|
|
எல்லோர் போலவும் எழுத்தாளர் எம்.குமாரனின்
மரணச்செய்தியும் எவ்வித விசேட ஓலங்களை எழுப்பாமல் குறுஞ்செய்தியில் வந்து
சேர்ந்தது. முதலில் இயக்குநர் சஞ்சைதான் தகவல் அனுப்பினார். பின்னர்
சை.பீர் முகம்மதுவிடமிருந்து சற்று விரிவான தகவலுடன் வந்தது. அதில் 'பிரபல
எழுத்தாளர் எம்.குமாரன்' எனும் அடைமொழி இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம்
சந்துரு அவர் பணிபுரியும் நாளிதழிலிருந்து அழைத்து எம்.குமாரன் படம்
கிடைக்குமா எனக் கேட்டார். இணையத்தில் சுத்தமாக இல்லை. மலேசியாவில்
'பிரபலமான எழுத்தாளர்களின்' நிலையை எண்ணி வருந்திக்கொண்டேன்.
எம்.குமாரன் இறுதியாகக் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வு '3-வது வல்லினம் கலை
இலக்கிய விழா'வாகத்தான் இருக்க வேண்டும். இறுதியாக அவரைச் சந்தித்த போது
மலேசிய இலக்கிய சூழல் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது
முற்றிலும் மலேசிய இலக்கிய சூழல் குறித்த அதிருப்தியான மனநிலையில்
இருந்தார். வல்லினத்தின் வருகை அவருக்கு உற்சாகம் தருவதாய் இருந்தது. இனி
தான் எழுதினால் அது வல்லினத்துக்கு மட்டும்தான் என்றார்.
எம்.குமாரனை நான் முதலில் சந்தித்தது இலக்கியத்துக்காக அல்ல. 12
வருடங்களுக்கு முன்பு கோலாலம்பூருக்கு வந்து சேர்ந்தபின் என்னிடம்
எஞ்சியிருந்த கோபத்தையும் அவசரத்தையும் குறைக்க ஓவியர் ராஜா 'மனவள பயிற்சி
மையம்' எனும் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தார். அதன் அமைப்பாளர்,
பயிற்சியாளர் எல்லாம் எழுத்தாளர் எம்.குமாரன்தான் என்றார்.
எம்.குமாரனை எனக்கு எழுத்தாளர் என்பதைவிட இதழியலாளராகத்தான் அறிமுகம்.
'கோமாளி' என்ற தமிழ் கேலிச்சித்திர இதழை அவர் 1985ல் தொடங்கி நடத்தியபோது
அதை என் வீட்டில் வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். வாசிக்கும்
வயதில் அவற்றை நான் ஆச்சரியமாக எடுத்து புரட்டியுள்ளேன். அப்போது எனக்கு
அந்த இதழ் எத்தகைய முயற்சி என்பது புரியவில்லை. பின்னாலில் 'கோமாளி' என்ற
இதழ் மலேசியத் தமிழ்ச்சூழலில் இருந்திருக்க வேண்டிய அவசியம் புரிந்தது.
சமகால அரசியல் பிரச்சனைகளை மக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்த்த
'கோமாளி' நிறுத்தப்பட்டது ஓர் இழப்பாக இருந்தது. அதன் பின்னர் அவர்
'குடும்பம்' எனும் இதழ் நடத்தியுள்ளதைக் கேள்விபட்டுள்ளேனே தவிர அவ்விதழை
வாசித்ததில்லை.
ஒரு கலைப்படைப்பை முன்வைக்கும் இதழ் உருவாகும் போது, அதை சார்ந்த மனிதர்கள்
அங்கே மையமிடுவது போல, 'கோமாளி' அக்காலக்கட்டத்தில் நிறைய
கார்ட்டுனிஸ்டுகளை உருவாக்கியது. எம்.குமாரனிடம் பயிற்சி எடுக்கச்
செல்கையிலும் நான் ஒரு இதழியலாளரின் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறேன்
என்ற கிளர்ச்சி இருந்தது. என்னிடம் குடிக்கொண்டிருந்த அவசரத்தையும்,
கோபத்தையும் அவர் பயிற்சி சில காலமே ஒத்திப்போட வைத்ததே தவிர நீக்கவில்லை.
வாழ்வென்பது பயிற்சி அறையில் மட்டும் இருப்பதில்லையே!
அதன் பின்னர் குமாரனை சந்திக்க எண்ணியது அவரின் 'செம்மண்ணும் நீல
மலர்களும்' நாவலை வாசித்தப்பின்தான். 1968ல் மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசை வெற்றிக்கொண்ட நாவல். இந்த
நாவலை டாக்டர் இராம சுப்பையா கல்வி அறவாரியத்திற்காக சென்னை தமிழ்ப்
புத்தகாலயம் விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த தொகையை அப்படியே
அறவாரியத்திற்குக் கொடுத்தவர் எம்.குமாரன். அறுபதுகளில் மலேசியாவில் ஒருவர்
இலக்கியப் பிரக்ஞையோடு எழுதிய நாவலாகவே 'செம்மண்ணும் நீல மலர்களும்'
நாவலைப் பார்க்கிறேன். எம்.குமாரனின் இலக்கிய தொடர்பு நெடியது.
தனது பதினைந்தாவது வயதில் மலையாளத்தில் கதை, கவிதை, கட்டுரை என
எழுதத்தொடங்கிய இவர் ஜாசின் மலாக்காவைச் சேர்ந்தவர். இவர் தனது
பன்னிரெண்டாவது வயதிலேயே கல்வி கற்க கேரளம் சென்றார். அங்கு அவரை வறுமையே
சூழ்ந்திருக்கிறது. நண்பர்களுடன் இணைந்து ‘கலாமாலா’ என்ற கையெழுத்திதழை
நடத்தினார். 1957 -ல் மலேசியா திரும்பிய அவர் 1960 ல் தமிழில் எழுதத்
தொடங்கினார். பல போட்டிகளில் பரிசுகள் பெற்ற எம்.குமாரன் மலையாளக் கலை,
இலக்கியம், மொழி பற்றி தமிழில் எழுதியிருக்கிறார். 1970–ல் பதினோரு
சிறுகதைகள் கொண்ட ‘சீனக்கிழவன்’ என்ற சிறுகதை வாசகர் வட்டம் வெளியிட்ட
‘அக்கரை இலக்கிய’ நூலில் இடம் பெற்றதுடன் மலாய் மொழியிலும்
மொழிப்பெயர்க்கப்பட்டது. மலபார் குமார், மஞ்சரி என்ற பெயர்களில் எழுதியுள்ள
இவர் மலாயாவில் பிறந்த 52 எழுத்தாளர்களைப் பற்றியும், எழுத்துக்கள்
பற்றியும் நீண்ட அறிமுக வரிசை எழுதியுள்ளார். 'சீனக்கிழவன்' என்ற சிறுகதை
இவரைத் தமிழ் இலக்கிய உலகிலும் வாசகர் மத்தியிலும் நன்கு
அறிமுகப்படுத்தியது.
'சீனக்கிழவன்' சிறுகதையையும் 'செம்மண்ணும் நாவலையும்' ஒட்டி பேசவே அவரை
தேடினேன். முதலில் அவர் மனவளப்பயிற்சி நடத்திய கட்டிடம் வேறு ஒருவருக்கு
உரிமையாகி இருந்தது. நண்பர்கள் சிலரிடம் விசாரித்து அவரின் புதிய பயிற்சி
இடத்தைக் கண்டடைந்தேன். அதுவும் பிரிக்ஃபில்டில்தான் இருந்தது. அந்த
உரையாடலில் சிவா பெரியண்ணனும் கலந்துகொண்டிருந்தார். அவர் நாவல் குறித்து
சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஓர் இலக்கியப் பிரதியை இன்னொரு
தலைமுறையின் வாசகன் வாசித்து அந்த எழுத்தாளரைத் தேடிக் கண்டடைந்தது பேசுவதை
அவரால் முதலில் நம்ப முடியவில்லை. எழுத்தாளன் என்ற அடையாளத்தை முற்றிலுமாய்
நீங்கி மனவளப் பயிற்சியாளராய் மட்டுமே இருந்த அவரது அன்றைய இருப்பிலிருந்து
விலவி வர அவருக்கு அவகாசம் தேவைப்பட்டது. வல்லினம் அவருக்கு ஆச்சரியத்தைக்
கொடுத்தது. மீண்டும் எழுத தொடங்க வேண்டும் என்றார். பொதுவாக மலேசிய இலக்கிய
சூழல் மேல் கொண்டுள்ள அதிருப்தியால் எழுதுவதில்லை எனவும், வல்லினத்தில் இனி
கதைகளைப் பிரசுரிக்கலாம் என்றும் கூறினார். அவர் எழுதாமல் இருந்தாரே தவிர
அவர் பார்வை கூர்மையாக அரசியல், இலக்கிய நிலவரங்களைப் பார்த்துக்கொண்டே
இருந்தது. அவர் பேச்சில், தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள புதிய
மாற்றங்களை அறிந்திருக்கவில்லை எனத் தெரிந்துகொண்டேன். ஆனால் மலேசிய
இலக்கிய உலகம் சிலரால் எப்படி கீழ் நிலைக்கு இழுக்கப்படுகிறது என்ற ஆதங்கம்
அவரிடம் தொனித்தது.
அவரை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தைக் கூறினேன்.
சம்மதித்தார். இவ்வளவு நேரம் பேசியதே நேர்காணல் போலதானே என்றார். ஆனால்,
மீண்டும் நேர்காணல் மனநிலையுடன் அமர வேண்டும் என்றேன். அவர் மிக பகிரங்கமாக
விமர்சித்த சில வரலாற்று மோசடிகளை குரல் பதிவுக்குப் பின்பு அவரின் முழு
சம்மதத்துடன் வெளியிடுவதுதான் உத்தமம் எனப்பட்டது. அதோடு அவரிடம் ஒரு
வேண்டுகோளையும் விடுத்தேன். மலையாள இலக்கியத்துடன் தொடர்பு கொண்டிருந்த
அவர் மலேசியாவிற்கு வந்து இதழியல் துறையில் இயங்கியது, இயக்கமாகச்
செயல்பட்டது என அனைத்தும் ஒரு நாவலாகப் பதிவு செய்யப்பட்டால் நல்ல ஆவணமாக
இருக்கும் என நம்பினேன். அத்தகைய நாவலைப் பதிப்பிக்கும் என் எண்ணத்தையும்
கூறினேன். அவர் அதற்கும் மறுப்பும் சொல்லவில்லை. எழுதலாம் என்றார்.
பின்னர் சில நாட்கள் அவரை நேர்காணல் செய்யக் கேட்டு அழைக்கும் போதெல்லாம்.
வரட்டு இருமல் வாட்டுவதாகவும், குணமானவுடன் தானே அழைப்பதாகக் கூறினார்.
அவர் அழைப்புக்கு காத்திருந்திருக்கக் கூடாது என்பது மரண செய்தி வரும்வரை
நான் அறிந்திருக்கவில்லை. நான்காவது கலை இலக்கிய விழாவுக்கு அவரை அழைக்க
முயன்ற போதுதான், மென்பொருள் பிரச்சினையால் அழிந்த எண்களில் அவர் எண்ணும்
ஒன்று என்பது தெரிந்தது. நண்பர்கள் சிலரிடம் கேட்டும் எண்கள்
கிடைக்கவில்லை.
இன்று அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் பதிவு செய்ய முடியாதவை. தோட்ட
மக்களைச் சுரண்டிப்பிழைத்து, இன்று சமூகப் பார்வையில் மாமனிதர்களாகத்
திகழ்பவர்களின் மறுபக்கத்தை எம்.குமாரன் தன் எழுத்தின் மூலம்
வெளிப்படுத்தாமல், கேட்டவர் சாட்சியாக இருந்து பதிவு செய்வது பிழை.
எம்.குமாரன் போல ரத்தமும் சதையுமாக அந்தச் சுரண்டல்களை இனி யாரேனும் ஒருவர்
பதிவு செய்வார்களெனில் கதாநாயகர்களின் எண்ணிக்கை மலேசிய தமிழர் வரலாற்றில்
குறையும்.
எம்.குமாரன் மரணச் செய்திக்குப் பின் அன்று இரவே சென்றுப் பார்க்க
எண்ணினேன். நயனம் ஆசிரியர் ஆதி.இராஜகுமாரன் மற்றும் டாக்டர்
மா.சண்முகசிவாவுடனும் இடம் தேடி பயணமானேன். எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி'
நாவலில் சம்பத் எனும் கதாபாத்திரம் இறந்தப்பின் அவன் நண்பர்கள் சம்பத்
பற்றியும், அவனது குணாதிசயங்கள் பற்றியும், அவனுடனான தங்கள் அனுபவம்
பற்றியும் பேசி பேசி அவன் ஆளுமையை முழுமை படுத்த முனைவார்கள். எங்கள்
உரையாடல் அன்றைய பயணத்தில் ஏறக்குறைய அவ்வாறுதான் அமைந்தது.
கலைஞனின் மரணத்தை பேசி பேசியே கடக்க வேண்டியுள்ளது. அவன் உருவாக்கிய புனைவை
அவன் மரணத்தில் வாசிப்பது அவன் இருப்பை இன்னும் நெருக்கமாக்குகிறது.
அடையாளம் காட்டாத ஏதோ ஒரு வரி, அவன் மரணத்துக்குப் பின் வேறொரு
அர்த்தத்தோடு ஆக்கிரமிக்கிறது. அந்த வரிகளுடன் போராடவும் அர்த்தங்களை மீள்
ஒழுங்கு படுத்தவும் திரணியற்ற மனம் படைப்பாளி இறந்துவிட்டதை உறுதி
செய்யத்துடிக்கிறது. அதற்காகவேணும் அவர் குறித்து பேசவும் எழுதவும்
நேர்கிறது. அதோடு நான் தேடிக்கொண்டிருந்த எம்.குமாரனின் கைத்தொலைபேசி
எண்களை கண்டுப்பிடித்து யாரேனும் இப்போது அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சமும்
ஏற்படுகிறது.
|
|