|
|
நண்பர் நவீனின் கடக்க முடியாத காலம் என்ற தொகுப்பைப் பற்றி பேச எனக்கு
வாய்ப்பளித்தற்கு நன்றி. பல முறை நான் தவிர்க்க முயன்றும், கடக்க முடியாத
அவரின் நட்பின் காரணமாகவே இறுதியில் ஒப்புக்கொண்டேன்.
அவருடைய எழுத்துக்குள் செல்வதற்கு முன், அவரைப் பற்றி சில விஷயங்களை கூற
நினைக்கிறேன். நவீனை எப்பொழுதிருந்து எனக்கு தெரியும் என்று நினைவிலில்லை.
ஆனால் அவரைப் பற்றி நான் புரிந்துக்கொண்ட சில விஷயங்கள் ரொம்ப ஆழமானது.
மலேசியாவின் தீவிர இலக்கியத்தின் வளர்ச்சியைப் பொறுத்தவரை அவரின் பங்கு
மிகப் பெரியது.
பல நல்ல எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுதவும், முற்போக்கான கருத்துக்கள்
தடைகளின்றி வெளிவரவும், பல இளம் எழுத்தாளர்கள் தங்களை
அடையாளப்படுத்திக்கொள்ளவும் ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
அதுவரை ஆங்காங்கே, தொடர்ச்சியற்று, கொஞ்சம் கொஞ்சமாய் இயங்கி வந்த
கலந்துறையாடல்களையும், படைப்புகளையும் ஒட்டுமொத்தமாக இழுத்து, நவீன இலக்கிய
பரப்புக்கு ஒரு தளத்தை அமைத்தவர். அவரது வயதையும், அவர் மீது இருக்கும் சில
முரணான கருத்துக்களையும், விமர்சனத்தையும் ஒப்பிட்டு இந்த உண்மையை நாம்
மறைக்க முடியாது. காலம் மட்டுமே தீர்மானிக்கட்டும் என்று அவரின் இந்த
உழைப்பை நாம் சட்டை செய்யாது இருந்துவிடவும் முடியாது.
எனக்கு தெரிந்து மலேசியாவில், படைப்பையும், பதிப்பையும், இலக்கிய
இயங்கியலையும் ஒரு சேர முன்னகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான
திறமைசாலி, நவீன் மட்டுமே. தீவிர படைப்பாளியாய் இருந்துக்கொண்டு,
நடுநிலையோடு ஒரு பதிப்பகத்தையும் நடத்திக்கொண்டு, இலக்கிய செயல்பாடுகளை ஒரு
இயக்கமாக ஒருசேர முன்னெடுத்து செல்வதிலும் தனித்திறன் பெற்றிருப்பதோடு,
கடின உழைப்பாளியாகவும் இருக்கிறார்.
என்னை எழுத வைக்க அவர் எடுக்கும் சிரமம், பொறுமை, சகிப்புத் தன்மை என்னை பல
சமயம் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அவர் என்னை எழுத கேட்டு எப்படியும் 3
அல்லது 4 மாதங்கள் கழித்துதான் எழுதி தருவேன். ஆனால் அந்த 4 மாத
காலத்திலும் குறைந்த 12 முறையாவது அழைத்து உச்சாகப்படுத்தி, புகழ்ந்து ஒரு
கட்டத்தில் நம்மை ஒரு குற்ற உணர்வுக்குள் தள்ளி, கண்டிப்பாக எழுதியாக
வேண்டும் என்று முடிவெடுக்க வைத்துவிடுவார். இந்த தீவிரத்தை அவர் என்னிடம்
மட்டுமல்லாது, வல்லினத்தில் எழுதும் எல்லோரிடமும் செலுத்துகிறார் என்பது
மிகப் பெரிய விஷயம். பலர் இன்று தீவிர எழுத்தாளர்களாக இனங்கண்டு
கொள்ளப்பட்டதற்கும், பலருடைய எழுத்து பரவலான வாசகர்களை சென்றடைந்ததற்கும்
அவர் ஒரு முக்கிய காரணம். காதல், வல்லினம் என்று இதழாகட்டும்,
இணையதளமாகட்டும், தமிழக இலக்கியவாதிகளை இங்கு வரவழைத்து கூட்டங்கள்
நடத்துவதாகட்டும், இங்கு வெளியீடுகானும் நமது படைப்புகள், தமிழகத்திலும்
கிடைக்க வழிசெய்தவையாகட்டும், மலேசிய நவீன இலக்கிய செயல்பாடுகளிலும்,
வளர்ச்சியிலும் அவருக்கு முக்கிய இடம் உண்டு.
அவரின் தொகுப்பை வாசிப்பதற்கு முன்பு இப்பொழுது நான் குறிப்பிட்ட இந்த
விஷயங்கள்தான் என் எண்ணத்தை ஆக்கிரமித்திருந்தது. இந்த மனநிலையில்தான்
அவரது தொகுப்பையும் நான் அனுகினேன்.
இதில் என்னை மிகவும் பாதித்தித்த கட்டுரைகள், அவதாரும் ஆத்தாவும் மற்றும்
நடை. இந்த இரண்டுமே நல்ல சிறுகதைகளை படித்த உணர்வைதான் எனக்கு
ஏற்படுத்தியிருந்தன. அது சிறுகதையாக இருந்திருக்க வேண்டியதா அல்லது
பத்தியாக இருந்திருக்க வேண்டியதா என்ற ஆய்வைக்காட்டிலும், நல்ல அனுபவத்தை
எனக்கு தந்ததா என்று மட்டுமே பார்க்கிறேன். அந்தவகையில் இந்தத் முழு
தொகுப்பின் உச்சைத்தையும் இந்த இரண்டு பதிவின் மூலமாக அவர்
தொட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
பல கட்டுரைகளில் பல இடங்களில் மிகவும் முரணாகவும், இவர் இதை எழுதியிருக்க
வேண்டிய அவசியமில்லை என்று எனக்கு தோன்றியது போலவே, இதிலும் அவர்
அவதாரத்தையும், நந்தலாலா திரைப்படத்தையும் பற்றி குறிப்பிட்டிருப்பது
தேவையற்ற ஒன்று என்று நினைக்கிறேன். அவர் இந்தக் கட்டுரையை பதிவு செய்ய
அவைகள் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது ஒரு நிலையற்ற மனநிலையை
பிரதிபலிக்கும் போக்கையும், தேவையற்ற இடைச்செருகலாகவும்,
மையமற்றிருப்பதாகவும் நம்மை உறுத்துவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனாலும்
இவற்றையும் தாண்டி நமது உணர்வில் ஆழ வேர்விட்டு விடுகிறது இந்த பதிவுகள்.
தனது எழுத்துக்கள் ஊடே பல சமயங்களில் அவர் முன்னிறுத்தும் கருத்துகள் அவர்
முதிர்ச்சியை காட்டுவதோடு மட்டுமல்லாது, ஒரு தீர்க்கமான இறுதியான முடிவை
கொண்டுள்ள அவரின் எழுத்துக்கள் மீது ஆச்சரியத்தையும் மரியாதையையும்
ஏற்படுத்துகிறது. இவ்வகையான முடிவுகளின் வாயிலாகவே வாழ்வைப்பற்றிய அவரது
நம்பிக்கைகளையும், அவரின் சித்தாந்தங்களையும் ஓரளவேனும் நம்மால்
புரிந்துக்கொள்ள முடிகிறது.
“அங்காடித் தெரு: மீந்திருக்கும் வாழ்வு”, “மறக்கும் கலை”, “நானும் சில
சாமியார்களும்”, “கண்டடைதல்” இவையெல்லாம், நவீனை ஒரு நல்ல எழுத்தாளனாக
மட்டுமின்றி நல்ல சிந்தனையாளனாகவும் இனங்கண்டுகொள்ள உதவும் நல்ல பதிவுகள்.
அதில் சில வரிகளை இங்கு பார்ப்போம்:
• “வாழ்வில் வெற்றியென்பது தனியே எதுவும் இருப்பதில்லை, வாழ்வை முழுமையாக
வாழ்ந்து முடிப்பதைத் தவிர’,
• “ஒன்றிலிருந்து கிளைவிட்டு படர அதிகாரத்திற்கு தோதான திணை, பணம்.
அதனால்தானோ என்னவோ அது நகரங்களில் அசுர வேகமாக வளர்கிறது”
• “என்னதான் ஆசைகளின் இறுதி வடிவம் இராட்ஷச உருவாய் மீண்டும் மீண்டும்
என்னை அதிர்ச்சியடையச் செய்தாலும் கடக்க முடியாத நதியாய் வாழ்வும் அதன்
யதார்த்தங்களும் பெரும் நமட்டு சிரிப்போடு நகர்ந்தபடியே இருக்கின்றன.”
• வாழ்வு, அவ்வப்போது தரும் போதனைகளை மறந்து விடுவதுதான், வாழ்வை மேலும்
சுவாரசியப்படுத்த உதவுகிறது”,
• “உண்மையை நோக்கி வாதிட முடியாது”
என்பன போன்ற வரிகள், ஒரு ஆன்மீக தரிசனமாகவே எனது எண்ணம் முழுவதும்
படருகிறது.
இது தவிர இன்னும் சில வரிகள்:
• 'அதை சொல்வதற்கான மொழியும் வெளியும் அவருக்கு இல்லாமல்
இருந்திருக்கலாம்...' என்று முடிக்கும் போதும்,
• ‘நான் பற்றியிருந்த மாயக்கரங்கள், நிதர்சனமாக என்னை இறுகியிருந்தது
நெகிழச்செய்தது”,
• “பெரு விரல்களை உற்றுப் பார்த்தபடி மிக நிதானமாய் காலடிகளை மாற்றி
வைப்பதும், ஒவ்வொரு பாத அழுத்தத்திற்கு பின் முழு நிறைவுடன் மூச்சு
விடுவதும்”,
• “ஒரு குழந்தைக்கு மனம் உருவாகும் தருணம் மிக அற்புதமான கணம். சந்தைகளில்
குவித்து விற்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் அனைத்திற்குமே குழந்தைகள்
கொண்டிருக்கும் அர்த்தம் முற்றிலும் வேறானதாகப்படுகிறது. அவற்றின் மூலம்
குழந்தைகள் தங்களின் உலகைக் கண்டடைய முயற்சி செய்கின்றனவே தவிர அதுவே
அவர்கள் உலகாவதில்லை”,
போன்ற விவரணைகளும், காட்சிப்படுத்தலும் அவரது எழுத்தின் ஆளுமையை அழுத்தமாக
பதிவு செய்கின்றன.
டாக்டர் சண்முக சிவாவை பற்றி நவீன் பதிவு செய்திருப்பதை இந்த தொகுப்பின்
இறுதியாக வைத்திருப்பது, தொகுப்பு முழுவதும் படித்து முடிக்கும் போது ஒரு
மன நிறைவையும், ஆரோக்கியமான மனநிலையையும் நமக்கு ஏற்படுத்தி விடுகிறது.
அதில் ஒரு வரியில் அவர் “எழுத்தாளனுக்கு பேச்சு ஒன்றாகவும், எழுத்து
ஒன்றாகவும் இருக்கக்கூடாதென நினைவில் வைத்துக்கொண்டேன்” என்று சொல்கிறார்.
இது என்னை மீட்டெடுத்திருக்கிறது. எழுத்தாளர்கள் மீது கொஞ்சமும் நம்பிக்கை
இல்லாதிருந்த என்னில், நவீன் மீண்டும் புது நம்பிக்கையை
விதைத்திருக்கிறார்.
அவர் அதை காப்பாற்றுவார் என்றே தோன்றுகிறது.
தீவிர பதிப்பு வேலைகளை அவர் கொஞ்சம் குறைத்து கொண்டால் அல்லது, பிறருடன்
பகிர்ந்துக்கொண்டால் இன்னும் சிறந்த தொகுப்பாக இதை அவர்
முன்னிறுத்தியிருக்கலாம். பதிப்பு வேலைகளின் சுமைகள் அவரது எழுத்தை கொஞ்சம்
பாதிருக்கிறது என்றே நினைக்கிறேன். பலசமயங்களில், கட்டுரைகள் மையத்தை
விட்டு தள்ளியே பயணிக்கிறது, அல்லது மையத்தை அடைவதில் தினறுவதாகவே
தோன்றுகிறது. அற்புதமாக வெளிவந்திருக்க வேண்டிய ரஜினியின் தற்கொலை, நானும்
சில சாமியார்களும், கலையின் குரல், மறக்கும் கலை, கண்டடைதல், போன்றவைகள்
ஒரு மேலெழுந்தவாரியான பதிவாக மட்டும் கைவிடப்பட்டிருப்பது மிகவும் வருத்தம்
அளிக்கிறது. அதிலும் மறக்கும் கலையும் கண்டடைதலும் சிறந்த கொலை முயற்சி. பல
இடங்களில் அவரின் ஆளுமையை வெளிப்படுத்தியவர், இந்தக் கட்டுரைகளில் கவனம்
சிதற காரணம் அவரது வேலை பளுவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
எல்லாத் தளங்களிலும் மிகச் சிறப்பாக ஒரே சமயத்தில் நம்மால் இயங்க முடியாது
என்பதை அவர் நிரூபிக்கும் விதமாக இந்தக் கட்டுரைகள் அமைந்துவிட்டது வேதனை
அளிக்கிறது. ஒரு மின்னஞ்சலும்... தற்கொலை செய்துக்கொள்ளும் தத்துவங்களும்,
மையமற்ற, நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஒரு பதிப்பாக இங்கு இடம்
பெற்றிருக்கிறது.
மற்றபடி நல்ல தொகுப்பை வாசித்த அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தியதற்கு நன்றி.
|
|