|
|
றஷ்மியின் “ஈதேனின் பாம்புகள்”
அகமத் முஹம்மது றஷ்மி இலங்கையின் கிழக்குக்கரையோர
கிராமமான அக்கரைப்பற்றில் பிறந்தவர். காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலாய
கவிதைகள் (2002), ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு (2005), ஈதேனின் பாம்புகள்
(2010) ஆகியவவை இதுவரை வெளிவந்த இவரின் கவிதைத் தொகுப்புகள் ஆகும்.
வடிவமைப்பு மற்றும் ஓவியத் துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள றஷ்மி
தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்றார்.
ஒரு கவிதைத் தொகுப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணக்கிடைக்கும் ஈழம்
குறித்தான பதிவுகளைத் தரும் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு
வெளிவருகிறது றஷ்மியின் குரல். தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட வாழ்வை
மிகுந்த கோபத்துடன் அவர் சொல்லும் பாங்கு அச்சம் கொள்ள வைக்கின்றது.
தன்னிடமிருந்து பிடுங்கப்பட்டு பிறகு தனக்குத் தரப்பட்ட வாழ்வை ஏற்றுக்
கொள்ளாமல் அந்த வாழ்வு குறித்து நியாயமாக கோபப்படும் அவரது கவிதைகள்
படித்து மீண்ட பிறகும் வலிக்க வைக்கின்றன.
அச்சத்தில் உறைகிற ஆத்மாவும்
பயத்தில்,
வெலவெலத்தே - நடுங்கி
உதறுங்
காலும் கையும் யார்க்கும் வேண்டாமினி.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பயம் எப்போதும் அவனைத் துரத்தியபடியே
இருக்கிறது. பயம் என்பது ஒருவனை அவன் பயணிக்கிற இயல்பான பாதையில் இருந்து
மாற்றி விடுகின்றது. அவனது துணிச்சலை மாற்றி, குறிக்கோளை மாற்றி அவனை அவனது
இயல்பிலிருந்தே தடம் மாற்றி விடுகின்றது. தான் நினைத்ததைச் செய்ய முடியாமல்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் செத்து பிழைக்கும் நிலையைத்தான் அச்ச
உணர்வு நமக்குத் தருகின்றது. எப்போதும் அச்சப்பட்டே வாழ்ந்து பழக்கப்பட்டு
வெறுத்துப் போன ஒரு மனிதனின் குரலாக இக்கவிதை பேசுகின்றது.
காவு கொள்ளப்பட்ட வாழ்வின் எச்சமென்றான
அவர்களின் சந்ததி
பள்ளிவாழ்விழந்து
சுழன்றடிக்கும் கிறவல் தெருக்களில் எதிர்காற்றில்
புழுதியொடு போரிடுவதைக் கண்டேன்.
பலி கொடுக்கப்பட்ட வாழ்வின் எச்சம் என்பதை எந்த தளத்தில் நின்று கொண்டு
நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்? கோழிகளை, ஆடுகளை ஆண்டவனுக்காக பலி
கொடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு இனத்தையே பலி கொடுத்த அவலம் இலங்கை
மண்ணில்தான் நடந்தேறியது. அந்த பலியெடுத்தலின் அவலத்தை தான் இந்த கவிதை
பேசுகின்றது.
சரித்திர ஆசிரியர்களின் பதிவுகளிலோ
குறிசொல்வான் எதிர்வு கூறலிலோ
அவர்களைப் பற்றிய தகவல்கள் இல்லை
வேதநூல்கள் –
அழிவுக்கால ஆதாரங்களுள் ஒன்றாய் அக்கூட்டத்தவர்களின் வருகை பற்றி
எச்சரிக்கவுமில்லை.
ஓர் எதிரியின் வருகைக்குப் பின்னான வரிகள் இவை. எப்போதும் எதிரிகளையும்
ஆபத்தானவர்களையும் நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் எதிர்பாராமல் அவர்களின்
வருகை நிகழ்ந்தே விடுகின்றது. நாள், நேரக் கணக்கின்றி நிகழும் அவர்களின்
வருகையால் மிக இயல்பாய் போய்க்கொண்டிருக்கும் சிலரது வாழ்வு
சீரழிக்கப்படுகின்றது. இலங்கை இனப் போராட்டக் கவிதையாகவே இதைக் காண்கிறேன்
நான். மிக இயல்பாய் நிலம், கடல், கரையில்லாத கல்வி, பனைமரம் எனப் போய்க்
கொண்டிருந்த தமிழர்தம் வாழ்வில் சிங்களம் எனும் எதிர் நுழைந்தபோது
அவர்களின் வாழ்வு எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்குச் சீரழிந்து போனது.
அதிலும், தமிழனைவிட பலமடங்கு வலிமையானவனாக எதிரி உருவான பட்சத்தில் அந்த
சீரழிவின் வலி இன்றுவரை தொடர்ந்தபடிதான் இருக்கிறது எதிரியின் இருப்பு
மட்டுமே உறுதி செய்யப்பட்டு விட்டப் பிறகும்.
கைவிடப்பட்ட பாழ்விழுந்த
அவனது கோட்டைகளுள் கிடைத்த தொல்
எலும்புகளின்
ஆழ் பரிமாணங்களுள் இன்றும்
அணையா நெருப்புப் பெருகிக் கொண்டிருப்பதாய்
அகழ்வுகள் அதிசயிக்கின்றன.
றஷ்மியின் கவிதைகள் வேறொரு தளத்தில் நின்று போராட்டத்தைப் பற்றிதான்
பேசுகின்றது என்பதற்கு இந்த கவிதையும் ஓர் அடையாளம். பாழடைந்த ஒரு
கோட்டையில் மறைந்துபோன ஓர் அரசனின் தொல் பரிமாணங்களுள் இன்றுவரை அணையா
நெருப்பாய் ஊற்றெடுத்து கொண்டிருக்கும் வார்த்தைகளுள் அகப்படாத ஓர் உணர்வை
இந்த கவிதை பேசுகின்றது. போராட்டம் என்பது தலைமுறைகள் சார்ந்தது. ஒரு
தலைமுறையில் வெற்றியளிக்காத போராட்டம் அடுத்தடுத்த தலைமுறைகளில் வெவ்வேறு
பரிணாமங்களில் வெடித்துக் கிளம்பி வாகை சூடுவது இதன் அடிப்படையில்தான்.
வெற்றியைக் காணாமல் விதைக்கப்படும் உயிர்கள் மீண்டும் விருட்சங்களாகி
வெற்றியை ஈட்டும் என்பது இயற்கை நியதி.
கண்கள் கரிக்கின்றன உப்பில்
எரிகின்றன.
மூக்கில் நீரேறி மூச்சுவிட முடியவில்லை
காதுவழி மண் புகுந்து இரைகிறது
எனக்குப் பயமாயிருக்கிறது...
ஏனென்னைத் தூக்கத்தில் தனியே
விட்டுவிட்டுப் போனீர்கள்...?
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் வலியை இந்த கவிதையில் பதிவு செய்திருக்கிறார்
கவிஞர். ஆழிப் பேரலை அழிவினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள்
இலங்கையும் ஒன்று. அதிலும் தமிழர் பகுதிகளே மிக மோசமான அழிவினை சந்தித்தது
காணலாம். றஷ்மியின் “ஈதேனின் பாம்புகள்” கவிதைத் தொகுப்பிலுள்ள மேலும் சில
கவிதைகள் ஆழிப்பேரலைத் தந்த வலியினைப் பேசுகின்றது. காலங்கள் பல கடந்தாலும்
இலங்கை தமிழர்களுக்கு ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட வலிக்கு நிவாரணம் கிடையாது
என்பதற்கு இக்கவிதை சிறந்த சான்றாகும்.
றஷ்மியின் கவிதைகள் பெரும்பாலும் மிக நீண்டவை. வார்த்தைக்குள் கவிதையை
சுருக்க விருப்பமின்றி எண்ணற்ற வரிகளோடு அவரது ஒவ்வொரு கவிதையும் விரிந்து
கிடக்கின்றது. போர் காவு கொண்ட தமிழர்தம் வாழ்வையே இத்தொகுப்பிலுள்ள
பெரும்பாலான அவரது கவிதைகள் பேசுகின்றன. வலி, சோகம், விரக்தி, கோப
உணர்வுகள் அவரது கவிதைகள் தோரும் விரவிக் கிடக்கின்றன.
|
|