முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

  கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்
 
 
       
கட்டுரை:

கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
ம. நவீன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா



சிறுகதை:


வசனம்
யோ. கர்ணன்

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி



விமர்சனம்

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல்
கி. புவனேஸ்வரி

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...30

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ந. பெரியசாமி

இந்தக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது கூடங்குளத்தில் பெரும் பதட்டம் நிலவிக் கொண்டிருக்கிறது. கூடங்குளம், செட்டிகுளம், இடிந்தகரை முதலான ஊர்களிலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணமுள்ளன. “நிலமை மோசமாகிக் கொண்டே இருக்கிறது. ஏதாவது செய்யுங்கள்” எனப் போராட்டத்தை ஆதரிப்பவர்களை நோக்கி அபயக் குரல்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன.

மதுரைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றிருந்த நான் அப்படியே கூடங்குளம் சென்றுவர முயற்சித்தேன். வீண் முயற்சி செய்யாதீர்கள். கூடங்குளப் பகுதி முழுவதையும் மத்திய மாநிலக் காவல் படைகள் சூழ்ந்துள்ளன. யாருக்கும் அனுமதியில்லை. வெளியிலிருந்து ஏதும் செய்ய இயலுமா எனப் பாருங்கள் என அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

கூடங்குளத்தைச் சுற்றி இன்று 6000க்கும் மேற்பட்ட காவற் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோயில் இடைத் தேர்தல் பணிக்குச் சென்றிருந்த தமிழகக் காவல் துறையினர் அவ்வளவு பேரும் அப்படியே கூடங்குளத்திற்குத் திருப்பப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து விரைவுத் தாக்குதல் படையினர் கொண்டுவரப் பட்டுள்ளனர். உலைப் பாதுகாப்பிற்கென ஏற்கனவே கொண்டுவரப் பட்ட மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படையினரும் உள்ளனர். இந்த ஆறாயிரம் பேரில் இரண்டாயிரம் பேர் பெண் போலீசார். திருமண மண்டபங்களில் சோறு வடிக்கப்பட்டு அவர்களின் பசி ஆற்றப்படுகிறது.

போலீஸ் தாக்குதல் நடக்கப் போகிறது என்கிற செய்தி பரவிய அடுத்த கணம், கடந்த ஆறு மாத காலமாகப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடிந்தகரை லூர்து மாதா ஆலயத்தை நோக்கி மக்கள் வரத் தொடங்கினர். தரை வழிப் பாதைகள் அனைத்தும் தடுக்கப் பட்டிருந்ததைக் கண்ட அவர்கள் படகுகளில் ஏறிக் கடல் வழியாக வந்து குவிந்தனர். கூடங்குள அணு உலைக்கு ஆதரவாக தமிழக அமைச்சரவை முடிவெடுத்து துரித கதியில் நடவடிக்கைகள் தொடங்கியதை ஒட்டி கால வரையறையற்ற உண்ணா விரதத்தை அறிவித்து அமர்ந்துள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரைச் சுற்றி அவர்கள் ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் ஒன்றை அமைத்துள்ளனர். 5000க்கும் மேற்பட்ட மக்கள் அரண் ஒன்று இப்போது உதயகுமாருக்குப் பாதுகாவலாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் போர்க்குணமிக்க மீனவ மக்கள்.

போராட்டக்குழுவைச் சேர்ந்த உள்ளூர் வழக்குரைஞர் சிவசுப்ரமணியம் உட்பட சுமார் 197 பேர்கள் நேற்று மாலை வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் திருச்சி மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். எப்படியாவது உதயகுமாரை மட்டும் கைது செய்து கொண்டுபோய் சிறையில் அடைத்து கட்டாயமாக அவருக்குத் திரவ உணவைச் செலுத்தி உண்ணாவிரதத்தை முறியடிப்பது அரசின் திட்டம்.

முழுக்க முழுக்கத் தனது போராட்டத்தை காந்திய வழியிலானது என அறிவித்து, கடந்த ஆறுமாத காலமாக எந்தச் சிறிய வன்முறையும் இல்லாமல் நடத்திக்கொண்டுள்ள உதயகுமார், மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் போலீசிடம் சரணடைவதற்குத் தயார் எனக் கூறுகிறார். ஆனால் சுற்றி அரண் அமைத்துள்ள மக்கள் அவரை விட்டுவிடத் தயாராக இல்லை. இரண்டு நாட்கள் முன்னர் உதயகுமாரைச் சரணடையச் சொல்லி தொலைபேசியில் ஒரு போலீஸ் அதிகாரி கேட்டபோது அந்த உரையாடல் மைக்கில் ஒலிபரப்பப்பட்டது. ஆவேசமடைந்த மக்கள் எங்களைக் கைது செய்த பின்பே உதயகுமாரை நெருங்க முடியும் என முழக்கமிட்டதைத் தொடர்ந்து காவல்துறை அதிரடியாக எதையும் செய்யாமல் நிலைமையைக் கவனித்து வருகிறது.

மக்களைப் பணிய வைத்து அவர்களைக் கொண்டே உதயகுமாரைச் சரணடைய வைப்போம் என நேற்று ஒரு காவல்துறை அதிகாரி இறுமாப்புடன் கூறியுள்ளார். கூடங்குளம் மற்றும் இடிந்தகரைப் பகுதிகளுக்கு எல்லாவித ஆத்தியாவசியப் பொருட்கள் செல்வதும் இன்று தடுக்கப் பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் அதிரடி நடவடிக்கையை ஒட்டி இப்பகுதி மக்கள் கடை அடைப்புச் செய்துள்ளனர். இடிந்தகரையில் திரண்டுள்ள மக்களுக்கு தண்ணீர், பால் உட்பட எதுவும் அனுமதிக்கப்படவில்லை. கடைகளிலுள்ள மருந்துகளும் குறைந்து வருகின்றன. படகில் சென்று பக்கத்து ஊர்களிலிருந்தே உணவுப் பொருட்கள் வாங்கி வரப்படுகின்றன. எந்த நேரத்திலும் படகுப் போக்குவரத்தையும் தடை செய்யலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காவல் தொடங்கி இடைப்பட்ட கிராமங்கள் எல்லாம் போலீஸ் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட்டுள்ளன. ஒருவரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டவில்லை எனச் சற்றுமுன் அங்குள்ள ஒருவர் தகவல் அனுப்பினார்.

தமிழக அரசின் முடிவுக்கும், அதை ஒட்டிய காவல்துறை நடவடிக்கைகளுக்கும் எதிராக ஆங்கங்கு ஜனநாயக சக்திகள் சிறிய அளவில் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டும் போராட்டங்களை நடத்திக் கொண்டும் உள்ளனர். எனினும் இதற்குப் பெரிய அளவில் ஊடக ஆதரவு இல்லை. போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிராக நாங்கள் மதுரையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியபொழுது வந்திருந்த ஒரு பத்திரிக்கையாளர் கூடங்குளத்திற்கு எதிரான செய்திகள் எதையும் அனுப்ப வேண்டாம் எனத் தன் நிர்வாகம் கூறுவதாக வருத்தத்துடன் கூறினார். ஊடகங்கள் மட்டுமல்ல பெரிய அரசியல் கட்சிகளெல்லாமும் போராடும் மக்களுக்கு எதிராகவே உள்ளன. போராட்டக்காரகளுக்கு எதிராகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த சில வாரங்களாகக் கடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கூடங்குள உலை உடனே திறக்கப்படாததற்கு அ.தி.மு.க அரசே காரணம் எனத் தி.மு.க குற்றம் சாட்டி உலைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. போராட்டத்திற்குப் பின்னால் கிறிஸ்தவ மதம் உள்ளது என இந்துத்துவவாதிகள் பேசி வருகின்றனர். ஆங்காங்கு போராடுபவர்களுக்கு எதிராக வன்முறையிலும் இறங்கியுள்ளனர்.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பொருத்தமட்டில் அவர்கள் கொள்கை அடிப்படையிலேயே அணு ஆற்றலுக்கு ஆதரவானவர்கள். கூடங்குளம் அணு உலைகளை உடனடியாகத் திறக்க வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கை. அணு உலைத் திறப்பிற்கு பகுதி மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். பெயருக்குக் கூட மக்கள் மீதான காவல் துறை அத்துமீறல்கள் குறித்து எந்தக் கண்டனமும் அதில் இல்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் இன்னும் ஒரு படி மேலே போய் பயமிருந்தால் இழப்பீடை வாங்கிக்கொண்டு வெளியேறுங்கள் எனக் கூடங்குள மக்களுக்கு அறிவுரைத்துள்ளார்.

ஆக டாக்டர் இராமதாஸ், வைகோ, திருமாவளவன், ஆகியோர் மட்டுமே போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அவர்களும் கூட முல்லைப் பெரியார் பிரச்சினையில் செயல்பட்டதுபோல இதுவரை பெரிய அளவில் களம் இறங்கவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் குழுக்கள், பெரியார் திராவிடக் கழகம் முதலான மிகச் சிறிய அமைப்புகள் மட்டுமே போராட்டக்காரர்களுக்கு ஆதரவு. மனித உரிமை அமைப்புகள் தமிழ் எழுத்தாளர்கள் ஆகியோரும் கண்டித்துள்ளனர். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் செல்லுவதைத் தடுப்பதற்கு எதிராக நாங்கள் ஒரு பொதுநல வழக்கொன்றைத் தொடுத்துள்ளோம். வேறு பலரும் நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். நீதிமன்றங்கள் என்ன பெரிதாய்ச் செய்துவிடப் போகின்றன? பைந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் தறுவாயில் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால ஆணை ஒன்றை வழங்கியுள்ளது.

கடும் மின்வெட்டால் இரண்டாண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களும் பெரிய அளவில் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். மத்திய மாநில அரசுகள் தம் வலிமையை எல்லாம் பயன்படுத்தி இத்தகைய மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளன. அப்துல் கலாம் போன்ற மக்களால் மதிக்கப்படக்கூடிய “விஞ்ஞானிகள்” மற்றும் முன்னாள் அணுசக்தி ஆணையத் தலைவர்கள் ஆகியோர் மூலம் கூடங்குள அணு உலை முழுமையாகப் பாதுகாப்பானது என்கிற கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி மக்கள் மனதில் பதியவைத்தனர். கிறிதவ மத நிறுவனம் பின்னணியில் உள்ளதாக ஒரு கருத்தைப் பரப்பினர். மும்பையிலுள்ள கத்தோலிக்க மதக் கார்டினலிடம் மன்மோகன்சிங்கே நேரடியாகப் பேசினார். கிறிஸ்தவ மத நிறுவனங்களின் நிதி வரத்துகள் தொடர்பாகக் கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

அமெரிக்கச் சார்பு வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் போராட்டத்திற்குப் பின்னால் உள்ளன எனவும் அவர்களிடம் நிதி உதவி பெற்றே உதயகுமார் இந்தப் போராட்டத்தை நடத்துவதாகவும் ஒரு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். மூன்று தொண்டு நிறுவனங்கள் அடையாளம் காட்டப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. நாகர்கோவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டவர் ஒருவரைக் கைது செய்து, கூடங்குளப் போராட்டத்தைப் பின்னணியிலிருந்து நடத்துவதாகக் குற்றம் சாட்டியதோடு அவரை உடனடியாக நாடுகடத்திப் பத்திரிக்கைகளில் பெரிய செய்தியாகவும் அது பரப்பப்பட்டது.

இன்னொரு பக்கம் கூடங்குளம் அணு உலை இயங்கத் தொடங்கினால் எல்லா மின்சாரமும் தமிழ்நாட்டுக்கே கொடுக்கப்படும் என்றெல்லாம் ஆசை காட்டப்பட்டது. மக்களும் ஆகா 1000 மெகாவாட் மின்சாரமும் நமக்கே கிடைக்கப் போகிறது என நம்பிக் கொண்டுள்ளனர். அணு உலைகள் எதுவுமே அதன் அறிவிக்கப்பட்ட உற்பத்தித் திறனில் பாதியளவு கூட உற்பத்தி செய்வதில்லை என்பது வேறு கதை. ஆங்காங்கு அணு உலை எதிர்ப்புக்குப் போட்டியாக, கூடங்குளத்தை உடனே திறக்க வேண்டுமெனக் கோரி சிறு தொழிலதிபர்கள், விவசாயிகள் என்கிற பெயர்களில் ஒருபுறமும், காங்கிரஸ் ஆதரவு அமைப்புகளால் இன்னொருபுறமும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கார்பொரேட் ஊடகங்களின் ஆதரவும் அணு உலைக்கு ஆதரவாகவே இருந்தது.

நானும் உங்களோடு போராடுவேன் எனவும் மக்களின் அச்சம் நீங்கும் வரைக்கும் அணு உலையைத் திறக்க விடமாட்டேன் எனவும் ஜெயலலிதா உதிர்த்த வசனங்களைப் பலர் நம்பினர். கூடங்குள எதிர்ப்பாளர்களைப் பொருத்த மட்டில் ஒரே சமயத்தில் மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்க்க வேண்டாமென்பதால் ஜெயாவை ரொம்பவும் அனுசரித்துப் போயினர். எனினும் ஜெயாவை நம்ப வேண்டாம் என எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருந்தோம். ஜெயா இது தொடர்பாகக் காட்டத் தொடங்கிய மௌனம் இதுகாறும் நம்பிக்கொண்டிருந்தவர்களின் மத்தியிலும் அய்யத்தை உருவாக்கியது. ஏதோ மத்திய அரசுடன் பேரம் நடக்கிறது எந்த நிமிடமும் ஜெயா அரசு கூடங்குளத்திற்கு ஆதரவாக முடிவெடுக்கக்கூடும் எனப் பலர் மனத்திலும் எண்ணம் உருவாகத் தொடங்கியது. இடைத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருப்பதாகப் பேச்சு உருவாகியது.

ஆனாலும் இப்படி சங்கரன் கோயில் தேர்தல் நடந்து முடிந்த அடுத்த நாளே கூடங்குள உலைக்கு ஆதரவான முடிவை ஜெயா அரசு அறிவிக்கும் என யாரும் நம்பவில்லை. அதைவிட மத்திய மாநில அரசுகளின் அப்பட்டமான ஏமாற்று அரசியல் மன்மோகனின் இலங்கை தொடர்பான தீர்மான அறிவிப்பில் வெளிப்பட்டது. முதல் நாள் வரை குறிப்பிட்ட நாட்டிற்கு எதிரான ஒரு தீர்மானத்தை ஆதரித்ததாக வரலாறு இல்லை எனப் பீற்றிக் கொண்டிருந்த இந்திய அரசு, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க “விருப்பப் படுவதாக” அறிவித்தது. கூடங்குள ஆதரவு தொடர்பான ஜெயா அரசின் தீர்மானமும், அமெரிக்கத் தீர்மான ஆதரவு தொடர்பான மன்மோகனின் கூற்றும் ஒரே நாளில் வெளிவந்தன. பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் அருகருகே இச்செய்திகள் வந்தன. அமெரிக்கத் தீர்மான ஆதரவுச் செய்தி பெரிதாகவும் கூடங்குளம் திறக்கப் போகிற செய்தி சற்றுச் சிறிதாகவும் வந்தது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளத்தைத் திறப்பதற்கு யார் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடுமோ அவர்களை மட்டுப் படுத்தும் முகமாக மன்மோகன் அரசு மிகத் தந்திரமாக நடந்து கொண்டது. கூடங்குளத்தில் அணு உலை நிறுவுவதை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகச் சித்தரித்து வந்தவர்கள் சற்றே கலங்கிப் போயினர். மிகவும் சொதப்பலான ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு நெடுமாறன் போன்றோர் அமைதியாயினர்.

சமீப கால அரசியல் போக்கு ஒன்று இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னைப்போல் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் செய்யாமல் பெரும்பாலான மக்களின் மனதில் பெரிய வெறுப்புகள் ஏற்படாமல் நெளிவு சுளிவாகக் காரியங்களைச் சாதிக்க முனைகின்றனர். பீகாரின் நிதிஷ் குமார், மணிபூரின் இபோபி சிங், குஜராத்தின் நரேந்திர மோடி, பஞ்சாபின் பிரகாஷ் சிங் பாதல் வரிசையில் இப்போது ஜெயலலிதாவும் சேர்ந்து கொள்கிறார். இவர்கள் லாலு பிரசாத் யாதவ், மாயாவதி, கருணாநிதி போல வெற்றி பெற்ற மமதையில் எசகு பிசகாக எதையும் செய்து அடுத்த தேர்தலில் தோற்றுப் போவதில்லை. பழைய ஜெயா இந்த வரிசையைச் சேர்ந்தவராயினும் இன்றைய ஜெயா முதல் வரிசையைச் சேர்ந்தவராக மாறிவிட்டார்.

இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கப் போகிறது என்பதையும் கூட நாங்கள் முன் கூட்டியே சொல்லிக்கொண்டுதான் இருந்தோம் (பார்க்க: amarx.org/?p=407). அமெரிக்கத் தீர்மானத்தின் முதலாம் பத்தி இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வெகுவாகப் பாராட்டுகிறது. இரண்டாம் பத்தி இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிக்கை மற்றும் செயல் திட்டங்களைக் கோருகிறது. மூன்றாவது பத்திதான் கொஞ்சம் சிக்கலானது. இவற்றை நடைமுறைப்படுத்தற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும், (நன்கு கவனிக்க: ‘ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும்’) ஐ.நா மனித உரிமை ஆணையம் வழங்கும், அதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அது.

இந்தத் தீர்மானத்தை நிபந்தனை இன்றி முழுதும் ஆதரிப்பதாக இன்னும் இந்திய அரசு சொல்லவில்லை. ஆதரிக்க விருப்பம் என்றே சொல்லி வருகிறது. விவாதத்தின்போது அந்நியத் தலையீடுக்கு வழி வகுப்பதாகத் தீர்மானம் அமையக் கூடாது என்றெல்லாம் பேசி உள்நாட்டுப் போரின் கடைசிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு சுயாதீனமான ஆணையம் நியமிக்க வேண்டும் என்கிற அளவில் தீர்மானத்தை நீர்க்கச் செய்து ஆதரிக்கும் நிலைபாட்டை இந்திய அரசு எடுப்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. ஆக தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் இலங்கை அரசையும் பெரிதாக விரோதித்துக் கொள்ளாமல் தமிழக மக்களையும் திருப்திப் படுத்திவிடலாம்தானே. இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தே ஆக வேண்டும் என்கிற கருத்து தமிழகத்திலுள்ள அத்தனை அரசியல் கட்சிகளாலும் இயக்கங்களாலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ரொம்பவும் திறமையாக நிலமையைச் சமாளிக்கிறது மன்மோகன் அரசு. கடந்த நான்கு நாட்களாக அமெரிக்கத் தீர்மானம் குறித்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டு கூடங்குளம் தொடர்பான போராட்டங்கள் மட்டும் மிகவும் பலவீனமாக ஆங்காங்கு நடைபெற்று வருகின்றன.

ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்திய திளைப்பில் உள்ளது இந்திய அரசு. மௌனப் புன்னகையுடன் வேகமாக மாறும் காட்சிகளை ரசித்துக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.

பாவம் கூடங்குள மக்கள்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768