|
|
அப்பா கிழமை
அரை மதிப்பெண் குறைந்துபோய்
கூடுதலாய் ஒரு வருடமும்
அதீத கவனத்தோடும் படபடப்போடும்
படித்துக் கிடைத்த மெடிக்கல் சீட்டில் சேர
வார முதல் நாளே போகலாம் என்று நான் சொன்னதும்
அஷ்டமி என்று அஷ்டகோணலாய் அப்பா மறுக்க
செவ்வாய்க்கிழமை கிளம்பலாமா என்று ஆசையாக கேட்கையில்
நவமி என்று நறுக்கென்று வெட்டி
புதன்கிழமை போகலாம் என்று
பொன் கிடைக்கப்போகும் பேராசையில் புன்முறுவலிக்க
புண்பட்டு
புத்தியிருக்கா உங்களுக்கு?
படிக்கிறதுக்கெல்லாம் பஞ்சாங்கம் பார்ப்பீங்களா?
கூறுகெட்டத்தனமா பேசிட்டிருக்கீங்க
என்று
தேள்பூச்சியாய் கொட்டித் தீர்த்து
உலகத்துல எனக்கு எதிரின்னு ஒருத்தன் இருந்தான்னா
அது இந்தாளுதாம்மா.
செவ்வாய்க்கிழமை போறோம்
அவர் வரலைன்னா நான் தனியாய் போய்க்கிறேன்
என்று அம்மாவிடமும் ஆர்ப்பரித்துவிட்டு
தனிமையில் இளைப்பாறி சினம் தணிந்து
மெதுவாக அம்மாவிடம் போய்
அப்பாகிட்ட சொல்லிடும்மா புதன்கிழமையே போயிடலாம்னு
என்றதும்
நீ சொன்ன மாதிரியே செவ்வாய்க்கிழமை போகலாம்னு
இப்போதான் உங்கப்பா சொல்லிட்டுப்போனார்
என்று சிரித்தவளிடம்
என்ன சொல்வதென்று தெரியாமல்
நின்ற இடத்தை விட்டு அகன்றேன்.
செவ்வாய்க்கும் புதனுக்கும்
இடைப்பட்ட கிழமையில்
சுற்றி வந்தது
புரிதல் என்றவொரு புதுக் கிரகம்.
கைவினை
லட்சம் தடவை
சுமந்து நடந்திருப்பேன்.
எட்டாவது படிக்கிறவரைக்கும்
தோள்ல தூக்கிட்டு போய்த்தான்
இவனை ஸ்கூல்ல விடுவேன்.
இவன் அக்கா
ரெண்டு வயசுலேயே போய்ட்டா.
Rickets ன்னு சொன்னாங்க.
நெருங்கின உறவுல கல்யாணம் பண்ணிகிட்டதால...
ரொம்ப ஜாக்கிரதையாவே
இவனை வளர்த்தோம்.
தவறாம ஊசி போட்டோம்.
ரெண்டு காலும் கோணையா வளைஞ்சுபோய்
சரியா நடக்கக்கூட மாட்டான்.
ஆனா Will Power ஜாஸ்தி.
எந்த ஊருக்கும் தனியாவே போயிட்டு வந்திடுவான்.
I & T ல Double M.Sc. Degree வாங்கினான்.
இப்போ அவனுக்கு வேலை கிடைச்சிருக்கு.
மாசம் 40,000 ரூபாய் சம்பளம்.
வேலைல சேர்றதுக்குள்ள
தலைல அடிபட்டு பேச்சு மூச்சில்லாம
இப்படி ஆஸ்பத்திரில கிடக்கிறான்.
கண்ணீரோடு சொல்லிக்கொண்டிருக்கிறார் தந்தை.
கவனம் பிசகிய கைவினைஞன்
கோணலாய் ஒரு தாழி செய்தான்.
குறையுற்ற தாழியில்
கடைந்தவள் ஒரு தேவதை.
வெண்ணை திரளும்போது
தாழியை உடைத்தவனைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
சாகாவரம்
கண நேரத்தில்
நிகழ்ந்துவிட்டது அந்த மனஸ்தாபம்.
இனி நிகழப்போகும்
நினைவு மீட்டல்களிலும்
தன்னிலை நியாயப்படுத்தலிலும்
இன்னும் சிலகாலம்
உயிரோடிருக்கக் கூடும்
இறந்துபோன அந்த கணம்.
|
|