முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகா



கட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்



திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்



பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்




கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினி



நேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

ஜனவரி 2012 முதல் வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு ஆதவன் தீட்சண்யா பதில் தருவார். கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.


நரேன்


ஆதவன் தீட்சண்யா என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள். அது உங்கள் இயற்பெயரா?

நான் பிறந்த நேரத்தை வைத்து கணித்து (?) எழுதப்பட்ட ஜாதகம் ஒன்றை எங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன். கரும்பச்சை வண்ணத்திலான கனத்த அட்டையும் நான்கு மூலைகளிலும் மஞ்சளும் குங்குமமும் தடவப்பட்ட உள்பக்கங்களையும் கொண்ட அந்த ஜாதகப்புத்தகத்தில் என் பெயர் எஸ்.எம்.சுந்தரலிங்கம் (எ) கார்த்திக்கேயன் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே நமக்கும் ஜாதகத்துக்கும் ஒத்துவரவில்லை போலும், அந்தப் பெயர்களை விடுத்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது எஸ்.எம்.இரவிச்சந்தர் என்றே என் தந்தையார் பதிவு செய்துள்ளார். கவிதை எழுதுவதைவிடவும் புனைப்பெயர் வைத்துக்கொள்வது முக்கியம் என்கிற காலத்தில் ரவி என்பதை ஆதவன் என்று மாற்றிக்கொண்டேன். கவிஞர் வெண்மணி தனது அதிர்வுகள் இதழில் தருமபுரி மாவட்டத்துக்காரன் என்று நினைத்து தகடூர் ஆதவன் என்று வெளியிட்டிருந்தார். ஏற்கனவே ஆதவன் என்று அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவர் இருக்கும்போது பெயர் குழப்பம் வேண்டாம் என்பதற்காக புதிய பார்வை இதழ் எனது விரகமல்ல தனிமை என்கிற கதையை வெளியிடும்போது ஒசூர் ஆதவன் என்று குறிப்பிட்டது. பிழைக்க வந்த இடங்கள் என்பதைத் தவிர தகடூருக்கும் ஒசூருக்கும் எனக்கும் யாதொரு பந்தமும் இல்லை. அந்த நேரத்தில் திருவண்ணாமலையில் எனது தோழன் எஸ்.கருணா நடத்திவந்த அச்சகத்தின் பெயர் தீட்சண்யா அச்சகம். அந்தப்பெயர் எனக்கு பிடித்திருந்தது. முதற்குழந்தை பெண்ணாகப் பிறந்தால் தீட்சண்யா என்ற பெயரையே வைப்பதென நானும் என் துணைவி மீனாவும் ஆர்வம் கொண்டிருந்தோம். ஆனால் அந்தக் குழந்தை வயிற்றிலேயே இறந்துதான் பிறந்தது. 1996ல் பிறந்த இரண்டாவது மகளுக்கு அந்தப் பெயரையே இட்டோம். எனக்கும் பெயருக்கும் பின்னொட்டாகிப் போனதாக நாமகரணப் படலம் நிறைவுறுகிறது.

இதுவரை தாங்கள் வெளியிட்டுள்ள நூல்கள், வாசகர் பரப்பில் அவை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து கூற முடியுமா தோழர்?

என்னுடைய எழுத்துகள் என்றில்லை, பொதுவாக இலக்கிய ஆக்கங்கள் வாசகப்பரப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களை உடனடியாய் அளவிட முடியாதென்றே நினைக்கிறேன். சில ஆக்கங்கள் வெளியான காலங்களில் ஒரு பேச்சு எழும். ஆனால் அது வெறும் குறுக்கீடாக மழுங்கிவிட்டதா, ஊறி கசிந்து உள்ளுக்குள்ளிறங்கி ஊடாட்டம் நிகழ்த்தியதா என்றெல்லாம் அறிவதில் நான் பெரிதாக ஆர்வம் கொள்வதில்லை. முடியவும் முடியாது என்றம் தோன்றுகிறது.

எதை (அரசியலை) அடிப்படையாக கொண்டு உங்கள் இதழ் (புதுவிசை) பயணம் நகர்கிறது?

‘‘மௌனத்தில் அமிழ்த்தப்பட்ட சனங்களின் குரல்வளையில் ஆவேசப் பேச்சொலியாய் புகுந்து வரும் எத்தனிப்புடன்- அதிகார மையங்களின் கர்ப்பக்கிரகங்களை மனசில் மறைத்துவைத்து தீபாராதனை காட்டுகிற வேரற்ற பெருநகர அறிவுஜீவிகளின் சக்கர வியூகங்களுக்கு எதிராக, மண்ணில் வேர்பிடித்து- மக்களின் மூச்சுக்காற்று மேலே படுமாறு - எழுந்து நிற்கிற கிராமப்புற அறிவுஜீவிகளின் கைவாளாக- மதிப்பீடங்களின் ஆணிவேர்களை அசைக்கிற அறிவியல் துடிப்பினை சாமக்கோடாங்கியின் பாடல்களில் ஏற்றித் தெருக்களில் கசிய விட்டு- சகல ஆதிக்கங்களுக்கும் எதிராக வீறுகொண்டு எழுகிற ஒற்றை வைக்கோலாக மாறிவிட விசை எத்தனிக்கும் - ஒவ்வொரு இதழும் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷமாவது பயனற்றது. ஒவ்வொரு பக்கமும் விரல்கள் பட்டு அழுக்கேறி வாசிப்பின் கண்வழியே நெஞ்சில் உரமேற்றி செயலுக்கு உந்துகிற துடிப்பாக இருக்க வேண்டும். இதழின் ஒவ்வொரு பக்கமும் சுவரொட்டியாகி ஜனத்திரளின் ஆவேசம் கிளப்பும் கண்காட்சியாகி கரைந்து போகட்டும்....'' என்று எமது முதல் இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டதை சற்றொப்ப பின்தொடர்கிறோம்.

இதழைத் தொடங்குவதில் பங்கு பற்றிய ச.தமிழ்ச்செல்வன், மாதவராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கு இப்படியொரு கூட்டுக்கனவிருந்தது. வெவ்வேறு பணிகளின் சுமையால் அவர்களில் பலரும் விலகிப்போய்விட்ட போதும் கூட எஞ்சியுள்ளவர்கள் இந்தக்கனவை முன்னெடுக்கிறோம்.


அ. பகத்சிங்


தலித் என்ற பொது அடையாளத்தை மறுத்து உட்சாதி அடையாளத்தை பிரதானபடுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. தலித் என்ற சொல் சமஸ்கிருத மூலம் கொண்டது, அது பிராமணர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சூட்டிய பெயர் என்றும் தலித் என்ற சொல்லாடலை புரட்சியாளர் அம்பேத்கர் பயன்படுத்தியதே இல்லை என்றும் எனவே தலித் என்ற அடையாளத்தை ஒடுக்கபட்டவர்கள் தூக்கியெறிய வேண்டும் என்கின்றனர். தமிழகத்தில் இக்கருத்து மெல்ல மேல் எழுகிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான செயல்தளத்தில் தலித் என்ற சொல்லாக்கம், தனிசாதி அடையாளம் குறித்து தங்களின் கருத்தென்ன?

‘தலித்' என்ற சொல்லுக்கு மராத்தியில் ‘நொறுக்கப்பட்ட மக்கள்' என்று அர்த்தம் சொல்கிறார்கள். ‘தீண்டாமையின் தோற்றம்' என்ற கட்டுரையில் இந்த சொல்லிற்கு இணையாக Broken People என்ற சொற்றொடரை அம்பேத்கர் பயன்படுத்துகிறார். ஜோதிராவ் பூலேயால் ஒரு கலைச்சொல்லைப் போல பயன்படுத்தப்பட்ட ‘தலித்' என்ற வார்த்தையின் பயன்பாட்டுச் சூழலைப் புரிந்து கொள்வது நமது விவாதத்திற்கு உதவிகரமாய் இருக்கும்.

‘தீண்டாமையின் தோற்றம்' என்ற கட்டுரை பலவகைகளில் குறிப்பிடத்தகுந்தது. முதலாவது, அக்கட்டுரை ஆங்கிலேயர் ஆட்சியின்போது துவங்கப்பெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற எண்ணிக்கை விளையாட்டின் பின்புலத்தில் செயல்பட்ட பல்வேறு அரசியல்களை அப்பட்டமாய் பேசுகிறது. இரண்டாவது, பட்டியலின மக்களுக்கும் பிராமணர்களுக்குமான மோதலை மையப்படுத்தி விவாதிக்கிறது. மூன்றாவதாக, அம்பேத்கர் அதில் பயன்படுத்தியுள்ள மானுடவியல் சான்றுகளில் பலவும் தமிழகப் பண்பாட்டைச் சார்ந்தவை. நான்காவதாக, பௌத்தத்திற்கும் பட்டியலின மக்களுக்குமான உறவை வரலாற்றுப்பூர்வமாய் விவரிக்கிறது. ஐந்தாவதாக, பௌத்தம் வீழ்த்தப்பட்டதால் மட்டுமே பௌத்தர்கள் தாழ்த்தப்பட்டவர்களாய் மாற்றப்பட்டார்கள் என்ற வாதத்தை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளாதது பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக, இந்தக் கட்டுரையில் மேலெழுந்து வந்த விவாதச்சரடுகளை பின்னாளில் தனது எந்த விவாதத்திலும், ஆய்விலும், உரையிலும் வளர்த்தெடுக்க அம்பேத்கர் முயற்சித்திருக்கவில்லை.

ஆனால், ஆண்டாண்டுகாலமாய், இந்நாட்டின் ‘தாழ்த்தப்பட்ட' சமூகக்குழுக்களிடையே வழங்கிவரும் வரலாற்று ஓர்மையொன்றை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிற ஒரு காரணத்திற்காகவே இக்கட்டுரை முக்கியமானது என்று படுகிறது.

‘தீண்டத்தகாதவன்' என்ற பெயரில் சமூகப் பண்பாட்டு வெளியிலிருந்து புறந்தள்ளப்பட்டதற்கான வரலாற்றுக் காரணங்கள் நீண்ட தொடர்ச்சியான சரடொன்றைப் போல ஓடிக்கொண்டிருப்பதைச் சுட்டும் பல்வேறு சான்றுகள் இன்றைக்கு கிடைக்கின்றன. அசுவகோசர் என்ற முனி எழுதிய ‘வச்சிரசூச்சி’ என்ற நூலில் ‘தாழ்த்தப் பட்டவர்கள்’ வீழ்ந்ததற்கான காரணங்கள் விளக்கப்படுவதாகவும், இப்படியொரு நூல் பல்வேறு இந்திய மொழிகளில் வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

நந்தன் என்ற பௌத்த மன்னன் இன்றைய பிராமணர்களின் பூர்வகதையென்ன என்ற விசாரணைக்காக, தென்பொதிகை மலையில் வசித்துவந்த அசுவகோசர் மற்றும் வச்சிரசூதர் என்ற இரு முனிவர்களை அழைத்து வந்து விபரம் கேட்டான் என்றொரு வாய்மொழித் தகவலை அயோத்திதாசர் ‘இந்திரதேச சரித்திரம்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிராமணர்களுக்குமான தீராத பகையின் காரணமென்ன என்று தேடி வட தமிழகக் கிராமங்களில் திரிந்தபொழுது அவர் கண்ட சுவடியொன்றின் பெயர், ‘நாரதிய புராண சங்கைத் தெளிவு’. இச்சுவடி ஒரு வழிநூல், அதாவது அசுவகோசரும் வச்சிர சூதரும் எழுதிய மூலநூலை விளக்கக்கூடிய உரைநூல். புரூசீகர் என்றழைக்கப்படும் பிராமணர்கள் இங்கு வந்து எவ்வாறு வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொண்டார்கள். அதற்காக அவர்கள் செய்த தகிடுதத்தங்கள் எவையெவை, அவர்களைக் கண்டித்த பௌத்தத்தையும் பௌத்தர்களையும் சூழ்ச்சியின் மூலம் எவ்வாறு வீழ்த்தினர் என்ற வரலாற்றையே மேற்கூறிய நூற்களெல்லாம் பேசுகின்றன.

சாதியத்தை குறிப்பாக ‘தீண்டாமை’ என்ற செயல்பாட்டை விளக்கும் சொல்லாடல்களில், ஓரளவிற்கு நேர்மையுடனும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும், ‘தீண்டத்தகாதவர்களின்’ பார்வையிலி ருந்தும் செய்யப்பட்ட விளக்கம் பௌத்த வீழ்ச்சியையும் தாழ்த்தப்பட்டவர் வீழ்ச்சியையும் இணைத்து சொல்லப்பட்ட விளக்கம் மட்டுமே. இந்த விளக்கம் மட்டுமே ‘தீண்டத்தகாத’ பிரிவினரின் உள்ளத்திற்கு நெருக்கமானதாகவும், அவர்களை மனிதர்களாய் மதிக்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது.

அந்த விளக்கத்தைச் சுருக்கமாகச் சொல்வதானால், பிராமணர் செய்யும் மோசடிகளை கண்டிக்கக்கூடிய நிறுவனமாக பௌத்தம் விளங்கியது. பிராமணர்களின் நிஜமுகத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவே பௌத்த நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இதனால் பௌத்தம், பௌத்தர் மீது பிராமணர்கள் தீராக் கோபம் கொண்டிருந்தனர். பிராமணர்களின் மோசடிகளையோ, பௌத்தம் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளையோ அறிந்திராத கல்வியற்ற குடிகள் இந்நாட்டில் ஏராளம் இருந்தன. இத்தகைய கல்லாக்குடிகளை மந்திரதந்திரங்கள் சொல்லி பிராமணர்கள் மயக்கி வந்தனர். பிராமணர்களின் தந்திரங்களில் மயங்கிய கல்வியற்ற குடிகளின் துணையோடு, பிராமணர்கள் பௌத்தத்தின் மீது தொடர்ச்சியாக அவதூறுகளைப் பரப்பினர். இதனைக் கல்வியறிவற்ற மக்களும் உண்மையென்று நம்பினர். நாளடைவில் பிராமணர்களின் சொற்களே வேதங்கள் என்றாகி, பௌத்தமும் பௌத்தர்களும் சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டனர்.

பௌத்தம் நிறுவன பலம் குலைந்து பிற ஆசிய நாடுகளுள் வேர்விடத் துவங்கியது. இங்கோ பௌத்த உண்மைகளில் வேரூன்றி நின்ற பௌத்தர்கள் சமூகக் கட்டமைப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டனர். அவர்களது குடியிருப்புகள் ஊர்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அவர்களால் எல்லோருக்கும் பொதுவான நிலத்தையோ நீரையோ பயன்படுத்த முடியாமல் போயிற்று. அவர்களுக்கு துணி வெளுக்க அனுமதி இல்லை, முடிதிருத்த உரிமை இல்லை, பொதுக்கருவூலங்களாக விளங்கும் கோவில்களில் நுழையமுடியாது என்றனர். இறுதியாய் இவர்களெல்லாம் தீண்டத்தகாதவர் என்று காரணம் சொன்னார்கள். கொண்ட கொள்கையில் காட்டிய பிடிப்பிற்காக பிறப்பைக் காரணம் காட்டி தண்டனை தரப்பட்டது. இப்படியாகத்தான், பௌத்தம் நொறுக்கப்பட்ட பொழுது பௌத்தர்களும் நொறுக்கப்பட்டனர். இந்த விளக்கத்தின்படியே, ஜோதிராவ் பூலே தீண்டத்தகாதவர்களை நொறுக்கப்பட்டவர்கள், அதாவது ‘தலித்’ என்று எழுதினார். பின்னாளில் இதனைத் தனது கட்டுரையில் குறிப்பிடும் அம்பேத்கரும் இம்மக்களை Broken People, அதாவது ‘தலித்’ என்றார்.

புதுவிசை 25 வது இதழில் முனைவர் டி.தருமராஜ் எழுதியுள்ள ‘எழுத்து அரசியல் - நவீன தமிழ்ச்சூழலில் தலித்’ என்கிற கட்டுரையிலிருந்து தரப்பட்டுள்ள மேற்கண்ட விளக்கம் உங்களுக்குப் போதுமானது என்றே கருதுகிறேன்.

தலித் என்கிற சொல் தல் என்கிற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் வந்ததா, தல் என்பதே ஹீப்ரு மொழிச் சொல்லா என்கிற அதிமுக்கிய ஆராய்ச்சிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதையெல்லாம் மொழியியல் ஆய்வாளர்கள் கண்டுசொல்ல விட்டுவிடலாம். இப்போது முதன்மைப்படுத்தி விவாதிக்க வேண்டியது இந்த சொல்மூலம் இல்லை. அம்பேத்கரின் கொள்கைகளை விட்டுவிட்டு அவரது பெயர் எப்படி வந்தது என்று மயிர் பிளக்கும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிற ஆய்வாளப் பெருந்தகைகள்தான் இப்படியான திசைதிருப்பல்களை அவ்வப்போது கிளப்பிவிடுகின்றனர். சாதியத்திற்கு எதிரான ஒரு கூட்டுணர்வு தீண்டப்படாத மக்களிடையே உருவாகி வருவதை சிதைக்க விரும்புகிற இந்துத்தமிழர்கள் தலித் என்பது தமிழ்ச்சொல் அல்ல என்பதால் புறக்கணிக்க வேண்டும் என்று ஆரம்பித்து அருந்ததியர்களை தெலுங்கு மொழிச்சிறுபான்மையினர் என ஒதுக்கும்வரை செல்வார்கள். புத்தர் ஒரு பீகாரி, அம்பேத்கர் ஒரு மராத்தியர், பெரியார் ஒரு கன்னடவர் என்று துவேஷம் வளர்ப்பதில் போய் நிற்பார்கள். சரி, பறையன், பள்ளன், சக்கிலி என்கிற தூயத்தமிழ்ச் சொற்களை என்றைக்காவது உயர்வாக மதித்திருக்கிறார்களா இந்த இந்துத்தமிழர்கள்? அட, உயர்வாக மதிக்க வேண்டாம், சமமாக கருதியிருக்கிறார்களா? அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, எல்.சி.குருசாமி, இம்மானுவல் சேகரன் ஆகிய சுத்தத் தமிழர்களைக் கொண்டாடுவீர்களா என்று கேட்டுப்பாருங்கள், என்ன இருந்தாலும் அவர்களெல்லாம் தீண்டத்தகாதவர்கள் தானே என்பார்கள். ஆகவே இங்கு தலித் என்பது தமிழ்ச்சொல்லா இல்லையா என்பதல்ல பிரச்னை.

சரி தூயத்தமிழ் என்பது சமத்துவம் வளர்க்கும் தமிழா என்ன? சக மனிதர்களை தாழ்வுக்குள்ளாக்கும், இழிவுபடுத்தும், புறக்கணிக்கும் சொற்களும் பழமொழிகளும் இலக்கியங்களும் புழுத்து நாறும் குப்பைதானே? தோட்டக் காடுகளின் தொழிலாளர்களை ஏசவும் இழிவுபடுத்தவும் கூலித்தமிழ் என்று புதுவகைமையை உருவாக்கி வெள்ளைக்காரன் கையில் கொடுத்ததுதானே இந்த தமிழ்ப் பண்டிதத்தனம்? நாம் கொண்டாடத்தக்கதாய் எவையாவது தமிழில் இருக்கிறதென்றால் அவை பௌத்த, சமணத் தொடர்பில் உருவான நூல்கள்தான். ஆனால் அவற்றையும்கூட அன்னியமதங்களின் நூல் என நிராகரிக்க அறைகூவல் விட்டு இந்துத்துவாவுக்கு மானசீகமாய் சேவகம் செய்ய சித்தமாயிருக்கிறார்கள் நமது தமிழ்விரும்பிகள். இப்படியான தங்களது வேடம் கலைகிறதே என்ற பதற்றத்தில் ஆதவன் தமிழைப் பழித்துவிட்டான் என்று கூப்பாடுபோடத்தான் துடிப்பார்களே தவிர தங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள துணியமாட்டார்கள்.


கிருஷ்ணன், சென்னை


படைப்பிலக்கியங்களில் பிராமணர்கள் தங்கள் அடையாளங்களைப் போட்டுக் கொண்டால், அது கேலிக்குரியதாக பலர் பேசுவதைப் பார்க்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் பல எழுத்தாளர்களும் தங்கள் சாதி அடையாளத்துடன்தானே எழுதுகின்றனர். அவர்களை ஏன் கிண்டல் செய்வதில்லை? பிராமணன் மட்டும்தான் கேலிக்குரியவனா என்ன?

பார்ப்பனர்கள் மட்டுமல்ல மற்ற மற்ற எழுத்தாளர்களும்கூட அவர்களது சாதி எவ்வாறு சிந்திக்க கற்றுக்கொடுத்ததோ அவ்வாறே சிந்தித்து, அவரவர் சாதிக்குள் புழங்கும் மொழியையே பாவித்து எழுதிவிட்டு அதுதான் தமிழ் இலக்கியம் என்று நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். அக்ரஹாரத்தையும் அபார்ட்மெண்டையும் கூட தாண்டாமல் எழுதிவிட்டு அகில உலத்துக்குமான இலக்கியத்தைப் படைத்துவிட்டதாக பாவனை கொள்ளும் அசட்டுத்தனத்தில் பார்ப்பனர்களிடமிருந்து மற்ற இந்துத்தமிழர்களும் பங்குகேட்கிறார்கள். சாதி என்ற நரகலை சந்தனமென்றே பூசிக்கொண்டாலும் நாறும். சாதிச்சான்றிதழ் அடிப்படையில் இதில் யாருக்கும் எந்த விதிவிலக்குமில்லை.


அருணாசலம், தமிழ்நாடு


உங்கள் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகனில் நானும் ஒருவன். எனக்கு சில கவிதைகள் வெறும் பிரச்சாரங்களாகத் தோன்றுகிறது. கவிதை பிரச்சாரமாக இருக்கலாமா?

என் கவிதைகளை தொடர்ந்து வாசித்துவருகிறீர்கள் என்பதற்கான மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன் நண்பரே. மற்றபடி எனது கவிதைகள் பிரச்சாரங்கள்தான். அதாவது, அதிகாரத்தின் துணைகொண்ட கடும் பிரச்சாரங்களால் நிலைநிறுத்தப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் பொதுப்புத்தியையும் கேள்விக்குட்படுத்துகிற எதிர்ப்பிரச்சாரங்கள். கவிதைக்குள் பிரச்சாரம் கூடாது என்பதைவிடவும் வலுவான பிரச்சாரம் ஒன்று இருக்க முடியுமா?

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768