முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

  சுவடுகள் பதியுமொரு பாதை... 16
பூங்குழலி வீரன்
 
 
       
கட்டுரை:

கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
ம. நவீன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா



சிறுகதை:


வசனம்
யோ. கர்ணன்

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி



விமர்சனம்

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல்
கி. புவனேஸ்வரி

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...30

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ந. பெரியசாமி

நிலவிடம் துளியும் அழகில்லை - த. அகிலனின் கவிதைகள்

குறிப்பிட்ட நாள்களுக்குள் உங்களின் வல்லினத்தின் தொடரை அனுப்பி விடுங்கள் என நவீனின் குறுஞ்செய்தி என் தேடலை விரைவுப்படுத்தியிருந்தது. அந்த தேடலில் கிடைத்தவைதான் த. அகிலனின் கவிதைகள். இலங்கை, கிளிநொச்சியில் பிறந்து தமிழ்நாட்டிற்குப் புலம்பெயரும் வரை வன்னி மண்ணில் போர்ச்சூழல்களுக்கு நடுவே வாழ்ந்தவர் த. அகிலன். 'வடலி' வெளியீடாக போர்த் தின்ற சனங்களில் கதையாக 'மரணத்தின் வாசனை' என்ற பத்திகளின் தொகுப்பொன்றினை வெளியிட்டிருக்கிறார். 'நிழல் குடை' என் கவிதைத் தொகுப்பொன்றும் வெளிவந்திருக்கிறது. தனித்து தனக்கே உரிய மொழியில் பேசும் அகிலனின் கவிதைகளோடு இம்மாத வல்லின தொடரில் பயணிப்போம்.

முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புதுவீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக் கவலையும்
கிடையாது
புது வீட்டில்...
ஆனாலும் என்ன
புதுவீட்டின்
பெரிய ஜன்னல்களுடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை.

வீடு. ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் நினைவிலும் கனத்துக் கிடக்கும் எண்ணற்ற பக்கங்களுடன் கூடியதொரு அத்தியாயம். ஒரு மனிதனின் இருப்பை பல நிலைகளில் வீடே அடையாளப்படுத்தி நிற்கின்றது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் கல்லும், மணலும், சிமெந்தும் மரக்கட்டைகளாலுமான வீடு வீட்டில் இருப்பவர்களுக்கு வார்த்தைகளால் விளக்க முடியாதொரு உறவினை வெளிப்படுத்தி நிற்கின்றது. என்னதான் வசதி வாய்ப்புகள் வந்து மாட மாளிகைகள் கட்டி குடியேறினாலும் பிறந்து தவழ்ந்து நடைபழகிய வீட்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. அதற்கொப்பதான் நமது கவிஞரின் நிலையும். எந்தக் கவலையும் அற்ற தனது புதிய வீட்டின் அழகினை அவரால் ஒரு துளியும் இரசிக்க முடியவில்லை. எல்லா வகையான கவலைகளோடும் இருந்த கவிஞரது பழைய வீடே அவரை எல்லா வகையிலும் வசீகரித்திருந்ததை உணர முடிகிறது. மெல்ல மெல்ல நாமும் வாழ்ந்திருந்த பழைய வீடு குறித்த நினைவுகளில் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை.

நமது தொலைபேசி
உரையாடலை
கேட்டுக் கொண்டிருக்கின்றன
நமக்குச் சொந்தமற்ற செவிகள்
பீறிட்டுக் கிளம்பும் சொற்கள்
பதுங்கிக் கொண்டபின்
உலர்ந்துபோன வார்த்தைகளில்
நிகழ்கிறது.
நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்
உன் ஒப்புதல் வாக்குமூலம்.

தனது இருப்பை மறைத்துவிட்டு வாழும் நெருங்கிய உறவு ஒன்றுடன் தொலைப் பேசுகிறார் கவிஞர். “தனக்கென உரிமையானது எதுவுமில்லை” என்ற ஏக்கம் எங்கும் சுமந்தபடி அவரது ஒவ்வொரு வார்த்தையும் பதிவாக்கப்பட்டிருக்கிறது. நமது உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் செவிகள் கூட சொந்தமில்லாமல் போகும் நிலை மிகவும் அவலமானதுதான். வாழ்தல் என்பது உயிரோடிதல் என்பது மட்டும்தானா என்ற கேள்விமட்டும் இந்த கவிதையைப் படித்தப்பின் மனமெங்கும் அலைந்தபடி இருக்கிறது.

கவிஞரின் கீழ்வரும் இக்கவிதை என்னை அதிகம் பாதித்தது எனலாம்.

அவனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தன.
செல்லமாய் ஒன்றும்
காகிதங்களில் ஒன்றுமாய்
எதைக் கொண்டு அழைத்தாலும்
அவனது புன்னகை
ஒரே மாதிரியானதுதான்...
மாற்ற முடியாதபடி...

எல்லாருக்கும் இருப்பது போன்றதானதுதான் ஒரு போராளியின் வாழ்வும். ஒரு குடும்பத்தில்தான் அவனும் வளரத் தொடங்குகின்றான். எல்லாரையும் போலவே அவனும் ஒரு செல்லப் பெயரோடு அவனது உறவுகளால் அழைக்கப்படுகிறான். அவனது இயற்பெயர் வேறொன்றதாய் பதிவுகளில் இருக்கிறது. இந்த கவிதையில் தொடரும் வரிகளில் மூன்றாவது பெயரோடு அவன் போராளியாகிறான். அந்த மூன்றாவது பெயரோடு அவன் மரணித்தும் விடுகிறான். அவனது தாய் சித்தம் தடுமாறி போகிறாள். எண்ணற்ற போராளிகளின் வாழ்வை மிக யதார்த்தமான வார்த்தைகளுடன் அழுத்தமானதொரு பாதிப்பை ஏற்படுத்திச் செல்கிறது இக்கவிதை.

என் மரணத்தின் போது
நீ ஒரு உருக்கமான
இரங்கற் கவிதையளிக்கலாம்
ஏன் ஒரு துளி
கண்ணீர் கூட உதிர்க்கலாம்
என் கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்
அதைப் பூக்களால்
நீ நிறைக்கலாம்

தனது சொந்த மரணத்தைக் குறித்துப் பேசுவதற்கு ஒரு வேறுபட்ட மனதிடம் வேண்டும். அந்த மனதிடத்தோடு வெளிப்பட்டிருக்கும் கவிஞரின் இந்த வரிகள் நம்மை அதிர வைக்கின்றன. வாழ்தலின் விரக்தி அல்லது முந்தைய வாழ்வும் இன்றைய வாழ்வும் ஏற்படுத்தி வைத்திருக்கும் வலிகளும் காயங்களும் இப்படியான வரிகள் வெளிப்படுவதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். “இதுவும் கடந்து போகும்” என்பதாகவே இருக்கும் தனது மரணமும் என்கிற இயல்பியல் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

சொல்ல வந்ததை நேரடியாக, எவ்வித மேலதிக பூச்சுகளுமின்றி சொல்லிச் செல்லும் அகிலனின் நேர்மை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனது சொற்கள் - கவிதைகள் வாழ்வையே புரட்டிப் போடும் தன்மை கொண்டவை என அலட்டிக் கொள்பவர்களுக்கு மத்தியில் “எனது சொற்கள் சுயநலமிக்கவை” என பகிரங்கமாகவே அறிவித்துக் கொண்டு பிறரிடமிருந்து தனித்து தெரிகிறார் இக்கவிஞர். ஏன் தன்னுடைய சொற்கள் சுயநலமிக்கவை என்பதற்கான காரணத்தையும் அவரே விளக்கி விடுகின்றார் இந்தக் கவிதையில்...

என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
சுயநலமிக்கவை...
பதுங்கு குழியின் தழும்புகளை,
கண்ணிவெடியில் பாதமற்றுப் போனவனின் பயணத்தை
மற்றும்
வானத்தில் மிகுந்த பேரிரைச்சலுக்கு
உறைந்து போன குழந்தையின் புன்னகையை...
நாளைக்கான நிபந்தனைகள் ஏதுமற்ற
ஓய்வுப்பொழுதொன்றில்
வெற்றுத் தாளில் அழத் தொடங்குகின்றன.

தினமும்
புதிய காலைகளை
எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது
பழைய நினைவுகளுடன்...

விடிதல் இயற்கையின் நியதி. அதனை தவிர்த்துவிடவோ தள்ளிப்போடவோ நம்மால் முடியாது. எப்போதும் நேற்றைய துயரங்களின் தொடராக வந்து விடிகின்றது ஒவ்வொரு நாள் விடியலும். பழைய நினைவுகளை தாங்கியபடியே நடமாடித் திரிகிறோம் எவ்வித வேறுபாடுமின்றி.

இன்றைக்கும் மழை
உன்னிடம்
என் பிரியத்தைச் சொன்ன அன்றைக்கு
பொழிந்ததைப் போலவே பொழிகிறது.
மழையிடம் மாறுதல்கள் கிடையாது.
இலையின் முதுகில் ஒளிந்திருக்கும்
பனித்துளியைப் போலப்
பதுங்கிக் கிடக்கிறது
என் துயரம்
சூரியனால் எடுத்துச்செல்ல முடியாதபடி...

என்னைக் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்றாகும். மாறுதலுக்குட்பட்ட ஒரு உறவினை, ஒரு பிரிவினை ஒரு மெல்லிய சோகத்தோடு மிக அழகாக நம்முன் வைக்கிறார் அகிலன் தனக்கே உரிய கவித்துவத்தோடு. விரக்தி, சோகம், கோபம் என தொடரும் கவிதைகள் தாண்டி மிக அழகியலோடும் எண்ணற்ற கவிதைகளை எழுதியிருக்கிறார்.

த. அகிலனின் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன. தன்னை மென்மேலும் வளர்த்து கொள்ள விரும்பும் படைப்பாளர்களுக்கு அகிலனின் படைப்புகள் கட்டாயம் துணை நிற்கும். ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி பல்வகை படைப்புகள் தருவதில் அகிலன் திறமையானவர். அவரது படைப்புகளை http://www.agiilan.com என்ற இணையப்பக்கத்தில் வாசிக்கலாம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768