|
|
சதுரங்கம்
சிருஸ்ட்டி வேட்கையில்
ஆனைமலைக் காடுகள் பாடுகிற
அந்தி மாலை.
அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்
உன்னையே சுற்றுதடி மனசு.
இது தீராத காதலடி
நீதான் கண்டு கொள்ளவில்லை.
அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்
தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்
யானைபோல
உண்மையில் என் காதலும் பெரியதடி.
காமத்தில் சூரியன்
பொன்சிந்த இறங்கி வர.
நாணிப் புவிமகள்
முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..
ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற
உனது நாடகம் அல்லவா இது.
ஆண் பெண்ணுக்கிடையில்
ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை
எப்போதும் விரிகிறது.
என்னோடு இன்னும் சிலரை
பந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்
வித்தைக்காரியில்தான் காதலானேன்.
அதனால் என்ன.
கீழே காட்டில் .
ஒரு மூங்கில் புதரை மட்டுமே மேய்ந்த
யானையும் இல்லை
ஒரு யானை மட்டுமே மேய்ந்த
மூங்கில் புதரும் இல்லை.
எதுவும் செய்..
ஆனால்
இறுதியில் நாம் மட்டுமே மிஞ்சவேண்டும்.
நம் மரபணுக்களில் கவிதை கோர்க்க.
|
|