|
|
வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு ஆதவன் தீட்சண்யா பதில் தருவார்.
கேள்விகளை editor@vallinam.com.my என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
எழிலன் அரசு - தஞ்சை
கேள்வி : எழுத்தாளர் அவர்களுக்கு, உங்களை இந்தக் கேள்வி - பதில் பகுதி
மூலம் அறிகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். இதை உங்களிடம் கேட்பதா
வல்லினத்திடம் கேட்பதா என தெரியவில்லை. எனக்கு ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன்
வரை எழுத்துகள் அறிமுகம். அப்படியிருக்க பெரிதும் அறிமுகம் இல்லாத ஷோபா
சக்தி போன்றவர்களையும் உங்களையும் வாசகர்களுடன் உரையாட வைப்பதில் என்ன
அவசியம். (இதை நான் குற்றச்சாட்டாகக் கூறவில்லை). இதன் பின்ணணிதான் என்ன?
பதில் : அதிகளவில் விற்பனையாகும் வார இதழ் ஒன்று பளிச் பிரபலங்கள் என்று
எட்டுபேரை அடையாளப்படுத்தி அவர்கள் தரும் ஒரு செய்தியை வெளியிடும் தொடர்
ஒன்றை தொடங்கியிருந்தது. பளிச் பிரபலங்களின் முதற்பட்டியலில் எனது பளீர்
படமும் செய்தியும் வெளியான அன்றைக்கு நான் ஒரு பயணத்தில் இருந்தேன்.
ரயிலில் அந்த இதழை பலரும் படித்துக் கொண்டிருந்த போதும் இந்த
போட்டோவிலிருப்பது நீங்கள்தானா என்று என்னிடம் ஒருவரும் கேட்கவில்லை.
ஒசூரில் ரயிலை விட்டிறங்கி வெளியே வருகிறேன். என்னைப் போலவே
இறங்கியவர்களும் வழியனுப்பவும் வரவேற்கவும் வந்தவர்களுமாக குறைந்தபட்சம்
மூவாயிரம் பேராவது அந்த நேரத்தில் அங்கு இருந்திருப்பார்கள். ஆனால்
ஒருவருக்கும் என்னைத் தெரியவில்லை. எனக்கும் கடக்கிற முகங்கள்
புதிதாகத்தான் தெரிந்தன. நாங்கள் ஒரே ஊரில் இருக்கிறோம். ஆனால்
எங்களுக்குள் யாருக்கும் யாரையும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே, பிரபலம்
என்பதன் பொருள் ஒருவர் இயங்கும் தளத்தில் அறியப்பட்டவராய் இருக்கிறாரா
என்பதுதானேயன்றி ‘பொறந்தக் குழந்தையக் கேட்டாக்கூட அவரைப் பற்றி சொல்லும்’
என்கிற அளவுக்கு தமிழ்ச்சினிமா நாட்டாமைக் கணக்காக இருக்க
வேண்டுமென்பதில்லை. இன்னும் சொன்னால், ஒரே துறையில் இயங்குகிறவர்கள்
மத்தியிலும்கூட அறியப்படாமல் இருந்துவிடுவதால் ஒரு ஆபத்தும் இல்லை.
ப.சிங்காரம் போன்றவர்கள் அப்படித்தானே ஒடுங்கி இருந்துவிட்டுப் போனார்கள்.
பிரபலங்கள் என்று நீங்கள் அறிந்துவைத்திருக்கிற யாரையும் அவர்கள்
பிறப்பதற்கும் முன்பே நீங்கள் அறிந்திருக்க முடியாது என்று நம்புவோமாக.
அ,ஆ,இ,ஈ,உ,ஊ என்று எல்லா எழுத்துகளிலும் தொடங்கும் பெயருள்ள
எழுத்தாளர்களின் எழுத்துகளை ஒருவர் அறிந்தவைத்திருப்பது சாத்தியமில்லை,
தேவையுமில்லை. எனவே ஜெ என்ற எழுத்துடன் தொடங்கும் பெயருள்ள எழுத்தாளர்களின்
எழுத்துகளை மட்டும் ஜெஜெவென நீங்கள் அறிந்துவைத்திருப்பதில் பிழையொன்றும்
இல்லை. நாங்களிருவரும் இந்த உலகத்தில் பிறந்துவிட்டிருக்கிறோம் என்பதைக்
கூட நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே தாங்கள்
என்னையோ ஷோபாசக்தியையோ அறியாமலிருப்பது குறித்த மகிழ்ச்சியை நான் வல்லினம்
வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒன்றை சொல்ல
வேண்டியிருக்கிறது. சைலன்சரின் மஃப்ளரை கழற்றிவிட்டு டபடபவென்று
வண்டியோட்டி கவனத்தை ஈர்க்கும் அற்பத்தனங்கள்கூட கணநேரத்து பிரபலமாக ஒருவரை
ஆக்கிவிடுகிறது. பரபரவென்று எதையாவது பிராண்டியோ, யாரையாவது வம்பிழுத்தோ,
என்னைத்தவிர யாருமே எழுத்தாளனில்லை என்று அபத்தமாக உளறிக்கொட்டியோ எனது
இருப்பை அறிவித்துக்கொண்டே இருப்பதன் மூலமாகவும்கூட பிரபலமாகிவிட முடியும்.
அவ்வளவு எதுக்கு, முப்பதடி தூரத்துக்கு மூக்கிலே பட்டாணி உருட்டினால்கூட
பிரபலமாகிவிடலாம். இதோ உங்களுக்கு ஒரு 500 பக்கத்தில் பதில் எழுதி பைண்டிங்
செய்து அனுப்பிவைத்தேனென்றால், அதை நீங்கள் பார்க்கிறவர்களிடமெல்லாம்
சொல்லி அங்கலாய்த்து என்பேரை பிரபலமாக்கிவிடமாட்டீர்களா என்ன? விடுங்கள்
எழிலன், இப்படியான சில்லறைத்தனங்களை செய்து பிரபலமாவதைவிட மூணாம்பேருக்கு
தெரியாமல் எங்காவது ஒரு மூலையில் இருந்துவிட்டுப்போகிறேன். உலகம் ரொம்பவும்
பெரியது.
மையமான கேள்விக்கு வருவோம். ‘‘பெரிதும் அறிமுகம் இல்லாத ஷோபா சக்தி
போன்றவர்களையும் உங்களையும் வாசகர்களுடன் உரையாட வைப்பதில் என்ன அவசியம்’’
என்று கேட்பதன் மூலம் உங்களது பிரபலப்பட்டியலுக்குள் அடங்காத யாரிடமும்
பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு கருத்து ஏதுமிருக்காது என்று
நம்புகிறீர்கள்போலும். அதற்கு நானென்ன செய்ய முடியும்?
கேள்வி : மற்றுமொரு கேள்வி, நீங்களும் ஷோபா சக்தியும் சகோதரர்களா? பார்க்க
ஒன்று போல இருக்கிறீர்கள்? அப்படியென்றால் உங்கள் சகோதரர்கள் இன்னும்
யாரெல்லாம் இருக்கிறார்கள். அவர்களும் பதில் கொடுப்பார்களா?
பதில் : எனக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவன் கோவையில். இன்னொருவன்
வீட்டைவிட்டு வெளியேறி பத்துவருடங்களுக்கும் மேலாகிறது. எங்கிருக்கிறான்
என்பதை நாங்களறியோம். அவனது சகவாசம் குற்றச்செயல்களில் அவனை
மூழ்கடித்துவிட்டது. ஆகவே அவர்களிருவரும் உங்களோடு உரையாடும் கெடுவாய்ப்பு
இப்போதைக்கு இல்லை. நிம்மதி கொள்ளுங்கள். மற்றபடி ஷோபாசக்தியும் நானும்
சகோதரர்களல்ல, பரஸ்பரம் அக்கறையும் மதிப்பும் உரிமையும் கொண்டிருக்கிற -
கருத்துகளை மனம் விட்டு விவாதித்துக்கொள்கிற தோழர்கள். மனிதர்களுக்குத்
தேவையும் அதுவாகத்தான் இருக்கிறது.
செல்வராஜா - இலங்கை
கேள்வி : மலேசிய - சிங்கை எழுத்துகளை நீங்கள் வாசிப்பதுண்டா?
அவ்வெழுத்துகள் குறித்த பேச்சுகள் அண்மைய காலமாகதான் அதிகம்
ஒலிப்பதாகப்படுகிறது. இன்னும் வேறெந்த நாடுகளில் தமிழ் இலக்கியம் தீவிரமாக
முன்னெடுக்கப்படுகிறது?
பதில் : சிங்கப்பூர் இளங்கோவன் அவர்களின் நாடகப்பிரதிகள் சிலவற்றை
வாசித்திருக்கிறேன். சென்னை கலைக்குழுவின் ஒருங்கிணைப்பில் அவரது நாடகம்
சிலவற்றின் ஒளிப்பிரதியை காணும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ரெ.
கார்த்கிகேசு, சை. பீர்முகமது என்று அவ்வப்போது வாசித்துதுண்டு. ம.
சண்முகசிவா, நவீன், பாலமுருகன், யோகி, சிவா பெரியண்ணன், தேவராஜன்
போன்றவர்களின் எழுத்துகளை சமீபத்தில்தான் இணையத்தில் வாசிக்கத்
தொடங்கினேன். அ. ரெங்கசாமியின் இமயத்தியாகம் நாவலை
படித்துக்கொண்டிருக்கிறேன்.
மலேசியா-சிங்கப்பூருக்கு புலம் பெயர்க்கப்பட்டதைப்போலவே இலங்கைக்கு புலம்
பெயர்க்கப்பட்டு இன்று மலையகத்தமிழர் என்கிற தனியடையாளம் பெற்றுள்ள இந்திய
வம்சாவளியினரது எழுத்துகள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. தலித்துகளை ஈடேற்ற
வந்தவர்கள் என்று கொண்டாடப்படுகிற பிரிட்டிசார் இங்கிருந்த சாதிமுறையை
தங்களது சுரண்டலுக்கு எவ்வாறு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை
அறியத்தருகிற ஆவணங்களான அவை தமிழின் புலம்பெயர் இலக்கியத்தின்
தொடக்கமெனவும் விளங்குகின்றன. அதே காலகட்டத்தில் உலகின் வெவ்வேறு
பகுதிகளுக்கு - 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரிட்டிசாராலும்
பிரான்சினராலும் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் கலை இலக்கிய ஆக்கங்கள்
எதையும் நான் கண்டதில்லை. அவர்கள் அங்கு வெறும் வாயோடும் வயிற்றோடும்
சென்றுவிடவில்லை என்பது எந்தளவிற்கு உண்மையோ அதேயளவுக்கு அவர்கள் தங்களை
ஏதோவொரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டுதானிருப்பார்கள் என்பதும் உண்மை.
இங்கிருந்து அவர்கள் கொண்டு போன பெயர், சாமி, கோயில் எல்லாம் இருக்கும்
போது அவர்கள் கொண்டு சென்ற மொழியும் கதைகளும் பாட்டுகளும் என்னவாயின என்கிற
ஆய்வு தேவைப்படுகிறது.
வடகிழக்கு இலங்கையின் தமிழர்களது எழுத்துகள் தனித்த வகைமையாக
இருப்பதைப்போலவே இனப்படுகொலைகளின் கொடூரத்தால் புலம் பெயர்ந்து அவர்கள்
உலகின் பலபாகங்களுக்கும் சென்றதன் பின்னே உருவாகியுள்ள எழுத்துகளும்
தனிவகைமையானவை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் ஈழத்திலிருந்து
மலேசியாவுக்கு சென்ற தமிழர்களான த.நாகமுத்து (நீலகண்டன்-1925),
அ.நாகலிங்கம் (சாம்பசிவம்- ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம்- 1927)
ஆகியோரைப் போன்று பொருளீட்டும் நோக்கங்களுக்காக பிறநாடுகளுக்கு சென்றவர்கள்
எழுதியவற்றுக்கும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில்
தாய்நிலம்விட்டு வெளியேறி வேற்றுமண்ணில் தஞ்சம்புகுந்தவர்கள்
எழுதுகிறவற்றுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன. கால்நூற்றாண்டுக்கும்
மேற்பட்ட இந்த புலம்பெயர் வாழ்விலிருந்து உருவான தலைமுறையினர் உலகின்
பலபாகங்களிலிருந்தும் புகலிட இலக்கிய ஆக்கங்களை முன்வைக்கிறார்கள்.
கேள்வி : தமிழ்க் கவிதைச்சூழலில் இன்றைக்கு முக்கியமான ஆளுமையாக யாரைக்
கருதுகிறீர்கள். ஏன்?
பதில் : ‘இப்போதெல்லாம் யாரும் உருப்படியாக எழுதுவதில்லை-
நம்மிருவரைத்தவிர’ என்று இன்னொரு எழுத்தாளரை பாராட்டும் சாக்கில்
தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறவர்கள் மலிந்து கிடக்கிறார்கள். தனக்குத்தானே
முடிசூட்டிக் கொள்கிற அளவுக்கு வெட்கம் கெட்டவர்களையும் தன்னைத்தானே
கொண்டாடிக்கொள்கிற சுயமோகிகளையும்கூட நம்மால் காணமுடிகிறது. மாற்றி மாற்றி
சொரிந்துகொள்ள நகம் வளர்க்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘இது
முழுமையான பட்டியல் அல்ல’ என்கிற காப்புவாசகத்துடன் தனக்கு வேண்டியவர்களின்
பெயர்களால் நிரப்பப்பட்ட பட்டியல்கள் இங்கு அனேகம் பேரிடம் உண்டு. பரஸ்பர
அறிமுகம்/பாராட்டு, குறிப்பிட்ட கருத்தோட்டம், சாதி, மதம், வட்டாரம் அல்லது
குறிப்பிட்ட பதிப்பகம் சார்ந்த அளவிலான பிணைப்பின் அடிப்படையிலேயே இந்தப்
பட்டியல்கள் தயாராகியிருப்பதை மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்துவிடும்.
இன்னும் சிலர் தங்களுக்கு இலவசமாக அனுப்பப்படும் புத்தகங்களிலிருந்தே
பட்டியல் தயாரிக்கிறார்கள். ஒன்றாக சேர்ந்து தண்ணியடிப்பது அல்லது
குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதும்கூட இப்படியான பட்டியல் தயாரிப்பின்
பின்புலமாக இருந்துவிடுகிறது. சார்புநிலைகளைக் கடந்து ஒரு கவிதை
உருவாவதற்கான சூழலே இல்லாத நிலையில் எந்த பிரதிபலனும் பாராமல் சார்புநிலை
இல்லாமல் கவிதை/கவிஞர் பற்றிய மதிப்பீடு ஒன்று இருப்பதாகவும் நான்
நம்பவில்லை. எனவே கவிதைக்கான சூப்பர் ஸ்டார் என்று யாரையும் முன்வைக்கும்
வாய்ப்பை நான் துறக்க விரும்புகிறேன். கவிதையின் மகாராஜாவை
தேர்ந்தெடுக்கும் மாலையை நீங்கள் வேறு யானையிடம் கொடுங்கள் நண்பரே.
ஆளுமை மதிப்பீடு மட்டுமல்ல, விருதுகள் மற்றும் பரிசுகளுக்கான
தேர்வுகளையும்கூட இந்த சார்புத்தன்மைகளே தீர்மானிக்கின்றன. பலசுற்று
பரிந்துரைகளின் பேரில் வழங்கப்படுகிற விருதுகளை மிகுந்த
ஜனநாயகப்பூர்வமானதாக/ சார்புத்தன்மையற்றதாக / நடுநிலையானதாக நாம்
கருதுகிறோம். இந்த பலசுற்றுப் பரிந்துரைகள் யாரையெல்லாம் விலக்கிவைக்கின்றன
என்பதை கவனிப்போமானால் தேர்வுப்பட்டியலுக்குள் மறைந்துள்ள சார்புத்தன்மை
ஜனநாயக வேடம் பூண்டு வெளிப்பட்டிருப்பதை உணர முடியும். அதுவுமில்லாமல்,
உங்கள் தரப்பும் பங்கெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்பதைத்தாண்டி
ஜனநாயகம் என்பதும் சார்புத்தன்மை உடையதுதானே. ஜனநாயகம் என்பதே
சார்புத்தன்மை கொண்டதாய் இருக்கும்போது ஒரு தனிமனிதரின் தேர்வும்
மதிப்பீடும் எவ்வளவு சாய்மானங்களைக் கொண்டிருக்கும் என்பதை உணர
முடிகிறதல்லவா? அதனால்தான் பட்டியல்களை நீட்டுவதற்கோ பரிந்துரைகளை
முன்வைப்பதற்கோ நான் துணிவதில்லை.
இது தப்பித்துக்கொள்ளும் உத்திதானே என்று நீங்கள் குற்றம் சாட்டலாம்.
இல்லை. நடப்புலகம் முன்வைக்கும் அறம், ஒழுங்கு, அதிகாரம் ஆகியவற்றுடன்
பொருந்திப்போகமுடியாத ஒரு தனிமனிதரின் அவஸ்தைகளையும் சீற்றத்தையும்
எதிர்நிலைக் கொண்டாட்டங்களையும் மற்றமை மீதான கரிசனங்களையும்
வெளிப்படுத்துகிற அசலான ஒற்றைக்கவிதைக்காக/ ஒரேயொரு சொல்லுக்காகவும் கூட
ஒருவரைக் கொண்டாடலாம் என்றே கருதுகிறேன். அப்படியான கவிதையை படிக்க நேர்கிற
போதெல்லாம் அதை எழுதியவரை உடனே தொடர்புகொண்டு உரையாடுவதிலும் எனது
கருத்துகளை பகிர்ந்துகொள்வதிலும் மட்டற்ற ஆர்வம் கொண்டிருக்கிறேன்.
வாழ்வின் மூர்க்கமான தருணங்களைப் எழுதுவதற்கு காலம் உலவவிட்டுள்ள பலரில்
சிலரை நான் தொடர்ந்து கண்டுவருகிறேன். நீங்களும் காணக்கூடும்.
கேள்வி : நீங்கள் முழுக்க கருத்து ஒத்துப்போகும் எழுத்தாளர்கள் உண்டா?
பதில் : அவசியமில்லை. சாத்தியமுமில்லை. எனக்கானதைப்போலவே வேறு எவருடைய
வாழ்வும் மனவமைப்பும் முற்றிலும் வேறானது- தனித்துவமானது. ஆனால் ஏதோவொரு
வகையில் கூகியின் எழுத்துகளோடு நான் கூடுதலாகவும் ஒருமை கொள்கிறேன். தன்
காலத்தை ஒரு எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொள்வது, தனக்கு முன்னே வரலாறு என்று
முன்வைக்கப்பட்டிருப்பதை எவ்வாறு மாற்றி எழுதுவது என்பதை அவரது எழுத்துகள்
எனக்கு உணர்த்துகின்றன. அறியப்பட்ட வரலாற்றை நகாசுப்படுத்தும் வகையில்
கூடுதலாக சில பக்கங்களை எழுதிச் சேர்த்து கைத்தட்டல் பெறுவதல்ல என்வேலை
என்று உணர்ந்துகொள்வதற்கு அவரது எழுத்துகளே துணைசெய்தன.
அருணாசலம், தமிழ்நாடு
கேள்வி : தலித் மக்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்ட்கள் உண்மையாகவே
போராடுகிறார்களா? அல்லது வெறும் வோட்டு அரசியல் மட்டும்தானா?
பதில் : மற்ற சாதிகளெல்லாம் ஏதோ நாட்டுநலனைப் பிரதானப்படுத்தும் கொள்கை
கோட்பாடுகளையெல்லாம் ஆரதீர ஆய்ந்தோய்ந்து வாக்களிக்கிற மாதிரியும்
தலித்துகள் மட்டும் தங்களுக்கென்று ஏதாவது செய்கிறவர்கள் அல்லது செய்கிற
மாதிரி நடிக்கிறவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிடுகிறார்கள் என்பது போன்றதுமான
அனுமானத்திலிருந்தே ஓட்டு அரசியல் மட்டும்தானா என்கிற கேள்வி எழுகிறது.
சிறுபான்மையினர் பற்றிய விவாதங்களிலும்கூட இதேமாதிரியான ஓட்டரசியல் என்கிற
குற்றச்சாட்டு இடம்பெறுவதைக் காணமுடியும். இவர்களுக்கெல்லாம் சுயமான அறிவு
இல்லை, யாராலும் இவர்களை ஏமாற்றிவிட முடியும் என்கிற
முன்தீர்மானத்திலிருந்தும்கூட இப்படியான கேள்விகள் முளைக்கின்றன.
தலித்துகள் செறிந்து வாழும் பெரும்பாலான தொகுதிகளில் அப்பட்டமான தலித்
விரோதக் கட்சியான காங்கிரஸ் பலநேரங்களில் வெற்றிபெற்றிருப்பதை நாம் எவ்வாறு
விளங்கிக் கொள்வது?
இப்போது கேள்வியின் முதற்பகுதிக்கு வருவோம். இந்தியாவின் முதல்தலைமுறை
கம்யூனிஸ்டுகளில் ஒருவரான சிங்காரவேலர், பண்டிதர் அயோத்திதாசருடன் இணைந்து
பணியாற்றியதையும், அரசியல்ரீதியான தற்சார்புக்கு வழிவகுக்கும் என்பதற்காக
அம்பேத்கர் முன்வைத்துப் போராடிய இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி போன்ற
கோரிக்கைகளை ஆதரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதையும் கவனத்தில் வையுங்கள்.
ஆனால் இந்த பழங்கதைகளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதால் தலித்துகள்
அன்றாடம் சந்திக்கிற தீண்டாமைக் கொடுமைகள், ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள்,
பாகுபாடுகள், மறுத்தொதுக்குதல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிற தலித்திய
பெரியாரிய அமைப்புகளோடு இணைந்தும் தனித்து சுயபலத்திலும் கம்யூனிஸ்டுகள்
போராடுகிறார்கள். இத்தகைய போராட்டங்களில் சாதியவாதிகள் மற்றும்
அரசியந்திரத்தின் தாக்குதல்களையும் வழக்குகளையும் தண்டனைகளையும்
தாங்கிக்கொண்டு களத்தில் இருப்பவர்களில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில்
உள்ளனர் (ஓட்டு கம்யூனிஸ்ட், வேட்டு கம்யூனிஸ்ட் எல்லோரையும் சேர்த்துதான்
சொல்கிறேன்). கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும்பாலானவர்கள் தலித்துகளாக
இருப்பதினாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்களில் ஒரு குறைந்தபட்ச
பகுதியினராவது தங்களை தலித்துகளாக உணர்வதினாலும் ஏற்படுகிற அழுத்தங்களினால்
இதெல்லாம் சாத்தியப்பட்டிருக்கிறது.
போராட்டங்களின் நெருக்கடியினால் தீண்டாமையின் ஒரு வடிவத்தை கைவிட
நேர்ந்தால் நூறு புதிய வடிவங்களை பிறப்பித்து களமிறக்குகின்றனர்
சாதியவாதிகள். சாதி இருக்கும்வரை தீண்டாமை ஒழியாது என்பது எளிய பாடம். ஆகவே
தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே சாதியொழிப்பு என்கிற
கருத்தியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சாதியொழிப்பானது சமூக அரசியல்
பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் தலித்துகள்மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள
ஒடுக்குமுறைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதோடு மட்டுமல்லாது
சகலமானவர்களையும் சுதந்திரமுள்ளவர்களாக்குகிறது. சாதிப்புனிதங்களையும்
பெருமிதங்களையும் காப்பாற்றுவதையே வாழ்வின் ஆகப்பெரும் கடமையாக கருதி
செலவிட்டு வந்த தம் ஆற்றல்களை வேறு ஆக்கப்பூர்வமான வழிகளில் திருப்பிவிட்டு
ஒரு செயலூக்கமுள்ளதாக இந்தியச் சமூகத்தை மாற்றுவதற்கான திறப்பாக
சாதியொழிப்பு திகழும். இந்த விரிந்த பொருளில்தான் நீங்கள் ‘தலித் மக்களின்
விடுதலை’ என்ற சொற்றொடரை பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றால், அந்த
விடுதலைக்காக கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல வேறு யாரும்கூட இன்றைய தேதியில்
போராடிக்கொண்டிருக்கவில்லை என்பதே என் கருத்து.
|
|