|
|
தொன்மைக்கு மீளல்

என் அத்தை திருமணமாகிக் கணவரைப் பிரிந்து தம் இறுதிக் காலம்வரை எங்களோடு
வாழ்ந்தவர். பள்ளி செல்லாதவர். ஆனால், அவர் வாய் திறந்தால் பழமொழிகள்
உதிரும். எங்கிருந்துதான் இவ்வளவு பழமொழிகளைக் கற்றாரோ என ஆச்சரியமாக
இருக்கும். அவற்றையெல்லாம் தம் தாய்வீட்டுச் சீதனமாக கொண்டு வந்திருக்க
வேண்டும்.
என் சிறுவயதிலிருந்து அவரின் பேச்சுமொழியைக் கேட்டு வளர்ந்தேன். என்
அப்பாவும் பேச்சினூடே எத்தனையோ மொழியணிகளைக் கலப்பார். தமிழகக் கிராமத்தில்
பிறந்து வளர்ந்து பதின்ம வயதுச் சிறுவனாய்க் குடும்பத்தோடு மலாயாவுக்குப்
புலம்பெயர்ந்த அவரின் மொழியின் தன்மைகள் என் மொழி வங்கியின் சேமிப்பில்
இன்னும் இருக்கின்றன. அவர் இட்ட வேலையை நான் சரியாகச் செய்து
முடிக்காவிட்டால் ‘உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை’ என்பார்.
கஞ்சனைத் திட்ட வேண்டுமானால், ‘கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய்
எடுக்கிறவன்’ என்பார். ‘முட்டையிடுகிற கோழிக்குத்தான் வருத்தம் தெரியும்’,
‘எலும்பைக் கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?’ ‘குடல் கூழுக்கு அழுகிறது,
கொண்டை பூவுக்கு அழுகிறது’, இப்படிப் பழமொழிகள் பேச்சின் இடையிடையே வந்து
விழும்.
ஒரு குடும்பத்தில் புழக்கத்தில் உள்ள மொழிப் பயன்பாடு அதன்
உறுப்பினர்களிடம் வாழையடி வாழையாகத் தொடரும் நிலை இருந்தது. இன்று அது
பழங்கதையாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் பல்நூறு
சொற்களையும் பலநூறு மொழியணிகளையும் இழந்து இன்றைய தலைமுறையினரின்
பேச்சுமொழி அழகியலை இழந்து வறட்சி இழையோடும் மொழியாக மாறிவருகிறது.
நம் நாட்டில் தோட்டப்புறத்தில் வாழ்ந்த தமிழர்களிடையே மண்வாசம் கலந்த
‘தோட்டப்புற மொழி’ ஒன்று உருவாகியது. ‘நம்ம பாடு எவனுக்கு தெரியுது?.. பொண
கனத்துல, ஏணிய தூக்கி தோள்ள போட்டுக்கிட்டு, அந்த மீனா பூண்டு காட்டுல
லோலோன்னு ஓடி, பதினோரு மணிக்கு நானூறு மரத்த, ஏணில ஏறி, அண்ணாந்து பாத்து,
மேலே போய்விட்ட வெட்டுக் கோட்டுல கத்தி போட்டு, தடிச்சு காஞ்சு கெடந்த
மொரட்டு பட்டங்களோடு வரட்டு வரட்டுனு ஓரியாடி, முடிச்சுட்டு, வாளிக் கடக்கு
வர்றதுக்குள்ள பாதி உசுரு போயிரும்’. சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’
நாவல் முழுமையும் விரவிக் கிடக்கும் இதுபோன்ற பேச்சுமொழியில் இந்தத்
தோட்டப்புற மொழியைக் காணலாம். பால்மரத் தோட்டங்களை விட்டு
நகர்ப்புறங்களுக்குக் குடியேறிவிட்ட நம் வாழ்க்கைச் சூழலில் தோட்டப்புற
மொழி கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இனி, சடக்கு, பாசா, தீம்பாரு,
பிரட்டுக்களம், ஓடும் பிள்ளை போன்ற சொற்களைப் படைப்பிலக்கியத்தில்
மட்டும்தான் படிக்க முடியும்.
ஒரு தலைமுறையில் புழங்கப்படும் மொழியில் நிகழ்ந்துள்ள தேய்மானத்தை இன்றைய
தமிழ் மாணவர்களின் பேச்சு மொழியைக் கூர்ந்து கவனித்தாலே புரிந்துவிடும்.
“டே மச்சான் பாடத்த முடிச்சிட்டியா? எங்கிட்டியே பிலிம் காட்டிறியா? மொக்க
பிகரு, சூப்பரா இருக்கு.” இப்படிப் பெரும்பாலும் தமிழ்ச்சினிமா
கதாநாயகர்களும் வடிவேலு, விவேக், கவுண்டமணி, செந்தில் போன்ற நகைச்சுவை
நடிகர்களும் இளம்தலைமுறையினரின் பேச்சு மொழியை வடிவமைத்து அதனில் நீக்கமற
நிறைந்திருக்கிறார்கள். வாசிப்பது அருகி, கற்பதெல்லாம் தேர்வுக்கு என்ற
இன்றைய காலத்தின் கோலத்தில் ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்ற மனப்போக்கில்
காதுக்கு வரும் சினிமா மொழியைத் தங்களின் மொழியாக்கிக் கொள்கிறார்கள்.
இன்றைய மாணவர்களின் பேச்சில், எழுத்தில் பழமொழி, மரபுத்தொடர், உவமைத்தொடர்
போன்ற மொழியணிகளைக் காண்பது அரிதாகி விட்டது. இனிய சொற்றொடர்களும் மிகக்
குறைந்தே காணப்படுகின்றன. அவர்களின் சொற்களஞ்சியம் அல்லது சொல்வங்கி
வெறுமையாய்க் கிடக்கிறது. நீங்கள் சொல்வதும் சரிதான். சட்டியில்
இருந்தால்தானே அகப்பையில் வரும்?
மாணவர்களிடம் சில பழமொழிகளைச் சொன்னால், “என்ன சார்? புதுசா சொல்றீங்க.
இப்படியுமா தமிழ்ல பழமொழி இருக்கு? அப்படி கேட்டதே இல்லையே” என்று கேலி
பேசுகிறார்கள். ஓர் இடைநிலைப்பள்ளியில், தமிழாசிரியர் ஒருவர் கேள்விக்குப்
பதில் தராத மாணவனைப் பார்த்து, “ஏண்டா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ
எருமை மாட்டுமேல மழை பெய்தமாதிரி பேசாமே நிற்கிறியே?” எனத்
திட்டியிருக்கிறார். மறுநாள் மாணவனின் அப்பா கோபத்தோடு வந்து ஆசிரியரோடு
வம்பு செய்தாராம். “நீங்க எப்படி சார், என் பையன போய் எருமை மாடுன்னு
சொல்லலாம்?. நீங்களே இப்படி மோசமா பேசலாமா? பழமொழிய சொல்லுங்க. ஆனா அதுல
மிருகங்க வராம பார்த்துங்க” என ஆசிரியருக்குப் பாடம் நடத்திவிட்டுப்
போனாராம்.
மாணவர்களின் மொழிச் சிதைவுக்குப் புறக்காரணிகள் பல இருக்கலாம். ஆனால்,
அவர்களின் மொழி வரட்சிக்குத் தமிழ்க்கல்விப் பாடத்திட்டமும் காரணமாக
அமைந்திருப்பதுதான் என் மன ஆதங்கத்தை அதிகமாக்குகிறது. “என்னையா இது?
தமிழ்க்கல்வித் திட்டத்தையே குறை சொல்வதா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்,
கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறாய்?” என்று நீங்கள் கோபப்படலாம். ஆனால்,
என்னதான் பந்தைத் தண்ணீரில் அழுத்தினாலும் அது திமிறிக்கொண்டு
மேலேதான்வரும் என்பதுபோல உண்மை நிலை இதுதான் என் கணிப்பாகும்.
தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளிக்காக நடப்பில் உள்ள தமிழ்ப் பாடத்திட்டத்தில்
வரையறைக்குட்பட்ட மொழியணிகள் இணைக்கப்பட்டுள்ளன. 11 ஆண்டுகாலக் கட்டத்தில்
(புகுமுக வகுப்புக்கு 12 ஆண்டுகள்) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பழமொழி,
திருக்குறள், மரபுத்தொடர், உவமைத்தொடர், இணைமொழி, இரட்டைக்கிளவி, செய்யுள்
போன்றவற்றை மாணவர்கள் பயில்கிறார்கள். ஆசிரியர்கள் கர்ம சிரத்தையோடு
தங்களுக்கு இடப்பட்ட பணியாக அவற்றை மட்டுமே கற்பிக்கிறார்கள். எப்படியாவது
மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்ப்படுத்த வேண்டும். பாடத்திட்டத்திற்கு
வெளியே உள்ளதைக் கற்றுக்கொடுத்துக் காலத்தை வீணாக்க முடியாது. தேர்வில்
மாணவரின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திக்காட்ட வேண்டும். பெரும்பாலும்
இத்தகைய மனப்போக்கில்தான் நம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
இதன் விளைவைப் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. பாடத்திட்டத்திற்குள்
கூடுகட்டிக்கொள்ளும் ஆசிரியர்கள். அவர்களின் வழிகாட்டலில் பாட
நூல்களுக்குள் கூடுகட்டி வாழும் மாணவர்கள். இத்தகைய கல்வி முறையில்
உருவாகும் மாணவர்களின் சொற்களஞ்சியம் அல்லது சொல்வங்கிநிச்சயம்
பற்றாக்குறையை எதிர்நோக்கும். வாழ்நாள் முழுதும் குறைந்த எண்ணிகையிலான
மொழியணிகளை வைத்துக்கொண்டு காலத்தைக் கழிப்பார்கள். பள்ளி வாழ்க்கைக்குப்
பிறகு பரந்த வாசிப்புத் தளத்தில் பயணிப்போர் இதற்கு விதிவிலக்கு.
இதிலே இன்னோர் ஆபத்தும் உண்டு. இப்படி உருவாகிய மாணவர்கள்தாம் ஆசிரியர்ப்
பயிற்சிக்குப் பிறகு, பள்ளிகளுக்குத் தமிழ் கற்பிக்க வருகிறார்கள்.
இவர்களும் பாடத்திட்டத்திற்கு வெளியே சிந்திப்பதைத் தவிர்ப்பார்கள்.
இவர்களால் உருவாக்கப்படும் மாணவர்கள் நிலையை எண்ணிப்பாருங்கள். நாளுக்கு
நாள் மாணவரின் மொழி ஆளுமை குறைந்து வருவதற்கு ஆசிரியர்களே காரணமாவது பெரும்
கொடுமை இல்லையா?
மாணவர்களின் மொழி ஆற்றலை மேம்படுத்துவதில் ஆசிரியர்களில் பணி மிக
முக்கியமானது. முதலில், அவர்களுக்கு மொழியின் மீது ஈடுபாடு வேண்டும்.
இலக்கியம் என்பது உதடுவரை என்றில்லாமல் இதயத்திலிருந்து பேசவேண்டும்.
பாடத்திட்டத்திற்கு வெளியே வாசிக்க வேண்டும். வாசித்து நேசித்ததை
மாணவருக்குப் பந்தி வைத்து இலக்கியத்தின், மொழியின் ருசியைக் காட்ட
வேண்டும். பாடத்திட்டத்திற்கு வெளியே இருக்கும் மொழிச் செல்வத்தில்
முக்கியமானவை எனக் கருதுவதைத் குறைந்த அளவிலாவது மாணவருக்கு வழங்க
வேண்டும்.
ஆனால், எதார்த்தம் எப்படி இருக்கிறது தெரியுமா? “பள்ளியில் நீங்கள் படித்த
பழமொழியை -மொழியணியை எழுதினால்தான் தேர்வில் புள்ளிகள் கிடைக்கும். அதை
விடுத்து உங்களுக்குத் தெரிந்ததை எழுதினால் புள்ளிகள் கிடைக்கும் என்று
உறுதியாகச் சொல்ல முடியாது” என்று கூறும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
இதனால், “நமக்கேன் வம்பு. படித்ததை எழுதி விட்டுப்போவோம்” என்ற முடிவுக்கு
மாணவர்கள் வரக்கூடும்.
ஆசிரியர்கள் மனம் வைத்தால் மாணவர்களை மொழிச் சிதைவிலிருந்து மீட்டெடுக்க
முடியும். படைப்பிலக்கியத்தில் எப்பொழுதும் புதிய இலக்கிய வடிவங்களை நோக்கி
படைப்பாளர்கள் முன்னகர்ந்து கொண்டே இருப்பாளர்கள். மரபிலேயே தேங்கி விடாமல்
புதியன நாடும் மனப்போக்கு இலக்கியப் பரப்பில் தொடர்ந்து நிகழ்ந்து
கொண்டிருக்கிறது. ஆனால், மொழிக் கற்றலைப் பொறுத்தவரை முன்னும் பின்னும்
இருவழிப்பாதையில் நகர்ந்தால்தான் ஆசிரியர்களும் மாணவர்களும் மொழி ஆளுமையைப்
பெற முடியும்.
நிகழ்கால மொழியின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு, பழைய இலக்கியத்திலும்
அவர்கள் கால் பதிக்க வேண்டும். ஆத்திசூடி, மூதுரை, வாக்குண்டாம், நன்னெறி,
நாலடியார், திருக்குறள், செய்யுள் போன்றவற்றிலும் மூழ்கியெழ வேண்டும்.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்பதில்
உள்ள உண்மையை அப்போது உணர முடியும். ஆசிரியர்கள் இனிய சொற்றொடர்களைத்
திரட்டி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் மாணவர்களின் எழுத்து மொழியில்
அழகியலை வளர்க்க முடியும். இல்லாவிட்டால், பாடத்திட்டத்தில் படித்ததை
மட்டும் வைத்துக்கொண்டு மாணவர்கள் கட்டுரையில் அல்லது எழுத்தில் எப்படி
மொழியணிகளை வெளிப்படுத்துவார்கள்?
இழந்துவிட்ட இயற்கையுடனான வாழ்வுக்குள் மீண்டும் செல்ல ‘இயற்கைக்கு மீளல்’
என்கிறது ஹைக்கூ கவிதை. இங்கே, இழந்துவிட்ட தமிழை, இளம்தலைமுறையிடமிருந்து
கைநழுவிக் கொண்டிருக்கும் இனிய தமிழை மீட்டெடுக்கத் ‘தொன்மைக்கு மீளல்’
என்கிற சிந்தனை சிறந்த தீர்வாக இருக்கும்.
புதிய மொழியணிகளை உருவாக்குகிற மொழி ஆளுமையும் வாழ்வியலும் வாய்க்காத
நமக்கு வேறு வழியில்லை. தொடர்ந்து, நம் முன்னோர் சேர்த்து வைத்துள்ள
செல்வத்திலிருந்து கடன் வாங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
‘கடுகு போன இடம் ஆராய்வார், பூசணைக்காய் போன இடம் தெரியாது’ என்பார்கள்.
கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்தரங்குகளில், மாநாடுகளில் பலவற்றை ஆழமாக
ஆராய்கிறோம்; அலசுகிறோம். பாடத்திட்டத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்வதால்
மாணவத் தலைமுறையினரிடமிருந்து விலகிக்கொண்டிருக்கும் இனியமொழி குறித்து
எப்பொழுது விவாதிக்கப்போகிறோம்?
‘கடப்பாறையை விழுங்கிவிட்டு சுக்குநீர் குடித்தால் தீருமா?’ எங்கோ படித்தது
நினவுக்கு வருகிறது.
|
|