|
|
ஹனோய் மாமா
இரத்தஞ்சுண்டிய ஹியூ தெருவில்
எதிர்பாரா விதமாய்
ஹனோய் மாமா
தன் மருமானைப் பார்த்தார்.
சின்னச்சிறு மருமான்
கோணங்கித் தலை மருமான்
சின்னப்பை சுமக்கும்
சின்னக்கால் மருமான்
ஓட்டைத் தொப்பி போட்டு
சீட்டியடித்துக் கொண்டே
குருவியாய் மஞ்சள் பாதையில்
குதித்துக் குதித்துச் செல்வான்
'நான் இப்போ
ஓடும்பிள்ளை யாக்கும்!
ரொம்பக் கெட்டிக்காரனாயிட்டேன் மாமா!
வீட்டை விட இராணுவ முகாம் நல்லாருக்கு`
செம்பேரீச்சம்பழப் பிளவாய்
சின்னஞ்சிறு மருமான் சிரிப்பு
`ஆகட்டும் காம்ரேட்! போய்வா!'
மருமான் போகிறான்.
மருமான் போய்விடுகிறான்
மாமா திரும்பிவிடுகிறார்
ஆறாவது மாதம்
வீட்டிலிருந்தொரு செய்தி
(அது அப்படித்தான் லுவோம்)
ஒரு சூரியன் சப்பிய நாளில்
சின்னக் காம்ரேட்
எப்பொழுதும் போல்
கடிதங்களைப் பையில் போடுகிறான்
போர்களக் குண்டுகளின்
பேரிரைச்சலுக் கிடையே
அவசரக் குறியிடப்பட்ட பையோடு
அலட்சியமாக நடக்கிறான்
நெற்கதிர்கள் எல்லை வகுக்கும்
நிழலற்ற கிராமத்துப் பாதை
நெற்கதிர் சிரசோடு வயலில்
உரசிச் செல்லும் சின்னப் பையனின் தொப்பி
பளீரென
ஒரு செந்நிறக் கொட்டாவி
அங்கே பார் லுவோம்!
சின்னக் காம்ரேட்
இரத்த நதியானதை!
மணக்கும் நெற்கதிரை
இறுகப் பற்றிய
சின்ன மருமான் உடல்
வயல்வெளியில்
இன்னும் ஓடும் ஆவி:
(லுவோம்! இன்னும் என்ன இருக்கிறது?)
சின்னஞ்சிறு மருமான்
கோணங்கித் தலை மருமான்
சின்னப்பை சுமந்து
குதித்தோடும் மருமான்!
சீனக்கதையின் இலக்கணங்களில் கட்டுண்டிருந்த வியட்நாமியக் கவிதை
தனக்கெனவொரு முகத்தை விரித்துக் கொள்ள வெகுகாலம் பிடித்தது. கவிதை
வியட்நாமியர்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு சராசரிக்
குடும்பம் மற்றொரு குடும்பத்திற்கு புதிதாய் இயற்றியக் கவிதையைப் பரிசளிப்பது
சாதாரணமானது.
போரின் நாசங்களுக்கிடையேயும் வியட்நாமியர் இலக்கிய நம்பிக்கையை
இழக்கவில்லை. ஹோ சி மின் கூட அவரது சிறைவாசத்தின்போது கவிதைகள்
படைத்துள்ளார்.
வியட்நாமியக் கவிஞர்களிலேயே, தோ ஹூவின் கவிதைகள் மட்டுமே புதிய
உலகப்பொது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. போருக்குப் பிறகு பல
இலக்கியவாதிகளைப் பற்றி தகவல் இல்லை.
|
|