|
|
என்னுரை
நான் கவிஞனில்லை. எழுத்தாளனும் இல்லை.
நான் ஒரு காதலன். ஆனால், என்றைக்குமே நல்ல காதலனாக இருந்ததில்லை. நல்ல
காதல்கள் கைகூடி, காதலி மனைவியாகிவிடுகின்றாள். என் காதலிகள் இன்னமும்
காதலிகளாகத்தான் இருக்கின்றனர். ஆகவேதான் நான் நல்ல காதலன் இல்லை.
இருப்பினும் இதில் ஒரு வசதி உண்டு. காதலித்துக்கொண்டே இருக்கலாம்.
அவ்வப்போது இந்த தீராக்காதலை வார்த்தைகளில் வடித்து பார்க்கலாம்.
நான் ஒரு கிறுக்கனும் கூட. நிர்வாணம் சபிக்கப்பட்ட வீதிகளில், நிர்வாணமே
நித்திய சுகம் என்று உலாவுபவன். ஆடை மனிதர்களின் நாகரீகம் ஏனோ என்னை
கொஞ்சமும் தீண்டுவதில்லை. அவ்வப்போது என் நிர்வாணத்தை வார்த்தைகளில்
வடித்து வைக்கிறேன்.
பிறகு, நான் ஒரு சந்தர்ப்பவாதியும் கூட. அதனால்தான் மௌனத்தை அதிகம்
நேசிக்கிறேன். சந்தர்ப்பவாதம் தரும் குற்ற உணர்வை மௌனத்தால் கடக்க
முயல்கிறேன். சமயங்களில் மௌனமும் வரி கொண்டு விடுகின்றது.
இப்படித்தான் திமிறி விடுகின்றன வார்த்தைகள்.
மேலும் மேலும் சந்தர்ப்பவாதியாகி, திமிறும் முன் வார்த்தைகளை
நீர்த்துப்போகச்செய்யும் வித்தையை சமீபக்காலமாகக் கற்று கொண்டு வருகிறேன்.
வித்தை கைவரப்பெற்றதும், இன்னும் கொஞ்ச நாட்களில் நல்ல கவிஞனாகிவிடும்
நம்பிக்கை இருக்கிறது.
இந்தத் தொகுப்பு வெளிவர காரணமாயிருக்கும் வல்லினம் ஆசிரியர் நண்பர் ம.
நவீன் அவர்களுக்கு நன்றி. மனமுவந்து என் படைப்புகளை ஆங்கிலத்தில் மறுபுனைவு
செய்து உதவிய நண்பர் சிங்கை இளங்கோவன் என்றென்றும் என் அன்புக்கு உரியவர்.
மேலும், எழுதத் தொடங்கிய காலம் தொட்டு எனக்கு ஊக்கமூட்டிவரும் நண்பர் சு.
யுவராஜன் மற்றும் டாக்டர் ம. சண்முகசிவா அவர்களையும் இவ்வேளையில் அன்புடன்
நினைத்து கொள்கிறேன்.
|
|