முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 36
டிசம்பர் 2011

  கதவைத் தட்டும் கதைகள் ...12
க. ராஜம் ரஞ்சனி
 
 
       
நேர்காணல்:

'தமிழின் நவீன கவிதையைவிட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது' றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 3
ம. நவீன் - கே. பாலமுருகன்


"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை"
நிலாந்தன்



கட்டுரை:

கோ. முனியாண்டி கொட்டிய குப்பை
ம. நவீன்

குரு தட்சணை
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் : சொற்கள் தொகுக்கும் சித்திரங்கள்
லதா

தக்க வைத்தல்

ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 4
வி. ஜீவகுமாரன்



சிறுகதை:

குளியல்
கே. பாலமுருகன்



அறிவிப்பு:

நேர்காணல் இதழ்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...26

வ.ஐ.ச.ஜெயபாலன்

ந. பெரியசாமி

ராஜா

எம். கே. குமார்

சை. பீர் முகம்மதுவின் ‘சிவப்பு விளக்கு’

கோலாம்பூர் ரயில்வே ஸ்டேசன், அதுதான் திரு. சை. பீர் முகம்மதுவின் ‘சிவப்பு விளக்கு’ கதையின் முக்கிய தளம். காரணம் அதன் பக்கத்தில் கிழக்கு மேற்காக ஓடிய மேம்பால சுவருக்கடியில்தான் அமீது, ஆபெங், காளிமுத்து ஆகிய மூவரின் வாழ்க்கையும் தொடங்குகின்றது. இவர்கள் பிச்சை எடுத்து தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர். கால சுழற்சி இவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து பார்க்க செய்கின்றது. அமீது அரசாங்க ஆதரவில் ஓர் இடத்தில் தஞ்சமடைந்துவிட மற்ற இருவரின் வாழ்க்கையே ரயிலைப் போன்று நாம் கடந்து செல்லும் தண்டவாளமாகின்றது. இனி இவ்விருவரின் வாழ்க்கைப்பயணத்தில் சில துளிகள்.

சில நாட்களுக்குப் பிறகு

மேம்பாலத்தினடியில் ஆபெங் தங்குவதில்லை. ஏதேச்சையாக ஆ பெங்கைச் சந்திக்கும் காளிமுத்து அவன் கார் கழுவும் தொழில் செய்வதை அறிகின்றான். அவனையும் அத்தொழிலுக்கு அழைக்கும் ஆ பெங்கிற்கு அவன் தரும் பதில் ’’சேச்சே! நமக்கு இந்தத் தொழில் ஒத்து வராது. பெரிய தொழிலே பழகிப் போச்சு. நீ நல்லா இருந்தா சரி, நான் வர்றேன்!’’. காளிமுத்து இன்னும் பிச்சை எடுக்கின்றான்; கள்ளுக்கடைக்குச் செல்கின்றான்.

சில மாதங்களுக்குப் பிறகு

மீண்டும் காளிமுத்து ஆ பெங்கைச் சந்திக்க நேர்கின்றது. ஆபெங் சைக்கிளில் ஐஸ்கீரிம் விற்கின்றான். இரவில் கார் கழுவுவதாகவும் காளிமுத்துவிடம் சொல்லி செல்கின்றான். காளிமுத்து இன்னும் பிச்சை எடுக்கின்றான்; கள்ளுக்கடைக்குச் செல்கின்றான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு

ஆபெங்கின் சவ ஊர்வலம். கொடிகள், கம்பங்கள், பட்டுத் துணிகளில் பிரபல சீனவர்த்தக நிறுவனங்களின் அனுதாபச் செய்திகளுடன் பேண்ட் வாத்திய முழக்கமும் சீன இசையும் நிரம்பி இருக்கின்றன. மூன்று மாதங்களுக்குப் பின்னர் மேம்பாலத்தினடியிலிருந்து ஓர் அனாதைப் பிணத்தைப் போலீசார் அகற்றுகின்றனர்.

காளிமுத்து மற்றும் ஆ பெங்கின் எதிர்பாரா சந்திப்புகள் நில நிமிடங்களே கதையில் தென்பட்டாலும் அதன் தாக்கம் நம்மிடையே அகலாமல் நின்றுவிடுவதால் கூட கதையின் தலைப்பு சரியான தேர்வாகின்றது.

கால நகர்வு கொண்டு வரும் மாற்றங்களை நாம் பார்க்கும் வானளாவிய கட்டடங்களும் சாலையில் நிரம்பி வழியும் வாகனங்களும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால் காலத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து சுயமுன்னேற்றத்திற்கு முக்கியத்துவமளித்து முயற்சி எடுப்போர், சற்றும் முயற்சியே இல்லாமல் தன் வாழ்க்கையை அதே நிலையுடன் தொடர்வோர் என பல வகை மனிதர்களைக் கண்முன் நிறுத்துகின்றது கதை.

இது சமுதாயத்தில் சிந்திக்கக்கூடிய முக்கிய கூற்றென கருதலாம். நம்மை நாமே உயர்த்திக்கொள்ளல் என்பது ஒவ்வொரு தனிமனித உள்ளத்திலிருந்து பிறக்கின்றது. இது சுயமுன்னேற்றம் என்ற அடிப்படையில் உருவாகும் உணர்வு. அவ்வகை உணர்வு பிறந்துவிட்டாலே தானாக முன்னகர்ந்து தன் உச்சத்தை எட்டிவிடும் உன்னத வல்லமை பொருந்தியது. அது வற்புறுத்தலிலோ அல்லது வாய்ப்புகளையோ முழுவதும் நம்பி இருப்பதில்லை. அவ்வாறு இருப்பின் அதை ஏணிப்படியாக அமைத்துக் கொண்டால் நலம். சில சமயங்களில் காரணங்களும் குறைகளும் வாய்ப்புகளை உதறிவிடுகின்றன. சந்தர்ப்பங்களையும் காலத்தையும் நழவவிடுவதால் சமுதாயத்தின் நிலை இன்னும் வலுவிழக்கின்றது.

இறப்புக்கும் பிறப்புக்கும் மத்தியலான வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பது ஒவ்வொருவரின் கையில் என்பது தெரிந்த போதிலும் பலரது வாழ்க்கை இன்னும் அர்த்தபடாமலே முடிந்து போகின்றது. ‘You must be the change you wish to see in the world’ என்கின்றார் காந்தி. அதாவது நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றங்களை நம்முள்ளே முதலில் கொண்டு வர வேண்டும். இது சாத்தியமான விஷயம் என்ற போதிலும் பல மனங்களில் சாத்தியமற்றதாகவே உருவாக்கம் பெற்றிருப்பதால் சுயமுன்னேற்றம் தடைபடுகின்றது.

பணம் ஒன்றினால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியமென கருதுவோருக்கு மத்தியில் ஆ பெங் நிமிர்ந்து நிற்கின்றான். தன் உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி படிப்படியாய் முயல்பவன் நம் அருகில் இருக்கும் அவனைப் போன்றோரை நினைவில் நிறுத்திப் பாராட்ட வைக்கின்றான். முன்னேற்றத்திற்குப் பணத்தைவிட முக்கியமானது உழைப்பும் முயற்சியும். இவ்விரண்டும் வலுவாய் இருக்கும் பட்சத்தில் பணம் என்பது தேடி வரும் என்பதை மெய்ப்பிக்கின்றது கதையோட்டம்.

மேம்பாலத்தினடியில் படுத்திருக்கும் ஆ பெங் ஓர் இரவு வேளையில் காய்ச்சலால் நடுங்குகின்றான். அவனது முனகல் காளிமுத்துவின் காதில் விழ அவனுக்கு பட்டர்’ தடவிய ரொட்டித் துண்டுகள், வறக் கொப்பியும் ‘ஆஸ்ப்ரோ’ மாத்திரைகளும் வாங்கி தந்து அன்போடு உண்ண செய்கின்றான்; தன்னுடைய கிழிசல் போர்வையை ஆ பெங் போர்த்திக் கொள்ள தருகின்றான்; ஐம்பது சென் கட்டணமாய் செலுத்த அவனிடமில்லாத பணத்தைத் தந்து மறுநாள் காலை அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்தும் செல்கின்றான். ஏழைகளின் கருணை நெஞ்சை நனைக்கும் இத்தருணத்தில் லியோ டால்ஸ்டாயின் கதையொன்று நினைவிற்கு வருகின்றது. ‘WHERE LOVE IS, GOD IS’ கதையில் வரும் மார்ட்டின் செருப்பு தைக்கும் தொழிலாளி. தன் உறவுகளை இழந்து விட்டவன். தன் சிந்தனையை இறைவன்பால் செலுத்தி மன நிம்மதி அடைகின்றான். ‘மார்ட்டின்! நாளை தெருவை பார்த்து கொண்டிரு... நான் வருவேன்...’ எனும் அசரீரி குரல் ஒருநாள் அவன் காதில் விழுகின்றது. அது கனவா நனவா என்பது கேள்வியாய் மனதினுள் எழுந்தாலும் குறிப்பிட்ட தினத்தில் அவன் கடவுளுக்காக காத்திருக்கின்றான். அவ்வேளையில் பனியை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த முதியவரின் மீது இரக்கம் ஏற்பட அவரை வீட்டிற்குள் அழைத்து தேநீர் தந்து உபசரிக்கின்றான். அதன் பின்னர் அவன் காத்திருப்பு தொடர்கின்றது. பரிதாபத்துக்குரிய பெண்ணொருத்தி குழந்தையுடன் அப்பக்கம் வருகின்றாள். குழந்தை அழுகின்றது. குளிருக்கு இதமான ஆடையை அவள் உடுத்தியிருக்கவில்லை. தன் கண்ணில் பட்ட அவளையும் உள்ளே அழைத்து உணவு தருகின்றான்; குழந்தைக்கு போர்த்திக்கொள்ள பழைய துணியொன்றையும் தருகின்றான். அவள் சென்றவுடன் மீண்டும் ஜன்னலின் அருகே காத்திருக்கின்றான். ஆப்பிள் விற்கும் கிழவியிடமிருந்து ஓர் ஆப்பிள் பழத்தைத் திருடி ஓட முற்படுகின்றான் ஒரு சிறுவன். சிறுவனைத் தப்ப விடாமல் கிழவி பிடித்துவிடுகின்றாள். காவல்துறையிடம் சேர்க்க போவதாக கூறி சிறுவனை ஏசுகின்றாள். மார்ட்டின் கிழவியிடம் சிறுவனை மன்னித்து விடுமாறு கேட்கின்றான். சிறுவனிடம் மன்னிப்பு கேட்க சொல்கின்றான். அவர்களைச் சமாதானப்படுத்தி வழியனுப்புகின்றான். மாலையில் மீண்டும் அசரீரி. தான் உபசரித்தவர்கள் எல்லாம் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்பதை உணர்கின்றான். மார்ட்டின் அடைந்த உணர்வைச் சில வினாடிகள் கதையில் இச்சூழல் நம்மையும் உணர செய்கின்றது.

ரயில் நிலையம், சமிக்ஞை விளக்கு என கதையில் ஆங்காங்கே தென்படும் சிவப்பு விளக்கு நம்மையும் அவ்வப்போது நிறுத்தி சிந்திக்க வைக்கின்றது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768