முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 39
மார்ச் 2012

  விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்... 5
ந. பச்சைபாலன்
 
 
       
பதிவு:

கலை இலக்கிய விழா 4 : நிறைவுறாத நிகழ்வுகள்

ம. நவீன்



எழுத்தாளர் எம். குமாரன் மறைவையொட்டி அஞ்சலி பதிவுகள்:


அஞ்சலி - எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
ம. நவீன்

சிறுகதை : சீனக் கிழவன்
எம். குமாரன்

எம். குமாரனின் 'செம்மண்ணும் நீல மலர்களும்'
ம. நவீன்



வல்லினம் கலை, இலக்கிய விழா 4 தொடர்பான பதிவுகள்:

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ம. நவீன்

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்
பூங்குழலி வீரன்

புத்தகப்பார்வை : தீர்ந்து போகாத வெண்கட்டிகள்
சு. காளிதாஸ்

புத்தகப்பார்வை : கடக்க முடியாத காலம்
அகிலன்

புத்தகப்பார்வை : என்னை நாயென்று கூப்பிடுங்கள்!
மா. சண்முகசிவா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



கட்டுரை:

இழக்கப்பட்ட தேசிய சினிமா
கே. பாலமுருகன்



சிறுகதை:

மேம்பாலம்
கே. பாலமுருகன்



புத்தகப்பார்வை:

தானே மழையாகிப் பெய்யும் 'எதுவும் பேசாத மழை நாள்'
கிண்ணியா எஸ். பாயிஸா அலி



தொட‌ர்:

இனியவளின் குறிப்புகள்
பூங்குழலி வீரன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...29

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ஸ்ரீவிஜி

சின்னப்பயல்

குமரன்

கருணாகரன்

அல்வா காலம்

காட்சி 1

தமிழ்ப்பள்ளி வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினரின் கார் நுழைகிறது. காரிலிருந்து இறங்கும் அவரை ஆசிரியர்கள் வரவேற்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர்கள் பைகளில் பொருள்களோடு இறங்குகிறார்கள். ஆசிரியர்கள் நிறைந்திருக்கும் அறையில் சட்டமன்ற உறுப்பினர் நாட்டு நடப்புகளைக் கொஞ்சம் அலசுகிறார். தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு ஆசிரியர்களுக்குத் தம் தீபாவளி அன்பளிப்பாக வேட்டி சேலைகளைத் தருகிறார். ஒவ்வொரு பையிலும் அவரின் படம்போட்ட வண்ணத்தாள் ஒட்டப்பட்டுள்ளது.

காட்சி 2

வசதிகுறைந்த மாணவர்கள் என அடையாளங்காணப்பட்ட சுமார் நூறு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பொதுமண்டபத்தில் குவிக்கப்படுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடையே உரையாற்றுகிறார். நாட்டின் முன்னேற்றத்தில் எந்த இனமும் விடுபட்டுவிடாமல் விரைந்து நடவடிக்கை எடுத்துவருவதால் இனி எல்லாருக்கும் நல்ல காலம் பிறக்கும் என உறுதி கூறுகிறார். உரையாற்றிய பிறகு, மாணவர்களுக்கு புத்தகப்பையும் நீர்ப்பாட்டிலும் அவர்களின் பெற்றோர்களுக்குப் பரிசுக்கூடையும் ‘அங்பாவ்’ வும் வழங்குகிறார்.

காட்சி 3

கோயில் வளாகத்தில் இந்தியர்கள் 250 கூடுகிறார்கள். கொஞ்ச நேரத்தில் உள்ளூர் அரசியல் தலைவர்கள் புடைசூழ சட்டமன்ற உறுப்பினர் வருகிறார். “இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவவேண்டும். ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதில் நாம் பின்வாங்கியதில்லை. நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. இனி எல்லாருக்கும் விடிவுகாலம்தான். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்” பேசிமுடித்தவுடன் வந்தவர்களுக்கு ரி.ம.20, சாப்பாடு, 1மலேசியா டி-சட்டை வழங்கப்படுகிறது. அதே நிகழ்வு மறுநாளும் அங்கு அரங்கேறுகிறது. அப்பொழுது 400 இந்தியர்கள் ஒன்றுகூடி அந்த அரிய உதவியைப் பெற்றுச்செல்கிறார்கள். அந்தக் காட்சிகளைப் படமெடுக்கப் பளுதூக்கி வரவழைக்கப்பட்டது.

காட்சி 4

தீபாவளி மாதம். என்றும் இல்லாத திருநாளாய் தமிழ்ப்பள்ளி பரபரப்பாயிருக்கிறது. ஓர் அரசியல் கட்சியின் மகளிர்ப் பிரிவினர் தங்கள் சீருடையில் பள்ளியில் கூடுகிறார்கள். எல்லா மாணவர்களும் பள்ளிக்கு முன்னே குவிக்கப்படுகிறார்கள். அனைவருக்கும் தீபாவளி அன்பளிப்பாக உணவுப் பொட்டலங்களும் ‘அங்பாவ்’வும் வழங்கப்படுகின்றன.

காட்சி 5

வங்கிக்குப் போய் தம் ஓய்வூதிய பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்திய மூதாட்டி வெளியே வருகிறார். அவரை வழிமறித்த ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், “வாங்கம்மா, உங்கள மாதிரி முடியாதங்களுக்கு உதவி தராங்க” என்று கூறி அழைத்துப்போய் கையில் ரி.ம. 100யைத் தருகிறார்கள். அங்கிருந்து இன்னொரு கட்சியினரின் அழைப்பில் சென்றவருக்கு மேலும் ரி.ம.100 கிடைக்கிறது. பிற்பகல் மணி 1.00க்கு வீட்டுக்குத் திரும்புகிறார். தொடர்ந்து வந்த எதிர்க்கட்சியினரின் அழைப்பை ஏற்று வெளியே போய் வருகிறார். கையில் மேலும் ரி.ம.100 சேர்கிறது. ஆக, மொத்தம் ஒரு நாள் வசூல் ரி.ம. 300. அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. நாட்டில் இத்தனை நல்லவர்களா?

மேற்கண்ட காட்சிகள் யாவும் கற்பனையன்று. அண்மையில் நம் திருநாட்டில் தீபாவளி மாதத்தில் அரங்கேறிய திருக்காட்சிகள்தாம் இவை. தகவல் ஊடகங்களை ஊன்றிக் கவனிப்போரின் கண்களில் இதுபோன்ற காட்சிகள் தெரிந்திருக்கலாம். ஆட்சியாளர்களின், அதிகார மையங்களின் மதிப்பீட்டுத் தராசில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதற்கு இவை மிகச் சிறந்த சான்றுகள்.

இந்தக் காட்சிகள் சொல்லாமற் சொல்லுகின்ற செய்திகளை நாம் அனைவரும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒன்று தெளிவாகத் தெரிகிறது. விரைவிலோ ஆண்டு மத்தியிலோ நாட்டின் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். தகவல் ஊடகங்களும் தலைவர்களின் நாடளாவிய பரப்புரைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அதற்குள் இந்தியரின் மனங்களை இலவசங்களால் வருடி இதமாக்கும் முயற்சிகள்தாம் அவை.

அல்வா உண்ணச் சுவையாக இருக்கும். இளையோர் முதல் முதியோர் வரை விரும்பிச் சுவைக்கும் பண்டமது. அதற்காக அதையே உணவாக்கிக்கொள்ள முடியுமா? அதைப் புசித்துப் பசியைப் போக்கிக்கொள்ள முடியுமா? மேற்கண்ட காட்சிகள் யாவும் நமக்கு அல்வா தரும் முயற்சியன்றி வேறு என்னவாம்? இருபது, ஐம்பது ரிங்கிட்டுகளை அங்பாவ்வாகவும் உணவுப்பொட்டலங்களையும் பரிசுக்கூடைகளையும் கைகளில் திணித்துவிட்டால் நம் சமூகத்தின் சிக்கல்கள் தீர்ந்துவிடுமா? இவற்றை எதிர்பார்த்துத்தான் சமூகம் கையேந்திக் காத்திருக்கிறதா?

மலேசியா சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மற்ற இனங்களைவிட எல்லாத் துறைகளிலும் இந்தியர்கள் பின் தங்கியுள்ளனர். அவர்களைக் கைத்தூக்கிவிட சரியாட திட்டமிடலும் செயலாக்கமும் தேவை. 2020 தொலைநோக்குத் திட்டத்தை அடைய மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள் இந்திய சமுதாயத்தைக் கடந்து போகின்றனவே தவிர அவர்களையும் உடனழைத்துப்போகும் முயற்சிகள் குறைவு என்பதுதான் உண்மை. பொதுச்சேவைத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்பு, தொழிற்கல்வி வாய்ப்பு, உயர்கல்விபெறும் மாணவர் எண்ணிக்கை உயர்வு, உபகாரச் சம்பளம், சொத்து முதலீடு, இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு சமுதாயம் காத்திருக்கையில் கைநிறைய அல்வாவை அள்ளித் தந்தால் அடுக்குமா?

நடப்பிலுள்ள அரசு ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று முற்றிலுமாக மறுத்துவிடமுடியாது. இந்தியர்களின் சிக்கல்களைத் தீர்க்க பிரதமர்துறையின் நடவடிக்கைக் குழு, தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு, இந்தியத் தொழில்முனைவர்களுக்கு நிதி ஒதுக்கீடு என சில முயற்சிகளை அரசு மேற்கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், இன்னும் செயல்படுத்தவேண்டிய திட்டங்கள் அதிகம் இருப்பதையும் மறுக்கமுடியாது. இந்தியர்களின் சொத்து மதிப்பை மூன்று விழுக்காடாக உயர்த்த அரசு இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அங்பாவ்வும் பரிசுக்கூடைகளும் ஒருபோதும் அந்த முயற்சிக்கு உதவப்போவதில்லை.

ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்படும் என்ற பிரதமரின் அண்மைய அறிவிப்பது மகிழ்வைத் தந்தாலும் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் பாகுபாடின்றி அரசின் முழு உதவிபெறும் பள்ளிகளாக ஏற்றுக்கொள்ளும் அறிவிப்பைத்தான் இந்தியச் சமுதாயம் பிரதமரிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பைப் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு போய் ஆவன செய்ய வேண்டியது நம்மை வழிநடத்தும் அரசியல் கட்சியின் (கட்சிகளின்) தலைமைப்பொறுப்புகளில் உள்ளவர்களின் தலையாயக் கடமையாகும். செய்வார்களா?

திருநாட்கால அன்பளிப்புகளை அள்ளி வழங்குபவர்களுக்கு நன்றாகத் தெரியும். வயிற்றுக்கும் இதயத்திற்கும் தூரம் அதிகமில்லை என்று! வயிறு நிறைந்தால் இதயம் குளிரும். இதயம் குளிர்ந்தால் அள்ளிக்கொடுத்த கைகளை இதயம் கொண்டாடும் என்று. அள்ளித்தரும் அங்பாவ்வும் பரிசுக்கூடைகளும் தேர்தலில் ஓட்டுகளாக மாறும் என்ற உறுதியான எண்ணம்தான் இதற்குக் காரணம்.

இந்திய சமுதாயம் எதிர்பார்ப்பது நிரந்திர நிவாரணம். மழைக்காலத்தில் முளைக்கும் காளான்போல் விழாக்காலங்களில் கிடைக்கும் அன்பளிப்புகளல்ல. இவற்றை ஏதோ அரிய உதவியாக எண்ணி வழங்குபவர்கள் உணரவேண்டும். அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்து செயல்படும் நம் சமூகத்தலைவர்களும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

2007ஆம் ஆண்டு தொடங்கி, இந்திய சமுதாயம் தான் முன்னேற வேண்டும் என்ற உணர்வோடு நடத்திவரும் அமைதிப்போராட்டம் மிக முக்கியமானது. சமுதாயத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தி, நாட்டின் உரிமையுள்ள குடிமக்கள் என்ற உணர்வோடு உரிமைகளுக்காகப் போராடும் மனவுறுதியை அன்றுமுதல் ஒவ்வோர் இந்தியன் மனத்திலும் விதைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது வழங்கப்படும் சின்னச் சின்ன அன்பளிப்புகளும் இலவசங்களும் அந்த உணர்வை நீர்த்துப்போக வழியமைத்துவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

நோயின் வேதனையில் துடிக்கும் ஒருவருக்கு உடனடி மருத்துவம் செய்து நோயைக் குணமாக்கும் வழியை மேற்கொள்ளவேண்டும். அதைவிடுத்து, களிம்பு தடவி தற்காலிகத் தீர்வுகாணல் அறிவுடைமையாகாது. ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என திருவள்ளுவர் தெளிவாக மொழிகிறார். நோயை அடையாளம் கண்டு அந்நோயின் காரணங்களை ஆராய்ந்து, நோயைத் தீர்க்கும் வழிகளையும் அறிந்து பின்னர் அதைத் தீர்க்கும் வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார். சமுதாய நோய்களுக்கும் இவைதானே வழிமுறை! இவற்றை அறியாதவர்கள் அரங்கேற்றும் கேலிக்கூத்துகள்தாம் எத்தனை! எத்தனை!

இன்றையக் காலக்கட்டம் மிக முக்கியமானது. இது இனத்தின் எழுச்சிக்காலம்! மொன்னையான சமுதாயத்தின் உணர்வுகளைப் பட்டைதீட்டிப் புதுப்பிக்கும் புரட்சிக்காலம்! இனத்தின் பண்பாட்டு அடையாளங்களை நவீன வாழ்வியலுக்கு இழந்துவிடாமல் போற்றிக் காப்பாற்றிக்கொள்ளும் மீட்டுருவாக்கக் காலம்! அரிய வாய்ப்புகளைத் தேடித் தேடி இனத்தின் உயர்வுக்கு வழிசமைக்கும் பொன்னான காலம்!

ஆனால், இப்பொழுது அல்வா காலமாக நிறமாறிக்கொண்டிருப்பது நம் போதாத காலம்!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768