|
|
புலம்பெயர் வாழ்வும் சட்ட திட்டங்களும்
அதிகமாகப் புலம் பெயர்ந்து மக்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளில் சட்டத்தை
நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்ற அமைப்பு முறை, அதனை நிறைவேற்றும்
அதிகாரம் கொண்டநகர – மாநகர - மாநில சபைகள், அதற்கு உதவி புரியும்
காவல்துறை, மேலாக எந்தத் துறையின் தலையீடுகள் அற்ற நீதித்துறை என்பன தங்கள்
தங்கள் வரையறைகளுக்கு உட்பட்டே இயங்கும்.
அரசியலில், பொதுவாழ்வில் அதிகாரத்துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு டென்மார்க்
அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த ”தமிழர்வழக்கு 1986-1993” பற்றியும் அதன்
காரணமாக அன்றைய கொன்சவேற்றிவ்கட்சி ஒருநாளில் பதவி இழந்ததையும் இந்தக்
கட்டுரையில் பதிவு செய்வது உலகில் சிலசில மூலைகளிலாவது ஜனநாயகம் இன்னும்
வாழ்கின்றது என்பதைக் காட்டுவதாய் அமையும் என நம்புகின்றேன்.
1983ல் டென்மார்க்கின் வெளிநாட்டவர் கொள்கையில் அகதிகளை ஏற்கும் வாசலின்
வழிபெரிய அளவில் திறக்கப்பட்டதும் அதனைத் தொடர்ந்து டென்மார்க்கினுள் பெரிய
அகதிகள் அலைபிரவாகம் எடுத்ததையும் டென்மார்க்கின் புள்ளிவரைவியல்
காட்டுகின்றது.
டென்மார்க்கிற்கு அதிகளவு தமிழ் அகதிகள் (3000) வருகைதந்தது 1986ம்ஆண்டில்.
அந்தவேளையில் உலகம் முழுவதிலும் இருந்துவரும் அகதிகள் உண்மையான அகதிகளா,
அல்லது பொருளாதார நலனுக்காக அகதி என்ற பெயரில் மக்கள் வருகின்றார்களா என்ற
கேள்வியும் எழுந்திருந்தது.
1987ல் இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் நடைபெற்றதைத் தொடர்ந்து இலங்கையில்
இருந்து வந்த அகதிகளை திருப்பி அனுப்பக்கூடிய சாத்தியக்கூறுகளும்
காணப்பட்டன. அதாவது தற்காலிக அகதிகள் அந்தஸ்து கிடைத்தாலும் ஒருவரின்
சொந்தநாட்டில் சமாதானமாகவும் தமது இறைமையுடன் வாழ வழிபிறக்குமாயின் அவர்களை
திருப்பி அனுப்ப முடியும் என்பதே அந்த சரத்து.
இதுபற்றி 08-செப்டெம்பர்- 1987ல் பராளுமன்றக் குழு விவாதித்து இருந்தாலும்
அன்றைய கூட்டத்தில் இறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே வேளை
டென்மார்க்கிற்குத் தனியாக வந்து அகதி அந்தஸ்த்துப் பெற்றிருந்த தமிழர்கள்
தங்கள் தங்கள் கணவன்-மனைவி-பிள்ளைகளை அழைத்துக்கொள்ளும் (குடும்ப இணைப்புத்
திட்டம்) விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை அன்றைய நீதி அமைச்சரான
எறிக்நின்கன்சன் (Erik Ninn Hansen) அவர்கள் வாய் வழி உத்தரவு மூலம்
நிறுத்தி வைத்திருந்தார். காரணம் இலங்கையில் சமாதானம் வந்தவுடன்
இங்குள்ளோரையும் அனுப்ப உள்ள நிலையில் ஏன் அவர்களின் குடும்பங்களை இந்கு
அழைப்பான் என்பதுதான்.
அந்த உண்மை அரசல் புரவலாக வெளியே வந்தபொழுது அன்றைய பிரதமாய் இருந்ததுபோல்
சுலுட்டர் (Poul Schütar) ”எங்கள் தரைவிரிப்புக்கு கீழே பெருக்கிப்
பார்ப்பதற்கு எதுவுமே இல்லை”எனபகிரங்கமாகக்கூறினார்.
ஆனால் டென்மார்க்கின் நீதித்துறையால் ஒருநீதி அமைச்சருக்கு எதிராக எத்தனையோ
இலட்சக்கணக்கான குறோன்கள் செலவில் நடத்தப்பட்ட வழக்குத் தமிழர்களுக்கு
சாதகமாக தீர்ந்தபொழுது” எங்கள் தரைவிரிப்புக்குக் கீழே பெருக்கிப்
பார்ப்பதற்கு எதுவுமே இல்லை”என பகிரங்கமாகக் பிரதமமந்திரி கூறியிருந்ததால்
11-01-1993 அன்று அவர்களது ஆட்சிகலைக்கப்பட்டது. 22-06-1995ல் நீதி
அமைச்சர்குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டு அவர் சிறை செல்ல நேர்ந்தது.
1910ம் ஆண்டுக்குப்பின்பு ஒரு அரசியல் துர்ப்பிரயோகத்திற்காக
டென்மார்க்கில் தண்டிக்கப்பட்ட 4வது குற்றவாளி அவர்.
போதையில் கார் செலுத்திய நேர்மையான அமைச்சரும்
பறிபோன எதிர்கட்சித்தலைவர் பதவியும் வரவிருந்த பிரதம மந்திரிப் பதவியும்
டென்மார்க் சட்டதிட்டப்படி ஒருவர் வாகனம் ஓட்டும் பொழுது அவரது இரத்தத்தில்
அதிகூடியது 0.80 0/000 புறமீல் அளவுகோலே இருக்கவேண்டும். அது ஒருவர்
அருந்தும் மதுவில் உள்ள அற்ககோலின் அளவு அவரின் எடை ஆணா? பெண்ணா? என்ற பல
விடயங்களில் தங்கி இருந்தாலும் இந்த 0.80 0/000 புறமீல் அளவை விரைவில்
யாரும் எட்டிவிட முடியும்.
ஆனால் Poul Schlüter இந்த பதவி இழப்பிற்குபின் எதிர்கட்சிக்குத் தள்ளப்பட்ட
கொன்சவேற்றிவ் கட்சியின் தலைமைக்கு தெரிவுசெய்யப்பட்டவர். திரு. Hans
Engell அவர்கள். அவர் முன்னொருக் கால்பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர்.
அடுத்துவரும் தேர்தலில் பிரதமமந்திரியாகவும் தேர்வுசெய்யப்பட இருந்தவர்.
ஆனால் 20-02-1997 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு விருந்தில்
கலந்துவிட்டு வரும் போது விரைவு மோட்டார் சாலையில் அவரின் கார் ஒரு
சீமெந்து கல்லுடன் மோதிகார் சேதமடைந்தது. அப்பொழுது அவரின் இரத்தத்தில்
1.30 0/000 புறமீல் அற்ககோல் இருந்தது. (இதெல்லாம் நம்ம தமிழருக்கு ரொம்ப
சாதாரணம் ஐயா).
அடுத்தநாள் தானே நேர்மையாக இந்த விபத்து பற்றி பொலிசுக்கு சொன்னதால் அவரது
எதிர்கட்சிப்பதவியும் வர இருந்த பிரதமந்திரிப்பதவியும் கையைவிட்டுச்
சென்றது. (பின்னாளில் டென்மார்க்கில் அதிகவிற்பனையாகும் ஒருபத்திரிகைக்கு
பிரதம ஆசிரியராய் இருந்தார் என்பது வேறு).
ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு எங்கள் நாட்டு அரசியல்,
அரசியல்வாதிகளின் நடப்புகளை ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது இந்த
நேர்மைத்தன்மைகளை திரைப்படங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருப்பது
வேதனைக்குரியது.
இந்தநாடுகளில் சட்டத்தை நிறைவேற்றுவது பராளுமன்றம் ஆகவும், அதனை
நிறைவேற்றுவது மாநில, நகரசபைகள்ஆகவும், அதனை கண்காணிக்கும் துறையாக
நீதித்துறையாகவும் விளங்கின்றது. இந்த நீதித்துறையில் யாரும் கைவைக்க
முடியாதளவு அதுபலமானதாகவும் ஒருநாட்டின் பிரதமர் தொடக்கம் கடைசிக்குடிமகன்
வரை தனது ஆதிக்கத்தை செலுத்தக்கூடியதாகவும் விளங்கும்.
இந்தியா இலங்கையில் கட்சிமாற்றம் வந்தபின்புதானே அந்த அந்த நீதித்துறைகள்
விழித்துக் கொள்கிறது.
அதற்கு அரசியல் பழிவாங்கல் என்று பெயர் இடப்படுகிறது. அங்கு நீதித்துறையும்
பொலிஸ் துறையும் கைகோர்த்துச் செயல்படுவதால் யாரும் எதுவும் செய்யமுடியாத
நிலை இருக்கின்றது.
டென்மார்க்கில் உள்ளவாறு ஒருநீதித்துறை அங்கு இருக்குமாயின் ஒருபாராளுமன்ற
உறுப்பினர் மட்டத்தில்கூட அல்லாது ஒருகவுன்சிலர் மட்டத்திலாவது ஒருவர்தன்
ஆயுட்காலத்தில் மீண்டும் ஒருமுறை அந்தப்பதவிக்கு வரமுடியாத அபாயநிலை உண்டு.
அரசியலில்தான் அப்படிஎன்றால் குறிப்பாக இந்த புலம் பெயர்நாடுகளில்
மனச்சாட்சியின்மை அல்லது ஏமாற்றுதல் அல்லது சந்தர்ப்பவாதம் அல்லது பொய்கள்
நிறைந்த வாழ்வு எமது சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிக்கொண்டு இருக்க, அதை ஏன்
நாம்; பார்க்கவேண்டும்…. நமது வாழ்வையும் இருப்பையும் தொழிலையும் மட்டும்
நாம் பார்த்தால் போதும் என்றளவில்தாம் தங்கள் வாழ்வை மட்டும் பார்க்கும்
தன்மை அதிகமாக வளர்ந்துவிட்டதால் கங்கைகளும் காவேரிகளும்
கூவங்களாகிக்கொண்டு வரும் வாழ்வினுல் எம்மைநாம் இணைக்கும் அபாயக்கால
கட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.
உண்மை எனும் ஆமைகள் தூங்கிவிட்டதாலும் பொய் எனும் முயல்கள் ஓடிக்கொண்டு
இருப்பதாலும் மௌனச்சாட்சியாக பார்வையாளர்கள் கைகட்டி நிற்பதாலும் இன்று
பிரிவுகளும் பிரிவுக்குள் பிரிவுகளும் நடந்தேறிக்கொண்டு இருக்கின்றது. அது
எங்கள் அரசியல் - சமூகம் - இலக்கியம் என அனைத்துதுறைகளுக்குள்ளும்
நுழைந்துவிட்டது. இதற்கு உதாரணமாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற
சர்வதேச எழுத்தாளர் மகாநாடு தொடக்கம் இந்த ஆண்டின் இறுதியில்
புலம்பெயர்நாடுகளில் நடைபெற இருக்கும் மாவீரர்தின நடவடிக்கைகள் வரை உதாரணம்
காட்டமுடியும்.
நீதிதேவதையின் கண்களில் கட்டப்பட்டுள்ள கறுத்ததுணியை இனிமேலாவது
கழற்றிவிட்டு தூரப்பார்வைபார்க்கும் ஒருகண்ணாடியை அதில் பொருத்தவேண்டும்.
அஃதில்லையாயினும் ஆத்தி சூடியையும் கொன்றைவேந்தனையும்
அரிவரிப்பாடத்திட்டத்தில் இருந்தே அகற்றிவிடுவதல் நன்று.
|
|