|
|
தமிழ்ப் பள்ளியும் தலைமையாசிரியர்களும்...
நமது தமிழ்ப்பள்ளிச் சூழலில் நிர்வாகத் திறன்
இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது நாம் அனுபவிக்கிற சாபக்கேடா என்று
சொல்லத் தெரியவில்லை. அதே போழ்து, இது பரவலாக அனைத்து மொழிப் பள்ளிகளிலும்
இருந்தாலும், குறைவான எண்ணிக்கையில் இருக்கிற தமிழ்ப்பள்ளிகளில் மட்டும்
சற்றுத் தூக்கலாக உள்ளது. உன்னித்து நோக்கின் தம்மளவில் நேர்த்தியாக
இருக்கின்ற பள்ளியின் தலைமைத்துவம், பள்ளிக்கு வெளியே அக்குத் தொக்கற்ற
உறவில் சிதிலப்பட்டுக் கிடக்கிறது. எழுபதுகளிலும் கோளாறுகள் இருந்தன.
அன்றையச் சூழலில் இல்லாமைக்கு மத்தியில் அக்கோளாறு ஏற்றுக்கொள்ளத்தக்க
வகையில் இருந்தது. தலைமையாசிரியர்களின் கற்பித்தல் வலுவுக்கு முன், அது
பெரிதாக விவாதிக்கப்படவில்லை.
அன்று பணியாற்றிய தமிழாசிரியர்கள் மட்டுமல்ல, தலைமையாசிரியர்களும் போதனா
முறையில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தார்கள். அன்று அவர்களுக்கு
மாணவர்களாக இருந்த அனைவரும் அடிப்படைத் திறன்களில் தேர்ச்சிப்
பெற்றிருந்தார்கள். கல்வியின் நோக்கில் யாரும் தவிர்த்துப் போகாதபடி
அனைவருக்கும் வாசிக்கத் தெரிந்தது. அந்தக் கடைநிலை மாணாக்கரில்
பெரும்பான்மையோருக்குத் தமிழ் ஏடுகளை வாசிக்கின்ற அளவுக்கு ஞானம்
இருந்திருந்தது. அப்பொழுதிருந்த தலைமையாசிரியர்கள் மனனத் திறனுக்கும்
எழுத்துக்கும் அதிகப்படியான அக்கறை செலுத்தியிருந்தார்கள். துணைப்பாட
உபகரணங்கள் என்பதைவிட தங்களின் பேச்சுக்ம் மாணவர்களின் எழுத்துக்கும்
முக்கியத்துவம் வழங்கியிருந்தார்கள்.
இன்று கையாளப்படும் துணைப்பாட உபகரணங்களைப் போல் அன்று பிரத்தியேகமாகப்
பயன்படுத்தப்படவில்லை. அங்ஙனமே பயன்படுத்தினாலும் இலக்கியம் சார்ந்த பழைய
நூல்களாகத்தான் இருந்திருக்கும்.அதோடு பெற்றோர்களும் எச்சூழ்நிலையிலும்
பள்ளிக்கே ஆதரவாக இருந்தனர். ஆசிரியர்களைக் கண்டால் கையெடுத்துக்
கும்பிடும் அளவுக்கு உயர் மதிப்பை வைத்திருந்தார்கள். இத்தனை சிறப்புகளும்
பள்ளியை வழி நடத்தி வருகின்ற தலைமையாசிரியர்ளையே சாரும். ஆனால், அன்றையத்
தலைமையாசிரியர்களிடம் இருந்த ஒரே குறைபாடு மலாய் மொழி ஆளுமையைத்தான்
சுட்டிக்காட்ட முடியும். மற்றபடி, வாங்குகிற சம்பளத்திற்குக் குந்தகம்
ஏற்படாமல் பணி புரிந்தனர்.அந்தப் பள்ளியில் மலாய் மொழியில் எழுதவும், மலாய்
ஆவணங்களை வாசித்துப் புரிந்து கொள்ளவும் தெரிந்த ஆசிரியர்கள் அல்லது அலுவலக
எழுத்தர்கள் இருந்தால், அவர்களுக்கு ஏராளமான அனுகூலங்கள்
நிச்சயமாகக்கிட்டியிருக்கும்.
ஆங்கிலத்தில் மற்ற இன ஆசிரியர்களைக் காட்டிலும் தமிழாசிரியர்கள் கூடுதல்
திறம் பெற்றிருந்தாலும், மலாய் மொழியில் தங்களை வளர்த்துக்கொள்ள பிரயத்தனம்
எடுத்துக்கொள்ளவில்லை. யாரேனும் மலாய்க்காரர் ஒருவர் கொஞ்சம் நாகரிகத்
தோற்றத்தில் பள்ளி வளாகத்தில் நுழைந்துவிட்டால், கையும் காலும் ஓடாமல்
அந்தக் கோப்பைக் கொண்டு வா, இந்தக் கோப்பைத் தயார்ப்படுத்து எனத் தம் பள்ளி
ஆசிரியர்களை வேலை வாங்கியதும் உண்டு. பின்னர், வருகை தந்த அந்த
மலாய்க்காரர் தலைமையாசிரியரின் அறைக்குள் நுழைந்த பின்னர்தான் அவர்கள் வந்த
நோக்கம் அறிய வந்து அசடு வழிய சமாளித்து அனுப்பி வைப்பர். பல வேளைகளில்
மலாய்க்கார வியாபாரிகள்கூட ஏதேனும் உபயம் நாடி வந்தவர்களாகவும் இருக்கும்.
மலாய், மலாய்க்காரர்கள் என்றாலே அதிகாரத்துவமிக்க இருப்பு எனும் புரிதலில்
அன்றையத் தலைமையாசிரியர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இப்படித் தொட்டதெற்கெல்லாம் கிலி பிடித்துத் தடுமாறிய சம்பவங்கள் ஏராளம்!
அதுவும் உட்புறப் பகுதியிலும் தோட்டங்களிலும் உள்ள பள்ளியென்றால் நிலைமை
படு மோசம்! இது போன்ற சம்பவங்களை இன்றளவும் நினைவில் நிறுத்தி நம்மோடு
பகிர்ந்துகொள்கிற சற்று வயது முதிர்ந்த ஆசிரியர்களைக் கேட்டால் கதை
கதையாய்ச் சொல்வார்கள். இப்படிக் குறுகலான கண்ணோட்டத்தில் அவர்களை
அவதானித்தது எத்துணைப் பெரிய தவறென்று இற்றை நிலையுடன் ஒப்பிட்டுப்
பார்த்தால் உணர முடிகிறது.
இற்றைத் தமிழ்ப்பள்ளியில் பணி புரிகின்ற பெரும்பான்மையான
தலைமையாசிரியர்களிடம் உயர்கல்விச் சான்றிதழ் உண்டு; கணினி, தொழில் நுட்பத்
திறன் உண்டு; பேச்சு வழமையில் அத்தனை திறமைகளும் உண்டு; பல்லின மாணவர்க்
கலாச்சாரத்தில் கற்று வந்த பட்டறிவு உண்டு; எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி
இலாகாக்களிடம் நேரடியாகப் பேசுகின்ற அளவுக்குத் திமையும் உண்டு. அதற்காக
இத்தனையும் கொண்டிருப்பவர்கள் எல்லாரும் தரமான நிர்வாகத்தை வழங்குவார்கள்
என்ற கருத்துக்கும் வரக்கூடாது. நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தைக்
கட்டுக்கோப்புடனும் செல்நெறியை வகுத்துக் கொண்டு விலைபலனைத் தந்தபடி
செல்வது. இவையெல்லாம் இன்று நிறைவேறுகின்றனவா? இவர்களின் ஆளுமைக்கு ஏற்ப
சமூகம் இயங்குகிறதா?
ஒரு காலத்தில் ஆசிரியர்கள் மட்டுமே சமூகத் தளத்தில் மேனிலை இடத்தைப்
பெற்றிருந்தார்கள். ஊதிய அடிப்படையில்கூட ஆசிரியர்கள் ஓரளவு
சிறப்பாயிருந்தார்கள். இன்றைய நிலை அப்படியல்ல. ஆசிரியர்களைக் காட்டிலும்
அதிக வருமானம் ஈட்டக்கூடிய பெற்றோர்கள் பெருகிவிட்டார்கள். கல்வித்
தகுதியிலும் ஆசிரியர்களைவிட உயர்கல்விச் சான்றிதழ் எல்லாம்
வைத்திருக்கிறார்கள். நாட்டின் கல்விக் கோட்பாடு விழையும் நோக்கங்களை
ஆசிரியர்களைக் காட்டிலும் பெற்றோர்கள் முழுமையாய்த் தெரிந்து
வைத்திருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சூழலில் அதை அடிக்கோடிட்டுப் பேசும்
பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியான சூழலில்தான் இன்றைய
மலேசிய தலைமையாசிரியர்ப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதிலுள்ள சிக்கல் யார், யாரை நோக்கி அதிகாரம் செய்வது என்பதுதான். பள்ளி
சொல்வதைத்தான் பெற்றோர் செய்ய வேண்டும் எனத் தலைமையாசிரியர்
விரும்புகிறார். மற்றொரு பக்கம், பெற்றோர் சொல்வதையும் பள்ளி கேட்க
வேண்டும் என்கிறது. முடிவில், நானா, நீயா எனும் இழுபறி நிலையில்
பாதிக்கப்படுவது சம்பத்தப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் மட்டுமல்ல,
தமிழ்ப்பள்ளியுந்தான்! இந்த விவகரத்தில், அடையாளம் காணப்பட்ட ஒன்றுமறியாப்
பிள்ளைகள் கட்டங் கட்டமாகப் பழிவாங்கப்படுகின்றனர். இது மறுக்கவியலா உண்மை!
பெற்றோர் விரும்புகிற பள்ளியின் அமைப்பைச் சீர்தூக்கிப் பார்த்து அவர்களின்
கருத்துகளைப் பெற்றோர் ஆசிரியர்ச் சங்கத்தின் மூலம் நடுவு நிலையாக
விவாதித்து (வாதித்து அல்ல) அனைவரையும் அரவணைத்துப்போகும்
தலைமையாசிரியர்கள் இன்று அருகி குறுகி விட்டார்கள். பெரும்பான்மையான
தலைமையாசிரியர்களுக்குக் கேள்வி கேட்கிற பெற்றோர்களைக் காண்டாலே ஒருவித
ஒவ்வாமை! அந்தக் கேள்விகள் வெறுமனே கேள்விகளாக இல்லாமல், அடுத்த கட்ட
செயற்பாட்டை முன்னிறுத்தும் அறிவுப்பூர்வமாக இருப்பதால், நமக்கேன் வீண்
வேலையென கேள்விகளின் கணைகளைத் தொடக்கத்திலேயே முறித்துவிடுகிறார்கள்.
இங்கு ஒரு சம்பவத்தைச் சுட்டலாம் என எண்ணுகிறேன். அண்மையக் காலமாகச் சில
தமிழ்ப்பள்ளிகள் புதிய தோற்றத்துடன் இயங்கி வருவதைக் காண்கிறோம்.
அரசிடமிருந்து ஆறு இலட்சம் வெள்ளி இதற்காகச் செலவிடப்பட்டதென்று
தலைமையாசிரியர் கூறுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்தச் செலவினத்தின்
துல்லியத்தையும் நம்பகத்தையும் பெற்றோர் ஆசிரியர்ச் சங்கக் கூட்டத்தில்
பெற்றோர் கேட்கிறாரென்றால் அதற்குப் பதிலுரைக்க வேண்டியது தலைமையாசிரியர்
அல்லவா? அந்தப் பெற்றோர்க் குழுமத்தில் கட்டுமானத் திறம் பெற்ற
உறுப்பினர்கள் இருக்கின்ற பட்சம் அதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டியது
தலைமையாசிரியர்தானே?
அரசு செய்வது எல்லாம் சரியானதுதான் என்று ஆமோதித்துக்கொண்டிருந்தால்,
நாளையொரு நாள் பள்ளியின் கட்டிடம் இடிந்து விழுந்தாலும் விழலாம். ஆக, சில
நியாயமான கோரிக்கைகளை மேலிடத்திற்குத் தெரிவிக்கும் திராணியங்கூட
தலைமையாசிரியர்கள் பலரிடம் இல்லை. கிடைகல்வி அதிகாரிகள் திடீர் வருகை
மேற்கொள்கிறபோதெல்லாம் பள்ளியின் குறைபாடுகளை முன்வைக்காமல் திடீர்
அலங்காரங்களின் வேலைப்பாடுகளில் கவிழ்த்துவிடுகிறார்கள். உரிமையோடு சொல்ல
வேண்டிய கடப்பாடு முழுமையாய் இருந்தும் பின்வாங்கிவிடுகிறார்கள். இது போன்ற
சூழல்தான் பெற்றோரின் அவநம்பிக்கைக்கு வித்திடுகிறது. காலப்போக்கில் இரு
சாராரும் எதிரும் புதிருமாக வம்பாடிக்கொள்ள அது ஆசிரியர்கள் மத்தியில்
பிளவை உண்டாக்கி குழு மனப்பான்மையுடன் இயங்குகிற போக்குக்கு வித்திட்டுப்
பள்ளிக்குள் ‘தரித்திரச் சூழலை’ உண்டாக்கிவிடுகிறது.
தமிழ்ப் பள்ளியின் தலைமைத்துவங்கூட ஒரு வகையில் பரவாயில்லை.
இடைநிலைப்பள்ளிகளில் உள்ள தலைமைத்துவம் புத்திசாலித்தனமானது. பள்ளியின்
தோற்றத்தை மாற்றியமைப்பதிலேயே குறியாய்க் கிடக்கும் பள்ளி முதல்வர்கள்,
அதில் வெற்றி பெற்றுவிட்டாரென்றால் வெகு விரைவில் DG52 வாங்கி பதவி
உயர்வும் கூடுதல் வருமானத்தையும் பெற்றுக் காலாட்டிக் கொண்டிருப்பார்கள்.
அதைவிடத் தமிழ்ப் பள்ளியின் தலைமைத்துவம் மேலென்று சொல்லலாம்! தமிழ்ப்
பள்ளியைச் சுற்றி மையமிடும் இக்கட்டுரையில் மாதிரிக்கு ஒரு சம்பவத்தைத்தான்
மேலே சுட்டியுள்ளேன். தங்களின் பள்ளிக்கு நிதி திரட்டும் அனுபவமின்மை,
அரசும் அரசு சார இயக்கங்களும் வழங்குகின்ற சலுகைகளை உரிய முறையில் பெறத்
தவறுதல், யார் யாரிடம் எவ்வாறு அணுகுவது போன்று நிறைய சொல்லலாம்.
விதிவிலக்காக அங்கொன்று இங்கொன்றுமாகத் தரமான தலைமையாசிரியர்கள் இல்லாமல்
இல்லை. அது போதுமா என்பதுதான் கேள்வி. அதைத்தான் இங்கும் கேட்கிறோம்.
ஆனால், கேட்பதற்குக் காதுகள்தான் மந்தம்!
|
|