முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

  ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா
 
 
       
கட்டுரை:

கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
ம. நவீன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா



சிறுகதை:


வசனம்
யோ. கர்ணன்

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி



விமர்சனம்

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல்
கி. புவனேஸ்வரி

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...30

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ந. பெரியசாமி

வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு ஆதவன் தீட்சண்யா பதில் தருவார். கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

 

அரவிந்தன் - அர்வின் (தமிழ்நாடு)

கேள்வி : சிற்றிதழ்களிலெல்லாம் கவிதை பற்றி எழுதும் போது ஏன் வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் போன்றவர்களைத் தவிர்க்கிறார்கள்? அவர்கள் எழுதுவது கவிதை இல்லையா? எதுதான் கவிதை?

பதில் : நிலவுகிற சமூக அமைப்பையும் அது உருவாக்கியுள்ள விழுமியங்களையும் சரியென நம்புகிறவர்கள் அந்த அமைப்பு நீடித்திருப்பதற்கான கருத்தியல் நியாயத்தை தம்மால் இயன்ற வழிகளிலெல்லாம் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அந்தப் பிரச்சாரத்தை குடும்பம் தொடங்கி கோவில் ஈறாக எல்லா நிறுவனங்களின் வாயிலாகவும் மேற்கொள்கின்றனர். பத்திரிகைகளும் இந்த பிரச்சார நிறுவனங்களின் ஓர் அங்கம்தான். எனவே கருத்தியல் அடிப்படையில் பேரிதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்கிற கேள்வியே எனக்கு முதன்மையாய் இருக்கிறது. அடிப்படைக் கட்டமைப்பில் மாறுதலைக் கோராதபட்சத்தில் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி, முதல் அணி-மூன்றாம் அணி என்பதற்கெல்லாம் எப்படி ஒரு மாறுபட்ட பொருளுமில்லையோ அதேபோலத்தான் பேரிதழ் சிற்றிதழ் என்பதற்கும் எந்த வித்தியாசமுமில்லை.

இந்தியச் சமூக அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் எதுவுமின்றி- அன்னியச் சுரண்டலுக்கு பதிலாக சுதேசிச்சுரண்டலை மீண்டும் கொணர விரும்பியவர்கள் அந்தக் கருத்தை தேசவிடுதலை என்ற முழக்கத்தின் கீழ் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் அந்தப் பிரச்சாரத்திற்கு வலுவூட்ட இங்கு பத்திரிகைகள் உருவாகின. பத்திரிகைகளைத் தொடங்குவதற்குரிய முதலீட்டுப்பலம் இங்குள்ள சாதியடுக்குடன் நேரடியாகத் தொடர்புடையது என்று தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. விடுதலை விடுதலை என்று இந்தப்பத்திரிகைகள் பெருமுழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தபோது- சுதேசிகளால் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எதுவிடுதலை, எதிலிருந்து விடுதலை, யாரிடமிருந்து யாருக்கு விடுதலை என்கிற எதிர்க்கேள்விகளையும் புதுவிளக்கங்களையும் முன்வைக்க தமது சக்திக்குட்பட்டு பத்திரிகைகளைத் தொடங்கினர். இந்திய/தமிழக சிறுபத்திரிகைகளின் தோற்றமாக இதையே கருதமுடியுமாதலால், ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துப் பரம்பலுக்காக உருவானவையே சிறுபத்திரிகைகள் என்ற முடிவுக்கு வரமுடியும். ஆனால் இந்த சிறுபத்திரிகை மரபுடன் சற்றும் இயைபுகொள்ளாதவர்கள்- சிறுபத்திரிகையாளர்கள்/ சிற்றிதழ் எழுத்தாளர்கள் என்கிற மகுடத்துடன் அலைவதுதான் தமிழின் அவலம்.

அன்னிய ஆட்சியாளர்களோடு சுதேசிகள் ஒரே நேரத்தில் போராட்டத்தையும் பேரத்தையும் நடத்திக்கொண்டிருந்தார்கள். எளிய மக்களைத் திரட்டிக்கொண்டு போராடுவது, அந்தப் போராட்டத்தின் பலத்தையும் வீச்சையும் காட்டி மேட்டுக்குடியினரின் நலன் காக்கும் பேரத்தை நடத்துவது என்கிற சுதேசிகளின் தந்திரத்தைப் புரிந்துகொண்ட தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் பெண்களும் மதச்சிறுபான்மையினரும் தனிக்குரலில் பேசவும் சொந்தபலத்தில் போராடவும் தலைப்பட்டனர். மநுநீதியின் கொடுமைகளுக்கும் பாரபட்சங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் மாற்றாக சமூகநீதி என்கிற முழக்கம் உருவாகி மாபெரும் ஜனத்திரளை கவ்விப்பிடித்து ஒரு பௌதீக சக்தியாக மாறிய காலகட்டத்துடன் இணைந்தது தமிழின் சிற்றிதழ் மரபு.

சமூக நீதிக்கான போராட்டம் வலுப்பெற வலுப்பெற தமிழகத்தின் சமுக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் தமது மேலாதிக்கத்தை இழந்து வந்த பார்ப்பனர்களும் சாதியடுக்கில் அவர்களுக்கு அடுத்தநிலையிலான வெள்ளாளர்களும் ஒரு பாதுகாப்பற்ற மனநிலைக்கு ஆட்பட்டு நிகழ்ந்து வந்த மாற்றங்களை தீராப்பகையுடனேயே எதிர்கொண்டனர். தாமல்லாத மற்றவர்களைப் பற்றிய இழிவான பார்வையையும் அசூயை உணர்வையும் இளக்காரத்தையும் வெளிப்படையாக காட்ட முடியாத அவர்கள் தமது வன்மங்களை மொழியின் பூடகங்களுக்குள் பதுங்கிகொண்டு வெளிப்படுத்தக் கண்டுபிடித்த வடிகால்தான் ‘சிற்றிதழ்’ என்கிற புனிதமேடை. இந்தவகையான சிற்றிதழ்களுக்கும் நாம் ஏலவே சொன்ன சிற்றிதழ் மரபுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது மட்டுமல்ல, இரண்டும் எதிரெதிர் நோக்கு நிலைகளைக் கொண்டவையாகவும் இருந்தன. எனவே இந்தப் புனிதமேடையில் யாருக்கெல்லாம் இடமிருந்தது என்பதைப் போலவே என்ன மாதிரியான உள்ளடக்கங்கள் இடம் பெற்றிருந்தன என்பதான கேள்விகளுக்கும் பதில் சொல்ல மிகப்பெரும் ஆய்வுகள் தேவையில்லை. தங்களது மேலாதிக்கம் சரிந்து வருகிற சூழலுடன் பொருந்த முடியாத, அதனோடு எந்த உரையாடலையும் நிகழ்த்த விரும்பாத, மேலெழுந்து வரும் பிற சமூக அடுக்கினரை சகித்துக்கொள்ள முடியாத, ஆகவே உள்ளொடுங்கிக்கொள்கிற இந்த மனநிலை அதற்கியைபான உள்ளடக்கம், மொழி, வடிவங்களைத் தேர்ந்தெடுத்தது. தமக்குத்தாமே மருகிக்கொள்கிற, தமக்குள்ளேயே சாபமிட்டு கறுவித் தீர்க்கிற, வளமார்ந்த அதிகாரம் பொருந்திய கடந்தகாலத்திற்கு திரும்பவியலாத ஆற்றாமையில் அலைக்கழிகிற, நாங்களும் நீங்களும் ஒன்றல்ல என்று ரகசியமாய் பேணும் மமதை வெளித்தெரிந்துவிடுமோ என்று பதற்றமடைகிற- இப்படியான தங்களின் மனநிலையை தமிழ்ச்சமூகத்தின் பொதுநிலையாக கட்டமைக்கவே இந்த சிற்றதழ்களின் வழியே ஆதிக்கச்சாதியினர் முயற்சித்து வந்தனர். ஆகவே இந்தச் சிற்றிதழ்களில் ஒருவருடைய பெயரோ ஆக்கங்களோ இடம்பெறாமல் போய்விடுவதால் பெருங்கேடு எதுவும் விளைந்துவிடப்போவதில்லை. (மாற்றத்தை தூண்டுவதற்கான புதிய விவாதங்களை முன்வைக்கும் முந்தைய சிற்றிதழ் மரபின் தொடர்ச்சிபோல நிறப்பிரிகை வந்ததும், அதற்குப்பிறகு வெளிவரத் தொடங்கிய இதழ்கள் பலவின்மீதும் அது செல்வாக்கு செலுத்தி வருவதும் தனித்து விவாதிக்கப்பட வேண்டியவை.)

யாரெல்லாம் எழுதுவது கவிதை அலலது எப்படி எழுதுவதெல்லாம் கவிதை என்று தீர்ப்பெழுதும் அதிகாரம் நானறிந்த வரையில் யாருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அப்படியே வழங்கப்பட்டிருந்தாலும் அதை மதிக்கவேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. சொந்த அனுபவங்களாய் உட்திரள்பவை மூட்டுகிற தகிப்பிலிருந்தோ கிளர்ச்சியிலிருந்தோ எழுதப்படுகிறவற்றுக்கும் முன்தீர்மானமான உட்பொருளையும் தலைப்பையும் முடிவு செய்துகொண்டு தோதான சொற்களை கோர்ப்பதற்குமான வித்தியாசத்தை உணர்ந்துவிடுகிற வாசகர்கள் கவிதைகளை இனம் பிரித்தே காண்கிறார்கள். இந்த வாசகர்கள் தன்னுடைய எழுத்துகளை என்னவாக மதிப்பீடு செய்கிறார்கள் என்றுதான் கவிப்பேரரசுகளும் கவிச்சிற்றரசுகளும் இன்னபிற கவிஞர்குல திலகங்களும் கவலைப்பட வேண்டியுள்ளது.


அன்பு - (மலேசியா)

கேள்வி : நவீன கவிதைகள் விளங்க மாட்டேன் என்கிறது? அதற்கென சிறப்பு பயிற்சிகள் உண்டா?

பதில் : விளங்காமல் போவதற்கு அவை வேற்றுலகவாசிகளால் எழுதப்பட்டவையா என்ன? நாம் வாழும் இதே மண்ணில் நம்மைப் போலவே பிறந்து வளர்ந்து நாம் பேசும் மொழியையே பேசிக்கொண்டிருக்கிற ஒருவர் எழுதுகிற கவிதை எப்படி நமக்கு விளங்காமல் போகும்? அப்படியென்ன நாமெல்லாம் அறியாத ஒரு வாழ்க்கையை சொல்லுக்குள் சுருக்கி அவர் சொல்லிவிடப் போகிறார்? சற்றே பொருட்படுத்தி வாசித்தால் பிடிபட்டுவிடும் என்றே தோன்றுகிறது. சொற்களின் சேர்மானத்தினூடாக வாழ்வின் ஒரு துகளைத்தான் அவர் முன்வைக்கிறார் எனில் அதை நம்மால் கண்டுணர்ந்துவிட முடியும்.

இதுவல்லாமல் தன் கவிதைகளை விளங்கிக்கொள்வது எளிதல்ல, அதற்கென்று சிறப்புப்பயிற்சிகள் இருக்கின்றன என்று யாரேனும் பரிந்துரைத்தால் அதை அவர்களே கட்டியழட்டும் என்று விட்டுவிடுவதுதான் நமக்கும் கவிதைக்கும் நல்லது. உனக்கெல்லாம் என் கவிதை புரிஞ்சிட்டா அப்புறம் உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்கிறவர்கள் வித்தியாசத்திற்காகத்தான் அவ்வாறு எழுதுகிறார்களேயன்றி கவிதையின் தேவையிலிருந்து அல்ல. எழுதியே தீரவேண்டும் என்கிற நெருக்குதல்கள் ஏதும் தனக்குள் இல்லாதபோதும் வெறுமனே சொற்களை முறுக்கியும் நெளித்தும் நீட்டித்தும் அடுக்கி எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எதையோ பூடகமாக சொல்கிறார் போலும் என்று வாசகர்களை மிரளவைக்கிற ஜாலக்காரகளும் களத்தில் இருக்கிறார்கள் என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். கண்களில் கருமுழிக்குப் பதிலாக தமது புகைப்படத்தையே பதித்துக்கொண்ட சிலரும் எழுதத்தான் செய்கின்றனர். இவர்கள் தமது உருவமன்றி வேறொன்றை காண்பதில்லையாதலால் தமக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதையே அறியாமல் தம்மையே உலகமாய் எண்ணி தமக்குள்ளேயே தோண்டித்துருவி தமக்குள்ளேயே கலைந்துபோகிற அரூபங்களை வார்த்தைப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆகவே அவை யாருடைய வாழ்வனுபவத்திற்கும் வெளியே நிற்கின்றன. இப்படியானவற்றை வாசித்தே நீங்கள் நவீனக்கவிதைகள் புரிவதில்லை என்கிற பொத்தாம்பொதுவான முடிவுக்கு வந்தீர்கள் போலும். 

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768