|
|
நூறாயிரம் கோடி மழை குளித்த மலை
மலையைக் குளிப்பாட்டும் மழையின் நடனத்தில்
நெகிழ்ந்தது மலை
பேரிசையோடு நிகழ்ந்த ஆனந்த நடனத்தில்
தன்னை நெகிழ்ந்து நெகிழ்ந்தே கொடுத்த
மலை
பெருக்கெடுத்தது பேராறாய் அன்பூறி
மலையாறு
ஆனந்தக்களிப்போடு பொங்கிப் பெருகியது
பாறைகளும் நடனமாடின
மழையோடு கலந்து.
பேரிசைப் பெருவெள்ளம்
மழை நாளின் மலையெங்கும் நிகழ்ந்த
மறுநாள்
ஒளியழைத்த பகலில்
களைத்து ஆயாசமாய்க் கிடந்தது
மலை
மழைக்கு முன்னிருந்த நிலை
இல்லை இந் நிலை
இது இன்னொரு போது
மாறும் வெறொரு நிலையாய்
பிறகொரு நிலை
ஒன்றை மாற்றிக் குலைத்து
இன்னொன்றாக்கி
பிறிதொன்றாக்கி
இவ்விதம் மாறிமாறியே
பெருகும் நிலை மாற்றம்.
காலந்தோறும் வெள்ளம்
வெள்ளந் தோறும் நிலை மாற்றம்
இப்போதிருக்கும் மலையின் தோற்றம்
முன்புமில்லை
பின்னுமில்லை.
நான் பார்த்த மலையும்
முன்னிருந்த ஒரு தருணமே
பூதம்
மாபெரும் சிலந்தியின் நிழலில் மறைகின்றன
இப்பெரும் பூமியின் அலைகளும் கனவுகளும்
நிறங்களும்
ஊற்றுகளும்
அச் சிலந்தி
பின்னும் வலையில் இதோ எல்லாக்கண்டங்களும்
அவற்றின் நல்வினை தீவினைகளும்
ஊழும்.
நமது சிலுவைகளை நாமே செய்கிறோம்
நமது முகங்கள் பிரதிபலிக்கும்
புதைகுழிகளை நாமே வெட்டுகிறோம்.
நமது அறிவீனத்தின் வெற்றிடத்தில்
நிரம்புகிறது சாவுமணியின் பேரொலி
அதுவே வியப்பூட்டும் இசை நமக்கு
எங்கள் விதியின் சிறகை
நாமே வெட்டிக்களிக்கும்
நாட்கள் வந்தன
அதைப் பார்த்துக் களிக்கும் காலமும் வந்தது
ஒவ்வொரு சிலந்தியிடமும்
பூமியின் அலைகளையும் சிறகையும்
நிறங்களையும் அழிக்கும் கனவே
இந்த யுகத்தின் விதியாயிற்று.
நிறங்கள் அழிந்து
உருக்கள் அழிந்து
அசைவுகளும் சுழற்சியும் ஒடுங்கி
ஒரே அச்சில்
வார்க்கப்படும் பூமியை
ஓரே அச்சில் வார்க்கப்படும் மனிதர்களை
கொண்டியங்கும் மாபெரும் இயந்திரம்; சுழல்கிறது
இப்போது
நான் யாருடைய அச்சில் வார்க்கப்படுவது
அமெரிக்காவின் அச்சிலா
சீனாவின் அச்சிலா
இந்தியாவின் அச்சிலா
ஐரோப்பியக் கூட்டின் அச்சிலா
சிறிய அச்சுகள் பெரிய அச்சுகள்
இதோ அச்சிலுண்டாகிய பண்டங்கள் நாம் ஒவ்வொருவரும்.
கருவிகள் தயார்
நமது தலையில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரத்தை
நாமே சுமக்கிறோம்
அது நம்முடையதல்ல என்றபோதும்
நானே என்னைத்தின்கிறேன்
நானே உன்னையும் தின்னுகின்றேன்.
நானே கிருமியானேன்
நானே நோயானேன்
தன்னைத்தானே தின்னும் பூதம் ஆனேனா கடவுளே...
|
|