முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 36
டிசம்பர் 2011

  ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி
 
 
       
நேர்காணல்:

'தமிழின் நவீன கவிதையைவிட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது' றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 3
ம. நவீன் - கே. பாலமுருகன்


"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை"
நிலாந்தன்



கட்டுரை:

கோ. முனியாண்டி கொட்டிய குப்பை
ம. நவீன்

குரு தட்சணை
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

தோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் : சொற்கள் தொகுக்கும் சித்திரங்கள்
லதா

தக்க வைத்தல்

ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 4
வி. ஜீவகுமாரன்



சிறுகதை:

குளியல்
கே. பாலமுருகன்



அறிவிப்பு:

நேர்காணல் இதழ்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...26

வ.ஐ.ச.ஜெயபாலன்

ந. பெரியசாமி

ராஜா

எம். கே. குமார்

'ஷோபா சக்தி பதில்கள் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்தமாதம் முதல் ஆதவன் தீட்சண்யா வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுவார். வாசகர்கள் விரைந்து கேள்விகளை அனுப்பலாம்' - ஆசிரியர் குழு

ஷோபா, உங்களின் முந்தைய பேட்டியில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் 'ஈழம் கிடைத்தால் மட்டுமே கடவுசீட்டு எடுப்பேன்' என்று (ஈழ நாட்டு கடவுசீட்டு). உங்கள் மீது எமக்கு மிக பெரிய மரியாதை உருவானது. இன்று உங்களது பேட்டி - எழுத்து நமது தமிழர்களை காட்டி கொடுப்பது போன்றே உள்ளது, உங்களின் கீழ்தரமான விளம்பரத்திற்கு நம்மை நாமே காட்டிகொடுப்பது நல்லதா.... என்று திருத்துவீர்கள் உமது இந்த கையாலாகததனத்தை..?

பாண்டியன் - சிங்கப்பூர்


ஈழம் கிடைத்தால் மட்டுமே கடவுச்சீட்டு எடுப்பேன் என நான் எப்போதும் சொன்னதில்லையே. லீனா மணிமேகலைதான் என்னுடைய கதையை வைத்து 'கடவுச் சீட்டு' என்றொரு படம் எடுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார்.

அன்புள்ள பாண்டியன்! தமிழர்களைத் தமிழர்களுக்கே காட்டிக்கொடுப்பது மிக அவசியமான வேலையாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் கற்பிதங்களிலும் பிரமைகளிலும் பழங்காலப் பெருமைகள் பேசியும் கிட்டத்திட்ட அழியப்போகும் இனமாக ஈழத்தில் இருக்கிறார்கள். எனவே தமிழர்கள் அவர்களது சமகால நிலையை மாயைகளை விலக்கி உள்ளதை உள்ளபடியே அறிய அவர்களை அவர்களிற்கே காட்டிக்கொடுக்க வேண்டியுதுள்ளது. ஏச்சு வேண்டியோ பேச்சு வேண்டியோ இந்த வேலையை செய்தே ஆகவேண்டியிருக்கிறது. 'உன்னையே நீ அறிவாய்' என்றாரல்லவா சோக்ரட்டீஸ். அதுதான் இந்தக் காட்டிக்கொடுப்பு.

இது பெரியார் ஈவெரா சொன்னது: "நாம் ஒழுக்கத்தையும், நியாயத்தையும், சட்டத்தையும் நம்பி வெகு காலம் நாசமாக்கி விட்டோம். இப்போதும் தேசத்தையும், தேசியத்தையும் நம்பி மறுபடியும் வெகு காலம் பாழாக்கி வருகிறோம். இவைகளை நம்புவது, இவைகளுக்கு கட்டுப்படுவது, இவைகளுக்காக பாடுபடுவது எல்லாம் முட்டாள்தனம் என்பதை உணர்ந்தோம். இனி மனித சமூக விடுதலைக்கும், ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதற்கும், ஒரு மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக்கொண்டு சோம்பேறியாய் வாழ்வதை அழிப்பதற்கும் பாடுபடவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன். இது குற்றமானால் இது பாபமானால் இந்தக் குற்றத்தையும், பாபத்தையும் குஷாலாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியதுதான், வரவேற்க வேண்டியது தான்"

நீங்கள் ஒரு தீவிர சினிமா ரசிகராயிருக்கிறீர்களே... படம் பார்த்து அழுகிற வழக்கம் உள்ளதா?

ராணி, மலேசியா.


உண்டு. ஆனால் அண்மையில் ஒரு திரைப்படத்தை குறித்து எழுதப்பட்டிருந்ததைப் படித்தே மனம் விட்டு அழுததுண்டு. 'தெய்வத் திருமகள்' படம் குறித்து 'காட்சிப் பிழை' இதழில் வெளியான விவாதக் கட்டுரையைப் படித்து மனம் நொந்து கண்ணீர் சிந்தினேன். 'அங்காடித்தெரு' ஆனாலும் 'ஆடுகளம்' ஆனாலும் 'காட்சிப்பிழை' குழுவினர் என்னைக் கலங்கடித்தே வருகிறார்கள்.

சோபாசக்தி உங்களை நோக்கிவரும் எல்லாக் கேள்விகளுக்கும் (அவதூறுகளுக்கும்) சலிப்பின்றி பதிலளிக்கிறீர்களே இது தேவையா?

நந்தன், கனடா.


இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் அய்ம்பதாவது ஆள் நீங்கள். இதிலெல்லாம் என்ன சலிப்புள்ளது. எல்லாம் ஒரு பழக்கத்தில் வருவதுதான்.

LTTE இயக்கத்திலிருந்த காலத்திலும், 'தொழிலாளர் பாதை' விற்றுத் திரிந்த காலத்திலும் எத்தனையோ விதமான கேள்விகளையும் எத்தனையோ விதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறேன். "கரையானின் இயக்கம்" என்று முகத்துக்கு நேரே திட்டியிருக்கிறார்கள், 'தொழிலாளர் பாதை' விற்ற காலங்களில் காறித் துப்பியிருக்கிறார்கள். அடித்து விரட்டியிருக்கிறார்கள். அடியையும் வாங்கிக்கொண்டு அந்த இடத்திலேயே அடித்தவர்களுக்கு கருத்துப் பிரச்சாரமும் செய்திருக்கிறோம்.

நாம் ஒரு கருத்தைப் பரப்புரை செய்யும் போது பலவிதமான எதிர்க் கருத்துகளை மட்டுமல்லாமல் அவதூறுகளையும் சேர்த்தே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவும் நாம் பிரச்சாரம் செய்யும் கருத்து மிகச் சிறுபான்மையின் கருத்தாகவும் சமூகத்தின் பொதுப்புத்திக்கு எதிராகவுமிருந்தால் நமக்கு பொறுப்பு இன்னும் அதிகமாகிறது. ஒவ்வொரு தனிமனிதர்களுடனும் சாத்தியமுள்ள வழிகளிலெல்லாம் எனது கருத்துகளை நான் உரையாட முயற்சிக்கிறேன். அவர்களிடம் எனது கருத்தை எடுத்துச் செல்லும் சிறிய சந்தர்ப்பத்தையும் தவறவிடக் கூடாது என்பதுவே எனது நிலைப்பாடு.

வீதியில் நின்று பத்திரிகை விற்கும்போது அல்லது இயக்கத்துக்காக மக்களிடம் ' பங்களிப்பு' கேட்கப் போகும்போது மக்கள் நான்கு விதமாகவும் கேள்விகளைக் கேட்கத்தான் செய்வார்கள். சில கேள்விகளின் அடிப்படையே தவறாயிருக்கும். சில கேள்விகள் முழுவதுமான வதந்திகளின் அடிப்படையிலிருக்கும். அவை எல்லாவற்றுக்கும் நான் பொறுமையாகப் பதில் சொல்லிப் பழகியிருக்கிறேன். இப்போது அதே மக்கள், பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் அதே மாதிரியான கேள்விகளை வைக்கிறார்கள். நான் அதே பொறுப்புணர்வுடன் அவர்களுக்குப் பதிலளிக்கவும் அதன் மூலம் அவர்களோடு உரையாடலைத் தக்கவைக்கவும் முயற்சிக்கிறேன்.

இதனால் எனது புனைவு சார்ந்த முயற்சிகள் ஒருபோதும் கெட்டுப் போதில்லை. நான் அதிகம் எழுதவில்லை எனில் எனக்கு நேரம் இல்லையென்று பொருளாகாது. அதற்குப் பொருள் தற்சமயம் என்னிடம் சரக்கு இல்லையென்பதே.

விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா? நாவல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

மதுவந்தி, யாழ்ப்பாணம்.


படித்துவிட்டேன். அது பயங்கரமான கசகறண அனுபவமாயிருந்தது.

ஒரு நாவலில் அல்லது கதையில் கதைசொல்லி வட்டார வழக்கைக் கையாள்வது கதைசொல்லிக்கு ஒரு வகையில் வசதிதான். அந்த வசதியை நான் பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன். கதையின் மடிப்புகள் அறுபடும் போதும், தாவிச் செல்லவும், முன்னே பின்னே கதையில் காலங்களில் ஊடாடவும் வட்டார வழக்கு வசதியானதுதான். முக்கியமாக வட்டார வழக்கு கதைக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழக்குகிறது. ஆனால் வட்டார வழக்கில் கதை சொல்வதில் ஒரு எல்லையுமுண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும்.

வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா.

வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால். வட்டார வழக்கால் நாவலுக்கு உருவாகும் ஒருவித நம்பகத்தன்மை நாவலை இறுக்கமாகக் கட்டியமைப்பதாலேயே சாத்தியமாகும். நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது.

விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், புயலிலே ஒரு தோணி, ஒரு புளிய மரத்தின் கதை, மோகமுள், பொய்த்தேவு, ஜெ. ஜெ. சில குறிப்புகள், தலைமுறைகள், கிருஷ்ணப் பருந்து, மானுடம் வெல்லும்... இது ஜெயமோகன் தமிழில் சிறந்த நாவல்களாகக் கருதும் பட்டியல். நீங்கள் இவ்வாறு ஒரு பட்டியல் போட்டால் எப்படி இருக்கும். தைரியமாகப் போடுங்க பிரதர்.

மலர்நாதன், சென்னை.


இந்தப் பட்டியலுடன் பெருத்த முரண்பாடில்லை. நான் பட்டியலிட்டால் விஷ்ணுபுரமும், ஜே.ஜே: சில குறிப்புகளும் பட்டியலில் இருக்காது. வெக்கையும், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகமும், காவல் கோட்டமும் பட்டியலில் சேர்ந்துகொள்ளும். எஸ். பொவும், கே. டானியலும் கண்டிப்பாக அந்தப் பட்டியலில் இருப்பார்கள். ஒரு மாறுதலுக்காக நான் எனக்குப் பிடித்த ஈழத்து நாவல்களைப் பட்டியலிடுகிறேனே.

சடங்கு - எஸ்.பொ.

கோவிந்தன் - கே. டானியல்

ஒரு தனிவீடு - மு. தளையசிங்கம்

நிலக்கிளி - பாலமனோகரன்

வாடைக்காற்று - செங்கை ஆழியான்

சுமைகள் -தாமரைச்செல்வி

குருதிமலை - தி.ஞானசேகரன்

புதியதோர் உலகம் - கோவிந்தன்

நட்டுமை - ஆர்.எம்.நெளசாத்

செக்குமாடு - வ.அய்.ச.ஜெயபாலன்

இந்த வாசகர் கேள்வி பதிலில் எனது கேள்வி இறுதியானதாக இருக்கட்டும். வல்லினத்தில் கடந்த மாத றியாஸ் குரானாவுடனான உரையாடலை கவனித்திருப்பீர்கள். அவர் அதில் இரு வகையான கேள்விகளை உங்கள் முன் வைக்கிறார். ஒன்றாவது தங்களின் இலங்கை - இந்திய ஒப்பந்த பரிந்துரை பற்றியது மற்றது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தங்கள் மௌனம் தொடர்பானது. இவை இரண்டுக்கும் பொதுவாக 'விளிம்பு நிலை மக்களின் பக்கம் அவர் கொண்டிருந்த அக்கறையை இப்போது சந்தேகிக்க வேண்டியிருக்கிறது' எனவும் குறிப்பிடுகிறார். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

ம. நவீன் - மலேசியா


ஆம், இலங்கை - இந்திய உடன்படிக்கை குறித்து நான் இவ்வாறு வல்லினத்தில் சொல்லியிருந்தேன்: "இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்குவதுமே இன்றைய சூழலில் ஓரளவாவது சரியான தீர்வாக இருக்கமுடியும். ஆனால் மகிந்த அரசு அதற்குத் தயாரில்லை."

தோழர் றியாஸ் குரானா இலங்கை - இந்திய உடன்படிக்கை முஸ்லீம்கள், மலையகத் தமிழர்களது நலன்களைக் கவனத்தில் எடுக்கவில்லை என்கிறார். அவர்களது உரிமைகளை மட்டுமல்ல தமிழர்களது நியாயமான உரிமைகளையும் வழங்குவதற்கு அந்த உடன்படிக்கையில் சத்து இல்லை என்பதுதான் எனது கருத்தும்.

ஆனால் இன்று இலங்கைத் தீவின் அரசியல் அதிகாரம் அனைத்தும் மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் அந்த உடன்படிக்கையில் உள்ளவாறு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிற்கு வழங்கப்பட்டால் அதிகாரம் ஓரளவாவது பரவலாக்கப்படலாம் என்றே கருதுகிறேன். இன்றைய இலங்கையின் இனமுரண்பாடு அரசியல் ஓரளவாவது சமரசத்தை நோக்கி முன்னேறுவதானால் 13 வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உடன்படிக்கையில் குறிப்பிட்ட அனைத்து அதிகாரங்களும் மகாணசபைகளுக்கு வழங்குவதே முன்னேற்றத்திற்காக முதற்படியாக இருக்கும். இதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இருக்கவே முடியாது.

வேறுவழிகள் இருக்க முடியாது என்று நான் அழுத்திச் சொல்வதற்கான காரணம் இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றே கிடைக்கும் செய்திகளிலிருந்து அனுமானிக்கக் கூடியதாயிருக்கிறது. இந்திய அரசிடம் ஓரளவாவது பணிய வேண்டிய நிர்ப்பந்தமும் இலங்கை அரசுக்கு இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அதன் குறைபாடுகளுடன் சேர்த்தே நான் இவ்வாறு முன்னிறுத்திச் சொல்வதற்கான காரணம், வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டால் மற்றைய ஏழு மாகாணங்களுக்கும் இந்த உரிமைகள் வழங்கப்படும். அந்த வகையில் இது அனைத்து இலங்கை மக்களுக்கும் அரசியல் முன்னேற்றத்துக்கான சிறுபடியெனினும் முதற்படியாக அமையும். மத்தியிலிருக்கும் அசைக்க முடியாத அதிகாரம் சற்று மாகாண அலகுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும். இந்த அமைப்புக் கிட்டத்தட்ட இந்தியாவிலிருக்கும் மாநில - மத்திய அரசியல் கட்டமைப்பைக்கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடர்ந்து சிங்களப் பேரினவாத அரசுகள் ஏன் மறுத்துவருகின்றன என்றும் மாகாணசபைகளுக்கு காணி, காவற்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு சிங்கள இனவாத அமைப்புகள் ஏன் கடுமையான எதிர்ப்பை இருபத்தைந்து வருடங்களாகத் தெரிவித்து வருகின்றன என்றும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். மாகாண சபைகளுக்கு இலங்கை - இந்திய உடன்படிக்கையில் உள்ளவாறு பூரண அதிகாரங்களை வழங்குவது நாட்டைப் பிரிப்பதற்குச் சமமானது என அவர்கள் கூக்குரலிடுகிறார்கள். நான் அவ்வாறெல்லாம் கற்பனைகள் செய்யாவிட்டாலும் இது இனமுரணை தீர்ப்பதற்கான முதற்படியாக இருக்கும் எனக் கருதுகிறேன். திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வ கட்சிக் குழு அமைக்கப்பட்டபோது தமிழ் அறிவுச் சமூகமும் இதையே வலியுறுத்தியது. இந்த உடன்படிக்கையிலுள்ள வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு என்ற சரத்தில் கிழக்கின் பெரும்பான்மை மக்களுக்கு உடன்பாடில்லை என்பதையே கடந்துபோன அரசியல் நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. வடக்கு - கிழக்கு மகாண சபைகளை உச்ச நீதிமன்றம் சட்டரீதியாக பிரித்தே விட்டது. கிழக்கு மகாணசபை இப்போது தனி அலகாகத்தான் இயங்குகிறன்றது. எனவே இது குறித்த அச்சங்களும் தேவையற்றவை.

இந்த விடயம் குறித்து றியாசிடம் மாறுபட்ட கருத்து இருப்பின் அதை அவர் ஓர் அரசியல் வரைவாக பொதுவெளியில் வைப்பது தமிழ் - முஸ்லீம் சமூகங்கள் இடையேயான பகைமறப்புச் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு நிச்சயம் ஒரு கனதியான பங்களிப்பாக இருக்கும்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முஸ்லீம் - மலையக இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து நான் மவுனம் சாதித்தேன் என்ற றியாஸின் கருத்துகள் சரியற்றவை. அந்த மாநாடுக்கு முன்பும் பின்பும் நான் எனது கருத்துகளை எழுதியிருந்தேன். மாநாடுக்கு முன்பு நாங்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்தோம். அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டோம்: "இலங்கையின் எல்லாச் சமூகத்தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்புநிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்."

மாநாடு பல சிக்கல்களையும் எதிர்கொண்டு நடத்தப்பட்டது. மாநாடு முடிந்ததன் பின்பாக ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டேன்: "மாநாட்டில் சில தரப்புகளிற்கு உரிய இடம் வழங்கப்படவில்லை, தீவிர இலக்கியம் நோக்கிய கவனக் குவிப்பு போதாது, மரபு என்ற பெயரில் மூடத்தனங்கள், மாநாட்டில் கம்பவாரிதியாரின் அரற்றல்கள் போன்ற விமர்சனங்கள் கணக்கிலெடுக்கப்பட வேண்டியவையும் எதிர்வரும் காலங்களில் சரி செய்யப்பட வேண்டியவையுமே. எல்லாப் பெரிய நிகழ்வுகளிலும் இவ்வாறான விடுபடல்களும் நமது அரசியல்சரிகளிற்கு எதிரான செயற்பாடுகளும் இருக்கவே செய்கின்றன. இவற்றை தொடர்ந்த விமர்சன கலாசாரத்தால் நாம் நேர்செய்ய முற்படுவோம். ஆனால் இத்தகைய தனி நிகழ்வுகளை முன்வைத்து ஒட்டுமொத்த மாநாட்டையும் சேறடிக்கும் பேச்சுகள் விடலைத்தனமானவை மட்டுமே."

அந்தக் கட்டுரைக்கான தொடுப்பு இது: http://www.shobasakthi.com/shobasakthi/?p=812

இந்த இதழுடன் எனது கேள்வி - பதில் பகுதி முடிவடைகிறது. கடந்த ஆறுமாதங்களாக வாசகத் தோழர்களுடன் உரையாட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த 'வல்லினம்' தோழர்களுக்கு மிக்க நன்றி. ஆர்வத்தோடும் சில சமயங்களில் துடுக்கோடும் கேள்விகளை அனுப்பிய வாசக நண்பர்களுக்கும் வல்லினத்தில் வெளியான பதில்களை இணையங்களில் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

வணக்கம்.

- ஷோபாசக்தி

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768