்ளைச் சீருடையில் விரைப்பாக நிற்பதைப்
பார்க்கும்பொழுது நீண்ட நேரம் நிற்பதின் வேதனையை உணரத் தொடங்கினேன். எட்டு
மணி நேரம் உங்களால் தொடர்ந்து நிற்கமுடியுமா? மதியழகன் நிற்கிறார்.
கர்மசிரத்தையோடு கடமையில் கண்ணாக வங்கியில் நுழையும் ஒவ்வொரு முகத்தையும்
விசாரித்தபடி. வங்கியில் இருக்கைகள் இருந்தாலும் அவர் அவற்றில்
அமர்ந்திருப்பதை என்றும் நான் பார்த்ததில்லை.
“நாள் முழுக்க நிற்கிறீங்களே. கால் வலிக்காதா?” ஒரு நாள்
கேட்டுப்பார்த்தேன்.
“வீட்டுக்குப் போனா கால்ங்க கொஞ்சம் அசதியாகத்தான் இருக்கும். இடுப்பு
வலியும் வரும். எல்லாம் பழகிப்போச்சு தம்பி. நம்ம பொழப்பே இப்படியான
பின்னாடி என்ன பண்ண முடியும்? நின்னுட்டு போக வேண்டியதுதான்.”
“கொஞ்ச நேரம் உட்கார்ந்து எழுந்தா நல்லா இருக்குமே”
“ஊகும். அதெப்படி முடியும்? உட்கார்ந்தா சோர்வு, தூக்கம் எல்லாம்
வந்திடும். அப்படிப் பழகிட்டா கஸ்டமாகிடும். பின்னாடி வேலைக்கும் வெனயா
முடிஞ்சிடும்”
நிற்பவர் அமர்ந்தால் சோர்வு நீங்கும் என்று நினைத்திருந்தேன்.
அமர்ந்தால்தான் சோர்வு வரும் என்கிறார். வயிற்றுக்காக வாழ்க்கையைத் தந்து
விட்டவர்களிடையே இப்படி மாறிப்போன இயற்கை நியதிகள் எத்தனையோ.
வங்கியில் மட்டுமல்ல. விற்பனை மையங்கள், பேரங்காடிகள், தொழிற்சாலைகள்
எங்கும் பணியாளர்கள் மணிக்கணக்கில் நிற்கிறார்கள். அவர்கள் கொஞ்ச நேரம்
அமர்ந்து அசதியைப் போக்கிக்கொள்ள பக்கத்தில் இருக்கைகள் ஏதும் இருக்குமா
எனப் பார்த்திருக்கிறேன். பணியாளர்களின் கொஞ்சநேர ஓய்வையும் முதலாளிகள்
ஏற்றுக்கொள்வதில்லை. வேலைக்கு மட்டுமல்ல. அவர்கள் நிற்பதற்கும்
சேர்த்துத்தான் ஊதியம் வழங்கப்படுகிறதோ என்னவோ!
நண்பர்களையோ உறவினர்களையோ வழியனுப்ப உள்ளூர் இரயில் நிலையம் போய் நீண்ட
நேரம் காத்திருக்கையில் நினைப்பதுண்டு. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை
பலரும் வந்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வசதியாக இருக்கைகளை ஏற்பாடு
செய்யவேண்டும் என்ற எண்ணம் இரயில் நிறுவனத்திற்கு இல்லாமற் போனது ஏன்?
எப்பொழுதும் இலாபம்தான் நோக்கமா? ஏன் இருக்கைகள் இருந்தால் அங்கேயே படுத்து
உறங்கி பலர் வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள் என்ற பயமா?
தீபாவளி மாதத்தில் மனைவியோடு பல கடைகளில் ஏறி இறங்கிச் சோர்வடையும்
நேரத்தில் அமர இடம்தேடிய அனுபவம் உங்களுக்கு நேர்ந்திருக்கிறதா? கைகளில்
துணிப்பைகளோடு ஆண்கள் சோர்ந்துபோய் எதில் மீதாவது சாய்ந்துகொண்டிருக்கும்
காட்சியைப் பலர் பார்த்திருக்கலாம்.
சிறிதும் ஓய்வு இல்லாமல் நீண்ட நேரம் நிற்பது உடலுக்குத் தண்டனைதான்.
இதனால் எத்தனையோ உடல் உபாதைகள் வரலாம். பாதம், கால், முதுகுப் பகுதி,
தோள்பட்டை இவற்றில் வலி ஏற்படும். அதிலும் குறிப்பாக, தொழிற்சாலைகளில்
பணியிடங்களில் ஒரே மாதிரி அசையாமல் நிற்பவர்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
நிற்கும்பொழுது புவிஈர்ப்புச் சக்தி உடல் பாரத்தைக் கீழ் நோக்கி இழுப்பதால்
தசைகள் இறுக்கம் அடைகின்றன. உடலில் இரத்த ஓட்டம் குறைந்து தசைகளில்
மூட்டுப்பகுதிகளில் வலி உண்டாகும். இங்கிலாந்தில் பதினொரு மில்லியனுக்கும்
அதிகமான பணியாளர்கள் (இது மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கையில் பாதியாகும்)
நீண்ட நேரம் நிற்பதால் உடல் நலக் குறைவை எதிர்நோக்கி வருவதாக ஓர்
இணையத்தளம் கூறுகிறது.
நீண்ட நேரம் நிற்பதால் விளையும் உடல் உபாதைகளில் முக்கியமானது ஆர்த்ரைடீஸ்.
முழங்காலில் உள்ள எலும்புகளுக்கிடையே கார்டிலேஜ் எனும் ஒருவகை ஜவ்வு
உள்ளது. இந்த ஜவ்வுதான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல்
பாதுகாக்கிறது.இந்த ஜவ்வு கிழிந்துவிட்டாலோ நீங்கிவிடுவதாலோ எலும்புகள்
ஒன்றுடன் ஒன்று உராய்வதால் வலி மற்றும் வீக்கமும் ஏற்படுகின்றன.
ஆர்த்ரைடீஸ் ஏற்பட மற்ற காரணங்களும் (ஹோர்மோன் கோளாறு, அதிகமாக வாகனம்
ஓட்டுவது, அதிக உடல் எடை) உள்ளன. ஆண் பெண், இளையோர் முதியோர் என்ற
பாகுபாடில்லாமல் எல்லாரையும் தாக்கவல்லது இந்நோய்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆர்த்ரைடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு என் மனைவி
இடது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்பொழுதுதான் இந்த நோய்
பற்றிய காரணங்களில் என் கவனம் குவிந்தது. நோயின் தீவிரத்திலிருந்து கொஞ்சம்
கொஞ்சமாக வந்தாலும் வேதனையும் வீக்கமும் நிரந்தமாகியிருக்கிறது.
“அப்பாடா, நாங்கள் தப்பித்தோம். நாங்கள் நிற்பதில்லை. நாள் முழுதும்
உட்கார்ந்தவாறுதான் வேலை செய்கிறோம்.” என்று நீங்கள் சொல்லலாம்.அதிலும்
ஆபத்துகள் காத்திருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை இணையத் தளங்களில்
கண்டேன்.
இருக்கை - அரசியலில் மட்டுமல்ல. உடல் நலத்திலும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
என்னதான் ஒருவர் ஒவ்வொரு நாளும் மெது ஓட்டம் ஓடி, உடற்பயிற்சி மையத்தில்
நேரத்தைக் கழித்தாலும் அதைவிட அதிக நேரம் அலுவலக இருக்கையில், வாகனத்தில்,
வீட்டுச் சோபாவில் உட்கார்ந்திருந்தால் நாமே பல விளைவுகளை ஏணி வைத்து
இறக்குவதாக அல்லது வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்பதாக அமைந்துவிடுமாம்.
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருந்தால் இடுப்புச் சுற்றளவு கூடுதல், உடல் எடை
அதிகரிப்பு, நீரிழிவு, இரத்தக்கொதிப்பு, இருதய நோய் போன்ற நோய்களுக்கு நாம்
பிள்ளையார் சுழி போடுவதாக ஆகிவிடுமாம். இந்தத் தகவலைப் படித்தபொழுது
நின்றுகொண்டே இருப்பவர்களின் மீது படர்ந்திருந்த அனுதாபம் வாழ்நாள்
முழுதும் இருக்கையில் காலத்தைக் கழிக்கச் சபிக்கப்பட்டவர்கள் மீது தாவியது.
“என்னையா இது? நின்றாலும் ஆபத்து, அமர்ந்தாலும் ஆபத்து என்றால் என்ன
செய்வது? அந்தரத்திலா அல்லாடுவது?” என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில்
விழுகிறது. நின்றாலும் அமர்ந்தாலும் அதன் தீவிர எல்லைக்குச் சென்றுவிடாமல்
மிதமான நிலையிலே இருந்தால் நம் விலாசம்தேடி வரும் வினைகளைத் தவிர்க்கலாம்.
‘தீது தீது தீவிரவாதம் தீது’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடி எழுந்து நின்று
அமர்ந்து காலத்தைக் கழிக்கவேண்டியதுதான்.
அண்மையில் ஒரு பள்ளியின் புதிய கட்டடத் திறப்புவிழாவுக்குச்
சென்றிருந்தேன். “மலேசியாவிலேயே நம்ம பள்ளிதான் ஐந்து மாடிகளைக் கொண்ட
பள்ளி. இது புதிய வரலாறு. நமக்கெல்லாம் இது பெருமைதரக்கூடியது” முக்கியப்
பிரமுகர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
பள்ளிக்கட்டடத்தை ஏறிட்டேன். அங்கு மின்தூக்கியைக் காணவில்லை. ஏறி இறங்க
படிக்கட்டுகள் இருந்தன. பெண் ஆசிரியர்களை அதிகமாகக் கொண்ட அப்பள்ளியில்
அவர்களும் மாணவர்களும் சிரமத்தோடு படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் காட்சிகள்
என் கண் முன்னே விரிந்தன. அவர்களில் சில கர்ப்பிணி ஆசிரியைகளும்
கண்ணுக்குத் தெரிந்தார்கள். திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தும் தரப்பினர்
இது பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்கமாட்டார்களா?
ஒரு மணி நேர பாடவேளையில், வகுப்பில் மாணவர்கள் அமர்ந்து அசையாமல் அக்கம்
பக்கம் திரும்பாமல் இயந்திரம்போல் பாடத்தில் மூழ்கியிருக்க வேண்டும் என
ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது எவ்வளவு தவறு என்பதை நான் உணர்கிறேன். ஓடியாடி
விளையாட வேண்டிய இளம்பருவம் அவர்களுக்கு.
அதனால்தான் பாடத்தின் இடையே ஒருமுறையாவது ஆசிரியர்கள் இதனை அவர்களுக்குச்
சொல்லிச் செயல்படுத்தலாம்:
“கொஞ்சம் எழுந்து நில்லுங்கள்”
|
|