முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 37
ஜனவரி 2012

  மனிதம் மிஞ்சும் உலகம்... 7
நித்தியா வீரராகு
 
 
       
வல்லினம் பதிப்பக நூல்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்

தீர்ந்து போகாத வெண்கட்டிகள்: நான் ஒரு கதை உருவாக்கி
கே. பாலமுருகன்

கடக்க முடியாத காலம்
ம. நவீன்

துடைக்கப்படாத இரத்தக்கறைகள்: நினைவில் உயிர்த்திருக்கும் வாழ்வு
யோகி

என்னை நாயென்று கூப்பிடுங்கள்
ரேணுகா



கட்டுரை:

அபிநயம்
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

'உம்மை நீர் விற்க வேண்டும்!'
ஷம்மிக்கா



பத்தி:

புலம்பெயர் முகங்கள்... 5
வி. ஜீவகுமாரன்



திரைப்பார்வை:

போராளி : மனநோய் சித்திரம்
கே. பாலமுருகன்



பதிவு:

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா
இ. ஏகன்




கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்

தர்மினி பக்கம்
தர்மினி



நேர்காணல் இதழ் 4 (அக்டோபர் - டிசம்பர் 2011)



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...27

ந. பெரியசாமி

எம். ரிஷான் ஷெரீப்

கணேஷ்

ராஜா

ம. நவீன்

Monsters Inc : சிரிப்பில் குவியும் உயிர்ப்பு

ஆறு வயதே நிறைந்த அந்த தேவதை என் நண்பனின் மகள். சமீபத்தில் அவளோடு அவளின் வீட்டில் தங்கும் வரம் வாய்க்கப் பெற்றேன். முதல் நாள் என்னைப் பார்க்கும் போதே பலநாள் பழகியவள் போல் ஒட்டிக்கொண்டாள். அவளோடு அரை மீட்டர் தூரம் ஓடியபோது என்னை மிகச் சிறந்த ஓட்டக்காரி என்று தன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினாள். இது போன்று, எளிமையானவற்றையும் வியக்கத்தக்கவையாக மாற்றும் வல்லமை கொண்டவள் அவள். அவளிடம் ஒரு விசித்திரப் பழக்கம் இருக்கிறது. அவள் அவ்வப்போது பொருள்களைப் பதுக்கி வைக்கிறாள். அந்த வீட்டில் பொருள்களைப் பதுக்கி வைக்க அவளுக்கு மட்டுமே தெரிந்த இரகசிய அறைகள் இருக்கின்றன. அவள் வீட்டில் பொருள்கள் தொலைந்து போகையில் யாரும் பதட்டமடைவதில்லை. எல்லாம் வீட்டில்தான் இருக்கும்; கிடைத்துவிடும் என்று மிக சமாதானமாய் இருக்கின்றனர்.

அவளின் இத்தகைய செயற்பாடுகளுக்கும், மேலும் அவள் சிரிப்பதற்கும் அழுவதற்கும் பின்னால் யாரும் அறியாத அவளுக்கான காரணங்கள் இருந்தன. அவளுக்கென்று ஒரு கற்பனை உலகம் உண்டு அவள் நிதர்சனத்தில் கொஞ்சமும் கற்பனையில் கொஞ்சமும் வாழ்பவள். சில வேளைகளில் கற்பனையில் நிகழ்ந்த காரியங்களுக்கு நிஜ வாழ்வில் எதிர்வினை ஆற்றவும் செய்கிறாள். ஒருமுறை என் நெஞ்சில் சாய்ந்தபடி அவள் சொன்னதைக் கேட்டுச் சிறிது அதிர்ந்துதான் போனேன். அவள் என்னிடம், தான் பேயைப் பார்த்ததில்லை என்றும் ஆனால் பிசாசைப் பார்த்திருப்பதாகக் கூறினாள். மேலும் பிசாசு எப்படி இருக்கும், அவளோடு எப்படி பழகியது என்பதை என்னிடம் விவரிக்கத் தொடங்கினாள். அவள் என்னிடம் பொய் கூறுகிறாள் என்பதற்குப் பதிலாக அவள் கற்பனையில் தான் சந்தித்த அல்லது உருவாக்கிய ஒன்றைப் பற்றிதான் என்னிடம் கூறுகிறாள் என்று புரிந்து கொண்டேன்.

இவளுக்கு மட்டும் அல்ல. எல்லா ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் தங்களுக்கான வெவ்வேறு கற்பனை உலகங்கள் இருக்கின்றன. பொதுவாக 3 முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள் இதுபோன்ற நிலையில்தான் வாழ்க்கையைப் பழகுகின்றனர் என மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு நிஜத்தில் இல்லாத நண்பர்களும் சில வேளைகளில் பகைவர்களும் கூட கற்பனையில் உருவாகுகின்றனர். ஒரு குழந்தையின் கற்பனை நண்பன் மனித உருவிலோ, விலங்காகவோ, பொம்மையாகவோ, ஓர் உருளைக் கிழங்காகவோ, அல்லது என் நண்பனின் மகள் கூறியபடி பிசாசாகக் கூடவோ இருக்கலாம். இந்தக் கற்பனை நண்பர்கள் பிள்ளைகளோடு விளையாடுகின்றனர்; சாப்பிடுகின்றனர்; உறங்குகின்றனர்; குடும்பத்தோடு பிள்ளைகள் மேற்கொள்ளும் உரையாடல்களில் கலந்து கொள்கின்றனர்; சில வேளைகளில் பிள்ளைகளின் பிரச்சனைகளைத் தீர்க்க ஆலோசனையும்கூட கூறுகின்றனர்.

அடிக்கடி வெளியில் செல்லும் பெற்றோரைத் தடுக்க வீட்டுச் சாவியையும், தன்னைக் கவனியாமல் சதா கைப்பேசியிலேயே இருக்கும் தந்தையின் கைப்பேசியையும் ஒளித்து வைக்கும் குழந்தைகளின் இச்செயல்களைத் தூண்டுபவர் இத்தகைய கற்பனை நண்பர்களாகக் கூட இருக்கலாம். இதுபோன்று கற்பனையாக நட்பு கொண்டிருப்பது சம்பந்தப்பட்ட சிறுவர் சிறுமியர்களைப் பள்ளி வாழ்க்கைக்கும் பின் வெளி உலகத்தை எதிர்க்கொள்ளவும் தயார் செய்வதாக அமெரிக்க மனவியல் அமைப்பான APA (American Psychological Association) தனது ஆய்வொன்றில் குறிப்பிடுகிறது. இத்தகைய நண்பர்களிடையே குழந்தைகள் பல்வகை தொடர்புமுறை பழக்கவழக்கங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிஜ வாழ்வுக்காக ஒத்திகை பார்த்துப் பயிற்சி செய்து கொள்வதாக “லா துரோப், மெல்பர்ன் பல்கலைகழகத்தைச் (La Trobe University, Melbourne) சேர்ந்த மனநல நிபுணரான “டாக்டர் ஈவன் கிட்” (Psychologist, Dr. Evan Kidd ) கூறுகிறார்.

குழந்தைகளின் இந்தக் கற்பனை உலகம் வேறுபட்டது. பெரியவர் எவரும் உள்நுழையவோ முழுவதுமாய் அறிந்து கொள்ளவோ முடியாத அளவுக்கு புதிரானது; மிக அதிசயமானதும் கூட. குழந்தைகளின் தலையணைகளுக்கு அருகில் கடவுள்கள் இருக்கின்றன. மூடி இருக்கும் அவர்களின் அறை கதவுகளுக்குப் பின்னால் பூதங்களும் காத்திருக்கின்றன. சிறுவர்களின் இத்தகைய மனவியலை நன்கு அறிந்திருக்கும் Pixar நிறுவனத்தார் அதையே மூலதனமாக வைத்து ‘Monsters Inc’ என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கின்றனர்.

2001ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு முழுநீள சிறப்புப் பண்பியலுடைய இயக்கவூட்டத் திரைப்படமான இதனை இயக்கியவர், Pete docter. இதன் திரைக்கதை பூத உலகுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் நிகழ்வதாக புனையப்பட்டுள்ளது. Monstropolis என்பது பூதங்கள் வாழும் ஒரு பெரும் நகராக சித்தரிக்கப்படுகின்றது. இந்நகரில் அமைந்துள்ள Monsters.Inc என்பது பூத உலகுக்கு மின்னாற்றலை விநியோகிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் திரு.வாட்டர்னூஸ் (Henry J. Waternoose III) என்னும் 5 கண்களுடைய நண்டு வடிவையொத்த ஒரு பூதமாகும்.

Monsters Inc. நிறுவனத்திற்கு மிக பிரமாண்டமான மின்சார உற்பத்தி ஆலை ஒன்று இருக்கிறது. அங்கே பலவகை கதவுகள் இருக்கின்றன. அந்த கதவுகள் குழந்தைகளின் அறையைப் பூத உலகோடு இணைக்கின்றன. ஒரு கதவை சில இயந்திரங்களின் உதவியோடு சரியாக முடுக்கி விடும்போது அது ஒரு குழந்தையின் அறைக் கதவாய்த் திறக்கிறது. அந்தக் கதவுகள் வழியே நுழையும் பூதங்கள் குழந்தைகளைப் அச்சுறுத்தி அவர்கள் பயத்தில் அலறும் போது அந்த அலறல் ஒலியைச் சேமிக்கின்றன. பின் அந்த அலறல் சத்தம் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. இதுவே Monsters.Inc நிறுவனத்தின் பிரதான நடவடிக்கையாக விளங்குகிறது. இதற்காக அங்கே பணிபுரியும் பல்வகை உரு கொண்ட பூதங்களுக்குப் பிரத்தியேகமாகக் குழந்தைகளைப் அச்சுறுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சல்லி ("Sulley", James P. Sullivan) என்பவன் தலைச்சிறந்த அச்சுறுத்தியாக இருக்கிறான்.

நீலநிற அடர்த்தியான உரோமங்களும், அதன்மீது ஊதா நிற புள்ளிகளும், மேலும் தலையில் இரண்டு கொம்புகளும் உடைய பெரிய உடலுடைய பூதமான இவனே இப்படத்தின் கதைநாயகன். குழந்தைகளை அச்சுறுத்துவது அவன் வேலையாக இருந்தாலும் இயல்பில் அவன் இரக்க குணமும் எளிதில் அன்பு வயப்படும் மனமும் உடையவன். மைக் (“Mike” Michael Wazowski) என்பவன் சல்லியின் நண்பன். பச்சை நிறத்தில் ஒரு பந்து போல் உருண்டை வடிவ உடலமைப்பும் பெரிய ஒற்றைக் கண்ணும் உடைய மைக், சல்லியின் உதவியாளனும்கூட. சல்லி ஒரு நாளில் எந்தெந்த குழந்தைகளை அச்சுறுத்துவது மற்றும் அதனையொட்டிய அறிக்கைகளைத் தயாரிப்பது என சல்லியின் அத்தனை நடவடிக்கைகளையும் சீர் செய்பவனான இவன் சல்லியின் சொந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளிலும்கூட இறுதி வரை துணை நிற்கிறான்.

மைக்கிற்கு ஒரு பூத காதலியும் இருக்கிறாள். கிரேக்க கோர்கோன் (Gorgon) போன்று பாம்புகளைக் கூந்தலாக கொண்டிருக்கும் அந்த பூதவுலக அழகியான சிலியா (Celia) Monsters Inc. நிறுவனத்தின் வரவேற்பாளர் ஆவாள். இந்நிறுவனத்தில் பணிபுரியும் பூதங்களில் மிக அபாயகரமானதாக கருதப்படுபவன் ராண்டல் (Randall Boggs) என்பவன் ஆவான். பல கால்களைக் கொண்ட பல்லி வடிவிலிருக்கும் இவன் ஒரு பச்சோந்தியைப் போல் தான் சார்ந்த மேற்பரப்புக்கேற்ப தன் தோலை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையவன். இவன் குழந்தைகளைப் பூத உலக்குக்குக் கடத்தி வந்து உயிருக்கு ஆபத்து நேரினும் அவர்களின் அலறல்களை மொத்தமாக உறிஞ்சுக் கொள்ளும் இயந்திரமொன்றைத் தன் இரகசிய ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கிறான். மேலும் சல்லிக்குப் போட்டியாக சிறந்த குழந்தை அச்சுறுத்தியாக உருவாக பல முறை முயன்றும் தோல்வி காண்கிறான். இதனால் சல்லியின் மேல் மிகுந்த காழ்ப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்கிறான். இப்படி பலதரப்பட்ட பூதங்கள் வாழும் Monsters Inc, குழந்தைகளை நச்சுத்தன்மை மிக்கவர்கள் என பெரிதும் நம்புகின்றது. குழந்தைகள் பூத உலகுக்குள் நுழைந்து விடக் கூடாதென மிக கவனமாய் இருக்கின்றது. தவறுதலாக ஒரு பூதத்தின் முதுகில் ஒட்டிக் கொண்டு பூத உலகுக்குள் வந்துவிடும் ஒரு குழந்தையின் காலுறையும்கூட குழந்தைகள் புலனாய்வு முகமையகத்தினரால் (Child Detection Agency) குண்டு வைத்துத் தகர்க்கப்படுகின்றது. ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கைகளுக்கும் கட்டுப்படாத காலம் நொடிகளுக்குள் அனைத்தையும் புரட்டி போட்டு பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் நியதி பூத உலக்குக்கும் பொறுந்துவது போல் அங்கே மிக தற்செயலாக ஒரு மனிதக் குழந்தை வருகை புரிகின்றது.

ஒரு நாள் இரவு அலறல் சேமிப்பு ஆலையில் (மின்சார உற்பத்தி ஆலை) ஒரு கதவு முடுக்கப் பட்ட நிலையில் எந்த கண்கானிப்பும் இல்லாமல் இருப்பதைச் சல்லி பார்க்க நேரிடுகிறது. எந்தவித முன்யோசனையும் இல்லாமல் சல்லி அந்தக் கதவுக்குள் நுழைகிறான். ஆனால் அந்தக் கதவால் இணைக்கப்பட்ட குழந்தையின் அறையில் எந்தக் குழந்தையும் இருக்கவில்லை. அதனால் அறைக்கதவை அடைத்துத் திரும்பி விடும் சல்லியின் முதுகில் தொற்றிக் கொண்டு ஓர் இரண்டு வயது மனிதப் பெண் குழந்தை பூத உலகுக்குள் நுழைகிறாள். அதனால் பெரும் பதற்றமடையும் சல்லி அவளை மீண்டும் அறைக்குள் திருப்பியனுப்ப பல முயற்சிகள் எடுக்கிறான். விபரீதம் அறியாத அந்தக் குழந்தை சல்லியின் முதுகிலும் கை கால்களிலும் ஏறிக்கொண்டு விளையாடுகிறாள். இதற்கிடையில் கதையின் எதிர்மறை பாத்திரமான ராண்டல் அந்த அறைக் கதவின் மின்சார இணைப்பைத் துண்டித்து முடக்கிவிட குழந்தையை மனித உலக்குக்குத் திருப்பியனுப்பும் சல்லியின் அத்தனை முயற்சிகளும் தோல்வியடைகின்றன.

இந்நிலையில் செய்வதறியாது தவிக்கும் சல்லி குழந்தையை மறைத்துக் கொண்டு தன் நண்பனான மைக்கைத் தேடி ஒரு உணவகத்துக்குச் செல்கிறான். அங்கே நடக்கும் கலவரத்தில் ‘பொது பூதங்களில்’ பல சல்லி வைத்திருக்கும் குழந்தையைப் பார்த்து விடுகின்றன. பத்திரிக்கைகளுக்கும் குழந்தைகள் புலனாய்வு முகமையகத்தினருக்கும் விடயம் தெரிந்து விடவே நிலைமை மேலும் விபரீதமாகின்றது. குழந்தைகள் புலனாய்வு முகமையகத்தினர் குழந்தையை ஆங்காங்கே வலை வீசி தேட ஆரம்பிக்கின்றனர். பெரும்பாடுபட்டு ஒரு வழியாக சல்லியும் மைக்கும் குழந்தையை அவர்கள் வீட்டுக்கே அழைத்து வந்து விடுகின்றனர். அங்கே குழந்தையை எப்படி மறுபடியும் அவள் அறைக்கு அழைத்துச் செல்வது என்று சல்லியும் மைக்கும் திட்டம் போடுகின்றனர்.

இதற்கிடையில் குழந்தை தன் அப்பாவித்தனமான அன்பினால் சல்லியைப் பெரிதும் கவர்கிறாள்; தான் சல்லியின் கைகளைப் பிடித்தபடி இருப்பதுபோல் படம் வரைந்து காட்டி சல்லியிடம் அன்பை வெளிப்படுத்துகிறாள். இவ்வளவு நாள் குழந்தைகள் நச்சுத் தன்மை வாய்ந்தவர்கள் என்ற தனது நம்பிக்கையைச் சந்தேகிக்கிறான் சல்லி. அந்தப் பெண் குழந்தையின் பால் தன்னையறியாமல் அன்பு செய்ய ஆரம்பிக்கிறான். தன்னைச் செல்லமாக ‘கிட்டி’ (Kitty) என்று அழைப்பவளை ‘ஃபூ’ (Boo) என்று அழைக்க ஆரம்பிக்கிறான். மறுநாள் காலை சல்லியும் மைக்கும் ஃபூவிற்கு ஒரு பூதம் போல் உடை அணிவித்து அவளை Monsters Inc-இன் அலறல் சேமிப்பு ஆலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே ஃபூவைத் தன் ஒன்றுவிட்ட தங்கையின் மகள் என்று இயக்குனர் வாட்டர்னூஸிடம் அறிமுகப் படுத்துகின்றான் சல்லி. இப்படியே நிலைமையைச் சமாளித்தபடி மைக்கும் சல்லியும் ஃபூவை அவள் அறைக்குள் திருப்பியனுப்ப முயல்கின்றனர். விடயம் அறிந்த ராண்டல் அவர்களுக்கு உதவுவதாக கூறுகின்றான். ஆனால் அவனை நம்ப மறுத்த சல்லி, ஃபூவிற்குப் பதிலாக மைக்கை ஃபூவின் அறைக்குள் அனுப்புகிறான். இந்தச் சந்தர்ப்பத்தில் ராண்டல் ஃபூவென்று நினைத்து மைக்கை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கடத்தி விடுகின்றான். மைக்கைத் தன் இரகசிய ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று அங்கே தான் கண்டுபிடித்த அலறல் உறிஞ்சும் இயந்திரத்தில் மைக்கைப் பலியாக்க ஆயத்தமாகிறான்.

இதற்கிடையில் ஃபூவும் சல்லியும் அந்த இரகசிய ஆய்வுக்கூடத்தை அடைகின்றனர். பின்னர் ராண்டலிடம் போராடி சல்லி மைக்கைக் காப்பாற்றியவுடன் நடந்த அனைத்தையும் இயக்குனர் வாட்டர்னூஸிடம் தெரிவித்து உதவி கோர நினைக்கிறான். ஆனால் வாட்டர்னூஸ், தீயவன் ராண்டலுடன் சேர்ந்து சல்லியிடமிருந்து ஃபூவை அபகரித்து, இமய மலைக்கான கதவை முடுக்கிவிட்டுச் சல்லி மற்றும் மைக் இருவரையும் வெளியே துரத்தி விடுகிறார்.

அங்கே சல்லியும் மைக்கும் இமாலயப் பிரதேசங்களில் வாழ்வதாக நம்பப்படும் எட்டி ஒன்றைச் சந்திக்கின்றனர். சல்லி ஃபூவை ஆபத்தில் விட்டு விட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றான். எப்படியும் Monsters Inc.-க்குத் திரும்பி விட எண்ணுகின்றான். ஆனால் மைக் இனிமேலும் ஒரு மனிதக்குழந்தைக்காக தன் உயிரைப் பணையம் வைக்க தயாராக இருக்கவில்லை. ஆனாலும் எப்படியும் ஃபூவிற்கு உதவ வேண்டும் என்ற உறுதியோடு இருக்கும் சல்லி, எட்டியின் பனி சறுக்கியின் மூலம் மலையடிவாரத்தையொட்டி அமைந்திருக்கும் கிராமம் ஒன்றை அடைகிறான். அங்கிருந்து பூத உலகிற்கு நுழையும் சல்லியைத் தன் நண்பனுக்காக மனமாறிய மைக்கும் பின் தொடர்கிறான்.

அதன் பின் ஒரு பெரிய இராட்டினமாக சுழலும் கதவுகளுக்கிடையில் மைக்கும் சல்லியும் ராண்டலிடம் போராடி சல்லியை மீட்கின்றனர். ராண்டலை ஒரு கதவு வழியாக மனித உலகுக்கு அனுப்பி விடுகின்றனர். ராண்டலின் தீயச் செயலுக்குத் துணை புரிந்த வாட்டர்னூஸும் குழந்தை புலனாய்வு முகமையகத்தினரால் கைது செய்யப்படுகிறார். அனைத்துப் போராட்டங்களுக்கும் பின்னர் ஃபூவின் கதவை முடுக்கி விட்டு அவளை அவ்வறையில் விட்டுவிட்டு பிரிய முடியாமல் அவளைப் பிரிந்து வருகிறான் சல்லி. ஃபூவின் அறைக் கதவு சுக்கு நூறாக உடைக்கப் படுகிறது. அதன் பிறகு Monsters Inc நிறுவனத்தின் புதிய இயக்குனராக சல்லி நியமிக்கப் படுகிறான்.

குழந்தைகளின் அலறலிலிருந்து மட்டும் அல்ல சிரிப்பின் மூலமும் மின்னாற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்பதை ஃபூவின் மூலம் உணர்ந்து கொண்ட சல்லி அதன் பின்னர் குழந்தைகளைச் சிரிக்க வைத்து மின்சாரத்தைச் சேமிக்க பூதங்களைப் பழக்குகிறான். என்னதான் அவன் ஒரு நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு வகித்து சிறக்க வாழ்ந்த போதும் ஃபூவின் நினைவுகள் அவனை விட்டு அகலவில்லை. அவன் பத்திரப்படுத்தி வைத்த ஃபூ வரைந்த ஓவியத்தையும் அவள் அறைக்கதவு உடைக்கப்பட்டபோது சிதறிய மரத்துண்டையும் பார்த்துத் தன் மனதை சமாதானப்படுத்தி கொள்கிறான். மீண்டும் ஃபூவைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியதா இல்லையா என்ற கேள்விக்கு விடையாகத் திரைப்படம் நிறைவடைகிறது.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது ஒரு குழந்தையின் கனவு உலகத்தில் உலவி விட்டு வெளியே வந்தது போல் உணர்ந்தேன். குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட சல்லியின் பாத்திரப்படைப்புதான் இந்தப் படத்தின் திரைக்கதைக்குப் பெரும் பலம் சேர்க்கிறது. ஒரு முறை குழந்தைகளை அச்சுறுத்தும் பயிற்சி அறையில், ஃபூவை அவள் உலக்குக்கு அனுப்பி வைக்க உதவி கோரி வரும் சல்லியைத் திடீரென குழந்தைகளை அச்சுறுத்துவது எப்படி என்று செய்து காட்டும்படி இயக்குனர் வாட்டர்னூஸ் வற்புறுத்துகிறார். வேறு வழியின்றி அந்த அறையின் பொம்மை குழந்தை முன்னே சல்லி பெரும் ஓசையுடன் உறுமி காட்டுகிறான். அந்தக் காட்சி ஒளிக்காட்சியாக பதிவாக்கப்படுகிறது. அந்த ஒளி காட்சிகளில் தான் அச்சுறுத்துவதைக் கண்டு மிரண்டு விடும் ஃபூவின் முக பாவத்தைக் கண்டு சல்லி பெரிதும் மனம் வருந்துகிறான். தொடர்ந்து அவனைப் பார்த்து அஞ்சி அவனிடமிருந்து விலகிக் கொள்ளும் ஃபூவின் செயல்கள் அவனை மனமுடையச் செய்கின்றன.

குழந்தைகளை அச்சுறுத்துவது எத்தகைய பாவச் செயல் என சல்லி உணரும் காட்சி மனதை நெகிழச் செய்கிறது. மேலும் இமயமலைக்குத் துரத்தியடிக்கப் படும் சல்லி, தன் நண்பனின் நட்பைக் கூட பொருட்படுத்தாமல் ஒரு குழந்தைக்காக பெரும் இடர்களைச் சந்தித்து பனிமலைகள் கடந்து பூத உலக்குக்கு திரும்பும் காட்சியில் சல்லி மேலும் மனதை உருகச் செய்கிறான். இதனைத் தவிர்த்துச் சல்லியின் நண்பனாக வரும் மைக் கதைப்பாத்திரமும் படத்திற்கு வழு சேர்க்கிறது. ஒரு புறம் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் நண்பனுக்கும், சதா அவனைத் தேடி கொண்டிருக்கும் பாம்புத் தலை காதலிக்கும், பொல்லாத ராண்டலுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படும் மைக் படத்தின் நகைச்சுவைத் தன்மையைக் கூட்டுகிறான்.

மேலும் Pixar-இன் மற்ற இயக்கவூட்டத் திரைப்படத்தைப் போலவே இதிலும் தொழிற்நுட்பக் கூறுகள் சிறப்பாகவே அமைந்து இருக்கின்றன. பல்வகை வடிவிலான பூதங்கள், பிரமாண்டமான அலறல் சேமிப்பு ஆலை, குழந்தைகளின் உலகுக்கும் பூத உலக்குக்கும் இடையே இணைப்பாக விளங்கும் கதவுகள், இராட்டினம் போல் ஆயிரமாயிரம் கதவுகள் சுழல்கையில் படத்தின் இறுதி துரத்தல் காட்சி, என அத்தனையையும் திரையில் சாத்தியப்படுத்த கணினி தொழிற்நுட்பம் பெரும் பங்கினை ஆற்றியுள்ளது.

இதனைத் தவிர்த்து, கதைப் பாத்திரங்களுக்கு குரல்கொடுத்து குரல் நடிகர்களை இந்தத் தருணத்தில் மறந்துவிட முடியாது. திரைப்படத்தின் முக்கியப் பாத்திரங்களான சல்லிக்கு நடிகர் John Goodman-உம், மைக்கிற்கு நடிகரும் இயக்குனருமான Billy Crystal-உம் ஃபூவிற்கோ அச்சமயம் இரண்டரை வயதே நிறைந்திருந்த குழந்தை நட்சத்திரமான Marry Gibbs-உம் குரல் கொடுத்து உயிரூட்டியுள்ளனர். மேலும் இந்தக் குரல் நடிகர்களோடு இணைந்து படத்திற்கு மெருகேற்றியுள்ளார் இத்திரைப்படத்தின் இசை இயக்குனர் Randy Newman.

நான் Wall-e, Finding Nemo, Up போன்ற படங்களைப் பார்க்கும்போது அவை என் மனதில் பெரும் சலனத்தை ஏற்படுத்தின. படம் பார்த்து முடித்தும் பல நாட்களுக்கு அதன் பாதிப்பிலிருந்து மீளாமல் இருந்தேன். வால்-ஈ இயந்திரத்தைக் காதலித்தேன். நீமோவாக கடலில் நீந்தினேன். Up-இன் நாயகனோடு தனிமையில் தத்தளித்தேன். Monsters Inc என்னும் இத்திரைப்படம் எனக்கு அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்த தவறியிருக்கிறது. நல்ல திரைக்கதை, சிறந்த தொழிற்நுட்பம், கதைக்கேற்றப் பாத்திரங்கள், அவற்றுக்கேற்ற குரல்கள், இப்படி எல்லாம் இருந்தும்கூட ஒரு நீண்ட சலனத்தை உருவாக்கும் அளவுக்கு இப்படத்தில் அழுத்தம் குறைவாகவே இருக்கிறது.

எனினும் குழந்தைகளின் மனவோட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் அவர்களை உறுதியாகத் தனக்குள் இழுத்துக் கொள்ளும். படத்தின் கதைநாயகனான சல்லி ஒரு பூதமாக இருந்தாலும் இறுதியில் குழந்தைகளின் நண்பனாக கைகோர்த்துக் கொள்கிறான். இத்திரைப்படத்தைப் பார்க்கும் எந்தப் பிள்ளைகளும் தங்களின் கற்பனை உலகோடு சல்லியைத் தொடர்புபடுத்தி ஒரு நெருக்கத்தை உணரத்தான் செய்வார்கள். பிள்ளைகளுக்காகவே எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்த வகையில் வெற்றி அடைந்துள்ளது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768