|
|
விளையாட்டு
நேற்றா
அதற்கு முன் தினமா?
இறந்த காலம் என்றே வைத்துக் கொள்வோம்.
கல்லெடுத்து
கைக்குட்டையால் சுற்றி
நீலவானுக்குள் வீசியெறிந்தோம் நாம்.
விண்ணும் மண்ணும்
தலைகீழாய் விழ
கிறுகிறுத்துப் போனாம் நாம்
தகிப்பில் இணைந்த கரங்களைக்
கடவுளின் கோபத்திற்கஞ்சி
விடுவித்துக் கொண்டோம்.
ஆனால் இடி கைதட்டவில்லை
மின்னல் இளிக்கவில்லை
கல் மட்டும் பூமியில்
பேசாமல் விழுந்தது
கைக்குட்டை?
முதிய மரத்தின் உச்சியில்
காற்றில்
முணு முணுத்துக் கொண்டிருக்கிறது
அது முதல்
நாம் மறுபடியும் சந்திக்கவேயில்லை
ஒவ்வொரு நாளையும் ஏப்பம்விட்டு
கொழுத்துப் போனது தூரம்
எஞ்சியதெல்லாம்
பேசத்தவமிருக்கும்
கல்.
1969 கலாச்சாரப் புரட்சியின் போது கூ - ச்செங்கின் குடும்பம்
கிராமப்புறத்திற்கு செங்காவலர்களால் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டது. 1976ம்
ஆண்டு 'தியானாமென்' சதுக்கக் கிளர்ச்சியில் கலந்து கொண்டதற்காகப் பலத்த
கண்டத்துக்குள்ளானார். 1983ல் இருந்து சீன அரசாங்கத்தின் கண்காணிப்புக்கு
ஆளானார்.
1987ல் ஐரோப்பாவிற்கும் ஹாங்காங்கிற்கும் பயணம் மேற்கொண்ட தருவாயில்,
1988ல் நியூசிலாந்து வாசியானார். இன்று சீனாவை விட்டு வெளியேறி வாழ்ந்து
கொண்டிருந்தாலும், கூ - ச்செங்கின் இலக்கியப் பங்கை சீன இலக்கியவாதிகள்
மறுக்க முடியாது.
1979-80 வரை இவர் நடத்திய 'ஜின்தியன்' (இன்று) என்ற சிறு வட்ட இலக்கிய
வெளியீடு, முதல் பெய்ஜிங் வசந்த ஜனநாயகக் கிளர்ச்சிக்கு விதை தூவியதால் தடை
செய்யப்பட்டது.
இவரது தந்தை கூ - கோங், சீன அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தால் தம் கைப்பட
மகனின் கவிதைகள் ஏதும் புரியவில்லையென்று நையாண்டி செய்யும் கட்டுரையொன்றை
எழுதும் அவலமும் நேர்ந்தது. 'மெங் லோங்-ஷி' (பனிமூட்டக் கவிதை) என்ற கவிதை
இயக்கத்தை தொடங்கியவர் கூ - செங்.
|
|