|
|
நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
வல்லினத்துக்காக தொடர் பத்தியை எழுதுமாறு அதன் ஆசிரியர் நவீன் கேட்டுக்
கொண்டபோது, மிகவும் சுலபமாக எழுதி தருகிறேன் என்று கூறி இருந்தேன். ஆனால்
பத்தியை எழுத தொடங்கிய நாள் முதல் அதை முடிக்கும் வரை என்னை என் கடந்த
காலத்துக்கு அவை பயணம் போய் வர செய்தது.
தொடர்ந்து நான் என் நினைவுகளையும் அதன் வசப்படாமல் ஒளிந்திருக்கும்
நடந்து முடிந்தசம்பவங்களையும் பதிவு செய்வதால் எழுதிக்கொண்டே
இருக்கும் சாத்தியம் கிடைத்திருக்கிறது. எழுத்து சொல்லும் அளவுக்கு பேச்சு
சொல்வதில்லை. என் நினைவுகளைக் கிண்டிக் கொண்டே இருப்பதால் இதுவரை
மறந்திருந்த நினைவுகள் கூட ஒரு சுமையானநீரூற்று போலபொங்கிப்
பெருகஆரம்பித்துவிட்டன. தொந்தரவு செய்யும் நினைவுகளை பதிய பதிய சுமை
குறைந்தப்பாடில்லை. பேனாவை விரலின் இருக்கையில் அமர்த்தும் போதெல்லாம் சுமை
இரட்டிப்பாகி விடுகிறது. குறைந்த பட்சம் மனதின் டைரியைப் புரட்டுகிறேன்
என்ற திருப்தியோடுதான் சிந்திக்கவும் எழுதவும் வேண்டியுள்ளது.
சம்பாத்தியம் புருஷ லட்சணம் என்றொரு பொதுமொழி வழக்கில் உண்டு.
அப்படியென்றால் ஒரு பெண்ணுக்கு சம்பாத்தியம் என்பது என்ன? அவளின்
சம்பாத்தியம் எந்த லட்சணத்துக்கு வித்திட்டு இருக்கிறது? அழகுசாதன
பொருட்களுக்கு, உடை, காலணி, நகைகளுக்கு மட்டும் தான் ஒரு பெண்ணின்
சம்பாத்தியம் செலவழிகிறதா? அதனால் அவளுக்கு மட்டும்தான் லாபமா? ஐந்து
விரல்களும் ஒரே மாதிரி இல்லை. ஒட்டி பிறந்த இரட்டையர் ஆயினும் இருவரும்
ஒருவர் இல்லை. பெண்களும் அவ்வாரே. அவர்களின் சம்பாத்தியமும் அப்படியே.
முப்பது வயதுக்குள்ளானஎனது உழைப்பை மூன்று பாகமாகப் பிரிக்கலாம்.
அப்பாவின் இறப்புக்கு முன், இறப்புக்கு பின் மற்றும் திருமணத்துக்குப் பின்
என பிரிகின்றன அந்த மூன்று பாகமும். மூன்று பாகத்துக்குள்ளும் நான் மாறி
மாறி செய்த வெவ்வேறு பணிகளுக்குள் வெவ்வேறு வகையானவாழ்வும் ஒளிந்துகொண்டு
இருக்கின்றன.
பெண்களுக்கென்றே போடப்பட்ட கட்டத்தில் ஓர் உலகை அமைத்துக்கொண்டு வாழ்ந்து
பழகி விட்டவர்கள் மத்தியில் அதனில் வாழ முடியாமலும், அதை தாண்டி வர
முடியாமலும் நான் கொண்ட அவஸ்தைகள் வலியும் சோதனையும் நிறைந்தது. அதன்
பாதிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து என்னுள்ளே ஆழ புதைத்து
விட்டிருந்தேன். உருவம் அற்ற காற்றைபோல் அவை என்னுள்ளே கரைந்து
போயிருந்தது. என்றாலும் எனக்கு படிப்பினையையும் தைரியத்தையும் அந்த வலிதான்
கற்றுக் கொடுத்தது. பத்தியின், சொற்களின் அணிவகுப்பில் நான் என் கடந்த
காலத்தை வரையும் போது அவை கண்ணீரில் நனைந்த பிறகே உருவம் கொண்டது.
நான் எத்தனை பலகீனத்துடன் இருக்கிறேன் என்பதை இந்தப் பத்திகளைத் தொகுக்கும்
போதுதான் உணர்ந்தேன். என்னை மாற்றி அமைத்து புதிய எதார்த்தை கற்றுக்
கொடுத்த தலைநகரம் என் வாழ்க்கை டைரியில் முக்கிய இடம் பெறுகிறது.
ஒவ்வோறு பணிக்கு பின்னாலும் சில சுவாரஷ்மான மனிதர்களும் சுவாரஷ்யமான
சம்பவங்களும் இருக்கின்றன. அதே வேளையில் மனதை நோகடித்தச் சம்பவங்களும்
உழைப்பை சுரண்டிய முதலாளித்துவமும் இருக்கவும் செய்தன. சில பணிகளை விரும்பி
செய்தேன். சில பணிகளை பார்த்த மாத்திரமே நமக்கு சரிவராது என திரும்பி
வந்திருக்கிறேன். சில பணிகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது. சில
அநியாயத்துக்கு கொள்ளையடித்தது. என் பதிவில் காலப்பிழைகள்
இருக்கலாம்.எந்த நாளில் எந்த வருடத்தில் எனது எத்தனையாவது வயதில் என்று
சொல்வதில் குழப்பமடைகிறேன். ஆனால் காட்சிப்பிழை இருக்காது. கடந்து வந்த
பாதையில் தடங்கள் அப்படியே இருக்கின்றன. அதன் பசுமையோடும்
ரணங்களோடும். அதில் மீண்டும் ஒரு தரம் சென்று பயணித்து வருவதில்
எனக்கு எந்த சிரமமும் இல்லை.
வல்லின குழுவின் நட்பும் இலக்கிய கலந்துரையாடலும் என்னை மேலும் எழுதுவதற்கு
செழுமை படுத்துகின்றன. வல்லினத்தில் தொடராக வந்த இப்பத்திகள் புத்தகமாக
முக்கிய காரணமாக இருந்த நவீனுக்கு என் நன்றி. நடுநிசி என்றும் பாராமல்
பாதியில் எழுந்துக்கொண்டு எழுதிய பத்தியைப் படித்துக்காட்டி ஆட்பரிக்கும்
போதும் சோர்ந்து துவண்ட நேரத்தில் அன்புடன் நேசம் காட்டிய என் கணவர்
சந்துருவுக்கு என் அன்பு.
|
|