எஃகாலான வானம்
வானந்தெரியாது
என்றடம்பிடித்த தங்கைக்கு
மழையையும் வெயிலையும் காரணங்காட்டி
வீட்டிற்கு வெளியே
கூரை வேய்ந்தாகிவிட்டது.
எஃகுக் கூரையில்
நிலா நட்சத்திரங்கள் காண
பழகிவிடுவாள் சிலநாட்களில்.
மாநகர் திரும்பிய வழிநெடுக
பேருந்துக் கூரையில்
வானந்தெரிந்ததெனக்கு.
மொட்டைமாடி வானத்தில் தெரியும்
தங்கையின் முகம் மறைய
இன்னும் எத்தனை நாட்களாகும்?
எங்கே போகிறாள்?
சேற்றுச் சாறாய்
வழிந்தோடும் மழைத்தண்ணீர்
கிழித்து விரையும்
அவளது எதிர்நடை
சாலையில் வெளிச்சம்
வாகனத்திலிருந்து வருகிறது
தலையில் நரைமுடி
முகத்தில் தொங்குந்தோல்
முழங்காலுக்கு மேலே
உயர்த்திய சேலை
காட்டிய வாளிப்பை
கண்ணுற்றபடி கடக்கிறேன்.
எங்கே போகிறாள் வேகமாக
வீட்டிற்கா
வீடு திரும்பாதது
கோழிக்குஞ்சா
ஆட்டுக்குட்டியா
பேரக்குழந்தையா
கட்டிய கணவனா
தேடித்தான் திரிகிறாளோ
கண்களைப் பார்த்திருந்தால்
ஒருவேளை தெரிந்திருக்கலாம்.
இரத்தலினும் இறத்தல்
முன்னைப்போல்
ஓடித்திரிய முடியவில்லை
வயோதிகம் வந்ததில்
சுருங்கிவிட்டதென் எல்லை.
வந்துவிழும் பண்டங்களுக்காக
படியோரம் படுத்திருக்கிறேன்
ஆறாத புண்களைத் தடவியபடியும்
ஈனக்குரலில் முனகியபடியும்.
சுய இயலாமையும் அடுத்தவரின் நிராகரிப்பும்
மரணம் வரைக்கும் நரகம்.
தற்கொலை செய்துகொள்வதும்
சமாதானமாக இல்லை இப்போதைக்கு.
விழுந்து கிடக்கும் நிழல்
ஒளிந்துகொள்ளும் பொழுதுகளில்
இன்னும் பயமாக இருக்கும்.
|