|
|
இயற்கையைத் தேடி...
நாங்கள் தேர்ந்தெடுத்தப் பாதை தெலுக் பாக்கு (Teluk Paku). அது தான் எங்கள்
வசதிக்குத் தோதாக இருந்தது. இரண்டு மணி நேரத்தில் உள்ளே நுழைந்து வெளியே
வந்து விடலாம். எனவே அதற்கான வர்ணத்தை அதாவது வெள்ளை நிறத்தை
பார்த்துக்கொண்டே காட்டுக்குள் நுழைந்து விட்டோம். போகும் வழியெங்கும்
இத்து போன பலகை படிகளும் பெரிய பெரிய கற்களும் பெரிய பெரிய மரங்களும்
இருந்தன. பல பேர் வந்து போய் கொண்டிருக்கும் இடமாக இருந்தாலும் இயற்கையின்
தழுவுதல் இன்னுமும் சீர்கெடாமல் இருந்தது. எந்த ஒரு சத்தமும் இல்லாமல்
நிசப்தமாகவே இருந்தது சூழல். வழியில் வயதான ஒரு வெள்ளைகார ஜோடி,
சிங்கப்பூரில் இருந்து வந்த இருவர், டென்மார்கில் இருந்து வந்த ஒரு குட்டி
குடும்பம் என பலரைப் பார்த்தோம். ஆனாலும் ஓரிரு வார்த்தைகளோடு அந்த
சந்திப்புகள் நின்றுவிட்டன. ஆனால் சந்தித்ததிலேயே அந்த வயதான ஜோடி தான்
டாப். வயது எழுபதை எட்டியும் கரடுமுரடான பயணங்களில் ஈடுபடும் அவர்களின்
உற்சாகத்தை மெச்ச வார்த்தை இல்லை. வெளிநாட்டவரிடம் இருக்கும் இந்த குணம்
நம்மவர் இடையே பார்ப்பது மிகவும் அபூர்வமாக தான் இருக்கிறது.
இன்னொரு விசயம் என்னவென்றால் அங்கே வரும் சுற்றுபயணிகள் சத்தம் போட்டு
பேசுவதை தவிர்க்க வேண்டுமாம். காரணம் நாம் போடும் சத்தம் அங்குள்ள
மிருகங்களை முக்கியமாக சிவப்பு மூக்கு குரங்கு வகைகளை (Loteng) மிரள
செய்யுமாம். பிறகு அந்த இடதிலிருந்து வெளிவருவதே பெரும்பாடாகிவிடுமாம்.
எனவே வழிதோறும் சத்தம் போடாதீர்கள் என்ற வாசகங்களையும் காண முடிந்தது.
சத்தத்தைக் கேட்டு மிரளும் குரங்குகள் மனிதர்களையும் தாக்கும் அபாயம்
உண்டாம். ஆகவே நாங்கள் கப்சிப்பென நடையைக் கட்டுவதிலேயே குறியாய்
இருந்தோம். சரியாக ஒரு மணி நேரம். தெலுக் பாக்குவை அடைந்து விட்டோம்
நாங்கள் மூவரும். அந்த மணல் பரப்பான கரையின் விளிம்பில் விசாலமான தோற்றத்தை
கொண்டு கம்பீரமாக காட்சியளித்தது கடல். அலைகள் அவ்வளவாக இல்லை. அங்கிருந்து
பார்த்தால் வினோதமான தோற்றம் கொண்ட பல பூதக்கற்கள் வானளந்து நிற்பதை
பார்க்க முடிந்தது. அவற்றுல் ஒன்று ராஜ நாகத்தின் தலையையொத்த கல். அதன்
பின்னால் சந்துபோங் மலையின் ஒய்யார காட்சி. அதிசயம் ஆனால் உண்மை. இவற்றை
நீங்கள் இணையத்தில் தேடினால் கூட பார்க்கலாம்.
கடற்கரையில் ஒரு 10 நிமிடம் கழித்து விட்டு வந்த வழியே திரும்பி நடக்க
தொடங்கினோம். ஆனால் பாருங்கள், வர ஒரு மணி நேரம், போக அரை மணீநேரம். அங்கே
தான் காலத்தின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை. எங்களுக்குள் சக்தி
அதிகரித்து விட்டதா இல்லை புதிதாய் எதையோ சாதித்து விட்டோம் என்ற உற்சாகம்
உந்து சக்தியை உருவாக்கி விட்டதா? இங்கு மட்டுமல்ல. எங்கு போனாலும்
அப்படிதான். உங்களுக்கும் இந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறதா? இதையே ஒரு மலாய்
நண்பர் கூறுவதை கேட்டிருக்கிறேன். நாம் போகும் போது சுற்றி இருக்கும்
மரங்களுக்கு சலாம் சொல்லி குசலம் விசாரித்து கொண்டே போவதால் தாமதம் நிகழும்
அதே தருணம் வரும் போது அவற்றிக்கு நம்மை தெரியுமாதலால் தாமதமாகாமல் வந்து
விடுவோமாம்.
மீண்டும் அலுவலகத்தை அடையும் போது மழை லேசாக தூரல் போட ஆரம்பித்திருந்தது.
நேரமாக ஆக தூரல் பெருமழையாக வேகம் எடுத்தது. கடலில் நீர்மட்டமும் கூட
தொடங்கியது. மனதின் கவலையும் நீர்மட்டத்தோடு இணை சேர்ந்து கொண்டது. எங்களை
இங்கே கொண்டு வந்து விட்ட படகோட்டி அண்ணா ஒரு அரை மணி நேரம் கழித்து தான்
வந்தார். அவரது உடைகளும் படகும் கூட நனைந்திருந்தது. நாங்கள் படகுக்குள்
ஏறி அமர்ந்ததுமே இயந்திரத்தைச் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
நீர்மட்டம் உயர்ந்திருந்ததால் முன்பு போல படகு தள்ளாடவில்லை. ஆனால் எங்களை
அலைகழிக்க வைத்துவிட்டது. கடலின் ஆக்ரோசத்தை கண்கூடாக உணர்ந்தேன். கடலில்
ஆழத்திற்கு படகு செல்ல செல்ல அலைகளின் ஆட்டமும் கூடியது. படகை தாண்டி
அலைகள் சீறி எழுந்தன. அடிமட்டதிலிருந்து எழுந்த அலையை அன்னாந்து
பார்த்தேன். மனதுக்குள் 'இன்னக்கி செத்தோம்' என்று தான் எண்ணிவிட்டேன்.
நானாவது ஏதோ பரவாயில்லை. என் இரு தோழிகளும் அழுதே விட்டார்கள். ஒருவரை
ஒருவர் நெருக்கமாக பிடித்துக்கொண்டோம். சுனாமியின் போது கடலால்
முழுங்கப்பட்ட உயிர்களின் நிலையும் இப்படிதானே இருந்திருக்க கூடும்?
இவ்வளவு நடந்தும் அந்த படகோட்டி அண்ணா ரொம்பவே நிதானமாக இருந்தார்.
அலைகளோடு போராடி படகு ஆற்றுக்குள் வந்ததும் அலைகள் குறைந்து விட்டன. போன
உயிர் மீண்டும் வந்தது. படகு துறைமுகத்தை வந்தடந்தபோது அனைவருமே தொப்பையாய்
நனைந்திருந்தோம். அதே ஈரத்துடன் வீடு போய் சேர மாலை மணி ஆறாகிவிட்டது.
அத்தோடு எங்களின் பயணம் முடியவில்லை. ஒரு 5 மாத இடவெளிக்கு பின்னர்
மீண்டும் எங்கள் பயணம் வானத்தை தொட்டு பார்க்க தொடர்ந்தது.
|
|