|
|
தாய் கொண்டு வந்த கதை!
அம்மாவின் கையில் சோறு அமிர்தமாகிறது
நிலாவும் அம்மாவும் ஒன்றாகிறார்கள்
எப்போதுமே கதை சொல்லாத அம்மா
இப்போது கதைகதையாய் இருக்கிறாள்
காட்சிகளை நெகிழ்ச்சியாய் ஊட்டுகிறாள்
அம்மாவின் கருத்த உதடுகளின் கண்ணீரில் நிலா மினுமினுக்கிறது
எப்போதும் முன் கண்டிராத இக்காட்சிகளை
அது - இப்போது
ஆச்சர்யத்தோடும் ஆர்வத்தோடும் பார்க்கிறது.
சாப்பிட்டபின்
கட்டி அணைக்கிறாள் அதை!
அம்மாவா இது? சிடுசிசு அம்மாவா இது?
வியர்வை நனைத்த அக்குளின் வாசனையில்
சுமந்துவந்த கருப்பையோடு அதை
இறுக்குகிறாள்.
எதிர்பாய்ச்சலில் பாயும் மீனைப்போல
நீருக்குள் குதிக்கிறாள்
காற்றில் பறப்பது சுகம்
ராக்கெட்டில் பறப்பதைப்போன்றோ
அடைகாத்துப்பொறித்த குஞ்சுகளை
தாய்ப் பறவை சுமப்பதைப்போன்றோ
மிகுந்த சந்தோசத்தில் இணைந்திருக்கிறது அது.
மீன்களும் நண்டுகளும் பாம்புகளும் உண்டது போக,
சேலையோடு இறுக்கப்பட்ட
அதன் இறுதி ஓலத்தின் இயலாமையை
யாரிடம் கேட்பது குரூரமே!
***
முகமூடி
உங்களைப் பார்த்து புன்னகைப்பதில்
சில சங்கடங்கள் இருக்கின்றன
உங்களது சூட்சுமம் ஒரு கோமாளியாய் என்முன் நிற்கிறது.
பிணத்தைச் சுற்றிச் சுற்றி வரும் ஒரு பைத்தியக்காரன் தெரிகிறான்.
தலையைத் தரையில் முட்டிக்கொள்ளும் ஒரு பூச்சி
இலையை விழவைத்துவிட்டு பூக்களை நுகர்ந்துகொள்ளும் வண்டு
ஒரு குரங்கு, நரி அல்லது
முற்பாகம் சுருங்கி பிற்பாகம் பெருத்த ஒரு மிருகம்
முகத்தைக் கவட்டியில் மாட்டி காலை உதரும் ஒருவன்
இருதலை கொண்ட பாம்பு
அல்லது
குறைவொளியில் சுயமைதுனம் கொள்ளும்
யாருமில்லா அறைக்குள் நீங்கள் மட்டுமே
விட்டத்தை வெறித்தபடி !
இவை எவையுமில்லையென்றால்
இரண்டு கண்கள், இரு காது ஒரு மூக்கு கொண்டு
வாயைப் பிளந்து பல்லைக்காட்டும் ஒரு சராசரி முகம்
என
உங்களது ஒரு சூட்சுமம் என்கண்முன் நிற்கிறது.
இப்போது நீங்களே சொல்லுங்கள்.
எப்படிச் சிரிப்பது உங்களிடம்?
எதை நீங்களாய் நினைத்துச் சிரிப்பது?
|
|