முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

  மனிதம் மிஞ்சும் உலகம்... 10
நித்தியா வீரராகு
 
 
       
கட்டுரை:

கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
ம. நவீன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா



சிறுகதை:


வசனம்
யோ. கர்ணன்

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி



விமர்சனம்

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல்
கி. புவனேஸ்வரி

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...30

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ந. பெரியசாமி

Tangled : தேடப்படும் தேவதைகள்

இந்தக் கதை இப்படி தொடங்குகிறது.

“ஓர் ஊரில் ஓர் இளவரசி இருந்தாள். அந்த இளவரசி ஒரு தவளையின் மீது காதல் கொண்டாள். உண்மையில் அந்தத் தவளை ஓர் இளவரசன். ஒரு துர்தேவதையின் சாபத்தால் அவன் தவளையாக உருமாற்றப் பெற்றான். ஒருநாள் அந்த இளவரசி, தவளைக்கு முத்தம் தர அவன் மீண்டும் இளவரசன் ஆனான். அதன் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் புரிந்து காலம் முழுக்க மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். (They lived happily ever after)“

இது போல பல மாயாஜாலங்கள், தேவதைகள், துர்தேவதைகள் இடம் பெரும், மேலும் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே முடிவுறும் பல புனைவு கதைகள், அல்லது தேவதை கதைகளை நமக்கு முன்னால் உள்ளவர்களும், நம் காலத்திலும், இன்று நம் பிள்ளைகளும் அவர்களின் பால்யத்தில் கேட்டபடியேதான் வளர்கின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட ‘The frog prince’ எனத் தலைப்பிடப்பட்ட தேவதை கதை ஜெர்மானிய எழுத்தாளர்களான கிரிம் சகோதரர்களால் (Grimm Brothers) தொகுத்து எழுதப்பட்டது. இது போன்று அரபு நாட்டின் ஆயிரத்தொன்று இரவுகள், இந்தியாவின் பஞ்சந்தந்திரக் கதைகள், சீனாவின் தாவோயிசக் கதைகள், இந்தோனிசியாவின் பாவாங் மேரா பாவாங் பூத்தே என இன்னும் பல நாடுகளில் பல தேவதை கதைகள் தொன்று தொட்டு குழந்தைகளுக்கு வாய் வழியாகவும் நூல்கள் மூலமாகவும் சொல்லப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாம் இத்தகையத் தேவதை கதைகள் குழந்தைகளின் வாழ்வில் எத்துணை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதை அறியமுடிகிறது.

குழந்தைகளுக்கு ஏன் ஒரு தேவதை தேவைப்படுகிறாள்? ஒரு குழந்தை வளர்கையில் பலவிதமான உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறான். பொதுவாக குழந்தைகள் மிக வெளிப்படையான எதிர்வினையைக் காட்டாதவரை பெரியவர்கள் இதை அறிந்திருப்பதில்லை. ஒரு குழந்தை வளர வளர தனது பெற்றோராலும், ஆசியர்களாலும், தான் வாழும் சமூகத்தாலும் கண்டிக்கப்படுகிறான். அவன் இயல்பில் அவன் செய்ய நினைக்கும் அத்தனைக் காரியங்களும் பெரும் பரீசீலனைக்கு உட்பட்டப் பிறகே அனுமதிக்கப் படுகின்றன; அல்லது பல வேளைகளில் முற்றிலும் மறுக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்த ஒரு பள்ளியில், ஆசிரியர்கள் குழந்தைகளை ஓட வேண்டாம் என்றும் ஓடினால் கீழே விழுந்து விடுவர் எச்சரித்துக் கொண்டே இருப்பர். குழந்தைகளின் நலன் கருதியே அவர்கள் அப்படி செய்தாலும் எல்லா குழந்தைகளின் உள்ளாற்றலும் அவர்களை ஓடவே தூண்டும். பின் அவர்களால் ஓடாமல், விளையாடமல், பேசாமல், பாடாமல் எப்படி இருக்க முடியும்? ஆசிரியர்களோ பெற்றோர்களோ அவர்களின் செயல்களை நெறிபடுத்த வேண்டுமே தவிர அவர்களை முற்றிலும் தடுத்துவிடக்கூடாது. இல்லையெனில் அது குழந்தைகளுக்கு எதிராய் நிகழும் வன்முறையாய் மாறும்.

மேலும் ஒரு குழந்தையின் பாலியல் பெரியவர்களால் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. ‘நீ இப்படி செய்தால் சாமி உன் கண்ணைக் குத்திவிடும்’ என நாம் சதா எச்சரிக்கிறோம். மதங்கள் அவனை அச்சுறுத்துகின்றன. தன் சுயத்திலிருந்து தன்னைப் பிரித்தெடுத்துப் பிறருக்கேற்றத் தூயவனாய்த் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள மதங்கள் கூறும் கடவுளிடம் அவன் அனுப்பப்படுகிறான். நாளடைவில் அவன் கண்முன்னே மிக வன்மமாய் தோற்றமளிக்கும் உலகைக் கண்டு ஏமாற்றம் அடைகிறான். தன் விருப்பங்களை நிறைவேற்றும் வாய்ப்பினிலுங்கூட குற்ற உணர்வு கொள்கிறான்.

உண்மையில் ஒரு குழந்தையின் பாலியல் மிகத்தூய்மையானது. அவனின் அத்தனை கற்பனையும் படைப்பாற்றலும் அங்கிருந்துதான் துவங்குகின்றன. அவன் தன் கற்பனைகளில் தேவதைகளை வளர்க்கிறான். தான் கேட்கும் கதைகளின் வழியாக தேவதைகள் அனுமானுஷ்ய சக்திகள் உடையவைகளாக நம்புகிறான். ஒடுக்கப்பட்ட அவனின் இயல்பை மீட்டெடுக்க தேவதைகள் துணை புரிகின்றன. கடவுள்கள் அவனின் கனவுகளில் அச்சுறுத்தும் பொழுது தேவதைகள் அவனை மீட்கின்றன. அவனின் தேவதைகள் மதத்துக்கு எதிரானவை; மாயங்கள் செய்பவை; அவன் தேவதைகளின் வெண்சிறகை பிடித்துப் பறக்கத் துவங்குகிறான். எங்கோ ஒரு தூர தேசத்தில், ஒரு புல்வெளியில் காலணிகளற்று நடக்கிறான்; ஓடுகிறான். மரங்களில் ஏறி ஆப்பிள்கள் பறிக்கிறான். சின்ட்ரெல்லாவின் தொலைந்த காலணியைத் தன் புத்தகப்பையில் ஒளித்து வைக்கிறான். எங்கிருந்தோ ஓர் இளவரசி கண்முன்னே தோன்ற, அவளின் இதழில் முத்தமிடுகிறான். இம்முறை அவனை யாரும் கண்டிப்பதில்லை. கடவுளால் மறுக்கப்பட்டவற்றை எல்லாம் தேவதைகள் அவனுக்குத் வழங்குகின்றன. தேவதைகள் பேசும் பறவைகளை அவன் தோளில் இடுகின்றன. ஒரு பூவனத்தை வண்ணத்துப்பூச்சிகளோடு பிய்த்து அவன் கனவில் இடுகின்றன. அவன் விடுதலையடைகிறான். அவன் உலகம் மீண்டும் அழகாகின்றது.

இப்படி எல்லா குழந்தைகளும் முதலில் தங்களை நெருக்கும் சூழலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே கதைகளையும் அவற்றில் வாழும் கதைப்பாத்திரங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களின் கற்பனையில் தங்களுக்கு மட்டுமே உரிய மாற்று உலகை உருவாக்கி கொள்கின்றன; மகிழ்கின்றன. குழந்தைகளின் உளவியலோடு இந்த அளவுக்குத் தொடர்புடையதால்தான் நெடுங்காலமாய்ச் சொல்லப்பட்டு வந்தும் இத்தகைய தேவதை கதைகள் இன்னும் சலித்துவிடாமல் புதியவையாகவே இருக்கின்றன.

இத்தகைய தேவதை கதைகளின் வரிசையில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘இராப்புன்ஸல்’ (Rapunzel) என்ற கதை ஜெர்மனியத் தேசத்தைத் தன் பூர்வீகமாகக் கொண்டது. 2010ஆம் ஆண்டு வெளியீடுகண்ட ‘டெங்கல்ட்’ (Tangled) என்னும் இயக்கவூட்டத் திரைப்படம் மேற்குறிப்பிட்ட தேவதை கதையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டது. சுமார் ஆறாண்டு கடின உழைப்பிற்குப் பின் 260 மில்லியன் டாலர் செலவில் வெளியீடுகண்ட இப்படத்தைத் தயாரித்தவர் வால்ட் டிஸ்னி நிறுவனத்தார் ஆவர். இத்திரைப்படம் எல்லா காலங்களிலும் மிக அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இந்தத் கதை இப்படி தொடங்குகிறது. முன்பொரு காலத்தில் சூரியனில் இருந்து சிதறிய ஒற்றை அக்னிகுஞ்சொன்று நிலத்தில் வீழ்கிறது. அது ஓர் அழகியப் பூத்தாவரமாய் வளர்கிறது. கோத்தல் (Gohtel) ஒரு வயதானவள். அந்த பொன்னிறப் மலரின் மந்திரத்தன்மையைக் கண்டுகொள்கிறாள். அந்தப் பூத்தாவரத்திடம் பாடல் பாட அதனிலிருந்து பரவும் மந்திரவொளி அந்த வயதானவளை மீண்டும் இளமையாக்குகிறது. நெடுங்காலமாக இந்த அதிசயத் தாவரத்தை யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்துப் பாதுகாக்கிறாள் அந்த மூதாட்டி. பல தலைமுறைகளுக்குப் பின்னால் ஒரு சாம்ராஜ்ஜியம் உருவாகின்றது. அந்த சாம்ராஜ்யத்தின் அரசியார் கருவுற்றிருக்கும்போது உடல் நலம் கெடுகிறார். அப்போது அந்நாட்டின் குடிப்படையினர் அரசியாரின் உடல் நலத்தைச் சரிசெய்ய எண்ணி மாயக்காரி பதுக்கி வைத்திருக்கும் அதிசயத் தாவரத்தைப் பிடுங்கி அரண்மனைக்கு எடுத்து வருகின்றனர். அந்த அதிசய மலரின் சாற்றைக் குடிக்க அரசியாரின் உடல் நலம் தேருகிறது. மேலும் அவர் அந்த மலரின் பொன்னிறத்தையொத்த கூந்தலையுடைய ஓர் அழகிய பெண் மகவை ஈன்றெடுக்கிறார். அதற்கு இராப்புன்ஸல் என பெயர் சூட்டுகின்றனர். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அரசரும் அரசியாரும் ஒரு பறக்கும் விளக்கை ஏற்றி (Sky Lantern) வானில் பறக்க விடுகின்றனர்.

இதற்கிடையில் மலரின் உதவியில்லாமல் கோத்தல் மீண்டும் தன் இளமையை இழக்கிறாள். அவள் ஒருநாள் அரண்மனையில் அத்துமீறி நுழைகிறாள். இளவரசியின் கூந்தலில்தான் மலரின் மந்திரத்தன்மை இருப்பதை அறிகிறாள். அவளின் கூந்தலில் ஒரு கற்றையை வெட்டி எடுக்க அது தனது மந்திரத்தன்மையை இழக்கவும் இளவரசியை அப்படியே கடத்தி செல்கிறாள் கோத்தல். நாட்டுக்கு வெளியே தொலைதூர கானகத்தில் அமைந்துள்ள தனது உயர்ந்த கோபுரம் கொண்ட இருப்பிடத்தில் யாரும் அறியாமல் இளவரசி இராப்புன்ஸலைத் தன் சொந்த மகள் போல வளர்க்கிறாள். தன் இளமையையும் மீட்டுக் கொள்கிறாள்.

எங்கே தேடியும் கிடைக்காத தன் மகளின் பிரிவால் துயருரும் அரசரும் அரசியாரும் ஒவ்வொரு வருடமும் இளவரசியின் பிறந்தநாளன்று வானில் ஆயிரம் கணக்கான பறக்கும் விளக்குகளைப் பறக்க விடுகின்றனர். எப்படியும் இளவரசி ஒருநாள் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றனர்.

இராப்புன்ஸல் வளரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் வானில் மிதக்கும் பறக்கும் விளக்குகளைத் தன் கோபுரத்தில் இருந்து கவனிக்கிறாள். அந்தப் பறக்கும் விளக்குகள் தனக்கான செய்தியை ஏந்தி வருவதாக அவளுக்குத் தோன்றுகிறது, இருப்பினும் வெளி உலகம் மிக ஆபத்தானது என்ற நம்பிக்கையை இராப்புன்ஸலின் மனதில் விதைத்து அவளை எங்கும் செல்ல முடியாமல் தடுக்கிறாள் கோத்தல். இப்படியே இராப்புன்ஸல் வளர்கிறாள். அவளின் மந்திரக் கூந்தலும் மேலும் மேலும் நீளமாக வளர்கின்றது.

இராப்புன்ஸல் பெரியவளாகிறாள். ஒரு நாள் இளவரசியின் கிரீடத்தைத் திருடி வந்த கொள்ளைக்காரனான ஃபிலின் (Flynn Rider) என்பவனை சந்திக்கிறாள். அவனின் உதவியோடு தான் வாழும் கோபுரத்தை விட்டு தப்பிச் செல்கிறாள். தான் தப்பிக்கும் வழியில் ஃபிலினுடன் சேர்ந்து பல ஆபத்துகளைச் சந்திக்கிறாள். ஒரு முறை ஃபிலினும் இராப்புன்ஸலும் குகை ஒன்றில் மாட்டிக் கொள்ளும்போது இராப்புன்ஸல் தன் கூந்தலின் மந்திரத்தன்மையைப் பயன்படுத்தி ஃபிலினைக் காப்பாற்றுகிறாள். அதற்குப் பதிலாக ஃபிலின் இராப்புன்ஸலின் விருப்பப்படி அவளை பறக்கும் விளக்குகளைக் காண நாட்டுக்கு அழைத்துச் செல்கிறான். இராப்புன்ஸலுக்கும் ஃபிலினுக்கும் இடையில் காதலும் மலர்கின்றது. ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் ஃபிலினின் கூட்டாளிகளான இரு திருடர்களின் சூழ்ச்சியால் ஃபிலினை ஒரு துரோகியாக இராப்புன்ஸல் தவறாகப் புரிந்து கொள்கிறாள். இருவரும் பிரிகின்றனர். கோத்தல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இராப்புன்ஸலை மீண்டும் தனது கோபுரத்துக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே இராப்புன்ஸல் வெளி உலகத்தில் தனக்குக் கிடைத்த அனுபவமும் பார்த்தக் காட்சிகளும் அவளுக்குக் கொடுத்த குறிப்புகள் மூலம் தான் ஓர் இளவரசி என்பதை அறிகிறாள். மீண்டும் தப்பி ஓட முயல்கிறாள். ஆனால் கோத்தல் அவளை எங்கும் செல்லாதபடி கட்டி போடுகிறாள்.

இதற்கிடையில் காவலாளிகளால் கைது செய்யப்படும் ஃபிலின் தூக்கு மேடையிலிருந்து தப்பிச் சென்று இராப்புன்ஸலைக் காப்பாற்ற முயல்கிறான். அங்கே கோத்தல் அவனைத் தாக்குகிறாள். ஃபிலின் மீது கொண்டுள்ள காதலால், தன் மந்திரச் சக்தியால் அவனைக் காப்பாற்றிவிட அனுமதித்தால் தான் தனது வாழ்நாள் முழுக்க கோத்தலுடனே வாழ்ந்துவிடுவதாக அறிவிக்கிறாள் இராப்புன்ஸல். ஆனால் உயிர்த் துறக்கும் தருவாயிலுங்கூட தன் காதலியின் வாழ்வைக் காப்பாற்ற எண்ணி ஒரு உடைந்த கண்ணாடி சில்லைக் கொண்டு இராப்புன்ஸலின் மந்திரக் கூந்தலை வெட்டி விடுகிறான் ஃபிலின். அவளின் கூந்தல் மந்திரத்தன்மை இழக்கிறது. இந்தத் தருணத்தில் இராப்புன்ஸலின் வளர்ப்புப் பிராணியான ‘பஸ்கல்’ என்னும் பச்சோந்தி இராப்புன்ஸலின் வெட்டப்பட்ட நீண்டக் கூந்தலைக் கொண்டு இளமை இழந்த கிழவி கோத்தலைக் கோபுரத்திலிருந்து கீழே தள்ளி விடுகிறது. இராப்புன்ஸல் தன் காதலனைக் காப்பாற்ற செய்வதறியாது தவிக்கிறாள். அவள் ஃபிலினைக் காப்பாற்றி தனது பெற்றோரைச் சென்றடைந்தாளா என்பதை திரைப்படத்தின் இறுதிகாட்சிகளில் காணலாம்.

இந்தத் திரைப்படம் அது வெளியீடு கண்ட ஆண்டில் பார்வையாளர்களிடமிருந்து மிக நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம் இதில் பயன்படுத்தப்பட்ட இத்திரைப்படத்தின் தொழிற்நுட்பக் கலைஞர்கள் இதன் கதைப்பாத்திரங்களையும் காட்சிகளையும் வடிவமைக்க கணினி தொழிற்நுட்பமான CGI தொழிற்நுட்பத்துடன் பழைய இயக்கவூட்ட முறையான சம்பிரதாய வரைகலையையும் பயன்படுத்தியிருக்கின்றனர். மேலும் கணிணி வரைகலையின் ஒரு கூறான Non-photorealistic rendering (NPR)–ஐப் பயன்படுத்தி காட்சிகளில் ஓர் ஓவியத்தன்மையை உருவாக்கியிருக்கின்றர். இது திரைப்படத்தைப் பார்க்கும்போது சிறுவர்களின் கதை புத்தகங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் எழுந்து வந்து நம் கண் முன்னால் நடித்துக் காட்டுவதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றது; காட்சிகளின் அழகியலைக் கூட்டுகின்றது.

அடுத்ததாக இத்திரைப்படத்தின் இசை இதற்கு மேலும் மெருகு ஊட்டியுள்ளது. இத்திரைப்படம் அவ்வாண்டின் சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திரைப்படத்தின் கதைப்பாத்திரங்களின் வடிவமைக்கப்பட்ட பாவங்களுக்கு ஏற்ற வகையில் குரல் கொடுத்திருக்கும் திரைப்படத்தின் முக்கிய குரல் நடிகர்களான Mandy Moore, Zachary Levi ,Donna Murphy ஆகியோர் கதைப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.

இத்திரைப்படம் உலகம் முழுக்க ஏற்கனவே பலமுறை செவிமடுக்கப்பட்ட வாசிக்கப்பட்ட திரைக்கதையை மையமாக கொண்டிருந்தாலும், அதன் காட்சிகளை மிகச் சரியாக முன்னிலைப் படுத்தியதன் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்கவூட்டத்திரைப்படமாக நீரூபித்துள்ளது. அந்த வகையில் இது இயக்கவூட்டத் திரைப்படங்களின் வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு முக்கியத் திரைப்படமாகும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768