|
|
என் வாழ்வில் நான் குழந்தைகளுக்கு வழங்கியிருக்கும் இடம் மிக முக்கியமானது.
எனது வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் அவர்கள் ஏராளமான பதிவுகளை
ஏற்படுத்தி சென்றிருக்கின்றனர். அவர்களில் மிக முக்கியமானவள் என் அண்ணனின்
5 வயது மகள் இனியவள். மிக குறைந்த வார்த்தைகளோடு இயங்கும் அவளது உலகத்தில்
எப்போதும் எனக்கு ஈர்ப்புகள் அதிகம். அவளோடு எனக்கு கிடைத்த சில ஈர்ப்புகளை
பதிவாக்க முனைந்து பல முறை தோற்றுப் போயிருக்கிறேன். பதிவாக்க முடிந்த
சிலதை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு 1
உயிரோடு வண்ணத்துப்பூச்சி ஒன்று
வீட்டின் வரவேற்பறையில்
சுற்றி திரிவது குறித்த அச்சம்
அன்று அவளுக்கு இருந்தது.
அரைத் தூக்க நிலையிலும்
அப்போதுதான் வீடு திருப்பிய என்னிடம்
அதைக் கொன்று விடும்படி
சொல்லியபடியே இருந்தாள்.
மிக அன்பான அவள் ஒரு
கொலை குறித்து பேசியது பயம் அளித்தது.
வண்ணத்துப்பூச்சிகளுக்குப் பற்கள் இல்லை
எனவும்
அவை சிறு பிள்ளைகளை ஒன்றும்
செய்யாதெனவும்
நான் கூறிய சமாதானங்களில் அவள்
உறங்கிப்போயிருந்தாள்.
அண்ணி அவளைப் படுக்கையில் கிடத்துவதை
பார்த்தபடியே
அமர்ந்திருந்தேன்.
வண்ணத்துப்பூச்சி வரையரையின்றி சுற்றிபடியே
இருந்தது.
ஏதோ கனவில் விழித்து அலறியவளை
எட்டிப் பார்க்கையில்
அவள் முகமெங்கும் வண்ணத்துப்பூச்சிகள்
பறந்தபடி இருந்தன.
இப்போது அவள் வண்ணத்துப்பூச்சிகளோடு
விளையாடியபடி இருந்தாள்.
குறிப்பு 2
அன்று அவளுக்கு என்னிடம் சொல்வதற்கு
ஏராளமாக கதைகள் இருந்தன.
பாலர்பள்ளி நேரத்தில்
அவள் ரொட்டித் தொழிற்சாலைக்குச்
சென்று திரும்பியிருந்தாள்.
கதவின் பின்னுக்கு ஒளிந்தபடி
என்னிடம் ஒரு பையை நீட்டியவள்
என் ஆர்வமான பதிலுக்காக காத்திருந்தாள்.
ரொட்டிகள் நிரம்பிய அந்த பையை
நான் வரும்வரை
காட்டுவதற்காக உறங்காமல்
விழித்திருப்பதாகவும்
ரொட்டிப் பையைத் தன்னிடம்
கூட தரவில்லை எனும் அண்ணியின் கூற்று
என்னை நெகிழ வைத்திருந்தது.
நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதை
நினைவுறுத்தி அவளை படுக்கச்
சொல்லியிருந்தேன்.
என் படுக்கையின் மீது
அவள் செய்து வைத்திருந்த களிமண் ரொட்டிகளில்
இன்றுவரை எறும்புகள் மொய்த்தப்படியே இருக்கின்றன.
குறிப்பு 3
ஒரு சிறு குழந்தையொன்று பிறந்திருந்ததை வரவேற்பதற்காக
சென்றிருந்தோம்.
தன்னை எப்போதுமே குட்டிப்பாப்பாவாக
அறிமுகப்படுத்திக் கொள்ளும்
5 வயது இனியவளுக்கு
புதிதாய் பிறந்திருந்த அந்த குழந்தைதான்
குட்டிப் பாப்பா என அறிமுகப்படுத்தினேன்.
ஒரு குட்டிப்பாப்பாவாக
தனது இருப்பு மறுக்கப்படுவதன் வழி அவள்
கண்களில் தெரிய தொடங்கியது.
“தான் பெரிய குட்டிப்பாப்பா” என்பது
உங்களுக்குத் தெரியாதா
என்றவளை
அள்ளித் அணைக்க மட்டுமே முடிந்தது.
வளர்ந்து விட்ட நம்மால் மட்டும்தான்
நமது
இருப்பினை உறுத்திபடுத்த முடிவதில்லை
இப்படியான தருணங்களில்.
குறிப்பு 4
வீட்டின் பால்கனியிலிருந்து
கீழ் எட்டிப் பார்ப்பது
உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம்.
12வது மாடியிலுள்ள
பால்கனியிலிருந்து
காதிதத்தை வெளி எறிந்துவிட்டு
அது பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்து
கொண்டிருப்பது இனியவளுக்கு
ஒரு போதும் அச்சமளித்ததில்லை.
தடுப்புகள் இருப்பதாகவும்
அந்த தடுப்புகளை மீறி தான்
விழப்போவதில்லை என்பதாகவே
இருக்கும் இனியவளின் வாதம்.
வெளியே காலை வைத்தால்
இனி பிரம்பு எடுத்துதான் அடிப்பேன்
என்பதாகவே முடியும் அண்ணியின் விவாதம்.
பல முறை அடிகளும்
அதைத்தொடர்ந்த
கண்ணீரும் கலவரப் படுத்தினாலும்
காகிதங்களை கிழித்து உருட்டி
வீசுவதும்
காற்றூதி பலூன்களைப் பறக்க விடுவதும்
புள்ளியாய் திரியும்
பறவைகளை கைநீட்டி அழைப்பதுமாக
எண்ணற்ற சேட்டைகள் அரங்கேறியபடிதான்
இருக்கிறது பால்கனிதோரும்.
|
|