|
|
திருமதி எம். ஏ. சுசிலாவின் ‘தேவந்தி’
நீங்கிச் சென்ற கணவர் சாதாரண காவி உடைகளை அணிவதைத்
தெரிந்து கொண்டவள் தானும் அணிகலன்களைத் துறந்து காவி உடைகளை ஏற்கின்றாள்.
அவர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவை மட்டுமே உண்பதை அறிந்தவள் அவளும் ஒரு
வேளை உணவை மட்டுமே உண்கின்றாள். அவர் முரட்டு படுக்கையில் உறங்குவதை
அறிந்து தானும் ஆடம்பரமான அரண்மனை படுக்கையைப் புறந்தள்ளிவிட்டு அவரைப்
போலவே உறங்குகின்றாள். அவர் மாலை, நறுமணங்களை மறுப்பதைக் கேள்வியுற்று
தானும் அவற்றை மறுக்கின்றாள். அவர்தான் கௌதம புத்தர். அவள்தான் புத்தர்
கைப்பற்றிய யசோதரை.
சித்தார்த்தர் என்ற புத்தரை அறிந்து கொண்ட நாள்முதல் இந்நாள்வரை அவரைப்
பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், அறிவுரைகள் என எல்லாமே சலிப்பைத் தராது
எனக்குள் புது புது அர்த்தங்களைச் சளைக்காமல் கற்பித்துக் கொண்டே
இருக்கின்றன. அவ்வாறான கற்பிதங்களிலிருந்து அற்புத பெண்ணாய் என் முன்
உருவெடுத்தவர் யசோதரை.
புத்தரின் அரிய குணங்கள் போற்றப்படும்போது அவரது குறையென அடிக்கடி
தென்படுவது அவர் விட்டுச்சென்ற அவரது மனைவி யசோதரையும் அவரது மகன்
ரகுலனும். நல்லவர்களின் சிறு இயலாமைகள் அல்லது மெல்லிய குறைபாடுகளைக்
கண்டுப்பிடிக்கும் மனிதர்கள் எப்போதுமே உண்டு. அதுவே என்னைச் சிந்திக்க
செய்து யசோதரை பற்றி மேலும் அறிய ஆவலை வெளிக்கொணர்ந்தது. யசோதரைப் பற்றிய
என் தேடலில் கிடைத்த தகவல்கள் எனக்கு முற்றிலும் உற்சாகமளித்தன.
புத்தர் தன் மனைவியையும் மகனையும் விட்டு சென்றபோது சகல பாதுகாப்பும்
வசதியும் அவர்களுக்கு இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்
அவர்களைப் பரிதவிக்க விட்டு செல்லவில்லை. யசோதரைக்குத் திருமணத்திற்கு
முன்னரே புத்தர் ஒருநாள் அமைதியைத் தேடி செல்வார் என்பது
அறியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் புத்தரின் மீதான ஆழ்ந்த அன்பைப் பதித்த
உள்ளம் அதை ஏற்று கொள்ள தயங்கவில்லை. புத்தருக்கும் யசோதரைக்குமான அன்பு
ஆழமானது; என்றோ உருவாகிவிட்ட உறுதியாகிவிட்ட பிணைப்பு. அதை எவராலும்
தகர்க்க முடியவில்லை.
புத்தர் ஞானத்தைத் தேடி அரண்மனையின் வெளியே செல்ல, யசோதரையோ அரண்மனையின்
உள்ளேயே ஞானத்தைத் தேட முயன்றார். இடம் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின்
தேடல் ஒன்றாக இருந்தது. உண்மையான அன்பின் மற்றொரு அடையாளம் இது.
இடைவெளியும் பிரிவும் புத்தரின் மீதான யசோதரையின் அன்பைச் சற்றும்
குறைக்கவில்லை.
சித்தார்த்தர் இல்லாத யசோதரையின் வாழ்நாள்கள் எவ்வாறு கழிந்திருக்கும்?
யசோதரையின் மனதில் எழுந்த உணர்வுகள் யாவை? என பதிலுக்காக காத்திருக்கும்
கேள்விகள் பல. பின்வரும் வரிகள் காத்திருக்கும் கணங்களில் எழுந்து
திருப்தியை மனதில் பரவ செய்கின்றன. புத்தரைப் போன்று அரண்மனை வாழ்க்கையை
உதறி செல்வதற்கு யாரும் தயாராக இருப்பதுமில்லை; யசோதரையைப் போன்று
அரண்மனையின் உள்ளே இருந்து கொண்டே துறவு வாழ்க்கையை மேற்கொள்ள
விரும்புவதுமில்லை. யாரும் ஏற்க விரும்பாத வாழ்க்கைப்பாதையில் அமைதியைத்
தேடி சென்ற புத்தரும் யசோதரையும் கண்களுக்குப் புனிதர்களாகவே தெரிகின்றனர்.
இவ்விடம் இன்னொரு பெண்ணையும் குறிப்பிட வேண்டும். அவள்தான் சிலப்பதிகார
கண்ணகியின் தோழி ‘தேவந்தி’. திருமதி எம்.ஏ.சுசிலாவின் எழுத்தில் கதையாய்
உருப்பெற்றிருக்கும் இவள் வாழ்க்கையும் மனதோடு மனதாய் சேர்ந்து
கொள்கின்றது. தேவந்தியும் கணவனைப் பிரிந்து வாழ்கின்றாள். அவளுள் மறைந்து
கிடக்கும் வாழ்க்கை ரகசியத்தைக் கண்ணகியிடம் ஒரு தருணத்தில்
கொட்டுகின்றாள். தேவந்தியின் மாமனாரின் முதல் மனைவி மாலதி. அவளுக்குக்
குழந்தை பாக்கியம் கிட்டாததால் இன்னொருவளை மணந்து கொள்கின்றார். அவளுக்குப்
பிறந்த குழந்தைதான் தேவந்தியின் கணவன். தனக்கில்லா மழலையின் இன்பத்தை
அனுபவித்து அக்குழந்தையை அன்போடு வளர்த்தவள் மாலதி. ஒருநாள் கணவரும்
குழந்தையைப் பெற்றவளும் வெளியே சென்றுவிட்டனர். அச்சமயத்தில் மாலதி
குழந்தைக்குப் பால் புகட்டிக் கொண்டிருக்கையில் குழந்தை மூர்ச்சையாகின்றது.
குழந்தையின் இழப்பும் மாற்றாளின் குழந்தை உயிரைக் கொன்றுவிட்ட பழி
சொற்களும் கண்களையும் காதுகளையும் நிரப்பிக் கொள்ள மாலதியின் மனம்
துடிதுடிக்கின்றது. குழந்தை இறந்துவிட்டதா இல்லையா என்பதைகூட அறிய
இயலாதவளாய் பதற்றமடைகிறாள்.
அந்நகரிலுள்ள எல்லா கோயில்களுக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி
தெய்வங்களிடம் மன்றாடுகின்றாள். தன் குலதெய்வமான பாசண்டச் சாத்தன்
நினைவுக்கு வருகின்றது. அக்கோயிலுக்கு விரைந்து பதற்றத்துடன் சென்றவள்
மயக்கமுறுகின்றாள். மயக்கம் தெளிந்து குழந்தையின் அசைவுகளைக் கண்ணுற்று தன்
குலதெய்வம் பாசண்டச் சாத்தனே குழந்தையின் உயிராய் வந்துவிட்டதென
நம்புகின்றாள். மற்றவர்களிடம் இதுப்பற்றி ஏதும் அறியப்படுத்தாது
குழந்தையிடம் தனித்திருக்கும் வேளைகளில் மட்டும் அவனது சிந்தனையில்
பாசண்டச் சாத்தனைப் பதிக்கின்றாள். அவனும் தான் பாசண்ட சாத்தன் என எண்ணிக்
கொள்கின்றான். தேவந்தியை மணந்து கொண்டவன் உலகத்தின் பார்வைக்கு மட்டும்
கணவன் என்னும் உறவைக் காட்டிக்கொள்கின்றான். தன் பிற உறவுகளுக்கு தன்
கடமைகளை நிறைவாக செய்பவன் தேவந்தியை மட்டும் புறக்கணிக்கின்றான்.
பெற்றோரும் வளர்த்த தாய் மாலதியும் இறந்தபின்னர் தன் கடமைகளை நிறைவு
பெற்றுவிட்டதாய் எண்ணிக் கொண்டவன், தேவந்தியிடம் எஞ்சிய வாழ்நாட்களைக்
கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்ள சொல்லி சென்றுவிடுகின்றான். ஊரார் தன்
மீது பழி சுமத்தாமல் இருக்க தன் கணவன் தீர்த்த யாத்திரை
சென்றிருப்பதாகவும், அவன் நலமுடன் திரும்ப தான் கோயில்களில் வழிபடுவதாக
கூறி காலம் கழிக்கின்றாள். அவனது கனத்த இதயம் கதையிலிருந்து வெளிப்பட்டு
ஆழ்ந்த தடத்தை உருவாக்குகின்றது.
பெண்களின் மனம் மற்றும் உடல் மென்மையானதென கவிதைகளிலும் பாடல்களிலும்
மட்டும் கேட்பதற்கு இதமாக உள்ளது. ஆனாலும் பெண்களின் மனமும் உடலும் தான்
ஆண்களைவிட வலிமையாக உள்ளதாக இக்காவிய நாயகிகள் உணர்த்துகின்றனர்.
''மனிதக் கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பதும்
உட்பட்டிருக்கிறதா... இல்லையா? அப்படி அதுவும் உட்பட்டதுதான் என்றால் மனித
நிலையில் ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் என் கணவர் முழுமையாகச் செய்து
முடித்து விட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?... மனைவி என்ற மனித
உயிருக்குள்ளும் தனியாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது
மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை? இதையெல்லாம் அவரிடம்
கேட்காமல் நான் மௌனமாக இருந்து விட்டேன் கண்ணகி! இந்தக் கேள்விகளைக்
கேட்பதற்காகவாவது அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும்!''
கதையில் வரும் இவ்வரிகள் தேவந்தியின் காயப்பட்ட உணர்வுகளின் தீம்பிழம்பாய்
சிதறுகின்றன. பெரும்பாலான ஆண்களின் லட்சிய கனவுகளைத் தொழில், பணம் என்பவையே
அபகரித்துக் கொள்கின்றன. இவை யாவும் சுயத்தேவைகளின் அடிப்படையில்
ஆண்களுக்குத் திருப்தியை வழங்கிவிட்டால் வெற்றி எனவும் கருதப்படுகின்றது.
இவ்வாறான ஆண்களுக்கு மத்தியில் மனைவி எனும் ஸ்தானத்தில் இருக்கும் பெண்
என்பவளின் மனமோ உணர்வோ மதிக்கப்படுவதில்லை.
தேவந்தியின் நிலைக்குக் காரணமாகிவிட்டவள் மாலதி. பல தருணங்களில்
பெண்களாலேயே பெண்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுவிடுகின்றன. பெண்களின்
உணர்வுகளைப் பெண்களே அறியாதபோது ஆண்களின் அறியாமை இன்னும் பல சிக்கல்களை
உள்ளிழுத்து கொள்கின்றது. பெண்கள் குடும்ப பிரச்சனைகளில் சிக்கி
தவிக்கையில் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்போரும் பெண்களாகவே
இருக்கின்றனர். அத்தகைய இக்கட்டான சூழல்களில் ஆண்கள் தங்கள் பகுத்தறிவின்
உதவியால் சிந்திக்கும்போது மட்டுமே சில இன்னல்கள் களைத்தெறியப்படுகின்றன.
தேவந்தியின் நிலை அவளோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இருக்கும் நிலையாகலாம் என
கண்ணகியிடம் குமுறுகின்றாள். அத்தருணங்களில் கண்டிப்பாக மௌனங்கள்
உடைப்படும் என உறுதி தருகின்றாள். மௌனங்கள் உடைப்பட்டு அநியாயங்கள்
வீழ்ந்து விடும் தருணங்களுக்காக காத்திருக்கின்றேன். நியாயங்கள் நிமிர்ந்து
எழுவதற்கு...
|
|