|
|
க.பாக்கியத்தின் 'மரணத்தின் மரணம்'

வாழ்க்கையில் ஆங்காங்கே காத்திருப்புகள் என்னும் இடைவெளிகள்
நிறைந்திருக்கின்றன. காத்திருப்புகள் பலவற்றை கடந்தும் கற்பித்தும்
அனுபவங்களாய் உருவெடுப்பவை. காத்திருப்புகள் சில வேளைகளில் நிம்மதிகளை
விழுங்கிவிட்டாலும் கூட முடியும் தருவாயில் மனதிற்கு அதைவிட பன்மடங்கு
நிம்மதிகளைத் தூவிக்கொண்டே சென்று மறைகின்றன. தேடலுக்கிடையில்
காத்திருப்புகளைத் தவிர்த்துச் செல்வது கடினமாகின்றது.
அன்றாட அலுவல்களில் காத்திருப்பைக் கடப்பது சுமையாய் இருந்தாலும் அதுவே
நடைமுறையாகிவிட்ட பின்னர் கடமையாய் எஞ்சி நிற்கின்றது. அலுவல்களில் சேவை
முகப்புகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. எண் அட்டைகளுடன் தங்களின் முறைக்காக
காத்திருப்பதும் பழக்கமாகிவிட்டது. அச்சமயங்களில் காத்திருக்கும்பொழுது நம்
கண்களும் மனங்களும் பார்க்கவும் சிந்திக்கவும் தொடங்கிவிடுகின்றன.
சேவை முகப்பில் கட்டணத்தைச் செலுத்த தன் முறைக்காக காத்திருப்பவன் கண்களில்
அங்கே இருக்கும் தொலைக்காட்சியில் ஒளியேறிக் கொண்டிருக்கும் காட்சிகள்
பதிவாகின்றன. அக்காட்சியினைத் தமது ‘மரணத்தின் மரணம்’ என்ற கதையின் வழி
நமக்குத் தருகின்றார் திருமதி க.பாக்கியம்.
மிருகங்கள் இயற்கையோடு கைகோர்த்துத் தங்களின் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்
கொள்கின்றன என்பதை விளக்கும் காட்சியின் ஒரு பகுதி அது. ஒரு புறத்தில்
இருக்கும் சிங்கங்கள், மற்றொரு புறத்தில் இருக்கும் காட்டெருமைகளைப்
பார்த்துவிடுகின்றன. அக்காட்டெருமைகளை நோக்கி விரைகின்றன. சிங்கங்களைக்
கண்டு அஞ்சி ஓடும் காட்டெருமைகளில் ஒன்று சிங்கங்களிடம் அகப்பட்டுக்
கொள்ளும் தருவாயில் இருக்கின்றது.
தப்பி ஓடிக்கொண்டிருக்கையில் அவ்வப்போது திரும்பி தன் கொம்புகளால் முட்ட
வருவதுபோல் சிங்கங்களிடம் செய்கை காட்டி மீண்டும் ஓடுகின்றது. தங்களை
நோக்கி காட்டெருமை திரும்பும்போதெல்லாம் பின்வாங்கும் சிங்கங்கள் தொடர்ந்து
காட்டெருமையை விரட்டுகின்றன. ஒரு தருணத்தில் காட்டெருமையின் காலும் வாயும்
சிங்கங்களில் பிடியில் சிக்கிக் கொள்கின்றன. இக்கட்டான இந்நிலையிலும்
சிக்கிக் கொண்ட காட்டெருமையின் துணிச்சல் கதையை விறுவிறுப்பாய் கொண்டு
செல்கின்றது. சற்று முன் அஞ்சி ஓடிய காட்டெருமைகள் இந்நிலை கண்டு வேகமாய்
சிக்கிக் கொண்ட காட்டெருமைகளை நோக்கி ஓடி வருகின்றன. தங்களை நோக்கி
ஓடிவரும் காட்டெருமைகளின் கூட்டத்தைக் கண்டு தூர ஓடுகின்றன சிங்கங்கள்.
இதுதான் கதையில் வரும் பகுதி. ஆனாலும் கதையில் வந்து போன மிருகங்கள்
நமக்குள் எதையோ ஆழமாய் கிளறிவிட்டே செல்கின்றன.
பலம் என்பது ஒற்றுமையின் மூலமும் உருவகம் பெற்றுவிடுகின்றது. மரணத்தையே
மரணமடைய செய்துவிட்ட இத்தகைய பலத்தின் வலிமையைக் கதையின் வழி அறிய
முடிகின்றது. சமூகத்தின் மீது இப்பார்வை பதியும்போது மிக முக்கியமான
ஒற்றுமையை தேடி மனம் செல்கின்றது. தனிமனித போராட்டத்தைவிட ஒன்றுகூடி
முன்நிற்கும்பொழுது நியாயங்கள் எளிதாய் வென்றுவிடுகின்றன.
சின்ன விஷயங்களுக்காகவும் அற்ப பிரச்சனைகளுக்காகவும் தற்கொலை ஒன்றே முடிவென
கருதி வாழ்க்கையை மாய்த்துக் கொள்வோர்களுக்கிடையில் உயிருக்கே
உத்தரவாதமில்லாத பட்சத்தில் சிங்கங்களிடம் சிக்கிக் கொண்டாலும் துணிவுடன்
போராடிய காட்டெருமையின் துணிவும் தன்னம்பிக்கையும் பாராட்டுக்குரியது.
தொழிலில் நஷ்டம், துரோகம், காதல் தோல்வி, ஏமாற்றம் போன்றவற்றினால்
வாழ்க்கையே பறிபோய்விட்டதென கருதும் பலருக்கும் காட்டெருமையின்
தன்னம்பிக்கை நல்ல முன்னுதாரணம். பிரச்சனையை எதிர்கொள்ளும் போதெல்லாம்
எதிர்த்து நின்று போராட்டம், இறுதியில் சிக்கிக் கொண்ட பின்னரும் அயராத
போராட்டம். எவ்வளவு பெரிய வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் இத்தகையதொரு
தன்னம்பிக்கை இருக்குமானால் முறியடித்து சாதிக்க முடியும்.
கதைகளைப் போன்றே திரைப்படங்களிலும் மிருகங்களின் வரவு பிரபலமானதாக உள்ளது.
எழுபதுகளில் மிகவும் பிரபலமான இந்தித் திரைப்படம் ஹாத்தி மேரெ சாத்தி (Haathi
Mere Saathi). அதை யாராலும் இன்னும் மறந்திருக்க முடியாது. நான்கு
யானைகளுடன் சிறு வயது முதல் வளர்ந்து வரும் கதாநாயகன் ராஜ் அவற்றின்பால்
மிகுந்த பாசத்துடன் இருக்கின்றான். குடும்பம் என யாருமில்லாத ராஜ்க்கு
அந்நான்கு யானைகளும் குடும்பமாகவும் நண்பர்களாகவும் வலம் வருகின்றன. தன்
யானை சகாக்களின் மனம் கோணாது நடக்கும் ராஜ் தான் செய்யும் எவ்வித செயலையும்
அவற்றின் சம்மதத்துடனே செய்கிறான். ராஜ் சொத்துக்களை இழந்து இக்கட்டான
சூழலுக்குத் தள்ளப்படுகின்றான். யானைகளை விற்க சந்தர்ப்பம் தேடி வந்தும்
அதை உதறி எறிகின்றான். யானைகளுடன் வித்தை செய்து பணம் திரட்ட ஆரம்பிப்பவன்,
சிறு விலங்குக்காட்சி சாலையை உருவாக்கி வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றான்.
தன்னைத் தூற்றுவோர்களுக்கு தன் அருமையை உணர வைத்து ராஜ்-காக தன் உயிரைத்
தியாகம் செய்து மடிகின்றது நான்கு யானைகளுள் ஒன்றான ராமு.
இப்படம் நிறைவைக் காணும் கணம் ஒவ்வொரு மனிதனின் அருகிலும் நான்கு யானைகள்
இருப்பதை அப்போதுதான் உணர முடிந்தது. மனிதன் ஆறறிவுடன் மண்ணில்
பிறக்கும்போது தன்னுடன் நான்கு யானைகளையும் உடன் கொண்டு வருகின்றான்.
சத்யம், தர்மம், அன்பு, அமைதி என்ற பெயர்களைத் தங்கள் வலிமைமிக்க உடல்களால்
தாங்கி மனிதனுடன் வரும் யானைகள் கண்களுக்குப் புலப்படாமல் இருப்பது அதன்
வலிமையை இன்னும் பல்மடங்கு அதிகரிக்கின்றன. மனிதனின் பிஞ்சு விரல்கள் அந்த
யானைகளை எப்பொழுதும் பிரியமாய் இறுக்கிப்பிடித்துக் கொள்கின்றன. மனித
பிஞ்சு விரல்களில் மென்மை மறைந்து கடினத்தன்மை பரவத் தொடங்கும்போது
யானைகளைத் தானாகவே விடுவிக்கின்றான். யானைகள் அவனிடமிருந்து விலகும் போது
‘மனிதம்’ என்ற உன்னத தன்மையையும் விலகுகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட நான்கு
குணங்களுக்கும் நான்கு யானைகளின் பலத்தினைவிட பல்மடங்கு அதிகம். இந்த
நான்கு குணங்களும் நம்மைச் சுற்றி பாதுகாப்பு வளையமாய் தோன்றும் அதே சமயம்
நம் முன்னேற்ற படிகளாகவும் தன் தோள்களைத் தந்து ஏற்றி விடுகின்றன. பலர்
அதன் அருமை புரியாது சுமையென கருதி தூர எரிகின்றனர்.
மிருகங்கள் நமக்கு பல வாழ்க்கை தத்துவங்களை எளிதாய் புரிய
வைத்துவிடுகின்றன. நம்மைச் சுற்றி நாம் காணும் சிறு விலங்குகள் முதல்
தொலைக்காட்சியில் காணும் பெரிய விலங்குகள் வரை எதையோ ஒன்றை நமக்கு
புலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
|
|