|
|
இந்நாவலின்
பெயரை மலேசியாவில் நாவல் குறித்து பேசும் எல்லார் வாயிலும் அகப்படுவதைப்
பார்த்துள்ளேன். அதிக பட்சம் ‘ரொம்ப நல்ல நாவல்’ என்பார்களே தவிர அதன்
காரணங்களை முன்வைத்ததில்லை. நான் இந்த நாவலைத் தேடத்தொடங்கியப் போதுதான்
மலேசியாவில் மீண்டும் சில படைப்பிலக்கியங்களை மறுப்பதிப்பு செய்ய வேண்டிய
அவசியத்தை உணரமுடிந்தது. சில மூத்த எழுத்தாளர்களும் தாங்கள் வைத்திருந்த
ஒரு பிரதியையும் காணவில்லை என நீண்ட நாட்களுக்குப் பின் எனக்காகத்
தேடியபோது உணர்ந்தனர். இறுதியாக ஒரு நண்பர் மூலமாக மலாயா பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப் பிரிவு நூலகத்தில் இருந்த ஒரு பிரதியை இரவல் வாங்கினேன்.
தமிழகத்தின் ‘தமிழ்ப் புத்தகாலயம்’ வெளியீடாக வந்திருந்த அந்நாவல் 110
பக்கங்களைக் கொண்டிருந்தது. புத்தகம் கையில் அகப்பட்ட மாத்திரத்திலேயே அவர்
தயக்கத்தோடு எழுதியிருந்த சின்னஞ்சிறிய முன்னுரையைப் படித்தேன். ஓர்
எழுத்தாளனுக்கு உண்டான அங்கதம் ஆங்காங்கு இருந்தது. தனது முன்னுரையை
குமாரன் இவ்வாறு தொடங்கியிருந்தார்.
“நீண்ட நாட்களாக எனக்கோர் ஆசை; சமூகப் பார்வையோடு ஒரு கதை எழுதவேண்டும்;
அதில் ஐம்பது விழுக்காடு உண்மைகளையாவது பின்னி எழுத வேண்டும் என்று.
தனியொரு மனிதனின் அகவாழ்க்கையைப் பற்றி எழுத முடிந்த அளவுக்குப்
புறவாழ்க்கையைப் பின்னி எழுத வேண்டும். அப்படி எழுதும் போது சில, பல
உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுவிடும் . அந்த உண்மைகளை எல்லோரும்
பெருந்தன்மையோடு ஏற்பார்களென எதிர்ப்பார்ப்பதற்கில்லை. மாறாக என்னுடைய
சின்ன சுதந்திரம் மேலும் பாதிக்கப்படலாம். இந்த ஒன்றே பேனாவின் ஓட்டத்தைத்
தடைப் படுத்திவிடுகிறது… பல வாசகர்கள் இக்கதையை பாராட்டியிருப்பினும் பாதி
உண்மைகளை எழுதிக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் போது நானும் பாதி
எழுத்தாளனாகத்தானே இருக்க முடியும். முழு எழுத்தாளனாகும் காலம் வருமா?”
செம்மண்ணும் நீல மலர்களும் வாசிக்க முதல் காரணமாக இருந்தது அவர்
முன்னுரைதான்.
சுதந்திரத்துக்கு பிறகு, மலேசியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய
பிரச்சனை, தோட்டத்துண்டாடல். பெரும்பாலான தமிழர்கள், ரப்பர் தோட்டங்களில்
வேலை செய்து கொண்டிருக்கும் பட்சத்தில், இந்தத் தோட்ட துண்டாடல்களினால்,
அவர்களது எதிர்காலம் பெரிய கேள்விக்குரியானது. கிழக்கத்திய பெரிய
முதலாளிகளின் பெரிய தோட்டங்களைச் சிறிது சிறிதாகப் பிரித்து விற்றால்தான்
ஆசியாவில் இருக்கும் சின்ன முதலாளிகளால் வாங்க முடியும் என கூறப்பட்டு
தோட்டங்கள் கூறு போடப்பட்டன . சின்ன முதலாளிகள் உருவாக வேண்டும் என்பதால்
பல்லாயிரக்கணக்கான பாட்டாளிச் சமூகத்தினர் நிராதரவாக விடப்பட்டனர்.
துண்டாடல் கொடுமை அதிகரித்ததால் கூட்டுறவு மூலம் தோட்டங்கள் வாங்க
வேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றியது. இத்தகைய ஒரு சூழலில் இப்போது
போல அப்போது இருந்த தமிழர்களின் அலட்சிய மனப்பான்மை, ஒற்றுமையின்மை,
விழிப்புணர்வு அற்ற நிலை, பிரிவினைகள், பிரிவினைகளைக் கொண்டு லாபம்
அடைந்தவர்கள் என ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ நாவல் சொல்லிச்செல்கிறது.
தற்காலிக ஆசிரியராக இருப்பதில் நம்பிக்கை இழந்த கன்னியப்பன் தோட்டத்திலேயே
ஏதாவது வேலை செய்து தனது வாழ்வை நகர்த்த எண்ணி மீண்டும் தோட்டம் நோக்கி
வருகிறான். நாவலின் தொடக்கத்திலேயே நிலக்குடியேற்றத்திட்டத்தில் தோட்டத்து
தமிழர்கள் ஆர்வம் காட்டாததை ஒரு பொதுநலத்தொண்டர் மூலம் அறிகிறான். அவனுக்கு
வருத்தம் ஏற்படுகிறது. தமிழர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாததை எண்ணி
வருந்துகிறான். வழியில் நீரோடையில் நனைந்திருக்கும் நீல மலர்களைப்
பார்க்கிறான். அவன் காதலி நீலாவின் ஞாபகம் வருகிறது. அஞ்ஞாபகம் நாவல்
முழுதும் வந்து கொண்டே இருக்கிறது. கன்னியப்பன் வீட்டில் நீலாவை மணப்பதற்கு
சாதி, வசதி, குடும்ப சூழல் போன்றவை தடையாக உள்ளன. நீலாவுக்காக
எல்லாவற்றையும் எதிர்க்க முனைகிறான். ஆனால், நீலா தன் அத்தை மகனை
மணந்துகொண்டது அவன் காதுகளில் விழுகிறது. தான் இன்னொரு பெண்ணை மணப்பது
மூலம் நீலாவைப் பழி தீர்ப்பதாக எண்ணி மணக்கிறான்.
சதா கன்னியப்பனின் மனதை அரித்துக்கொண்டிருக்கும் நீலாவின் எண்ணம்
தோட்டத்துண்டாடல் மூலம் திசை திரும்புகிறது. தொழிற்சங்கத்தில் சிலரும்,
அரசியலில் சிலரும், மாற்று கருத்துடையவர் ஒரு சிலரும், எதிலும் நம்பிக்கை
இல்லாதவர் சிலரும் இருந்த அந்தத் தோட்டத்தில் கூட்டுறவு மனப்பான்மையை
உருவாக்கி ஒரு லட்சம் ரிங்கிட் திரட்டி தோட்டம் வாங்க வேண்டும் என்ற
எண்ணத்துடன் உழைக்கத் தயாராகிறான். இறுதியில் அவன் எதிர்க்கொள்ளும்
தோல்வியும் மனிதர்கள் மீதான கசப்பும் ஏமாற்றமும் சேர
நிலக்குடியேற்றத்திட்டத்தின் கீழ் கோலா ஈத்தாம் நிலத்தில் மண்வெட்டியைப்
பதித்துக்கொண்டிருக்கிறான்.
நான் படித்தவரையில் 1971-ல் மலேசிய நாவல்களில் புதிய மொழிநடையைக் கொண்டப்
பிரதி இது. எளிய சொற்கள் மூலம் வாழ்வை காட்டுகிறார். அச்சொற்கள் மனதின்
சிடுக்குகளிலெல்லாம் புகுந்து செல்லும்படி கவனமாகவே கையாளப்பட்டுள்ளன.
அதோடு சினிமா கதாநாயகர்களை இலக்கியத்தில் காட்டிக்கொண்டிருந்த ஒரு சூழலில்
எம்.குமாரன் தொடர்ந்து தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நிரம்பிய வாழ்வை
கதாப்பாத்திரத்தின் வாழ்வு முழுதும் காட்டுகிறார். சாகசங்கள், வீரதீர
செயல்கள், தலைமைத்துவம் என எதிலும் சோபிக்க முடியாத ஒரு பாத்திரமாய்,
கன்னியப்பன் நாவல் இறுதியில் எளிய மக்களோடு தனக்கான வாழ்வினை அமைக்க
முயல்கிறான்.
மக்களுக்கு உதவுகிறோம் எனத் தொடங்கப்படும் இயக்கங்களும் அமைப்புகளும்
பின்னர் அதிகாரங்களிடம் தம்மை விற்றுக்கொண்ட வரலாற்றுச் சுரண்டலை
வெளிப்படையாகச் சொல்ல ஆசிரியருக்குப் இந்நாவலில் பல இடங்களில் வாய்ப்பு
இருந்தும் அதன் மெல்லிய காட்சியை மட்டும் காட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறார்.
தோட்டத்துண்டாடல் அத்தனை எளிதாய் கடந்துவிடக்கூடிய வரலாறு அல்ல. ஏதோ
ஆடுமாடுகளைப் போல தமிழர்கள் நிரந்தர தங்கும் இடமில்லாமல்
தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர்கள் பலவீனத்தை அரசியலாக
மாற்றிய வரலாறு இன்னும் இந்நாட்டில் எழுதப்படாமல் இருக்கிறது. எம்.குமாரன்
தனது முன்னுரையில் பாதி உண்மைகளை மட்டுமே சொல்லும் தான் ‘பாதி எழுத்தாளன்’
என்று கூறியது வாசிக்கும் சில தருணங்கள் நினைவுக்கு வரவே செய்கிறது.
குமாரன் தன் நாவலில் தோட்டப்பாட்டாளிகளின் வாழ்வைவிட கன்னியப்பனின்
காதலுக்குத்தான் அதிக இடங்களை ஒதுக்கியுள்ளார். வாழ்வின் மிக மோசமான
புறக்கணிப்பிற்குள்ளாகும் பாட்டாளி வர்க்கத்தில் ஒருவனாக கன்னியப்பன்
இல்லை. அவன் பாட்டாளின் நன்மைக்காகச் செயல்பட்டாலும் எந்த நிமிடம்
அவர்களிடமிருந்து விலகி போகும் சுதந்திரமும் கொண்டிருக்கிறான். இன்னும்
சொல்லப்போனால் அவன் எதிலுமே தீவிரமானவனாக இல்லை, தான் நினைத்து நினைத்து
உருகும் காதலிலும்.
மூன்று ஆண்டுகள் முயன்றப்பின் நிரந்த ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்காததால்
தற்காலிக ஆசிரியர் வேலையைத் துறக்கிறான். நீலா, மாமனை மணந்து கொண்டதும்
அவள் நினைவைத் துறக்க வேறொரு பெண்ணை உடனே மணக்கிறான். மனைவி இறப்புக்குப்
பின் தோட்டத்துண்டாடல் பிரச்சனையில் சாதகமான ஒன்றைச் செய்ய முயன்று
தோற்கிறான். தன்னைச் சந்திக்க வரும் நீலாவை ஒதுக்கி ஓடுகிறான்.பின் அவளின்
மரணப் படுக்கையில் வாடுகிறான். அவள் தங்கையைத் திருமணம் செய்துக்கொள்ள
சம்மதிப்பவன் பின்னர் அதுவும் முடியாமல் அவள் தங்கையை வழியனுப்பி
வைக்கிறான்.
வாழ்வு நமக்கு சொல்ல வருவது என்ன? என்ற கேள்விதான் ஒவ்வொரு இலக்கியப்
பிரதியைப் படிக்கும் போதும் முகத்துக்கு முன்னே வந்து நிர்க்கிறது. அது
ஒன்றும் சொல்லவரவில்லை என்பதை, மிகக்குறுகிய பயணத்திற்காக வாழ்வில்
இணைந்துள்ளவர்கள் உணரும் தருணம் மனித பலவீனங்கள் அல்லது பலங்கள்
அர்த்தமற்றதாய் தோன்றுகிறது. வாழ்வின் மிகச் சுருங்கியப் பகுதியை
சொல்லவரும் இந்நாவல் ஒரு மனிதனின் பலவீனங்களை நம்பிக்கையின்மைகளை பயங்களை
காட்டிக்கொண்டே செல்கிறது. அவனுக்கு அந்தப் பாட்டாளிகளுக்கும் பெரிய
வித்தியாசம் இல்லை. எதற்குமே போராடாத ஒரு மந்த நிலை மட்டும் அங்கு
வியாபித்துள்ளது. இதுவே இந்நாவலின் பலம் ; பலவீனமும் கூட.
மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு எம். குமாரன் வருகை முக்கியமானது. வரலாற்றை
வெறும் சம்பவங்களாக மட்டுமல்லாமல் பிரத்தியேக புனைவின் மொழியில் வழங்கும்
அவர் பாணி தொடர்ந்து முயற்சிக்கப்பட்டிருந்தால் நமக்கு இன்னும் சில நல்ல
படைப்பிலக்கியங்கள் கிடைத்திருக்கும் என்பது உறுதி. அவர் மீண்டும்
இலக்கியத்தில் ஈடுபட வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய விருப்பம்.
(மறுபிரசுரம் காண்பது)
|
|