|
|
குயில் கூவும் நகரம்
அந்த வயோதிகப் பெண் சில மாதங்களின் முன் இலண்டனிலிருந்து யாழ்ப்பாணம்
சென்றிருந்தார். பிள்ளைகள் எல்லோரும் அகதிகளாக வந்த பின் அவர் தனித்திருக்க
முடியாமல் இலண்டனுக்கு வந்து வாழ்பவர். இப்போது நாட்டில் சண்டையில்லை.
போக்குவரத்துப் பாதை பிரச்சனையில்லை. பலரும் விடுமுறைக் காலங்களைக்
கழித்துவிட்டு வருகிறார்கள். ஊரையும் வீட்டையும் சகோதரிகளையும்
பார்த்துவிட்டு வருவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு அந்த மனிசி பல
ஆண்டுகளிற்குப் பிறகு வந்திறங்கினார் யாழ்ப்பாணம்.
'லண்டனிலை பூட்டின சூட்கேஸை யாழ்ப்பாணத்தில அக்கா வீட்டில போய்த்தான்
திறந்தனான்' என அதை ஒரு ஆச்சரியமாக நினைத்தார். முன்னரெல்லாம் கொண்டு போற
பொருட்களைக் கொட்டிக் கவிழ்த்து அடுக்கிக் கொண்டு போவதே
பெருந்துன்பமென்பார்கள்.
சென்ற ஒரு வருடத்திற்கு முன்னர் 25 வருடங்கள் கடந்து யாழ் போய்வந்த
நண்பரிடம் 'நாடு எப்பிடியிருக்கு?' எனக் கேட்ட போது சேவல் கூவுகிறது.
பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன. நித்திரை
செய்து எழும் போது என்னவொரு சுகமென்றார். குயில் கூவாத காரணத்தால்
சனங்களெல்லாம் அகதியாக வெளிக்கிட்டது போல கதைத்தார். உறவுகளின்
விருந்தோம்பல் , ஊருலாத்தல், ஓய்வு என அனுபவித்து , கடன்பட்டுக் கொண்டு போன
காசைக் கவலையில்லாமல் செலவழித்தார்.
'அங்க சுப்பர் மார்க்கட்டில் எல்லாம் வாங்கலாம்'. ஒரு முற்றுப்
புள்ளியிடுவார்கள். முன்னொரு காலத்தில் சுப்பர் மார்க்கட் இல்லாததால்
புலம்பெயர்ந்த ஆட்களாயிருக்கலாமோ?
அதே நகருக்கு சென்று வந்த மற்றுமொரு நபர் சொன்னார் - ஒரு கிலோ மா
கொடுத்தால் நாள் முழுதும் வெய்யிலில் நின்று புல்லுச் செருக்க ஆட்கள்
வருவார்கள்.
இப்படித்தான் கிளிநொச்சி பற்றியும் அண்மையில் படித்த இருவேறு கட்டுரைகளும்
அவரவர் கண்கள் எதைப்பார்க்கின்றன என யோசிக்கச் செய்தன.
தான் சந்தித்த பெண்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதாக சொல்வதாக
ஒருவர் எழுதியிருக்கிறார். குற்றவுணர்வுடன் இராணுவத்தினர் தாம் செய்த
அழிவுகளிற்கான பொறுப்புணர்ந்து வீடுகள் கட்டித் தருகிறார்களாம். மகிழ்ச்சி.
ஆம், அவர்களுக்கு இடப்படும் கட்டளைகளுக்கேற்ப செயற்படுபவர்கள். அவர்களுக்கு
இடப்படும் கட்டளைகள் நீதியுடையவையாயிருப்பதாக. சமாதானத்தின் ஆவி
இறங்கட்டும்.
அதைப் படித்த மூன்றாம் நாளே மற்றுமொரு கட்டுரை படித்தேன். அதே
கிளிநொச்சியில் பெண்கள் படும் துன்பங்கள். யுத்தத்தின் தீராத சோகங்கள்.
ஆம், அவர் பார்த்த பெண்கள் வேறு நபர்கள். ஒவ்வாருவரும் ஒவ்வோர் விதமாக
சொல்வது போலிருக்கிறது. எதை வலியுறுத்த விரும்புகிறார்களோ அதை மட்டும்
அவர்கள் பார்க்கிறார்கள்.
ஒரு மாதம் தங்கியிருந்து விட்டுத் திரும்பியிருந்த அம்முதியவருடன்
தொலைபேசியில் பேசினேன். "அதையேன் பிள்ளை கேட்கிறாய்? லண்டனுக்கு வந்தாப்
பிறகு தானே நிம்மதியாக நித்திரை கொண்டனான்" என்றார்.
அவர் தங்கியிருந்த காலம் கிறீஸ் மனிதர்கள் உலாவிய காலம். ஆள் மாற்றி ஆள்
ரோச்லைற்றை அடித்துப் பார்த்துப் பார்த்து இரவுகளில் கண்முழித்துக்
காவலிருப்பார்களாம். பெண்களைக் காயப்படுத்துவது, வீட்டுக்குள் புகுந்து
ஒழித்திருந்து விட்டு ஓடுவது போன்றவற்றைப் பற்றிப் பரவலாகச் செய்திகள்
வெளியாகியது தெரியும். மக்களும் ஒன்று பட்டு துணிந்து எதிர்த்ததை
அறிந்தோம். இவர்களது ஊரில் இரவில் வீடுகளில் ஓடு பிரித்து
நித்திரையிருப்பவர்கள் மீது கல்லெறிந்ததும் நடந்தன. பேய்கள் பல விதம்.
ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு மேலாகப் பாதுகாப்புக்காக நிலை கொண்டுள்ள
இராணுவத்தினர் அந்நேரங்களிலெல்லாம் தம் எசமானர்களின் கட்டளைகளுக்கேற்பத்
தம் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
கடைசியாக, சேவல் கூவுது. சூரியன் உதிக்குது போன்ற காலைக்காட்சிகள்,
கடற்கரைக் காட்சிகள் பற்றி நான் கேட்டதற்கு, இப்படிச் சொன்னார். "சேவல்
கூவியென்ன முழிப்பு? நான் ஒரு கண்ணுறங்கயில்லை. நாசமாப் போவாங்களின்ர
நாட்டுக்கு இனி நான் போகமாட்டன்".
|
|