|
|
உலகின் தொன்மையான
தமிழினத்திற்கும், அவுஸ்திரேலிய அபரிஜினல் இனத்திற்குமிடையே பல ஒற்றுமைகள்
இருக்கின்றன.
இந்தியாவின் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது அங்கிருந்த தமிழினமக்கள்
கிழக்கே அவுஸ்திரேலியாவிற்கும், மேற்கே ஆப்பிரிக்காவிற்கும் பரவினார்கள்
என்பது செய்தி. முதல் தமிழ்ச்சங்கம் தோன்றிய காலத்தில், தமிழகத்தின்
தென்பகுதி தற்போதுள்ள குமரிமுனைக்கு பல கிலோமீட்டர்கள் தொலைவில் தெற்கே
விரிந்து கிடந்தது. அந்தக் குமரிக்கண்டத்திலிருந்த ப•றுளி ஆற்றின்
பக்கத்திலேதான் முதல் தமிழ்ச்சங்கம் இருந்தது. கடல்கோளின்போது பறுளி ஆறும்
அதைச்சூழவிருந்த மலைகளும் போய்விட்ட பின்னர், கபாடபுரத்திலே இரண்டாம்
தமிழ்ச்சங்கம் வந்தது. இலக்கியங்கள் தோன்றின. பிறகு கபாடபுரத்தையும் கடல்
கொண்டபோது, மதுரையிலே கடைச்சங்கம் நிறுவப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் இப்போதும் கூட களரி ஆட்டம் உள்ளது. பழங்குடிகள் பலவகையான
நடனங்களை ஆடுகின்றார்கள். நெற்றியிலே ஒரு கண்ணை வரைந்து கொண்டு, இவர்கள்
ஆடும் அந்த ஆட்டத்திற்கு 'சிவா நடனம்' (Shiva Dance) என்று பெயர். உடல்
எங்கும் மூன்று கோடுகளாக வெள்ளை வர்ணத்தைப் பூசிக்கொள்கின்றார்கள்.
நெற்றியிலே மாத்திரம் கிடையாகப் பூசிக்கொள்கின்றனர். Spencer Killan
என்பவர் எழுதியுள்ள The Native Tribes of Central Australia என்ற
புத்தகத்தில் இதற்கானபுகைப்படங்கள் ஆதாரமாக (பக்கங்கள் 128, 129) உள்ளன.
பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக்
காணலாம். 'Ten Canoes' என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல்
மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம்
ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும்
ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம். Yartu (காற்று), Nitri (நெற்றி), Pira
(பிறை), Muli (மலை), Manal(மணல்), Mayaal (மையல்), Mulha (முகம்) போன்றவை.
ஆதாரம் - Aboriginal Words: Nick Thieberger - William Megreoor.
மேலும் Dr Rao என்பவருடைய குழுவின் ஆய்வின்படி திராவிடமக்களிற்கும்
தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும், பொதுவான DNA மூலக்கூறுகளைக்
கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
உமது பெயரில், எனது கவிதை
ஒருமுறை அவுஸ்திரேலியாவில் வதியும் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றை
வெளியிடும் முயற்சி நடைபெற்றது. கவிதைகளை தொகுப்பவருக்கு உதவியாக,
கவிதைகளைச் சேர்த்துக் கொடுக்கும் பணியில் ஒருவர் இருந்தார். அவர் எனது
கவிதை ஒன்றையும் சேர்த்துக் கொள்ள விரும்புவதாக ரெலிபோனில் சொன்னார். நான்
கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மரபுக்கவிதை சுட்டுப்போட்டாலும்
வராது. அவர் கவிதை எழுதுவதில் அதீத ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்திலும் கவிதை
எழுதுவார். அவரது தமிழ்க்கவிதைகளைக் காட்டிலும் ஆங்கிலக்கவிதைகள்
பிரசித்தம்.
நான் கவிதை கொடுக்கவில்லை. திடீரென ஒருநாள் அதிகாலையில் 'வணக்கம்' என்றபடி
ரெலிபோன் செய்தார். என்னால் கவிதை தர முடியாதென்றால், எனக்குப் பதிலாக தான்
எழுத முடியுமா என்று கேட்டார். அதாவது 'உமது பெயரில் எனது கவிதை' என்று
சொல்லிச் சிரித்தார். நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். கோபத்தில் அவர்
ரெலிபோனை அடித்து வைத்துவிட்டார்.
92 பக்கங்கள் கொண்ட அந்தத்தொகுப்பில் அவரது கவிதை 11 பங்கங்களைப்
பிடித்திருந்தது. மொத்தம் 31 கவிஞர்களின் படைப்புகள் அதில்
வெளியாகியிருந்தன. எனது கவிதை ஒன்றும் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தது.
அந்தத் தொகுப்பைச் செய்தவர் கவிதைகள் எழுதுவதில்லை. தொகுப்பாளருக்கு
உதவியாக இருந்தவருக்கு தன்னிடம் அந்தத் கவிதைத்தொகுப்பினைத் தொகுக்கும்
பொறுப்பைத் தரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. "ஒரு கவிதை எழுதத்
தெரியாதவருக்கெல்லாம் என்ன கண்டறியாத தொகுப்பு வேண்டிக் கிடக்கு" என்று
சலித்துக் கொண்டார். தொகுப்பவருக்கு கட்டாயம் கவிதை எழுதத் தெரிந்திருக்க
வேண்டுமா என்ன?
நான் கவிஞன்
புதிதாக வேலைக்கு வந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். முதற் சந்திப்பிலேயே
அவர் தன்னைக் கவிஞன் என்றார்.
"அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் எங்கே வேலை
செய்தீர்கள்?" என்ற எனது கேள்விக்கு "சூரியன் FM இல் ஒரு அறிவிப்பாளனாக
வேலை செய்தேன்" என்றார்.
"நீங்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, நீலாவணன் முருகையன் போன்றவர்களின்
கவிதைகளைப் படித்திருக்கின்றீர்களா?"
அவர் முகம் சுருங்கியது.
"சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்கிளி ..." எனத் தொடர்ந்த எனக்கு அவரின்
தலையாட்டுதல் வியப்பைத் தந்தது. விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞரைத்
தெரியாதவர்கள் யார் இருக்க முடியும்?
"சரி இவரைத் தெரிகின்றதா பார்ப்போம். புதுவை இரத்தினதுரை!" என்று கொக்கி
போடுகையில், "எனக்குத் தெரிந்தவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து, கலீல்
ஜிப்ரான்" என்றார்.
தெரியும் என்றுவிட்டு 'பே! பே!' என்று விழிப்பவர்கள் மத்தியில், தெரியாது
என்று உண்மையைச் சொல்லும் அவரின் "வெள்ளை" உள்ளம் என்னைக் கவர்ந்தது.
"உங்களுக்கு ஒன்று சொல்வேன். தினமும் கலில் ஜிப்ரானின் கவிதையில் ஒன்றைப்
பருகிவிட்டுத்தான் நான் உறக்கத்திற்குப் போவேன். அப்படியென்றால்தான் எனக்கு
ஆழ்ந்த உறக்கம் வரும்" என்று கம்பீரமாகச் சொன்னார் அவர்.
ஒருதடவை வேலை செய்யுமிடத்தில் உள்ள ரொயிலற் பாத் றூமிற்குள் உள்ள கண்ணாடி
முன் நின்று, கைகளை உயர்த்தி கவிதை பாடிப் பழகுகின்றார் 'இந்தக் கவிஞன்' என
எனது நண்பர் ஒருவர் சொன்னார். தான் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடப்
போவதாகவும், வைரமுத்துவின் அணிந்துரைக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்.
தான் எழுதிய கவிதைகளில் சிலவற்றை வாசிப்புக்காக எனக்குத் தந்தார். அப்படியே
வைமுத்துவின் கவிதைகளை நகல் எடுத்தது போன்றிருந்தது. வைரமுத்து அணிந்துரை
குடுப்பதற்குப் பதிலாக ஏதாவது வழக்குத் தாக்கல் செய்து விடுவாரோ எனப்
பயந்தேன்.
அவரைச் சந்தித்து ஒருவருடம் கழிந்திருக்கையில், இரண்டு அங்குல தடிப்பம்
கொண்ட புத்தகமொன்றைக் கையில் ஏந்தியபடி என்னிடம் வந்தார்.
"வாற சனிக்கிழமை நீங்கள் •பிறீயா இருப்பீர்களா? நான் 'பூவரசம் வேலிகளும்
புலுனிக் குஞ்சுகளும்' எண்ட புத்தகத்திற்கு விமர்சனம் செய்ய இருக்கின்றேன்.
உங்களுக்கு புதுவை இரத்தினதுரையைத் தெரியுமா? அவர்தான் அந்தப் புத்தகத்தின்
ஆசிரியர்" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அடிரா சக்கை!
இப்படித்தான் புலம்பெயர்ந்த நாட்டில் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும்
உருவாகி இருக்கின்றார்கள்.
(குறிப்பு : 2009 இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த கவிஞர் புதுவை
இரத்தினதுரை பற்றிய தகவல் ஏதும் இற்றைவரை இல்லை. அவர் முருகப்பெருமான் மீது
பாடிய பாடல் ஒன்றின் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றது. 'நீ ஏறி வந்த தேர்
இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு, எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா'.)
|
|