|
|
How To Train Your Dragon : அன்பின் தேர்வு
‘Dragon’ டிரகன் என்பது பழைய புராணங்களில் காணப்படும் ஒரு வகை புனைவு
விலங்காகும். வாய் வழியே தீப்பிளம்புகளைக் கக்கும் ஓர் ஊர்வனவாக
சித்தரிக்கப்படும் இதனைத் தமிழில் கடல் நாகம் என்று பலர்
குறிப்பிடுகின்றனர். இவ்விலங்கானது மிக முக்கியமான கிரேக்க, ஐரோப்பிய, சீன,
ஜப்பானிய, இந்திய, பெர்சிய கலாச்சாரங்களிலும் அவற்றின் பழமையான புனைவு
இலக்கியங்களிலும் பல்வேறு வண்ணங்களும் உருவங்களுமாக மாறுபட்டும் குரூரம்,
பாவம் அல்லது அதிர்ஷ்டம் போன்ற பல்வகை தன்மைகளின் குறியீடுகளாகவும் வலம்
வந்திருக்கிறது. இதில் முக்கியமாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் வழி வழியாய்
சொல்லப்பட்ட கடல் நாகம் சார்ந்த புராணக் கதைகள் இன்றுவரை அம்மக்களின்
வாழ்வியல் நம்பிக்கைகளாக அவர்களைத் தொடர்கின்றன. சீன கலாச்சாரத்தில் இந்த
கடல் நாகமே எல்லா விலங்குகளையும் விட உச்ச படிநிலையில் இருக்கிறது. நாகம்
ஒரு பெரும் ஆளுமையின் சின்னமாக கருதப்பட்டு சீன நாள்காட்டியின் வருட
சுழற்சியில் காணப்படும் 12 விலங்குகளுள் ஒரே புனைவு விலங்காக இன்றுவரை
விளங்குகிறது.
தொன்று தொட்டு உலகம் முழுவதும் குழந்தைகளுக்குச் சொல்லப்படும் தேவதை
கதைகள், புராண கதைகள் மற்றும் ஏணைய கட்டுக் கதைகளில் இந்த நாகங்கள் பற்றிய
கதைகளும் தகவல்களும் பரவலாக இடம் பெற்று வருகின்றன. நாகம், கடல் நாகம்,
டைனாஸரஸ் போன்ற ஊர்வன இனத்தைச் சார்ந்த விலங்குகளைப் பற்றிய சிந்தனையோ
கற்பனைகளோ இல்லாத குழந்தைகளே இல்லை எனவும் கூறிவிடலாம். சில குழந்தைகள்
தங்களுக்கு உணர்த்தப்பட்ட தகவலுக்கு ஏற்ப நிஜத்தில் அவர்கள் பார்க்கும்
ஊர்வன விலங்குகளை அதீதத் தன்மையுடையதாகவும் வியக்கத்தக்கவையாகவும்
எண்ணுகின்றன. சில குழந்தைகளோ இவை ஆபத்தானவை என்று இவற்றைப் பற்றிய எதிர்மறை
எண்ணங்களையும் பயத்தையும் மட்டுமே வளர்த்துக் கொள்கின்றன. ஆபத்தை உணரும்
இந்த மனோபாவம் சரிதான் எனினும் நாளடைவில் பயத்தினாலேயே விலங்குகள் ஆபத்தை
விளைவிக்கும் இடத்தில் இல்லாத போதும் அவற்றை வதை செய்யும் பெரியவர்களாக
அவர்கள் வளர்ந்துவிடுகிறார்கள். பாம்புகள் ஏதாவது செய்து விடுமோ என்ற
பயத்தில் மனிதன் பாம்பைக் கொல்கிறான். மனிதனின் பதட்டமும் அசைவும் பாம்பைக்
குழப்பிவிட அது தன்னைத் தற்காக்கும் முயற்சியில் மனிதனைக் கடித்து
விடுகிறது. ஆனால் உண்மையில் நாம் நினைக்கும் அளவுக்கு இவ்விலங்குகள் ஆபத்தை
விளைவிக்காமலும் போகலாம்.
“How to train your dragon” என்னும் இயக்கவூட்டத் திரைப்படத்தில் ஆபத்தை
விளைவிக்கும் விலங்குகளாக கருதப்படும் டிரகன்களை அல்லது நாகங்களை அழிப்பதை
விடுத்துத் அவற்றைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை மாற்றியமைத்து தன்
நண்பர்களாக மாற்ற முயற்சிக்கிறான் இத்திரைப்படத்தின் கதைநாயகன். 2010 ஆம்
ஆண்டில் வெளியீடுகண்ட முழுநீள சிறப்புப் பண்பியலுடைய மூன்று பரிமாண
இயக்கவூட்டத் திரைப்படமான இதை தயாரித்தவர்கள் Dreamworks Animation
நிறுவனத்தார் ஆவர். Cressida Cowell என்னும் பிரிட்டாணியப் பெண் எழுத்தாளர்
எழுதி 9 பாகங்களாக வெளியிடப்பட்ட மிகவும் பிரசித்திப் பெற்ற ‘How to train
your dragon’ என்னும் ஆங்கில சிறுவர் நாவலைத் தழுவியதே இத்திரைப்படத்தின்
கதையாகும்.
இத்திரைப்படத்தின் கதைநாயகன், ஹிக்கப் (Hiccup) 8ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதி தொடங்கி 11ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஐரோப்பாவின்
பலபகுதிகளில் கடற்கொள்ளையர்களாகவும், வணிகர்களாகவும், தேடலாய்வார்களாகவும்
போர்வீரர்களாகவும் குடியேற்றம் செய்த வைக்கிங் எனப்படும் நோர்ஸ் இன
பழங்குடியினருள் ஒருவனாக சித்தரிக்கப்படுகிறான். இவனின் தந்தை ஸ்தோயிக் (Stoick
the Vast) அவர்கள் வாழும் பெர்க் (Berk) என்னும் கிராமத்தின் குலமரபுத்
தலைவராக இருக்கிறார். மேலும் இவர் வைக்கிங் மரபின் அத்தனை குணாதிசியங்களும்
பொருந்திய தலைச்சிறந்த வீரனாகவும் இருக்கிறார். ஹிக்கப் தன் தந்தைக்கு நேர்
எதிராக இருக்கிறான். பதின்ம வயதினனான ஹிக்கப்புக்குத் தானும் ஒரு வைக்கிங்
வீரனாக திகழ வேண்டும் என்ற ஆசை இருந்தும் அவனின் மோசமான நகைச்சுவை
தன்மையினாலும் யாருக்கும் கீழ்படியாதப் போக்கினாலும் அவன் ஒரு
கலகக்காரனாகவே அக்கிராம மக்களுக்கு அடையாளப்படுத்தப் படுகிறான். இருந்தும்
திறமையும் மதிநுட்பமும் நிறைந்த ஹிக்கப் தானும் ஒரு நாள் நாகங்களை வீழ்த்தி
கிராம மக்களின் அபிமானத்தைப் பெற தக்கத் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கிறான்.
திரைப்படத்தின் தொடக்கத்தில் பெர்க் கிராமத்து மக்கள் நாகங்களின் தொடர்
தாக்குதலினால் பல இன்னல்களை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். நாகங்கள்
மக்களின் வளர்ப்பு பிராணிகளைப் இரையாகப் பிடித்துக் கொள்வது மட்டுமல்லாமல்
அவர்களின் வீடுகளைத் தீக்க்கிரையாக்கிச் செல்கின்றன. இந்நிலையில் ஹிக்கப்
தான் தயாரித்து வைத்திருந்த நாகங்களைப் பிடிக்கப் பயன்படும் பீரங்கி
வடிவிலான பொறி ஒன்றில் இதுவரை யாரும் பார்த்திடாத நைட் ஃபுயூரி (Night
Fury) என்னும் அரிய வகை நாகத்தைப் தாக்க முயல்கிறான். ஆனால் நைட் ஃபுயூரி
தன் வால் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் தப்பித்துச் செல்ல மற்றொரு
நாகம் ஹிக்கப்பைத் துரத்தி வருகையில் கிராமத்தில் பெரும் கலகம்
ஏற்படுகிறது.
அதன் பின்னர் தன் செய்கைகள் யாவுமே தோல்வியில் முடிவதை எண்ணி மனம் நொந்து
புலம்பி கொண்டு ஒரு காட்டு வழியே நடந்து செல்கையில் ஹிக்கப், தான் தாக்கிய
நைட் ஃபுயூரி நாகத்தைக் காண நேரிடுகிறது. அந்த நாகம், ஹிக்கப் தன் பொறியின்
மூலம் செழுத்தப் பட்ட கயிறினால் கட்டப் பட்ட நிலையில் கிடக்கிறது. இதுவரை
யாரும் பார்த்திடாத ஓர் அரிய நாகத்தைக் கொன்ற பெருமை தன்னை வந்து சேரும்
என்ற நினைப்பில் ஹிக்கப் பயத்தில் பதைபதைத்த போதும் கை நடுங்கியபடியே தன்
கத்தியைப் பிடித்துக் கொண்டு அந்த நாகத்தை நெருங்குகிறான். ஆனால் மீனின்
துடுப்புப் போன்ற அதன் வால் பகுதியில் ஒரு புறமாக காயம் ஏற்பட்டு இயங்க
முடியாமல் தவிக்கும் அந்த நாகத்தைக் கொல்ல ஹிக்கப்பிற்கு மனம் வரவில்லை.
தன் கத்தியால் அந்த நாகத்தைச் சுற்றி கட்டப்பட்ட கயிறை அறுத்து அதனை
விடுவிக்கிறான். விடுபட்ட நாகம் உடனே மூர்க்கமாய் ஹிக்கப்பை நெருங்குகிறது.
ஹிக்கப் பயத்தால் கீழே சரிந்து விழுந்தபோது மிக அருகில் அவன் கண்களைச்
சந்திக்கும் நாகம் அவனை ஒன்றும் செய்யாமல் காட்டுக்குள் ஓடி மறைகிறது.
எல்லா நாகங்களும் கொடியவை உயிர் குடிப்பவை என்றே புத்தகங்களிலும்
பள்ளியிலும் கற்பிக்கப்பட்டு இருக்க, நைட் ஃபுயூரி தன்னைக் கொல்லாமல்
விட்டுச் சென்றது ஹிக்கப்பின் மனதில் பல கேள்விகளை உருவாக்கி விடுகிறது.
இதற்கிடையில் ஹிக்கப்பின் தந்தை மக்களின் நலன் கருதி தன் படைகளோடு
நாகங்களின் கூட்டைத் தேடி செல்கிறார். ஹிக்கப்பை நாகங்களைக் கொல்லப்
பழக்கும் பள்ளியில் சேர்த்தும் விடுகிறார். ஹிக்கப்புடன் இயல்பில் சற்றே
முரட்டுத்தனமான அஸ்திரிட் என்னும் இளம்பெண்ணும் மேலும் அவன் வயதொத்த பல
நண்பர்களும் பயிலத் தொடங்குகின்றனர். தன்னைக் கொல்லாமல் விட்டு விட்ட நைட்
ஃபுயூரியின் செயலினால் நாகங்களின் தன்மையைப் பற்றி தான் இதுவரை கொண்டிருந்த
நம்பிக்கைகளை எல்லாம் சந்தேகிக்கத் தொடங்குகிறான் ஹிக்கப். கொல்லும்
பயிற்சியிலும் கூட ஹிக்கப்பினால் எந்த ஒரு நாகத்தையும் கொல்லவோ
துன்புறுத்தவோ இயலாமல் இருக்கிறது.
பயிற்சி நேரம் போக ஓய்வு நேரங்களில் ஹிக்கப் நைட் ஃபுயூரியைத் தேடி
காட்டுக்குச் செல்கிறான். அதன் காயமடைந்த வாலின் ஒரு பகுதிக்குப் பதிலாக
தானே வடிவமைத்த ஒரு செயற்கை வாலைப் பொருத்தி மீண்டும் பறக்க அதற்கு
உதவுகிறான். மேலும் அதன் முதுகில் ஏறி சவாரி செய்வதற்கு ஏதுவாக ஒரு
இருக்கையைத் தயாரித்து அதன் முதுகில் கட்டி விடுகிறான். நைட் ஃபுயூரியின்
பற்கள் முளைக்கவும் பின் உள் இழுத்துக் கொள்ளவும் முடிந்த தன்மை
கொண்டிருப்பதால் அதனைத் தூட்லெஸ் (Thoothless, பற்கள் அற்றது எனப்
பொருள்படும்) என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்குகிறான். தூட்லெஸை ஒரு
வளர்ப்புப் பிராணியாகப் பாவித்துத் தன் கட்டளைகளுக்கேற்பச் செயலாற்றப்
பழக்கும் ஹிக்கப், மற்ற நாகங்களையும் படிய வைக்கும் பல வழிமுறைகளைக் கண்டு
பிடிக்கிறான். நாளடைவில் தூட்லெஸும் ஹிக்கப்புக்கான உறவு மிகுந்த
அன்பினாலும் புரிந்துணர்வினாலும் பலப்படுகிறது.
இதற்கிடையில் பல நாகங்களை அடக்கி பணிய வைத்ததால் ஹிக்கப் தான் படிக்கும்
பள்ளியிலேயே சிறந்த மாணவனாக திகழ்கிறான். அதனால் பள்ளியின் இறுதி தேர்வு
நாளில் நாகமொன்றைக் கிராமத்து மக்களின் முன்னிலையில் கொல்லும் வாய்ப்பு
அவனுக்கு வழங்கப்படுகிறது. பலர் போற்றும் திறமையைத் திடீரென பெற்றிருக்கும்
ஹிக்கப்பின் மீது அஸ்திரிட் சந்தேகங்கொண்டு அவனைப் பின்தொடர்ந்து
காட்டுக்குச் செல்கிறாள்; தூட்லெஸைப் பற்றிய உண்மை அறிகிறாள். அஸ்திரிட்
அவசரப்பட்டு உண்மையைக் கிராமத்து மக்களிடம் தெரிவிக்க முயல்கையில் தூட்லெஸ்
அவளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்று ஒரு மரக்கிளையில் போட்டு
விடுகின்றது. இதனால் அஸ்திரிட் கடுங்கோபம் கொள்ளும் நிலையில் நாகங்களின்
ஆபத்து அற்றத் தன்மையை விளக்க முடியாமல் போகவே ஹிக்கப் அவளைக் கடத்தி
கொண்டு தூட்லெஸின் மீதேறி வானில் உயர பறக்கத் தொடங்குகிறான். முதலில்
முரண்டு பிடிக்கும் அஸ்திரிட்டுக்குப் பொன்னிற வானத்தில் பறந்திடும் அந்த
ரம்மியமான சூழல் ஒரு புதுமையான அனுபவத்தை வழங்குகின்றது. நாகங்கள்
ஆபத்தற்றவை என்பதையும் அவற்றோடு நட்புக் கொள்ளக்கூடும் என்பதையும் ஹிக்கப்
எந்த விளக்கமும் சொல்லாமலே புரிந்து கொள்கிறாள். மேலும் ஹிக்கப்பை இருக
பற்றி கொண்டு அவன் மேல் அன்பு செய்யவும் ஆரம்பிக்கிறாள். இந்தத் தருணத்தில்
தூட்லஸ் நாகங்களின் கூட்டுக்குத் தன்னைச் செழுத்துகிறது. ஆயிரமாயிரம் சிறிய
நாகங்கள் வாழும் கூட்டுக்குள் உண்மையில் குரூரத் தன்மை கொண்ட ஒரே ஒரு பெரிய
நாகம்தான் வாழ்கிறது. மற்ற அத்தனை நாகங்களும் இரை தேடி வருவது இந்த
நாகத்துக்காகத்தான்.
ஒரு வேளை இரை ஏதும் கிடைக்காமல் கூட்டுக்குத் திரும்பும் நிலையில் அந்த
நாகங்களே அப்பெரிய நாகத்திற்கு இரையாகின்றன. இந்தக் காட்சியைக் கண்முன்னே
கண்ட பிறகுதான் இதுவரை ஏன் இந்த நாகங்கள் தங்களின் கிராமத்தைத் தொடர்ந்து
தாக்கி கொண்டும், வளர்ப்புப் பிராணிகளைக் கடத்திக் கொண்டும் இருக்கின்றன
என்பதற்கான காரணம் ஹிக்கப்புக்கும் அஸ்திரிட்டுக்கும் தெரிய வருகிறது.
மறுநாள் ஹிக்கப்பின் இறுதி தேர்வு நடைபெரும் நாளாக அமைகிறது. இவ்வேளையில்
ஹிக்கப்பின் தந்தையும் கிராமத்துக்குத் திரும்பி இருக்கிறார். மகனின்
சாகசங்களைக் கேள்விப்பட்டு மிகுந்த பெருமை கொள்கிறார். இவ்வேளையில் ஹிக்கப்
நாகங்களின் உண்மை தன்மையைக் கிராம மக்களுக்கு உணர்த்த இந்தச்
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறான்; உடல் முழுக்க தீயாய்
எறிந்து கொண்டு மூர்க்கமாக தன்னைத் தாக்க வரும் நாகத்தின் முன்னே தான்
வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் துறந்து ஆபத்தற்றவனாய் வெளிப்பகிறான்.
அவனின் இச்செயல் நாகத்தைப் படியச் செய்யும் தருணத்தில், நடப்பது என்னவென்று
ஊகிக்க முடியாமல், எங்கே தன் மகனுக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற
பயத்தினால் ஹிக்கப்பின் தந்தை ஸ்தோயிக் தேர்வு களத்தில் இறங்கி தேர்வை
நிறுத்துகிறார். இதனால் குழப்பமடையும் நாகம் மேலும் மூர்க்கமடைந்து தாக்க
முனைகையில் ஹிக்கப்பின் அலறல் ஒலி கேட்டுத் தூட்லெஸ் அவனைக் காப்பற்ற எண்ணி
பறந்து வந்து தேர்வு களத்தில் நுழைகிறது; அப்போது தூட்லெஸைக் கிராமத்து
மக்கள் பிடித்து விடுகின்றனர். நிலைமை மேலும் சிக்கலாகின்றது.
தூட்லெசைக் காப்பாற்றும் முயற்சியில் தன் தந்தையோடு வாக்குவாதத்தில்
ஈடுபடும் ஹிக்கப் தான் நாகங்களின் கூட்டுக்குச் சென்றதைத் தன்னையறியாமல்
சொல்லி விடுகிறான். மேலும், நாகங்களின் கூட்டுக்குச் செல்வது எத்துணை
ஆபத்தானது என்று சொல்லியும், தடுத்தும்கூட கேளாமல் ஹிக்கப்பின் தந்தை தன்
படையினரோடு அங்கே செல்ல முடிவெடுக்கிறார். இந்த சிக்கல்களை எல்லாம்
சமாளித்து ஹிக்கப் தூட்லெஸைக் காப்பாற்றினானா? நாகங்களின் கூட்டுக்குச்
செல்லும் ஸ்தோயிக்கின் நிலை என்னவானது? கிராம மக்கள் நாகங்களின் ஆபத்தற்றத்
தன்மையை உணர்ந்தனரா? நாகங்களால் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் யாவும்
முடிவுக்கு வந்தனவா? என்பவற்றைத் திரைப்படத்தின் இறுதி காட்சிகள்
காட்டுகின்றன.
இத்திரைப்படத்தின் கதைநாயகனான ஹிக்கப்பின் பாத்திரப்படைப்பே இதன் பெரிய
பலம் எனலாம். எந்த நிலையிலும் விலங்குகளைத் துன்புறுத்த முடியாத, ஒரு
போரில் வெற்றி பெறவும்கூட வன்முறைக்குப் பதிலாக அன்பைத் தேர்வு செய்பவனாக
ஹிக்கப் சித்தரிக்கப்படுகிறான். முதன்முறையாக தூட்லெஸின் முதுகில் ஏறி
சவாரி செய்கையில், வழுக்கி விழுந்து மரணம் நேரும் ஆபத்தானத் தருவாயிலுங்கூட
தன் மதிநுட்பத்தால் துரிதமாகச் செயல்ப்பட்டுத் தன்னைக் காப்பாற்றிக்
கொள்பவனும் தூட்லெஸின் வருகைக்குப் பின்னால் ஒவ்வொரு கட்டத்திலும்
துணிகரமாக செயல்படுபவனுமான அவன் பார்வையாளர்களைக் கவர்கிறான். அடுத்ததாக
தூட்லெஸ் கதைப்பாத்திரமும் ஹிக்கப்பிற்கு இணையாக சிறுவர்களைப் பெரிதும்
கவர்கிறது. சிறுவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட கதைகளின் மூலம் மட்டுமே
அறிந்த நாகத்தைத் திரையில் காண்பது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.
நாய், பூனை, முயல் போன்ற நிஜமான வளர்ப்புப் பிராணிகளுடன் தோழமையோடு
இருக்கும் குழந்தைகளுக்குத் தாங்கள் திரையில் காணும் ஒரு புனைவு விலங்கான
தூட்லஸுக்கும் ஹிக்கப்பிற்கும் இடையிலான உறவும், அவர்கள் இருவரும் சேர்ந்து
செய்யும் சாகசங்களும் நிச்சயம் மிக வித்தியாசமான அனுபவத்தை வழங்கி
இருக்கும்.
இத்திரைப்படம் DreamWorks நிறுவனத்தாரின் திரைப்படங்களிலேயே அதிக வசூலை
ஈட்டித் தந்த படங்களுள் ஐந்தாவது நிலையைப் பிடித்திருக்கிறது. இதன் பெரும்
வெற்றிக்கு மற்றொரு காரணம் இதில் பயன் படுத்தப்பட்ட தொழிற்நுட்பமே ஆகும்.
CGI கணிணி தொழிற்நுட்பத்தினால் வடிவமைக்கப்பட்ட கதாப்பாத்திரங்களின் உருவ
அமைப்பு நம்மை வியக்கச் செய்வதோடு கதைக்கும் வழு சேர்க்கிறது. முன்பொரு
காலத்தில் கடற்கொள்ளையர்களாகவும் போர்வீரர்களாகவும் வாழ்ந்ததாய்ச்
சொல்லப்படும் வைக்கிங் வீரர்கள் திரண்ட தோள்களும் விரிந்த மார்புகளும்
பெரிய உருவளவும் கொண்டவர்களாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். வைக்கிங்
வீரர்களின் மரபுகளிலிருந்து வேறுபடும் ஹிக்கப்போ மெலிந்த உடலுடையவனாக
இருக்கிறான். மேலும் ஆரம்பத்தில் மூர்க்கத்தை பிரதிபளிப்பதற்கும் பின்னர்
தண்மையான பாவத்தை வெளிப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் தூட்லெஸ்
வடிவமைக்கப்பட்டுள்ளது. பலவித வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட மற்ற நாகங்கள்
படைப்பாற்றலின் உச்சம். இந்தத் திரைப்படத்திலேயே அழகியலும் உயிர்ப்பும்
நிறைந்த காட்சிகள் என பறக்கும் காட்சிகளைச் சொல்லலாம். தூட்லெஸின் மீது
ஹிக்கப் முதன் முதலில் ஏறி பறப்பதும், பின் அஸ்திரிட்டுடன் சேர்ந்து
பறக்கும் காட்சிகள் அழகு. சூரியக் கதிர்கள் மேகத்தை ஊடுருவி வானம்
நீலமாகவும் பொன்னிறமாகவும் நிறம் மாறும் அழகை மிக அருகில் காணும் வாய்ப்பை
நம் கண்களுக்குப் பரிசளிக்கிறது தொழிற்நுட்பம்.
அடுத்ததாக இத்திரைப்படத்தில் முக்கிய குரல் நடிகர்களான Jay Baruchel,
Gerard Butler, Craig Ferguson, America Ferrera, Jonah Hill, T.J. Miller,
Kristen Wiig, and Christopher Mintz-Plasse கதைப்பாத்திரங்களுக்கு உயிர்
சேர்க்கின்றனர். மேலும் அஸ்திரிட் ஹிக்கப்பின் முதுகில் ஒட்டி கொண்டு தன்
கைகளால் மேகத்தைத் தொட்டுப் பார்த்து வானை அளக்கும் காட்சிகளில் காதலை
இசைத்திருக்கிறார் இசை இயக்குனர் John Powell. பல காட்சிகளுக்குப்
பின்னனியில் ஒலிக்கும் பென்னி ஊதலும் Bagpipe என்னும் குழாய்வகை
இசைக்கருவியும் ஸ்கார்ட்லாந்து மற்றும் அயர்லாந்து வகை இசையை நம்
செவிகளுக்கு விருந்தாக கொடுக்கிறது. இத்திரைப்படத்தில் இவர் வழங்கிய
இசைக்காக அவ்வாண்டின் இயக்கவூட்டத் திரைப்படத்தின் சிறந்த இசைக்கான Annie
விருது இவருக்கு வழங்கப்பட்டது.
சிறுவர்களுக்காகவே இயக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பலவகை நாகங்கள் தோன்றும்
காட்சிகள் உட்பட இன்னும் சிலக் காட்சிகள் அவர்களுக்கு ஏற்புடையதாய்
அல்லாமல் சற்றே அச்சுறுத்தும் வகைவில் அமைந்திருக்கின்றன . இது சில
சிறுவர்களின் மனநிலையைக் கொஞ்சம் பாதிக்கக்கூடும் எனினும் இக்காட்சிகள்
பார்வையாளர்களுக்கு ஆழமான உணர்வை ஏற்படுத்த முக்கியமான பங்கை வகிக்கின்றன.
தவிர்க்க இயலாத இத்தகைய சறுக்கல்கள் இருப்பினும் How to train your dragon
என்னும் இத்திரைப்படம் இயக்கவூட்டத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க
மற்றுமொரு முக்கியமானத் திரைப்படமாகும்.
|
|