|
|
ஜார்ஜ்
சிறு பிராயத்தில்
சீக்கிரம் பெரிய மனுஷனாக வேண்டும்
என்ற பிரயாசையில்,
கொதிக்கும் இரும்புப் பட்டறையில்
கூடமாட வேலை செய்தபோது
உன்னைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.
தடுப்புக் கண்ணாடியும்
வாய்க்கவசமும் அணிந்த உன்
வியர்வை உருளும் தேகத்தைக்
காணக் கண்கூசும்,
செந்நிற இரும்புத் துண்டுகள்
சீறிக்கொண்டு தரையில் விழும்போது
கால்களைக் துண்டிக்கும் வெறியோடு
உன்னை நோக்கி வரும்போது,
தாவித்தாவிச் சமாளிக்கும்
உன் துணிச்சலில்
மெய்மறந்து போயிருக்கிறேன்.
ஒருநாள்,
அடுக்கி வைத்த இரும்புத்துண்டுகள்
பட்டறையை விழுங்கும்
கடலலைபோல் சரிந்தபோது;
எல்லோரும் ஓட்டமெடுக்கையில்
நாமிருவர் மட்டும் தைரியத்தோடு
இணைந்து ஒவ்வொன்றாய்
தலையில் சுமந்து அடுக்கும்போது
நீ சொன்னது இன்னும் ஞாபகமிருக்கிறது:
'நீ வியர்வை சிந்த பயந்தவனல்ல
நல்ல...கழுதை போன்ற பலசாலி.'
இப்போது, இங்கே, இம்மருத்துவமனையில்.
கிழடுகள் சாகக்கிடக்கும் பிரிவில்
நீ மட்டும்... உட்கார்ந்து கொண்டு,
காலம் கடந்து செல்வதை
கவனித்துக் கொண்டிருக்கிறாய்.
நான் கொண்டுவரும் புத்தகங்களை
உன்னால் படிக்க முடியவில்லை.
படங்கள் நிறைந்திருந்தாலும் பார்க்கமுடியவில்லை.
உடல் தளர்ந்த, உணர்விழந்த,
படுத்தப் படுக்கையான
முதுமை வீச்சுக்களினிடையே
நீ மட்டும் உட்கார்ந்திருக்கின்றாய்.
இன்று...
நாற்காலியில் இருந்து விழுந்து
மரணத்தைப் பார்த்த பீதியோடு
வெற்றிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
உன்னை...
இரும்புத் துண்டுபோல் தூக்கிவைக்கும்
நான் சொல்வதெல்லாம்:
'சிறு வீழ்ச்சியைப் பற்றி கலங்காதே...
இன்னும் நீண்டகாலம் இங்கிருப்பாய்...
உனக்கு கழுதையின் பலமிருக்கு.'
|
|